கோ. ஒளிவண்ணன்
எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல.
ரொம்ப நேரமா யோசிக்கிறேன். என்ன யோசிச்சுப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து தொலைய மாட்டேங்குது.
இதுக்கு முன்னால நுங்கம்பாக்கத்தில் இருந்த வீடு நினைவுக்கு வருது. இப்போ அடையார் பக்கம் வீடு மாத்திக்கிட்டுப் போனோம். அஃது என்னவோ ஒரு நகர். சாஸ்திரியா? காந்தியா? இந்திராவா?
சுத்தமா நினைவுக்கு வரலையே.
வயசாயிடுச்சா?
எந்தப் பஸ்ல ஏறது? இல்ல ஆட்டோலப் போறதா? எந்த இடம்னுத் தெரிஞ்சாத் தானே…..
ஒர் ஆட்டோ பக்கத்தில் வந்து நின்னுது. ஆட்டோ டிரைவர் சீட்ல ஒர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு உடம்ப வில்லு போல வளச்சி “சார் வண்டில உக்காரு…எங்கப் போகணும்?” ஒர் அலட்சியத்தோடு.
பேசாமா இந்த ஆட்டோலப் போயிடலாமா. ஆனா எங்கப் போறது?
“நீ எங்கப்பாப் போற”…. அர்த்தமே இல்லாம ஒரு கேள்வியைக் கேட்டேன்.
நைனா நீ எங்கப் போனம்னுச் சொல்லு.
தயங்கிக் கிட்டே “அடையாறு” என்றேன்..
பதில் எதுவும் சொல்லாமல் விடுக்கென்றுக் கிளம்பிப் போய்விட்டான். அவன் வேற ரூட்ல போறான் போல இருக்கு….
பின்னால் இன்னொரு ஆட்டோ வந்து நின்றது. ஓட்டுனர் நிரம்பப் பவ்வியமாக “எங்கப் போகணும் சார்?’
“அடையாறு.
“தாராளமாப் போகலாம் சார். உக்காருங்க சார்”, குரலிலே குழைவு. அவனது அளவுகடந்த மரியாதை வியப்பில் ஆழ்த்தியது.
இருந்தாலும் ஒர் எச்சரிக்கை உணர்வோடு “எவ்வளவு” என்றேன்.
மெதுவான குரலில் ஆனால் உறுதியாக “800 ரூபாய் கொடுத்துடுங்க” என்றான்.
அதிர்ந்தேன்.
“சார் எம்ப்டியாதான் திரும்பி வரணும்” என்றான்.
பதில் சொல்லாமல் திரும்பி விடுக்கென்று நகர்ந்தேன். ஒருவகையில் முதல் ஆட்டோகாரரது செய்கைக்குப் பதிலடிக் கொடுத்த திருப்தி.
மணி என்ன இரூக்கும்? கைப்பேசி சார்ஜ் இல்லாம எப்போதோ அணைந்து போய்விட்டது. சார்ஜர் எங்க இருக்கும்… ஒருவேளை ஊரிலேயே விட்டுவிட்டு வந்துட்டோமா?
எப்படியும் மணிப் பத்தரைக்கு மேல இருக்கும்.
இனி பஸ்ஸ எதிர்பார்க்க முடியாது. பஸ் வந்தாக் கூட, எங்கப் போறது எங்க இறங்குறது.
பசி எடுக்க ஆரம்பிச்சது. அப்போதுதான் நினைவு வந்தது. தான் இன்னும் சாப்பிடலங்கறது. அஃது ஒரு காலம். குறித்த நேரத்திலச் சாப்பிடுறது. இப்பல்லாம் பசியும் வரதில்ல.. அப்படி எடுத்தாலும் தெரிய மாட்டேங்குது.
ஆட்டோ ஒன்று வந்து நின்றது டிரைவர் எஞ்சினை அணைத்து விட்டு அருகில் இருந்த டீக்கடையை நோக்கி நடந்தார்.
பொதுவாகத் தயங்கிக் கொண்டே “ஆட்டோ அடையார் பக்கம் வருமா” என்றேன்.
“போலாம் சார். அஞ்சு நிமிஷம். ஒரு டீ குஷ்ட்டு வந்துரன்”. இயல்பான பேச்சு எனக்குப் பிடிச்சிப் போச்சு. அந்த ஆட்டோ காரனுக்கு நடுத்தர வயது இருக்கும்.
பசியாற ஏதாவது சாப்பிடலாம்னுக் கடைக்கு வந்தேன். எப்பவோ சுட்டுக் காய்ந்துப் போன வடையும் போண்டாவும் பரிதாபமாகக் காட்சி அளித்தன.
அந்த உயரமான கண்ணாடிக் குடுவையில் பட்டர் பிஸ்கட்டுகள் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்தன. அதனைச் சாப்பிடலாம் என்று தீர்மானித்து பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தேன். சில்லறை எதுவும் இல்லை. ஒரு 500 ரூபாய்த் தாள் மட்டும் இருந்தது. இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு 500 ரூபாய்த் தாளைத் தர, கடைக்காரர் முறைத்தார்.
“சில்லறையாக இருந்தாக் குடுங்க”.
பர்சுக்குள் மீண்டும் துழாவினேன். ஒன்றும் தேறவில்லை. எடுத்த பிஸ்கட்டுகளை மீண்டும் குடுவையில் திருப்பி வைக்கப் போனேன்.
“சாப்பிடு சார். நான் கொடுக்கிறேன்”. என்று கூறிய ஆட்டோகாரன் தனக்கும் ஒரு பிஸ்கெட்டை எடுத்துக் கொண்டான்.
இரண்டு விரல்களில் இலாவகமாக அந்த பிஸ்கட்டை தேநீரில் முக்கி எடுத்து நைந்துப்போன பகுதியைக் கடித்தான். சுவைத்துக் கொண்டே,
“அடையார்ல எங்கப் போவனும் சார்” என்றான்.
தெரியல.
“அட என்ன சார் சொல்ற”. அவன் திடுக்கிட்டான்.
.
“என் வீடு எங்க இருக்குதுன்னு நினைவுக்கு வரலயே”.
“இன்னாபா அநியாயமா இக்குது. உன் ஊடு எங்க இருக்குன்னு உனுக்கே தெரில்லனுச் சொல்லற” அவனுக்கு டென்ஷன் ஏறியது.
“அதான் தெரியலையே”.
“இது இன்னப்பா அதிசயமாக இக்குது. எத்தன வருஷமா இருந்திருப்ப. அது எப்படி மறக்கும்”.
“கொஞ்ச நாளாதான்”.
“இதுக்கு மின்னால எங்க இருந்த?”
“நுங்கம்பாக்கம்…”
“அந்து வூடு தெரியுமா?”
“அது எதுக்கு இப்ப. அங்கிருந்துதான் காலி பண்ணிட்டோமே”.
“சரி உன் ஊட்லப் பேசிக் கேளு”.
“பொண்டாட்டி இல்லப்பா”.
“ஊருக்குப் போய் இருக்கா”.
“இல்ல அவச் செத்துப் போயி இரண்டு வருஷத்துக்கு மேல ஆவுது”.
“ஒ. சாரி நைனா. அப்பத் தனியாவா இருக்கற”.
“இல்ல என் மகன் வீட்ல”.
ஆட்டோகாரர் குடுவையைத் திறந்து மேலும் இரண்டு பிஸ்கட்டுகள் எடுத்துத் தனக்கு ஒன்றை வைத்துக்கொண்டு இன்னொன்றை அவரிடம் நீட்டினார்.
தயங்க, “எடுத்துக்க சார்” என்றார். பதில் சொல்வதற்குள் கைகளில் திணித்தார்.
“உங்க பையனுக்கு போன் பண்ண வேண்டியதானே”
“அவன் ராத்திரில போனை சைலண்ட் மோடுல போட்டுட்டு படுப்பான். தூக்கம் கெட்டுடக் கூடாதுன்னு”.
“இன்னிக்கு நீ ஊர்லருந்து வருவன்னுத் தெரியாதா அவனுக்கு”.
“தெரிஞ்சு இருக்காதுன்னு நினைக்கிறேன்”
ஆட்டோகாரன் குழம்பிப் போய்விட்டான்.
“என்னப்பா எதுக்கெடுத்தாலும் ஏடாகூடமாப் பதில் சொல்ற. இப்ப நீ எங்க இருந்து வர” .
“கோயம்புத்தூர்”
“அங்க யாரு இருக்காங்க”
“என் பொண்ணு இருக்கு”.
“ஊரிலிருந்து வரன்னுச் சொல்ற. கையில பொட்டி எதுவும் காணோம்?’
“அங்க இருந்து அப்படியே கிளம்பி வந்துட்டேன்”
“பொண்ணான்டயும் சண்டைப் போட்டுக்கினியா”
“இல்லப்பா. நான் யார் வம்புதும்புக்கும் போறது இல்ல”
“பின்ன?”
“அவங்களுக்கெல்லாம் நான் தேவை இல்ல. என்ன தொந்தரவுன்னு நினைக்கிறாங்க.
எதுக்குப் பிரச்சனை. அதான் பொறப்பட்டு வந்துட்டேன்”.
“புள்ளீங்கோ நல்லா வசதியாத்தானே இருக்காங்க?”
அவங்களுக்கு என்னப்பா. நான் ஒரு குறையும் வைக்கல. நல்லாப் படிக்க வச்சேன். கட்டியும் கொடுத்தேன். எல்லாம் நல்லா வசதியாப் பிரமாதமாக இருக்காங்க.
ஆட்டோக்காரருக்கு உண்மையாகவே இப்பொழுது என் மீது பச்சாதாபம் ஏற்பட்டிருக்கலாம். நான் அணிந்திருந்த சாயம் போன பழைய பேன்ட்டும், ஒரு காலத்துல சிக்குன்னு சரியான அளவுல இருந்த இந்தச் சட்டை, பூஞ்சையான உடம்புலத் தொளதொளவெனத் தொங்கியதும் கூடுதல் பரிதாபத்தை வர வச்சுருக்கும். பல வருடத்துக்கு முன்னால எப்பவோ ஏதோ ஒரு பிறந்த நாளைக்கு என் பொண்டாட்டித் தேடி வாங்கிக் கொடுத்தது.
“வீடுகதான் பெரிசாச்சே தவிர மனசெல்லாம் சிறுசாயிடுச்சு”.
“எல்லார் ஊட்லயும் அதே கதைதான் சார். கையில் துட்டு இருக்கிற வரைக்கும்தான் மரியாதை. ஒன்னுமில்லன்னா நாய் கூடச் சீந்தாது”.
ஆட்டோ ஓட்டுநர் சொன்னதை ஆமோதிப்பது போல் மௌனமாய் இருந்து விட்டேன்.
அந்த பிஸ்கட்டை நன்றாக மென்று சாப்பிட்டேன். கொஞ்சம் பசி அடங்கின மாதிரி இருந்தது.
“வேலையிலிருந்து கரெக்டா ஒய்வுக் கொடுக்குற மாதிரி ஒரு வயசு வந்த உடனே, போதும் நீ உலகத்திலே இருந்தது அப்படின்னு நம்ம உயிர் பட்டுனுப் போய்டனும்”.
பரிதாபத்தோடு ஆட்டோக்காரர் “உச்” கொட்டினார். “அதெல்லாம் வுடு சார். ஆமா நீ எங்க வேலைச் செஞ்சினிருந்த?”
“நான் ஒரு சேட் கம்பெனில கொடவுன் இன்சார்ஜா இருந்தேன்.
மகாராசான் ஒழுங்காத் தான் என்ன வச்சுக்கிட்டான். ரிடையர் ஆகுற வரைக்கும் நல்லாதான் பாத்துக்கிட்டான்”.
“துட்டு ஒன்னும் சேத்து வக்கிலியா?”
“பச். ஒன்னும் இல்ல. குடும்பம் நடத்தறதுக்கு, பசங்கப் படிப்பு அவங்க வசதின்னு எல்லாம் செலவழிச்சிட்டேன். ரிட்டையர் ஆகும்போது சேட்டு கொடுத்த பணமெல்லாம் பொண்டாட்டி நோய்னுப் படுத்தப்ப வைத்திய செலவுக்குத் தீந்துப் போச்சு. இப்போ என்கிட்ட ஒண்ணுமே இல்ல.இந்த உடம்பு மட்டும்தான் மிச்சம்”.
“ஒரே இடத்துலே உட்கார்ந்து வேலைப் பாக்குற மாதிரி, ஏதாவது தேடிக்கறதுதானே?”
“அதுக்கெல்லாம் ட்ரை பண்ணேன். ஆன எதுவுமே செட்டாவல”.
“ஏன்?”
“எனக்கு ஒரு பிரச்சனை இருக்குது”.
அப்போது அருகில் ஒரு கார் வந்து நின்றது.
“மாமா இங்கேயா இருக்கிறீங்க. உங்கள எங்கெல்லாம் தேடுறது” காரின் முன் பக்கத்திலிருந்து இறங்கிய மருமகள்.
“தாத்தா எங்க தாத்தா போன?” பின் சீட்டில் இருந்த பெயர்த்தி, குட்டிப் பெண்.
.
“நான் இப்பதான் ஊர்ல இருந்து வரேன்”.
“சரி முதல்ல கார்ல ஏறுங்க”. டிரைவர் சீட்டில் இருந்த மகன்.
காரில ஏறதுக்கு முன்னால, திரும்பி ஆட்டோ டிரைவரைப் பார்க்க,
“”போயிட்டு வாங்க சார்…”
ஒரு நிமிடம் தயங்க,
“பிஸ்கட்க்கு எல்லாம் துட்டு வேணாம் சார் போயிட்டு வாங்க”.
காரில் பின்பக்கம் ஏறிக்கொண்டேன்..
‘எங்கத் தாத்தா போன?”
“அதான் சொன்னேனே. ஊருக்குன்னு. கோயம்புத்தூரு”
“நீ பொய்ச் சொல்ற”
“ஏன்டாக் கண்ணு இப்படிச் சொல்ற?’
“சாய்ந்திரம் எங்கேயோ போறேன்னு சொல்லிட்டு போனியாமே. அதுக்குள்ளேயா கோயம்புத்தூருக்குப் போயிட்டுத் திரும்பி வந்துட்டத் தாத்தா?”
மிரண்டேன். ஏன் இப்படி? எனக்கு என்ன ஆச்சு?
“சாயந்தரம் உங்க பிரண்டு கருணாகரனப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனீங்களாமே”. மருமகள் கீதா.
“ராத்திரி ஒன்பது மணி ஆகியும் நீங்க திரும்பி வரலைன்னு எனக்கு ஃபோன் வந்துச்சு. ஆபீஸ் பார்ட்டியில் இருந்தேன். அப்ப இருந்து தேடிட்டு இருக்கோம். கருணாகரன் மாமாவுக்கு ஃபோன் பண்ணா நீங்க வரவே இல்லன்னுச் சொல்லிட்டாரு” மகன்.
“அதுக்கு மேல நாங்கத் தேடாத இடமில்லை. போன் பண்ணாத இடமும் இல்லை. உங்கள் மகன் பதறிப் போய்ட்டாரு. நான் அவருத் தவிச்சு நிலைகுலைந்தத இதுவரைக்கும் பார்த்ததே இல்லை”. மருமகள் கலங்கினாள்.
“தாத்தா உன் ஃபோனை ஏன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்ச”.
“நான் பண்ணலடாக் கண்ணா. சார்ஜ் போய்டுச்சி”.
எங்கள் காரை தாண்டி ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி இறங்கி வந்தார்.
“என்ன சார் அப்பா கிடைச்சுட்டாரா?”
“ரொம்ப தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்’.
“ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல வைச்சிருந்தாரா?”
“சார்ஜ் தீர்ந்துப் போனதால ஆஃப் ஆயிடுச்சுங்க”.
“எக்மோர் ஏரியால தான் ஃபோன் இருக்கிறதா வந்த தகவல் சரியாப் போச்சு”.
“ஆமாங்க இன்ஸ்பெக்டர்”.
“நீங்க ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளைன்ட் திரும்ப வாங்கிக்கங்க”.
“இப்பவே வரட்டுமா சார்”
“வேண்டாம் வேண்டாம். நாளைக்குக் காலைல வாங்க”.
போலீஸ் ஜீப் புறப்பட்டுச் சென்றது கார் கிளம்பியது.
அது சென்னை நகரில் பிரபலமான முதியோர் இல்லம். கார் அதனுள் நுழைந்தது. விடுதியில் இருந்த கிட்டத்தட்ட எல்லா விளக்குகளும் அணைந்து இருக்க முன் வாசலில் இருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவ்விடுதியின் நிர்வாகியும் காவலாளியும் நின்றுக் கொண்டிருந்தனர்.
காரிலிருந்து இறங்கியவுடன் நிர்வாகி என் மகனைப் பார்த்து “என்ன சார், கிடைச்சுட்டாரா? எங்கப் போனாரு? ‘ரு’ வில் கொடுத்த அழுத்தம் வீட்டுக்கு நேரத்துக்குப் போக முடியாமல் போச்சே என்கிற எரிச்சலை வெளிப்படுத்தியது.
காவலாளி “வாங்க சார், எங்கப் போய்ட்டீங்க” என்று என்னை உள்ளே அழைத்துச் செல்ல,
“தாத்தா பத்திரம்”
“மாமா எங்கேயும் வெளியே போயிடாதீங்க, நல்லாச் சாப்பிடுங்க உடம்பப் பார்த்துக்கங்க” என்ற குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய, அந்த நீண்டத் தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தேன்.
- கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா
- சின்னக் காதல் கதை
- கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்
- கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….
- எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?
- சூம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4
- ஆம் இல்லையாம்
- கவிதை என்பது யாதெனின்
- ஒரு விதை இருந்தது
- வாழ்வின் மிச்சம்
- பவளவண்ணனும் பச்சைவண்ணனும்
- அந்தநாள் நினைவில் இல்லை…..
- குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!
- பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி
- மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு
- கோவை ஞானியும் நிகழும் கவிதையும்
- பெருந்தொற்றின் காலத்தில்
- முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை
- பரமன் பாடிய பாசுரம்
- வெகுண்ட உள்ளங்கள் – 10