இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்

author
0 minutes, 11 seconds Read
This entry is part 4 of 18 in the series 21 ஜூன் 2020

நவின் சீதாராமன்

அதிகாலை….. வழக்கத்திற்கு மாறாக எந்தவிதப் பரபரப்புமின்றி அமைதியாக இருக்கிறது சென்னை மாநகர வீதிகள். வழக்கம்போல் ஒருவர் அதன் வழியாக நடைப்பயிற்சிக்குச் செல்கிறார். எதிர் ப்ளாட்பாரத்தில், நடக்கிற காட்சியிலிருந்து அவர் கண்களை அகற்ற இயலவில்லை. முதல் நாள் அந்தத் தாய் தன் பெண் குழந்தையை குளிக்கச் செய்கிறார். இரண்டாவது நாள் கணவர் பக்கத்தில் இருந்த பாய் டீக்கடையில், வாங்கி வந்த டீயை மனைவிக்குத் தந்துவிட்டு, தன் குழந்தைக்கு பாலில் நனைத்து, பிஸ்கட் ஊட்டி விடுகிறார். பக்கத்தில் கரோனாவுக்கான “முகக்கவசங்கள்” விற்பனைக்காகத் தொங்கிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சிகள் இவருக்கு எதையோ சொல்ல வருகின்றன. நடைப்பயிற்சியைத் தொடர முடியாமல், அமைதியாய் அவர்கள் அருகில் சென்று….. “நான் ஓர் உதவி இயக்குநர், பக்கத்துத் தெருவில்தான் வசிக்கிறேன்” என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அவ்வளவுதான், சந்தித்தவர் ஓர் உதவி இயக்குநர் என்கிற விசயத்தைக் கேட்டதும், நண்பர் தன் மனைவி, குழந்தை இருப்பதையும் மறந்து உச்சஸ்தாதியில் உடைந்து போகிறார். பிறகு தன்னைப்பற்றி….

ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் நான் இயக்குநரான பிறகுதான் இந்த மண்ணில் மீண்டும் கால் வைப்பேன் என்ற சபதத்தோடு 2002 ஆம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பேருந்தில் ஏறுகிறார் ஒரு வருங்கால இயக்குநர். பெயர் இராமு. அவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கானம் கஸ்பா. ஆரம்பத்தில் சென்னை வாழ்க்கை, எண்ணை தேசத்து வாழ்க்கையைவிட சற்றுக் கடினமாகவே இருந்தது. அவர் நினைத்ததுபோல் அவ்வளவு சுலபமானதாக அமைந்துவிடவில்லை. பல்வேறு சிரமங்களுக்கிடையில், ஒரு வழியாக ஓர் இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சோ்கிறார். படிப்படியாக முன்னேறி, ‘மஜ்னு’ படத்தில் உதவி இயக்குநராகிறார். சின்னா, ராகதேவன், நிறம் மாறாத பூக்கள், சதி லீலாவதி போன்ற சீரியல்களில் பணி புரிகிறார். மனவு என்ற தன் குறும்படத்திற்கு இயக்குநர் மகேந்திரனிடம் விருது பெறுகிறார். தான் இயக்கிய ‘கடைசி பெஞ்ச்’ குறும்படத்திற்கு திமுக ஆட்சியில், அக்கட்சிப் பிரமுகர் காந்தி செல்வத்திடம் விருது பெறுகிறார். 2013, சற்று ஆசுவாசப் படுகிற வேளையில், தந்தை இறந்து விடுகிறார். பிறகு, தன் சகோதரி பார்த்து ஏற்பாடு செய்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மனைவி பெயர் பாலமுத்தரசி. மனைவியும் இவரோடு சென்னை வருகிறார். மனைவியிடம் மனம் விட்டு தன் கனவுகளையும், கூடவே அதிலுள்ள சிரமங்களையும் பகிர்ந்து கொள்கிறார். மனைவியும் இவருக்கு ஆறுதலாய், இவருடைய லட்சியத்திற்குப் பக்க பலமாக நிற்கிறார். உதவி இயக்குநர் ஊதியம் என்னவாக இருக்கும் என்பது உலகறிந்த விசயம். எனவே அவருடைய நிரந்தரமில்லா வருமானத்தில் வாழ்க்கை நடத்த இயலாத சூழலில், மனைவி ஒரு பிரபல துணிக்கடையில் பணிபுரிந்து கனவருக்குத் தோள்கொடுக்கிறார். நினைவு தப்பிய, தனது தள்ளாத வயது தாயாரைத் தனியாக விட்டுவிடாமல், சென்னையில் தன்னுடைனேயே வைத்துக்கொள்கிறார். வாடகை வீடு, வரவுக்கும் செலவுக்கும் சமன் செய்யப்பட்டு, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கையில் அந்தத் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை, சமுத்ரிகா நான்காவது பிரதிநிதியாக வந்து சோ்கிறாள். வாடகைக்கு இருப்பவர்களில், வயதுக்கு வந்த பெண்மணிகள் இருந்தால் போதும், அவர்களையும் சோ்த்து மொத்தக் குத்தகைக்கு முயற்சிக்கும் முதலாளிகள் என்கிற போர்வைக்குள் புதைந்து கொள்ளும் துப்புக்கெட்ட மிருகங்களுக்கு மத்தியில், வளைகாப்பு உட்பட அனைத்தையும் குடியிருந்த வீட்டு முதலாளியே செய்து வைத்து, சொந்த மகளைப்போல் கவனித்து வருகிறார். பிறகு, ஏதோ அவருடைய கட்டிடம் புதுப்பிப்பது சம்பந்தமாய் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை. வேறு வீடு பார்த்து அங்கு குடியேறுகின்றனர்.

இங்குதான் அவர்களுக்குப் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஒரு சில படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, தான் ஒரு இயக்குநராவதற்கான முயற்சியில் இருக்கையில் ‘கரோனா’ என்றதொரு கஷ்டகால துஷ்டன் தலை விரித்தாடத் தொடங்குகிறான். மனைவிக்கும் வேலை போகிறது. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. கணவன் மனைவி இருவரும் செய்வதறியாது தடுமாறுகின்றனர். அன்றாட வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்ததால் சேமிப்பு என்பதற்கே வாய்ப்பில்லை. வாடகை கொடுக்க முடியாமல், கொடுத்த முன்பணத்தில் வாடகையும் கழிக்கப்பட்டு, இரண்டு மூன்று மாதங்களுக்குமேல் வாடகைப்பாக்கி ஆகிவிட்டது. வீட்டு முதலாளி நெருக்கடி தருகிறார். இராமு நண்பர்களிடமும், தொிந்தவர்களிடமும் ஏதாவது உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் வெளியில் சென்று முயற்சித்து வருகிறார். வீட்டு முதலாளி, குறிப்பாக… கணவன் இல்லாத நேரத்தில் அடிக்கடி வந்து வாடகைப் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார். அவனுடைய பார்வையும் நாகரீகமானதாக இல்லை. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு இனி ஒரே ஒரு வழி உண்டு. அதைச் செய்தால் இவர்கள் காலம் முழுக்க வாடகை தரத் தேவையில்லை. அது என்ன?

இதை வாசிக்கும் உங்களால் கணிக்க முடிகிறதா? முடியாது….. ஏனெனில் நமது மண், கலாசாரம், மனிதாபிமானம் நம்மை அப்படிச் சிந்திக்க வைக்காது.

ஆனாலும் அசல் இல்லாத சில வித்துகள், பித்துகளாக நம் சமூகத்தில் வாழத்தானே செய்கின்றன. அதனால்தான் ‘கரோனா’, கஜா, வர்தா, சுனாமி போன்றவற்றால் சுற்றி வளைக்கப்படுகிறோம். இனி இவனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் என்ற முடிவுக்கு வருகிறாள் அந்தத் தமிழச்சி. மனதை இரும்பாக்கிக் கொண்டு ஒரு தெளிவான முடிவுக்கு வருகிறாள். தக்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள். கணவன் வெளியே சென்று விடுகிறான். அந்த மிருகம் இவளை நோக்கி வருவற்குள், குழந்தையைத் தூக்குகிறாள். இவளே வீட்டைப் பூட்டுகிறாள். ஒரேயொரு பையுடன் வெளியே வருகிறாள். பக்கத்தில் இருந்த ப்ளாட்பாரத்திற்கு வந்து கணவனை, உடனடியாக அங்கு வர வைக்கிறாள். கணவன் வந்ததும் கட்டிப்பிடித்துக் கதறுகிறாள். பிறகு, இப்படி நடந்ததாய்ச் சொல்கிறாள்.

“வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துட்டுப் போய்ட்டாரு. கொடுக்கவேண்டிய எல்லாப் பணத்தையும் செட்டில் பண்ணிட்டு சாமான் சட்டுகளை அள்ளிகிட்டுப் போங்க’ன்னு சொல்லிட்டாரு. நான் வேற வழியில்லாம புள்ளையத் தூக்கிக்கிட்டு, அவசரமா இந்த ஒரேயொரு பையை மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன்” என்று ஒரே மூச்சில், தழுதழுத்த குரலில்…… அதே சமயம்…. சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்லி முடிக்கிறாள். கனவன் இடிந்து போகிறார். ஊருக்குத் திரும்பிப் போய்விடலாமா? ஆனால், பேருந்து ஏறும்போது எடுத்த சபதம் தடுக்கிறது. தோல்வியோடு திரும்பினால் கிராமத்தில் எப்படியெல்லாம் அவமானப்பட வேண்டியிருக்கும்! மனதில் ஆயிரமாயிரம் இடிகளோடும், அதிர்ச்சியோடும், உயிர்வலிகளோடும் ப்ளாட்பாரத்தில் சிறிது காலம் தங்கிவிடுவோமா? என யோசிக்கிறார். இதே சூழல் நீடிக்காது. கண்டிப்பாக மாறிவிடும். கட்டிய மனைவியையும், பெற்ற குழந்தையையும் எப்படியும் காப்பாற்றி விடுவேன். வயதும், தெம்பும் இருக்கிறது. ஆனால், தள்ளாத வயதில் இருக்கும் அம்மாவை என்ன செய்வது? எப்படி ப்ளாட்பாரத்திற்கு கொண்டு செல்வது? தாயின் கண் முன்னே எந்த மகனுக்கும் இந்த நிலை வரக்கூடாது. மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். கடைசியில் ஒரு நண்பர் உதவ முன் வருகிறார். தன் அம்மாவை மட்டும் அவருடைய குடும்பத்தோடு சிறிது காலம் தங்க வைக்கிறார். இவர் மற்றொரு நண்பரின் உதவியால் ப்ளாட்பாரத்தில் கரோனா பாதுகாப்பிற்கான ‘முகக் கவசங்கள்’ விற்க முடிவு செய்கிறார். பிறகு அந்த ப்ளாட்பாரத்திலேயே தன் மனைவி, குழந்தையோடு தங்குகிறார். தங்கியிருக்கும் இடம், தான் உதவி இயக்குநராக பணி புரியும்போது வலம் வந்த அதே பகுதிதான். பரபரப்பான அந்தப் பகுதியில், எத்தனை திரையுலகப் பிரமுகர்கள், உதவி இயக்குநர்கள், நடிக – நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் இவர்களைக் கடந்திருப்பார்கள்? ஒவ்வொருவரையும் இவர் பார்க்கும்போது இவருடைய மன நிலை எப்படி இருந்திருக்கும்? எவருடைய கண்களிலும் இவர்கள் படவில்லையா? எப்படி சாத்தியம்? திரையுலகில் இருப்பவர்கள் மற்றவர்களின் சாதாரணப் கண்ணோட்டத்திலிருந்து சற்று வித்தியாசப் படுபவர்கள்தானே! ஆம்…. இதோ அப்படிப்பட்ட ஒருவர்தான்…. இப்போது இவர்கள் கதையைக் கேட்டுக் கண் கலங்கி நிற்கிறார். அதிர்ச்சிடைகிறார்.

நடைப்பயிற்சிக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, வீட்டுக்கு விரைகிறார். தன் கைப்பேசியை எடுத்து, திரும்பவும் அதே இடத்திற்குச் சென்று அவர்களைப் புகைப்படம் எடுத்து, அவர்களுடைய நிலையை தழுதழுத்த குரலில் விவரித்து சில வாட்ஸ்ஆப் குழுமங்களுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்களுடைய தேவை என்ன? தீர்க்கவேண்டிய உடனடிக் கடன் எவ்வளவு? ஏற்கனவே இருந்த வீட்டின் ஒரிரு மாதங்கள் வாடகைப்பாக்கி, புதிதாக வீடு எதுவும் பார்த்தால் அதற்குரிய முன்பணம் மற்றும் உடனடித் தேவைக்கான பொருட்கள் இப்படி சில ஆயிரங்கள் மாத்திரமே. இந்த விவரங்களைப் பட்டியலிடுகிறார். அமொிக்காவில் வசிக்கும் நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, எனக்கு இரவு நேரம். சரி… விடிந்ததும் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, அவசியம் உதவுவோம் என எண்ணி, உறங்கச் சென்றுவிட்டேன். இந்தத் தகவல் வந்து, சுமார் நான்கைந்து மணி நேரங்களில் ஓடி வருகிறார்கள் தோழமைகள். நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு பணமும், பொருட்களும் தந்து அந்த நண்பர் குடும்பத்தையும், இந்தத் “தாயுமானவனையும்” உணர்ச்சிப் பெருக்கில் திக்கு முக்காட வைத்து விடுகிறார்கள். இன்னும் கூடுதலாக….. ஓர் இயக்குநர் தனது அடுத்த படத்திற்கு இராமுவை ‘உதவி இயக்குநராக’ நியமித்திருக்கிறார். பிறகு அதே தாயுமானவன் தெளிவாகக் கணக்கு வழக்குகளை வாட்ஸ்ஆப் குழுமங்களில் பட்டியலிடுகிறார். நன்றி நவிழ்கிறார். மறக்காமல் கூடவே “இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம். தேவைகள் பூர்த்தியாகிவிட்டன. ஒருவேளை நீங்கள் யாரேனும் அந்த நண்பருக்கு உதவ விரும்பினால் அவருடைய எண்ணுக்குத் தொடர்புகொண்டு உதவி தேவைப்பட்டால் நேரடியாகச் செய்யுங்கள்” என்ற செய்தியோடு, உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறார். எனக்கு அங்கே விடிகிறது. எனக்கு மட்டுமல்ல. அந்த ‘வருங்கால இயக்குநர் இராமு’க்கும்தான்”. என் கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

எத்தனை இடர்பாடுகள் வந்தாலென்ன? மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதம் உள்ளவரை மானுடம் வெல்லும். நான் இந்தப் பதிவிற்காகவோ, அல்லது அவர் செய்த உதவிகளுக்காகவோ, அந்தத் தோழருக்குத் ‘தாயுமானவன்’ என்று பெயரிடவில்லை. அந்தத் தாயுள்ளம் படைத்த எனது நெருங்கிய நண்பரின் பெயர் உண்மையிலேயே ‘தாயுமானவன்’தான். இவர் 2002-லிருந்து பாரதி கண்ணன், ஸ்ரீ சத்ய ராகவேந்தர், ராம், சுப்ரமணிய சிவா போன்ற பிரபல இயக்குநர்களின் ஸ்ரீராஜராஜேஸ்வரி, பன்னாரி அம்மன், கவிதாலயா புரொடக்ஷ்ன்ஸ் படங்கள், தங்க மீன்கள், சீடன், உலோகம், வெள்ளையானை போன்ற படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராகவும் பணி புரிந்துள்ளார். சக தொழிலாளி மாத்திரமல்ல, யார் சிரமப்பட்டாலும் ஓடிவந்து உதவிக்கரம் நீட்டும் மாமனிதர்கள் வாழும்வரை மனிதம் வெல்வது நிச்சயம். இதற்கு முழு முயற்சி எடுத்த தோழர் தாயுமானவனுக்கும், ஓடி வந்து உதவிக்கரங்கள் நீட்டிய தாயுள்ளங்களுக்கும் நான் எப்படி நன்றி சொல்லாமல் இருக்க முடியும். நன்றி உறவுகளே….

பி.கு.: இந்த நிகழ்வை தோழர் தாயுமானவன், உதவி இயக்குநர் இராமு, அவரது மனைவி ஆகியோரது அனுமதியோடுதான் இங்கே பதிவு செய்கிறேன்.

பேருதவி நல்கிய நல்ல உள்ளங்கள் : தாயுமானவன், ‘தேரோடும் வீதியிலே’ சரவணன், நடிகர் ஆதி, நவின் சீதாராமன் (அமொிக்கா), இயக்குநர் சுப்ரமணியம் சிவா இன்னும் எத்தனையோ பெயர் வெளியிட விரும்பாத நண்பர்கள். இன்னும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் பதிவை வாசித்தவுடன் பாதிக்கப்பட்ட அந்த நண்பருக்கு யாரேனும் உதவ நினைத்தால் தயவு செய்து பின்னூட்டமிடுங்கள். நான் அவரது தொடர்பு எண்களை உங்களது முகநூல் ‘உள்பெட்டி’யில் பகிர்கிறேன். நீங்கள் தாராளமாக அவருக்கு நேரடியாக உதவலாம். நன்றி!

பாதிக்கப்பட்ட நண்பரின் முழு விவரம்
உதவி இயக்குநர் பெயர் : ஆர்.இராமு
சொந்த ஊர் : கானம் கஸ்பா, தூத்துக்குடி மாவட்டம்.
அம்மா : சண்முகத்தாய் மிகவும் தள்ளாடும் வயது, நினைவு தடுமாறும் நிலையில் அம்மா. மகனின் நிலை எதுவும் தொியாத நிலை.
மனைவி : பாலமுத்தரசி, அம்மா இல்லை, அப்பா மாத்திரம் இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம்.
குழந்தை : சமுத்ரிகா. 1.5 வயது

வற்றாத அன்புடன் – நவின் சீதாராமன்

Series Navigationசங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *