கோ. மன்றவாணன்
அன்று அல்ல அல்லன் அல்லள் அல்லர் ஆகிய சொற்களில் அல்ல என்ற சொல்லைத் தவிர, பிற சொற்களை இன்றைய இதழ்களில் காண முடிவதில்லை. இச்சொற்கள் யாவும் எதிர்மறைப் பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வினையை முடித்தவர் பற்றிய திணை / பால் வேறுபாடுகளை உணர்த்தவும் இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.
இது நாய் அன்று (நாய் என்பது அஃறிணை ஒன்றன்பால் என்பதால் அதன் வினைமுற்று அன்று என வந்துள்ளது).
இவை நாய்கள் அல்ல (நாய்கள் என்பது அஃறிணைப் பலவின்பால் என்பதால் அதற்குரிய வினைமுற்று அல்ல என வந்துள்ளது).
வந்தவன் குமரன் அல்லன். (உயர்திணை ஆண்பால் ஒருமை என்பதால் அதற்குரிய வினைமுற்றாக அல்லன் என வந்துள்ளது).
சமைத்தவள் பொன்னி அல்லள். (உயர்திணைப் பெண்பால் ஒருமை என்பதால் அதற்குரிய வினைமுற்றாக அல்லள் என வந்துள்ளது).
அவர் அமைச்சர் அல்லர். (உயர்திணைப் பலர்பால் ஒருமை என்றாலும் மரியாதைப் பன்மையாகக் கருதி, அதற்குரிய வினைமுற்றாக அல்லர் என வந்துள்ளது).
ஆய்வு செய்தவர்கள் அலுவலர்கள் அல்லர். (உயர்திணைப் பலர்பால் பன்மை என்பதால் அதற்குரிய வினைமுற்றாக அல்லர் என வந்துள்ளது).
மேலே கண்ட விளக்கப்படி, மேற்கண்ட வினைமுற்றுகளில் உயர்திணை அஃறிணை வேறுபாடுகளும் சுட்டப்படுகின்றன. அஃறிணை ஆயின் அவற்றுள் ஒருமை பன்மை வேறுபாடுகள் அறியப்படுகின்றன. உயர்திணை ஆயின் அவற்றுள் ஆண்பால், பெண்பால், பலர்பால் வேறுபாடுகளும் சுட்டப்படுகின்றன.
அந்தச் சொற்றொடர்களை இப்படி எழுதிப் பாருங்கள்.
இது நாய் அல்ல / இல்லை
இவை நாய்கள் அல்ல / இல்லை
அவன் குமரன் அல்ல / இல்லை
அவள் பொன்னி அல்ல / இல்லை
அவர் அமைச்சர் அல்ல / இல்லை
அவர்கள் அலுவலர்கள் அல்ல / இல்லை
இப்படி எழுதினால் ஏதும் பொருள் மாறுபடுகிறதா? இல்லவே இல்லை. இந்தச் சொற்றொடர்களில் எழுவாய்களாக வரும்…
இது, அஃறிணை ஒருமையைக் குறிக்கிறது.
இவை, அஃறிணைப் பன்மையைக் குறிக்கிறது.
அவன், ஆண்பால் ஒருமையைக் குறிக்கிறது.
அவள், பெண்பால் ஒருமையைக் குறிக்கிறது.
அவர், பலர்பால் ஒருமையைக் குறிக்கிறது
அவர்கள், பலர்பால் பன்மையைக் குறிக்கிறது.
சொற்றொடரின் முன்னுள்ள எழுவாய்ச் சொற்களே ஒன்றன்பால், பலவின்பால், ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவற்றைச் சுட்டி்விடுகிறபோது, வினைமுற்றுகளிலும் ஏன் இரட்டிப்பாக அந்த வேறுபாடுகளைச் சுட்ட வேண்டும்? அப்படிச் சுட்டுவதால் வினைமுற்றுகளிலும் பால் வேறுபாடுகளைக் காண முடியும் என்றும்- இலக்கணச் செழுமைக்கு மேலும் வலுவூட்டும் எனவும்- செம்மொழியின் செம்மார்ந்த நிலைக்கு மெருகூட்டும் என்றும் வாதிடுவோர் இருக்கலாம்.
எங்கோ ஓரிரு புலவர் பெருமக்களைத் தவிர, அன்று, அல்லன், அல்லள், அல்லர் ஆகிய வினைமுற்றுச் சொற்களைத் தற்காலத்தில் யாரும் பயன்படுத்தவில்லை. அவற்றின் வேறுபாடுகளையும் பொதுவாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், அல்ல என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் அனைத்துப் பால்களுக்கும் பயன்படுத்தினால் பேசவும் கற்கவும் கற்பிக்கவும் எளிதாகும். குழப்பங்களும் தீரும். ஆகவே அனைத்துப் பால்களுக்கும் அல்ல என்ற சொல்லையோ அல்லது இல்லை என்ற சொல்லையோ பயன்படுத்தலாம்.
இல்லை என்பதற்குப் பதிலாக இல, இலது, இலன், இலள், இலர் என்றெல்லாம் பயன்படுத்தினால் பேச்சின் இயல்போட்டத்தில் தடுக்கல்கள் தடங்கல்கள் ஏற்படுகின்றன. அவ்வளவு நுட்பமாகக் கவனித்துப் பேசுவது இயலாத ஒன்றாகும். இல்லை என்ற ஒற்றைச் சொல்லே போதும்.
அல்ல / இல்லை என்னும் எதிர்மறைச் சொற்களையே அனைத்துத் திணை / பால் வேறுபாடுகளுக்கும் பொதுவாகப் பொருத்திப் பேசுகின்றனர் தற்கால மக்கள். இதனால் எந்தக் குறைவும் இல்லை. புரிதலில் எந்தக் குழப்பமும் இல்லை.
இலக்கண உணர்வின்றிப் பேச்சு நிரம்பி வழிந்து சரியான பாதையில் தானாகப் பாய்வதே மொழியின் உயிரோட்டம். அத்தகைய உயிரோட்டப் பேச்சுக்குத் துணை சேர்க்கும் வகையில் அல்ல / இல்லை ஆகிய எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்தலாம். எழுவாய்ச் சொற்களின் துணையால் பால், திணை, ஒருமை, பன்மை வேறுபாடுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த வழிமுறையைத்தான், ஆங்கிலத்தில் not என்ற சொல்லால் பின்பற்றுகின்றனர். அவ்வாறே இந்தியில் நஹி, மத் ஆகிய சொற்களால் உரையாடுகின்றனர். இலக்கணச் சீர்திருத்தம் மூலம் தமிழிலும் இந்த நடைமுறைக்கு நாம் இசைவு அளிக்கலாம்.
இதனால் தமிழ் மேலும் எளிமையாகும். மென்மேலும் இனிமையாகும்.
மொழியைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் எளிமை இருக்க வேண்டும். கணினி வந்த காலத்தில் அதைக் கற்பதற்கு எளிதாக இல்லை. மென்பொருள்களும் எளிதாக இல்லை. பின்னர் எல்லாரும் பயன்படுத்தும் வண்ணம் மென்பொருள்கள் வந்தன. மேலும் மேலும் எளிமையாகியும் வருகின்றன. அதனால்தான் கணினியையும் திறன்பேசியையும் நாம் அனைவரும் எளிதில் கற்றுப் பயன்படுத்துகிறோம். அதுபோல் மொழியும் எளிமையாக இருக்க வேண்டும். இலக்கணத்தில் உள்ள சிக்கல்களையும் குழப்பங்களையும் தீர்க்கும் வகையில் அவ்வப்போது இலக்கணச் சீர்திருத்தங்களை நாம் செய்து வர வேண்டும்.
அல்ல என்ற சொல்லையோ இல்லை என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்று இக்கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன். இதன் அடுத்த கட்ட நகர்வையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
பொதுமக்களிடம் பேசும் போது உணர்வீர்கள்.
அல்ல என்ற சொல்லைவிட, இல்லை என்ற சொல் இன்னும் எளிதானது.
- கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)
- இருமை
- பிராயச்சித்தம்
- வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்
- இல்லை என்றொரு சொல் போதுமே…
- கோதையின் கூடலும் குயிலும்
- துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று
- வெகுண்ட உள்ளங்கள் – 9
- க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.
- இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.
- கம்போங் புக்கிட் கூடா
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- குட்டி இளவரசி
- மானுடம் வென்றதம்மா
- பட்டியல்களுக்கு அப்பால்…..
- என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.
- தரப்படுத்தல்
- வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.
- ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்