முனைவர் பீ.பெரியசாமி,
தமிழ்த்துறைத்தலைவர்,
டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம் –632521.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் – periyaswamydeva@gmail.com
முன்னுரை
தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இங்குக் காண்போம்.
நடுகற்கள் பதுக்கை அறிமுகம்
நடுகற்கள் போரிலோ சண்டையிலோ மாண்ட ஒரு வீரனுக்காக வைக்கப்படுவதாகும். இதனால் இதனை வீரக் கற்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளது. நடுகல் இறந்த மனிதனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாலேயே நடப்படுகிறது. இறந்தவர் எதற்காக இறந்தார் என்ற காரணத்தை அதில் சொல்வதுடன் பல வரலாற்றுப் பண்பாட்டுக் குறிப்புகளையும் கல்வெட்டாய் செதுக்கி வைக்கின்றனர். இதனால் நடுகற்கள் சமூக வரலாற்றுடன் பண்பாட்டுத் தரவுகளைத் தரும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன.
இறந்தவரது உடல்களின் மீது பதுக்கைச் சேர்த்துக் கல் எழுப்புதலும் உண்டு. நிரை மீட்டு மடிந்த வீரர்களுக்கு இவ்வாறு கல் எழுப்பும் வழக்கம் காணப்படுகிறது. வீரன் இறந்த இடத்திலேயே கல் எழுப்பும் நிலை இருந்தமையை இது காட்டுகிறது. பாலை நில வழிகள்தோறும் நடுகற்கள் வரிசையாக நடப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். போர் நடந்த இடம் பாலைநில வழிகளாக இருப்பினும், ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தாலும், அவ்விடங்களில் நடுகற்கள் அமையக் காரணமாக இருந்தது என்று (முனைவர் கேசவராஜ், தென்னிந்திய நடுகற்கள்) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
பதுக்கை
சங்ககாலத்தில் சவ அடக்க முறைகள் பல இருந்ததைச் சங்கநூல்களின் வாயிலாக அறியலாம். “பதுக்கை, திட்டை, கற்குவை, குத்துக்கல்” போன்றவை இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் எனக் (ச.கிருஷ்ணமூர்த்தி,நடுகற்கள், ப.30) கூறுகின்றார்.
“விழைவெயில் ஆடும் கழைவளர் நனந்தலை
வெண்நுனை அம்பின் விசை இடவீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென” (அகம், 109)
என்ற அகநானூற்றுப் பாடல் பாலைநிலவழிப்போவோரைக் கொன்று பொருள்பறிப்பது மறவர்களின் வழக்கமாக இருந்துள்ளதையும் இவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மேல் கற்களைக்கொண்டு மேடாகவும் அமைப்பர். இம்மேட்டிற்கு பதுக்கை என்று பெயர் பண்டையத் தமிழர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகளில் ஒன்றாக பதுக்கைகள் அமைக்கும் முறையை அறியமுடிகிறது.
இறந்த மனித உடலை மண்ணில் பதுக்குதல் என்ற பொருளைத் தரும் சொல்லாகவே பதுக்கை என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.
“செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை விளைவாய்ப் பருந்திருந்து உயவும்” (புறம். 3)
கள்வர்களின் குறியில் தப்பமுடியாமல் அவர்கள் விடும் அம்பிற்குத் தன் உயிரைத் தந்து இறந்தோரை மூடிவைக்கப்பட்ட கற்குவியற்கள் இருந்தன என்பதை மேற்கண்ட பாடலின் வழி அறிய இயலுகிறது.
நடுகற்கள் பல்வேறு காரணங்களுக்காக வீரர்களுக்கு வைக்கப்படுகின்றன. போரில் இறந்த வீரனுக்கு மட்டும் அல்லாமல், பிற வீரச் செயல்களைப் புரிந்து இறந்த வீரர்களுக்கும் நடுகல் வைக்கும் மரபு தமிழகத்தில் உள்ளது இப்படி இறந்த வீரர்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- நிரைகவர்தல் சண்டையில் இறந்த வீரன்
- நிரைமீட்டல் சண்டையில் இறந்த வீரன்
- ஊரழிவைத் தடுத்து நிறுத்தித் தன் உயிரை ஈந்த வீரன்
- பன்றி குத்தி இறந்த வீரன்
- புலியுடன் சண்டையிட்டு இறந்த வீரன்
- நாடுபிடி சண்டையில் இறந்த வீரன்
- அரசன் வெற்றி பெறத் தன்தலையைத் தந்த வீரன்
இவ்வாறு நடுகல் மரபு தொடர்கிறது
இறந்தவர்களுக்கு நடுகற்கள் நடுவதைப் போன்றே கல் பதுக்கைகள் அமைக்கும் மரபையும் தமிழர்கள் கொண்டிருந்தனர் கல் திட்டைகள், குத்துக்கள், பலகைக்கல் மூலம் அமைக்கும் பதுக்கைகள், கல்வட்டங்கள், ஈமத் தாழி புதைத்தல் முதலான வகைகளில் அன்றைய தமிழர்கள், இறந்தோரைப் புதைக்கும் முறைகளைக் கொண்டிருந்தனர். இறந்த மனித உடலை மண்ணில் பதுக்குதல் என்ற பொருளைத் தரும் சொல்லாகவே பதுக்கை என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. இப்பதுக்கை மரபினையே அகநானூறு பேசுகின்றது. இவை அனைத்தும் பாலைத்திணைப் பாடல்களாகவே உள்ளன. பாலைநில வழிக் கொடுமைகளைப்பேசும் இடங்களில் நடுகற்கள் பற்றிய குறிப்பும் பதுக்கைகள் பற்றிய குறிப்பும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
அகநானூற்றில் பதுக்கைகள்
அகநானூற்றில் தலைவன் செலவு மறுத்துத் தன் நெஞ்சத்திற்குச் சொல்லும் பாடல்களிலும், தலைவி தோழியிடம் தலைவன் செல்லும் பாதை பற்றிக் கூறும் இடத்திலும், தோழி தலைவனிடம் செலவு மறுத்து உரைக்கும் பொழுதும் நடுகற்கள் பற்றிய செய்திகள் விரிவாகவே இடம்பெறுகின்றன. இது போன்ற பதுக்கைகள் குறித்த குறிப்புகளும் அமைகின்றன.
இறந்தவர்களைப் புதைத்து அவ்விடத்தை மண்ணால் மேடாக்கி அங்குக் கற்களைக் குவியலாக அமைத்து பதுக்கைகள் ஆக்கி, அவ்விடத்தில் நடுகல் நடப்பட்டது என்பதை,
“தணிமணி இரட்டும் தாளுடைக் கடிகை,
நுழைநுதி நெடுவேல், குறும்படை, மழவர்
முனைஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅருங் கலைய புலவுநாறு அருஞ்சுரம்” (அகம். 35)
எனும் பாடல் கூறுகின்றது. இறந்த அந்த மனிதன் பதுக்கைக் கடவுள் என அழைக்கப்படுகின்றான். அவனுக்கு அமைக்கப்பட்ட நடுகல்லிற்கு மயில் பீலி சூட்டி, துடி என்ற இசைக்கருவி முழங்கி, நெல்லால் செய்யப்பட்ட கள்ளைப் படைத்து, செம்மறி ஆட்டுக்குட்டி பலி கொடுக்கப்படுகின்றது. இப்பலிச் சடங்கினால் அப்பகுதி முழுவதும் புலால் நாற்றம் வீசுவதாக அப்பாடல் விவரிக்கின்றது. இப்பாடலில் நிரை கவர்தல் காரணமாக நடைபெற்ற வெட்சி, கரந்தை சண்டை நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிரை கவர்தல் சண்டையில் வெட்சி வீரர்களைக் கரந்தை வீரர்கள் வெற்றி கொண்டு அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள நடுகற்களுக்கு வழிபாடு செலுத்தியதாக இப்பாடல் அமைந்துள்ளது.
நடுகற்களைப் போன்றே பதுக்கைகளும் பாலைவழி அச்சத்தைக் கூட்டுவதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நடுகற்கள் போன்று பதுக்கையில் புதைக்கப்பட்ட மனிதர் எதற்காக இறந்தார் என்பதை அறிய முடியாது. இதனை,
“பரல்உயர் பதுக்கை” (அகநா.91)
என்ற தொடர் மூலம் பதுக்கைகள் மேடாக அமைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இங்குக் களவுத் தொழில் செய்யும் மழநாட்டார் பதுங்கி இருப்பர்.
ஆறலைக் கள்வர்கள், வழிப்போக்கர்களைக் கொன்று அவர்களை அக்காட்டுப் பகுதியிலேயே புதைப்பர். நாளடைவில் அப்பதுக்கையில் காட்டு மல்லிகைக் படர்ந்திருக்கும். இறந்தவர்க்காக அங்கு நடப்பட்ட நடுகல்லிற்கு மலர்களைத் தூவி வழிபாடு செய்யப்படும் விடியற்காலையிலேயே அந்நடுகல்லிற்குப் பலிகொடுக்கப்படும் இப்படிப்பட்ட அச்சம் நிறைந்த வழியாக அப்பாலை நிலவழி அமைந்திருப்பதை,
“சிலைஏறு அட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலி கூட்டும்” (அகநா. 289)
எனும் பாடல் பதிவு செய்கிறது.
ஆறலைக் கள்வர்கள் தழைகளை மூடிப் பதுக்கைகளை அமைத்ததை,
“வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
சுரம்கெழு கவலை கோட்பால் பட்டென.”(அகம்.109)
எனும் பாடலில், அம்பால் கொலை செய்யப் பெற்றுக் கிடக்கும் இறந்தவர்களின் உடலைத் தழையால் மூடிய கற்குவியல்களைக் கொண்ட எவரும் போவதற்கு அஞ்சும் பாலைநில வழியில் தலைவன் சென்றான் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும்,
“படுகளத்து உயர்ந்த மயிர்த்தலைப் பதுக்கைக்
கள்ளிஅம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்குருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சுஉருக” (அகம்.231)
எனும் பாடலில்தலைவன் சென்ற பாலைநில வழி, வழிப்பறிக்காக வில்லேந்திச் செல்லும் வேடர், வழிப்போக்கர்களைக் கொன்று அப்பிணங்களின் மீது கற்களைக் குவிப்பர். அதனைப் பார்க்கும்போது நமக்கு நடுக்கம் உண்டாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
பகைவீரர்கள் கொல்லப்பட்டு கற்பதுக்கையில் புதைத்தை,
“அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்” (அகம்.151)
எனக் காவன் முல்லைப் பூதரத்தனார் கூறியுள்ளார்.
பதுக்கையில் உள்ள பிணங்களைப் பருந்துகள் உணவாக எடுத்துச் சென்றதாக,
“வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர்
ஆள்அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை
கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழிஇ” (அகம்.215)
பதுக்கையின் மீது வளர்ந்துள்ள கள்ளிச்செடியின் நிழலில் வழிப்போக்கர்கள் தங்கிச் சென்றதாக,
“வில்லிட வீழ்ந்தோர் பதுக்கை”(அகம்.157)
எனும் அகநானூற்றுப் பாடல் பதிவு செய்துள்ளது.
முடிவுரை
மனித இறப்போடு தொடர்புடைய நடுகற்கள், பதுக்கைகள் அன்றைய மக்களின் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் நமக்கு வெளிப்படுத்தும் ஆவணங்களாக உள்ளன. பதுக்கைகள் அன்றைய சமூகத்தினரால் அச்ச மனநிலையிலேயே பார்க்கப்பட்டது. பதுக்கைகளும் நடுகற்களும் பொருள் தேடச் செல்லும் தலைவனைத் தடுத்து நிறுத்தும் வழித்தடைகளாகவே உள்ளன என்பதை அகநானூற்று இலக்கியப் பனுவல்வழி அறிய முடிகின்றது
துணைநூற்பட்டியல்
- கிருஷ்ணமூர்த்தி .ச, நடுகற்கள், மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை. பதி. 2013.
- குருநாதன் (ப.ஆ) (2003), புறநானூறு மூலமும் உரையும், வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4.பா. 183
- கேசவராஜ், தென்னிந்திய நடுகற்கள், காவ்யா பதிப்பகம், பதி.2008.
- தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு (களிற்றியானை நிறை), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பதி.2004.
- தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு (நித்திலக்கோவை), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பதி.2004.
- தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு (மணிமிடை பவளம்), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பதி.2004.
- அகநானூற்றில் பதுக்கை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்
- மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
- இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்
- ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை
- தனிமை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இன்னும் சில கவிதைகள்
- காலாதீதத்தின் முன்!
- மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………
- எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
- எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !