தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

This entry is part 7 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா 

கோதாவரிக் குண்டு – 4 

மாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட  முயலுவோம். 

ஆனால் “கோதாவரிக் குண்டு”வில் வரும் நம்ம ஆள் இருக்கிறாரே, அவர் எதிர்கொள்ளும் விதத்தை எல்லாம் பார்த்தால், உங்களுக்குத் தூக்கி வாரிப் போடும். கதைசொல்லிதான் நம்ம ஆள். அவர் வீட்டுக்குப் பழைய பேப்பர்க்காரன் வருகிறான். அவன் இவரை ஏமாற்றுவான் என்று இவருக்கே திட்டவட்டமாகத் தெரியும். எப்படி? “அவன் தராசு தெய்வீகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறு பலம் காட்டும்…..தராசு முள்ளைப் பார்க்க,அது  தெய்வீக முள்ளாயிற்றே  ! அறுபது காகிதமானால் என்ன? அரைக் காகிதமானால் என்ன? நடுநிலை பிசகுமோ?” என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்தவர் நம்ம ஆள்.

பேப்பார்க்காரன் எடை போட்டுக் கொண்டிருக்கும் விதத்தை ஒரு புழு கூட சகிக்காது என்று புழுங்குபவர்  “ஹூம், நமக்கென்று சொந்தமாகத் தராசு வைத்துக் கொள்ள காலம் எப்போது வரப்போகிறதோ  ஈசுவரா !’ என்று  வாய் விட்டுச் சொன்னது பழைய பேப்பர்காரன் காதில் விழுந்து விடுகிறது. அவன் என்ன சாமானியப் பயலா? எமகாதகனாயிற்றே? கொஞ்சம் நாலெழுத்து படித்திருந்தால் அவன் இந்தத் தராசுத் தட்டைத்  தூக்கியெறிந்து விட்டுத் தஞ்சாவூர்  கலெக்டராக அல்லவோ ஆகியிருப்பான்? போனால் போகிறது என்று ஒரு வார்த்தை சொன்னாலும் சொல்கிறான், பாருங்கள்:

“சாமி ! இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே ! எளுதின கார்டுக்கும், எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி.வேணும்னா கடையில போயி ஒரு தராசை வாங்கிட்டு வாங்க. என்னாத்துக்குப் பொல்லாப்பு ! ….”

ட்டேயப்பா ! 

கடைசியில் ஆறு மாசத் தினசரிகள், வாரப்பத்திரிகைகள் எல்லாமாகப் போட்டு ஆறரை ரூபாய் வருகிறது. இதற்கான செலவுக் கணக்கு: இரண்டு மாத பாக்கி மின்சார பில்  மூணேகால் ரூபாய்; ஸ்கூலுக்குப் போகும் பெண் அவளுடைய வாத்தியாரின் அடாவடிக்காகக் கொடுக்க வேண்டிய எட்டணா. வீட்டுச் செலவுக்கு – மாசத்தில் இன்னும் இருபது நாள் பாக்கி இருக்கு. – இரண்டு ரூவா. மிச்சமிருக்கும்  முக்கால் ரூபாய்.நம்ம ஆளின் கையில் கிடைப்பது. 

இந்த சமயத்தில் கதைசொல்லியின் மனைவி வருகிறாள். அவர்களுக்குப் பழக்கமான கங்காபாய் ஒரு கோதாவரிக் குண்டு பாத்திரத்தைத்  தூக்கிக் கொண்டு வந்து அடமானமாக வைத்து இரண்டு ரூபாய் கடன் கேட்கிறாள் என்று சொல்லிக் கொண்டு. கதைசொல்லி வீட்டு நிலவரத்தையும் செலவுக் கணக்கையும் மனைவியிடம் சொல்லி பணம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். அவர் மனைவி சொல்கிறாள்: பாட்டுக்கார  சுப்பிரமண்யய்யரைக் கேட்கிறதுதானே என்று. கதை சொல்லிக்கு சப்த நாடியும் ஒடுங்கி விடுகிறது.

பாட்டுக்கார சுப்பிரமணியய்யர் மூன்று வருஷத்துக்கு முன்பு நாளை திருப்பிக் கொடுக்கிறேன் என்று கதைசொல்லி 

யிடம் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனார். கடன் கேட்காது போச்சு என்பார்களே என்று மூன்று வருஷங் கழித்து அவரைக் கேட்கத் தொடங்கினார். அய்யர் ஓடி ஒளிந்தார். குழைந்தார். கெஞ்சினார். காசை மட்டும் இளக்கின 

பாடில்லை. ஒரு நாள் கதைசொல்லியிடமே அவருக்குத் தெரிஞ்ச பேங்க் மேனேஜரிடம் சொல்லித் தன் பையனுக்கு வேலை வாங்கித் தருமாறு கெஞ்சுகிறார். இவரும் சரி என்று சொல்ல, முடிஞ்சது கதை. அதற்குப்பின் கதை சொல்லி, சுப்பிரமண்யய்யரைப் பார்த்து ஓடி ஒளிய ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது..

ஏற்கனவே இதே கங்காபாய்  இரண்டு மாதம் முன்பு ஒரு பாத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிக் கொண்டு போன ஒரு ரூபாய்க் கடனையே இன்னும் அடைக்கக் காணோம்; எனக்கும் பணமுடை என்று சொல்லி விடுகிறார் 

கதைசொல்லி. சற்றுக் கழித்து கதை சொல்லியின் மனைவி கங்காபாய்  ஒரு ரூபாய் கடன் கொடுத்தாலும் போதும் என்று கேட்டு வரும் போது கதைசொல்லி அவரது மனைவியைப் பார்த்துத் திட்டுகிறார். பதிலாக அவரது மனைவி “பாவம் ஏழை ஜனம். முடை என்றுதானே கேட்கிறாள்? அவள் கோதாவரிக் குண்டை ஈடு வைத்துத்தானே கேட்கிறாள்?  பாட்டுக்கார சுப்பிரமணியய்யர்னா பத்தும் இருபதுமே தூக்கிக் கொடுத்துட்டு அலையலாம். ஏழை ஒரு ரூவா கேக்கறதுக்கு இவ்வளவு மாலாசு பண்ணத்  தெரிகிறது” என்கிறாள். கடன்சொல்லி பளிச்சென்று ஒரு முடிவுக்குவந்து ஒரு ரூபாய் கடன் கொடுத்து விடுகிறார்  அந்த அம்மாள் கடனை வாங்கிக் கொண்டு சென்ற பின் கணவனும் மனைவியும் அவளின் கணவனைப் பற்றி பேசுகிறார்கள். 

தத்தோஜி ராவ்  கதைசொல்லி பொறாமைப்படும் விதத்தில் இருக்கும் அழகன். ஐம்பது வயது இருக்கும் ஆனால் நாற்பது மாதிரிதான் தோற்றம். வேலை வெட்டி கிடையாது. புரோகிதர்களின்  எடுப்பாள். புரோகிதத் தொழிலுக்கான படிப்போ நெட்டுருவோ தத்துவுக்குத் தெரியாது. ஓரணா, இரண்டணாவுக்காகக் கையை நீட்டுவார். இரவு வேளைகளில் எங்காவது மடத்தில் பஜனை நடந்தால் ஒரு மிருதங்கத்தை எடுத்து அணைத்துக் கொண்டு போவார். தாளம் பற்றி எதுவும் தெரியாது . அவர் மனைவி கங்காபாயும் எங்கே கல்யாணம், எங்கே அன்னதானம், எங்கே சமாராதனை என்று தேடிக் கொண்டு சாப்பிடப் போய் விடுவாள். ஆபீசில் இருக்கையில்  கதைசொல்லி தத்துவின்  ஏழ்மையைப் பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டே வரும் போது அவரே மனம் இளகி ஏன்தான் தத்துவின் மனைவிக்கு ஒரு ரூபாய் கடன் கொடுப்பதில் தான் அன்று காலை அவ்வளவு தகராறு செய்தோம் என்று வருந்துகிறார் !

அன்று மாலை வீட்டுக்குத் திரும்புகையில் கதை சொல்லி ஹோட்டலில் ஒரு காபி குடிக்கப் போகும் போது வாசல் கடையில் தத்து சாவகாசமாக நின்று மணிக்கூண்டில் மணி பார்த்துக் கொண்டிருக்கிறார். இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இனி தி.ஜாவின் வரிகள் :

“எங்கே இவ்வளவு தூரம்? மணி வேறு பார்க்கிறீர் ! என்ன சேதி?”

“சும்மாத்தான் வந்தேன். வீட்டிலே வரச் சொன்னாள்.”

“யாரு?”

“என் சம்சாரம். பயாஸ்கோப்புக்குப் போயிருக்கா – மூணு மணி ஆட்டத்துக்கு. ஆறேகால் மணிக்கு வருவாளாம். முடிஞ்சா வந்து அழைச்சுண்டு போங்களேன்னாள், அதான் இப்படி வந்தேன்.”

“சினிமாவுக்கா போயிருக்கா?”

“ஆமா – இந்த கொட்டகையிலேதான்…”

“நீங்க போகலியா?’

“ஒரு டிக்கட்டுக்குத்தான் காசு இருந்தது. அதுவே சான்ஸாகத்தான் அவளுக்குக் கிடைச்சுதாம்.”

“அதுக்காக நீர் கூடப் போக வேண்டாமோ…?”      

“இல்லே சார். சொல்றேன். கேளுங்களேன். காலமே ரெட்டிப்பாளையத்திலேந்து மல்லிகைப்பூ கொணாந்தா ஒரு பொம்பிளை. பெரட்டாசி மாசம்  மல்லிகைப்பூ வர்றது ரொம்ப அபூர்வம் இல்லியா? என் சம்சாரம் சடக்குன்னு ஒரு சேர் வாங்கிப்பிட்டா. தலைப்பிலே பூவைக் கொட்டிக்கிட்டு உள்ளே போய்ப் பாத்திருக்கா. சில்லறையில்லை. காலமே பூவை வாங்கிப்பிட்டுத் திருப்பிக் கொடுப்பாங்களோ? பக்கத்து வீடுங்கள்ள கேட்டிருக்கா. கிடைக்கல்லே. அப்புறம் ஏதோ பாத்திரத்தை எடுத்துக்கிட்டு ஒரு வேண்டியவா வீட்டிலே வச்சு, ஒரு ரூபா வாங்கிண்டு வந்தா. மல்லிப்பூ பத்தணாத்தான். மீதி ஆறணா இருந்தது.என்ன செய்யலாம்னு கேட்டா, புதுப்படம் இன்னிக்கு வருதாமே, பார்த்திட்டு வாயேன்னேன்  சரின்னு புறப்பட்டு வந்தா. அழைச்சுண்டு போகணும் !”

“அட துடகாலிகளா !’ என்று கத்த வாயெடுத்தேன்.

‘வாயை மூடு – அரஸிக குடுக்கை’ என்று யாரோ பல்லைக் கடிக்கும் குரல் கேட்டது. யார் என்று திரும்பிப் பார்க்க

வில்லை. குரல் என் உள்ளேயிருந்து கேட்ட குரல்தான்.

‘புத்தி, புத்தி’ என்று மனசு கன்னத்தில் போட்டுக் கொண்டது.

ஆனால் கதை இத்துடன் முடியவில்லை. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் ‘ஏமாறும்போது கதைசொல்லி எதிர்கொள்ளும் விதத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தூக்கி வாரிப் போடும்” என்று சொன்னேன் இல்லையா?  ஜானகிராமன் தன கதையின் முடிவுக்கு உங்களை அழைத்துச் செல்லும் போது அதை உணர்வீர்கள் !

Series Navigationசூம்ஆம் இல்லையாம்
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    Dr J Bhaskaran says:

    மிகவும் சிலாகிக்கப்பட்ட சிறுகதை. பூவுக்குக் காசு கொடுக்க கோதாவரி குண்டை அடகு வைக்கும் கங்காபாய்; மீதியில் சினிமா பார்க்கும் பெண்மணி! பூவைத் தொடுத்து, அடகு வைத்துக்கொண்ட பெண்ம்ணிக்குப் பூக்கொடுக்கும் நல்ல பெண்மணி! கதை மாந்தர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதுதான் சிறப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *