கோதையின் கூடலும் குயிலும்

This entry is part 8 of 23 in the series 26 ஜூலை 2020

           

கூடலிழைத்தல்

                         தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன்

 பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக எண்ணிப் பார்க்கும் பொழுது இரட்டைப் படையாக வந்தால் நினைத்தகாரியம் கைகூடும் எனவும் ஒற் றைப்படையாக வந்தால் கைகூடாது என்றும் கொள்வார்கள்.

                        திருமழிசை ஆழ்வார் தன்னைத் தலைவி

யாகப் பாவித்து,

                    ”அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண

                     இழைப்பன் திருக்கூடல் கூட

என்று தவிக்கிறார்.

கோதை இழைத்த கூடல்

                              கோதை நாச்சியாரும் அரங்கனுக்குக் குற்றேவல் செய்ய விரும்பிக் கூடல் இழைக்கிறாள்.

                                                      வாமனன்

            ஒட்டராவந்து என்கைப்பற்றித்தன்னொடும்

             கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே

               [நாச்சியார்திருமொழி] 4ம்திருமொழி  535

மதுரை மாநகரிலே நம் தெருவின் நடுவே நம்முடைய வீட்டைத் தேடி வந்து நம்மோடு கூடுவான் என்றால் கூடலே நீ கூடிடு

                    ஓடை மாமதயானை உதைத்தவன்

                    கூடுமாகில் நீ கூடிடு கூடலே

            [நாச்சியார்திருமொழி] 4ம்திருமொழி 5ம் பாட்டு 538     

என்கிறாள்.

                           அக்ரூரரை அனுப்பி கண்ணனைவஞ்சக

மல்லர்களாலும் குவலயாபீடம் என்னும் பட்டத்துயானையாலும் கண்ணனைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டியிருந்தான் கம்சன். ஆனால் இதையறிந்த கண்ணன் மல்லர்களையும் யானையையும் இறுதியாகக் கம்சனையும் வதைத்தான்.இந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி

                  அற்றவன், மருதம் முறிய நடை

                  கற்றவன், கஞ்சனை வஞ்சனையில்

                  செற்றவன், திகழும் மதுரைப்பதிக்

                  கொற்றவன், வரில் கூடிடு கூடலே

                     [4 ம்திருமொழி  6 ம்பாட்டு 539]

என்று கண்ணனின் பால லீலைகளைச் சொல்லி கூடலை

வேண்டுகிறாள்.

                           கோதை பலவிதமாகத் தன் துன்பத்தை எடுத்துரைத்த போதும் கூடல் கூடுவேன் என்றோ கூடமாட்டேன் என்றோ பதிலளிக்கவில்லை. இனிமேலும் இதை நம்பிப் பிரயோ சனம் இல்லை என்று கோதை குயிலை நாடிச் செல்கிறாள்

குயிலுக்கு விண்னப்பம்

                              புன்னை கோங்கு, குருக்கத்தி, செருந்தி போன்ற மரங்கள் நிறைந்த சோலைக்குயிலே! பெரும் புகழ் படைத்த மாதவன், மதுசூதனன் மேல் ஆசை வைத்தேன். அதற் காக என்கை வளையல்கள் நழுவ வேண்டுமா? இதுவும் அவன் மாயமோ? அவன் வந்து என் ஏக்கத்தைப் போக்க வேண்டும்.  அதற் காக நீ கூவ வேண்டும்.

                  மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி

                        வண்ணன், மணிமுடிமைந்தன்

                  தன்னை உகந்தது காரணமாக என்

                        சங்கிழக்கும் வழக்குண்டே

                  புன்னை, குருக்கத்தி, நாழல், செருந்திப்

                        பொதும்பினில் வாழும் குயிலே!

                  பன்னி யெப்போதுமிருந்து விரைந்து என்

                         பவளவாயன் வரக் கூவாய்

           [நாச்சியார்திருமொழி 5ம்திருமொழி. 1ம்பாட்டு  545

துன்பக்கடல்

                                       குயிலே! கருடக்கொடியானிடம் நான் கொண்ட காதலால் என் எலும்புகள் உருகி விட்டன. பிரிவுத்

துன்பமாகிய கடலில் அழுந்திக் கிடக்கும் நான் வைகுண்டநாதன் என்ற தோணி கிடைக்கப் பெறாமல் தவித்துக் கொண்டிருக்கி றேன்.துணையை பிரிந்துவாழ்உம் துன்பத்தைக் குயிலே நீயும் உணர்ந்திருப்பாய் அல்லவா? எனவே அவன் வரும்படிக் கூவு.

 குயிலுக்கு வணக்கம்.               

                                   அன்னங்கள் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வீற்றிருக்கும் எம்பெருமானைக் காண வேண்டும் என்ற வேட்கையால் என் கண்கள் உறங்கவில்லை. உலகளந்தான் இங்கே வரும்படி நீ கூவினால் நான் பாலமுதூட்டி, சீராட்டி வளர்த்தகிளியை உன்னோடு நட்புக் கொள்ளச்செய்வேன்.

உன்னைக் கைகூப்பி வணங்குகிறேன் என்கிறாள்

            மென்னடை அன்னம் பரந்து விளையாடும்

                    வில்லிப்புத்தூர் உறைவான் தன்

            பொன்னடி காண்பதோர் ஆசையினால் என்

            பொரு கயற்கண்ணிணை துஞ்சா

      இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த

             என் கோலக்கிளியை

      உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே!

              உலகளந்தான் வரக் கூவாய்

என்று குய்லைத் தாஜா செய்கிறாள்

                        5ம் திருமொழி 5ம்பாட்டு  549

    என் தத்துவனை வரக் கூகிற்றியால்

              தலையல்லால் கைமாறிலேனே

என்று வணங்குகிறாள்

                              6ம்பாட்டு  550

இரண்டில் ஒன்று                  

                        ஆழியும் சங்கும் ஒண்தண்டும் தாங்கிய கையனை வரக்கூவினால் நீ சாலத்தருமம் பெறுதி. உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு, என்றெல்லாம் இறைஞ்சுகிறாள்.

குயிலே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இந்தச்சோலை யிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று நீ விரும்பினால் சங் கொடு சக்கரம் ஏந்தும் கையன் இங்கே வரும்படி நீ கூவ வேண் டும். நான் இழந்த பொன் வளையல்களைக் கொண்டுவந்து தர வேண்டும் இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரியத்தை நீ கட்டா யம் செய்ய வேண்டும்.

                                         குயிலே! இது நீ கேள்

              சங்கொடு சக்கரத்தான் வரக்கூவுதல் பொன்வளை

                                    கொண்டு தருதல்

            இங்குள்ள காவினில் வாழக்கருதில் இரண்டத்

                          தொன்றேல் திண்ணம் வேண்டும்

                              [5ம்திருமொழி 9ம்பாட்டு 553]

என்று கண்டிப்புடன் எச்சரிக்கிறாள்

விரட்டிவிடுவேன்

                            இவ்வளவு நேரம் நயந்தும், கெஞ்சியும்

பேசிய கோதை இப்பொழுது தன் குரலைக் கடுமையாக்கிக் கொண்டு குயிலை அதட்டுகிறாள். குயிலே! தென்றலும் சந்திர னும் என்னைத்துன்புறுத்துகின்றன. என்றாலும் அவை இரண்டும் ஒவ்வொரு சமயம் தான்(மாலை, இரவு) என்னைத் துன்புறுத்து கின்றன. நீயோ எப்போதும் இரவும் பகலும் விடாமல் கூவிக்கூவி என்னை வதைக்கிறாயே நாராயணன் வரும்படி நீ கூவவில்லை என்றால் உன்னை இங்கிருந்து விரட்டிவிடுவேன்.

            தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும்

                                    முறைமை அறியேன்

            என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத்

                                    ததைத்தாதே நீயும் குயிலே

            இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை

                                    நின்றும் துரப்பன்.

                       [5ம்திருமொழி  10ம்பாட்டு 554

என்று கடுமையாகப் பேசுகிறாள். இப்படிப் பிரிவாற்றாமையால் தவிக்கும் கோதை கூடல் இழைத்தும் குயிலை நயந்தும் அச்சு

றுத்தியும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.

=======================================================================

Series Navigationஇல்லை என்றொரு சொல் போதுமே…துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *