’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 12 of 13 in the series 6 செப்டம்பர் 2020

1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி



அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்க
அப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?
கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்
பிரித்துக்கொண்டவள்
‘இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; வலது கையிலுள்ளவை ஆட்சேபகரமானவை; அழுத்தமான கண்டனத்துக்குரியவை’ என்று
இரண்டு பட்டியல்களைக் கொண்ட
அகராதியொன்றை நொடியில் தயாரித்து
அதன் வெளியீட்டுவிழாக் காணொளியையும்
அமர்க்களமாகப் பதிவேற்றியாயிற்று..
’இப்படியொரு அகராதி வெளியிடும் அதிகாரத்தை
யார் கொடுத்தது எனக் கேட்போர்
அதீதப் பழமைவாதிகள்
அவரவர் கைபோன போக்கில் அள்ளியெடுக்கவே அதிகாரங்கள்
என்பதை உணராமல்
அறியாமையில் மூழ்கியிருப்பவர்கள்’ என்று
இதே அகராதியில் அடிக்கோடிட்டுத் தரப்பட்டிருக்கிறது.
அறிவுடைமை, அறியாமை என்ற இரண்டு சொற்களுக்கும்
சுடச்சுடத் தயாரிக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ள அகராதியில்
தரப்பட்டிருக்கும் மேற்கோளும் இதுவே.
’அவரவருக்கென்றொரு தனி அகராதி அவசியம் வேண்டும்’ என்று
அந்த அகராதியின் பின்னட்டையில் பளிச்சென்று தரப்பட்டிருக்கிறது.
’அத்தனை அகராதிகளைத் தயாரிப்பது மணலின் எண்ணிக்கையை அறிந்தாகவேண்டிய தேவையை அதிகப்படுத்திவிடுமென்பதால்
இந்த புத்தம்புதிய அகராதியை வாங்கும்படி
அன்போடு அறிவுறுத்தப்படுகிறீர்கள்’
என்று நூலின் முகப்பு அட்டையின் உட்புறத்தில் கீழ்விளிம்பில் ஒரு வரி நட்சத்திரக்குறியிட்டு இடம்பெறுகிறது.
’இந்த அகராதியின் தேவையை ஆதரிக்காதவர்கள் சந்தேகமில்லாமல் அகராதி பிடித்தவர்கள்
என்றொரு வாக்கியம் இடக்கரடக்கலாய் வருவது
அறுபத்திமூன்றாம் பக்கத்திலா ஆறாயிரத்தியைந்தாம் பக்கத்திலா என்று சரியாக நினைவில்லை.
அட, ஆறு என்பதை ஆறு என்றுதான் புரிந்துகொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் எப்படி?
அகராதியின் மாண்புரைப்பதாய் சில எடுத்துக்காட்டுகள் இதோ:
அசடு என்ற சொல் அனுமதிக்கப்பட்ட வசை.
அதாவது, அவர் இன்னொருவர் மீது வீசும்போது.
அதுவே இன்னொருவர் இவர் மீது எறிந்தால்
அவர் அராஜகவாதியாகத்தான் இருக்கமுடியும்.
கிறுக்கி என்று சக-பெண்ணைப் பழிக்கலாம் – பரவாயில்லை.
பொறுக்கி என்று சக-மனிதனைக் கிழிக்கலாம் –
தடையில்லை
என்ன ஒன்று – அப்படி ஏசப்படுபவர்கள் அகராதித் தொகுப்பாளருக்குப் பிடிக்காதவர்களாக இருந்தாகவேண்டும்.
இல்லாதபட்சத்தில் அவை நாலாந்திர வசைகளாகிவிடும். கவனம் தேவை.
Witch என்று ஏசலாம் பாதகமில்லை
Bitch என்றாலோ பாலினஞ்சார் வசை யது
வன்மையாகக் கண்டிக்கப்படும்.
அதிக விலையில்லை யிந்த அகராதி.
’ஆன் – லைனி’ல் இலவசமாகவும் கிடைக்கிறது.
இன்றே வாங்கிப் படித்துப் பயனடைவீராக.

  •  

2.தெளிவின் நெளிவுசுளிவுகள்

காட்டின் அடரிருளில் சுடுவெயிலில்
நடையாய் நடந்து பழகியவருக்கு
அதிலுள்ள ஆனந்தத்தை அறிந்தவருக்கு
வீடெதற்கு
வெளியல்லோ மெய் வீடு என்று
வஞ்சப்புகழ்ச்சியுரைப்பார்
ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீடும்
காஞ்சிபுரத்தில் ஒரு வீடும் கட்டியபின்
இங்கொரு காலும் அங்கொரு காலுமாய்
படுத்துறங்குவது (கனவிலாவது!) போதாதென்று
அஞ்சுமலைப் பக்கத்தில்
அவர் மனைவி மக்களுக்கு ஆறு ஏக்கரா நிலமும்
சஞ்சலப்பட்டியில் படிப்படியாய்
அடுத்த பிறவிக்கென
கொஞ்சம்போல் காணிகளும்
வாங்கிப் போட்டிருப்பதாகக் கேள்வி.

  •  

3. நான்களாகிய நானின் கவிதை

கைவசமாகிய பாப்பாப் பறவையை அத்தனை பத்திரமாக ஏந்தியிருக்கும்
உள்ளங்கையிலூறி உள்ளத்தில் கிளறும்
உணர்வுத்திரளின் அருவப்பொருளாய் என் கவிதை.
இக்கணத்தில் மட்டுமே நிலைகொண்ட அதில்
முக்காலமும் பிரதிபலித்திருக்கும்.
ஒரு நினைவு சுருள்வில்போல் தன்னை நெருங்கிமீள்வதை
பயமும் பரவசமும் பப்பாதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தப் பாப்பாப்பறவை ஒரு கட்டத்தில்
தன்னையே சுருள்வில்லாக்கிக் கவிதையின் உட்செலுத்தி யங்கே
அள்ளமாட்டாமல் படர்ந்திருக்கும்
முள்ளிலும் மலரிலும் தத்தித்தத்தி நடந்தும்
மிக ஆனந்தமாய்ப் பறந்தும்
மதுரகானமிசைத்தவாறும்
முள்ளில் மாட்டி இறக்கை கிழிபட்டும்,
பழமெனக் கூர்கல்லைக் கவ்வியதில்
அலகில் ரத்தம் சொட்டியும்
வலம்வந்தபடியிருக்கும்.
அதன் உதிர்ந்த, புதிதாக வளர்ந்த சிறகிழைகளின்
கணக்கறிய மாட்டாது.
ஆயிரமில்லையென்றாலும்
குறைந்தபட்சம் ஆறு தாழ்ப்பாள்களும்
அவற்றைத் திறக்கும் திறக்காத் திறவுகோல்களும்
கொண்டிருக்குமெனது கவிதையை
இன்னொருவர் ஒற்றைப்பொருளுரைத்துக்
கடைவிரிக்கும்போது
அதன் மீது தீர்ப்பெழுதும்போது
அரைகுறையாகப் புரிந்த அதை
தலைகுப்புறக் கவிழ்த்துக்கொட்டித்
தண்டனைக்காளாக்கும்போது
அவதூறுக்காளாவதாய்
தனதல்லாத இன்னொரு உடலாய்
அம்மணமாக்கப்பட்டு நடுவீதியில் கிடத்தப்படுவதாய்
அழுது கூனிக்குறுகிக் குலைந்துபோகும்
அதன் அந்தரங்கம்
காலவெளியில் Bermuda Triangle பாழ்வெளித் தொலைவின்

ஆழத்தில்
பிடிபடாதொழியும் எனக்கும்.


  •  
Series Navigationசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வைதக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *