வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று

author
0 minutes, 15 seconds Read
This entry is part 11 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன்

அடுத்தநாள், அயலுக்குள் ஒரே களேபரமாக இருந்தது. இரவு போல, தீவுச் சென்றிக்கு சென்ற திலகன் எம் 80 கண்ணி வெடியை செக் பண்ணும் போது தற்செயலாக ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்திருந்தான். அவனோடு நின்ற ஒருத்தன் இறந்து போனான்.சீரியசான அவனை அவசர அவசரமாக அராலித்துறை வழியாக வந்து, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள். தீவுப் பெடியள்கள் சிலர் திரும்புற‌ ‌போது புனிதத்துக்கும் செய்தியை தெரியப் படுத்தினார்கள்.

மன்னி அழுது கொண்டிருந்தாள். வாசிகசாலையும் முருகேசுவும் காரைப் பிடித்துக் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு விரைந்தார்கள். கனகன், அன்டன், நகுலன் இன்னும் பலர் சைக்கிளில் பறந்தார்கள். அந்தப் பகுதி முழுவதுமே பரபரப்பாகி இருந்தது.

ஆஸ்பத்திரியிலும் மன்னி அழுதது பலருக்கு துயரமாக இருந்தது.

வார்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட திலகனை பார்க்க அனுமதித்தார்கள்.

மெல்ல கண் திறந்த அவன் “அக்கா, நீ சந்தோசமாயிருக்கணும்” என்றான். கனகனைப் பார்த்தான். “மச்சான் உனக்கு மகன் பிறந்தால் என்ரை பெயரை வையடா?” என்று கேட்டவன் பதிலை எதிர்பாராமல் முருகேசுவை நோக்கினான். அன்டன் கையைப் பிடிச்சுக்  கொண்டவன் அப்படியே கண்கன் செருக மூச்சடங்கிப் போனான்.

செத்த வீட்டை வாலையம்மன் பகுதியில் நடத்த அனுமதித்தார்கள். சகோதரர்கள் எல்லோரும் வந்தார்கள். இரத்தப் பாசம் சாதியங்களை எல்லாம் மீறியது.

வாசிகசாலையும் பெடியள்களும் தோரணம் கட்டி விமரிசையாக நடை பெறச் செய்தார்கள்.மணியைப் பார்க்கும் போது எல்லாம் கனகனுக்கு துக்கம் வந்தது. அவளுக்குத் தெரியாமலே ஒரு காதல் புதைந்து போனது. சிலவேளை, அவளுக்கும் சாடை மாடையாக புரிந்தும் இருக்கலாம்.

லிங்கன், அன்டன் எல்லோரும் கனகன் வீட்டிலே கன நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் விடைபெற்ற போதும் துயரச் சூழல் குமைந்தேயிருந்தது. தெரிந்தவர்,அறிந்தவர்,உறவினர், இறந்தால் அந்த வலி ஆறுவதில்லை.

சுலோவின் கொலையை துப்புத் துலக்க எந்த அமைப்பும் முன் வராததால் விஜயனுக்கு ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. ‘சந்தர்ப்பம் வரும் போது கவனிக்கிறமடா’ என்று ராஜனைக் குறித்து ஆத்திரப்பட்டான், கறுவிக் கொண்டான்.

அநியாயத்தை அறிந்தோ அறியாமலோ வாசிகசாலை அமைப்புகள் ஆதரிக்கும் வரையில் சந்தர்ப்பங்களும் லேசில் வரப் போவதில்லை. மற்றத் தோழர்கள் ராஜனை அடியாமல் தடுக்க, அவன் ‘கண்டிப்பை’ வேறு கையாள வேண்டியிருந்தது.

இரண்டு மூன்று நாள் கழிய ராஜனையும் விட்டு விட்டார்கள்.

ராஜன் குலனையை விட்டு வாலையம்மன் பகுதிக்கே வந்து விட்டான்.

பின்னேரம் போல, கரைப் பக்கமிருந்து வேறு ஒரு களேபரம் ஏற்பட்டது. அக்கரையிலிருந்து இயக்கப் பெடியள்கள் சிலர் ஆயுதங்களுடன் தனிப் படகில் ஏறினார்கள். தூரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஹெலி அவர்களைக் கவனித்து விட்டு …விர்ரென்று விரைந்து வந்தது.

மாலை, மங்கி வருகிற நேரத்தில்… அது, அராலித்துறையில் நெருப்பு மழையைப் பொழிந்தது. கூட்டம் விழுந்தடித்து ஒடியது.யாரோ ஒருவன் நிலத்தில் படுத்ததைப் பார்த்து விட்டு பலர் நிலத்தில் படுத்தார்கள். மினிபஸ் ஒன்று ரிவேர்சில் குடிமனைப் பக்கம் வந்து நின்றது. ‘போட்டில் வந்த பெடியள் மினிபஸ்ஸில் ஏறி தப்பி விட்டார்கள். வாடிப் பக்கம் பதுங்கிய வர்த்தகர் ஒருவரின் மகன் வயிற்றில் சூடுபட்டு இறந்தான். இருவர் காயமடைந்தார்கள். இந்த சம்பவங்களால் இரவு, யாரும் கடலில் தொழிலுக்கு செல்லவில்லை.

“மணியை ராஜனுக்கு கட்டிக்கொடுக்க இருக்கினம்” என்ற செய்தியை கமலம் கொண்டு வந்தாள். “அவள் என்ன சொல்கிறாள்?” என்று முட்டாள் தனமாக கேட்டான். கமலம் நூதனமாகப் பார்த்தாள். “அவளும் கழுத்தை நீட்டுறாள்” என்றாள்.

அறிவிக்காமலே, ஊருக்கும் பரவலாகத் தெரியாமல் ஒரு சிலரோடு ஐயனார் கோவிலில் தாலி கட்டல் நடந்து விட்டது. கனகனுக்கு சொல்வதை வேண்டு மென்றே தவிர்த்து விட்டார்கள்.

‘வாசிகசாலை இளிச்சவாயாய் இருக்கிறதால தான் இப்படி எல்லாம் நடக்கிறது’ என்று நினைத்தான். ஒவ்வொரு செயலிலும் முற்போக்கைக் கடைப் பிடிக்கிற முறையில் வாசிகசாலையை பலமான அமைப்பாக மாற்ற வேண்டும். அது நியாயமற்ற செயல்களுக்கு காவடி தூக்கிறதை அறவே ஒழிக்கவேண்டும். “நானும் பொதுச் சேவையில் ஈடுபட்டால் தான் இதெல்லாம் முடியும்!..” என கனகனுக்கும் பட்டது.

தலைவர் பரமேசிலும் ஒரளவு அநியாயத்தை எதிர்க்கிற போக்கு இருந்தது. இங்கிருக்கும் வாசிகசாலை, குலனை வாசிகசாலை மற்றும் தொழில் பார்க்கிற  இடங்களிலுள்ள‌ வாசிகசாலை எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி ஒரு இணைப்பைக் கண்டாக வேண்டும். ஒரு ‘பொதுவான குழுவை  உருவாக்க வேண்டும். ஆதவைத் திரட்டுவதன் மூலமே அதை எல்லாம் சாதிக்கவும் முடியும் என்று நம்பினான்.

அன்டனும் நகுலனும் தமக்கு தெரிந்த நண்பர், உறவினர் என கதைத்து செம்மணத்திலும் ஆதரவைத் திரட்டினர். அவனும் சந்தைக்கு வருபவர்கள் மூலமாக முயன்றான். தொடர்புகளை செப்பனிட்டான்.

பரமேசுடன் கதைத்த போது, அவன்  வெகுவாக‌ஆச்சரியப்பட்டான். அவனுக்கும் அவன்ரை  நண்பர்களுக்கும் கல்யாணத் தொடர்புகள் பரவலாக எல்லாவிடங்களிலும் இருந்தன. அவர்கள் முயற்சிக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக கூறினான்.

‘நாடகம்’ போடத் தயார் படுத்தல், கடல் பாடல்களை சேகரிப்பது, வாசிகசாலையில் பெண்கள் தையல் வகுப்புகள், கயிறு திரித்தல் போன்ற வேலை வாய்ப்புகள் வைப்பதுமாக. அவர்கள் திட்ட ங்கள் விரிந்து கொண்டே போயின‌

கூடவே, அயலிலிருக்கிற பள்ளிக்கூடத்திற்கு  சிறுவர்களை அனுப்பி வைக்கும் போராட்டமும் நடைபெறலாயின. முன்னர் சாதுரியமான வழி முறைகளைக் கடைப் பிடித்த சாதியினர் இவர்களின் எதிர்ப்பின் முன்னால் பின்வாங்கி பொதுத் தன்மைகளை ஏற்க‌ வேண்டியிருந்தது.

இனிவரும் சந்ததி, பழைய கஷ்டங்கள் சிலவற்றைப் பெறாது போல படுகின்றது. பல நம்பிக்கை விதைகள் உரமாக விதைக்கப் பட இவ்விருவரின் மரணங்கள் காரணமாகின.

‘ஆண் பெண் வாதத்தை கடைப்பிடியாது அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’ என்ற இளைஞர்களின் குரலுக்கு குலனைவாசிகசாலை செவிசாய்த்திருந்தது சுலோவின் படத்தை உள்ளே மாட்டியது. மலர் மாலையுடன் அப்படம் பேப்பர் வாசிக்கும் பகுதியில் பார்வையில் படக் கூடிய இடத்தில் இருந்தது. இதில் பிறந்த திகதி, கொலையுண்ட திகதி, என குறிப்பிடப் பட்டிருக்கிறது.

.‘சாதித் தன்மையை வெறுத்தவன்’ என்பதால்  திலகன்ரை படத்தை வாலையம்மன் கோவில் வாசிகசாலையில் மாட்ட அனுமதித்தார்கள்.

வாசிகசாலைக்கு வந்த கனகன், திலகனின் படத்தைப் பார்த்தப் போது அவனுள் ஞாபகங்கள் இரைமீள . உடலில், அஞ்சலிக்கும் பரவசம் ஒடி மறைந்தது. 

                                             முற்றும்  

Series Navigationஆவலாதிக் கவிதைகள்வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *