கோ. மன்றவாணன்
கள் என்றாலே மயக்கம் தருவது. “கள்” விகுதியும் நம் புலவர் பெருமக்களுக்கு மயக்கம் தந்துள்ளது.
எழுத்துகள் என்று எழுத வேண்டுமா? எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துக்கள் என்று எழுத வேண்டுமா? என்றெல்லாம் இலக்கணப்போர் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போர் முடிவதுபோல் தெரியும். ஆனால் முடிவது இல்லை.
“முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்” என்றொரு திரைப்பாடலைக் கண்ணதாசன் எழுதி இருந்தார். “சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன்” என்று அவரே இன்னொரு பாடலும் எழுதினார். இவற்றுள் முத்துக்கள் சரியா? முத்துகள் சரியா? இசையின் தேவைக்கே முதன்மை தரும் திரைப்பாடல்கள் ஆக்கத்தில் யாரும் இலக்கணத்தைக் கறாராகக் கடைப்பிடிப்பது இல்லை. ஆகவே அவற்றை எடுத்துக் காட்டுகளாகக் காட்ட வேண்டியது இல்லை என்பாரும் உண்டு. இங்கேயும் கேள்விகள் எழுகின்றன. எடுத்துக் காட்டுகளா? எடுத்துக் காட்டுக்களா?
‘கள்” விகுதி பின்னர் வந்தது என்று புறக்கணிப்போர் உண்டு. அப்படியானால் வாழ்த்து என்பதற்கும் எழுத்து என்பதற்கும் பன்மைச்சொற்கள் என்ன என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். பின்னர் வந்தது என்று எதிர்ப்போர் யாரும் மொழியின் வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் ஆவார்கள்.
தமிழின் ஒருமை பன்மைக் குழப்பத்தைத் தீர்க்கவே ‘கள்” விகுதியைத் தமிழியல் அறிஞர்கள் சேர்த்து இருக்கின்றனர். தமிழைச் செம்மைப்படுத்திய செயலே அது.
1330 குறள்கள் எழுதிய திருவள்ளுவர், ஏன் திருக்குறள்கள் என்று பெயர் சூட்டாமல், திருக்குறள் என்றார் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு உரிய பதிலை அவர் தரவில்லை. ஆனால், கள் என்பது வள்ளுவர்க்கு எதிரானது என்று நகைச்சுவையாகவும் நயமாகவும் சொல்லி நகர்ந்துள்ளார்.
எழுத்து என்பதும் வாழ்த்து என்பதும் வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். வன்தொடர்க் குற்றியலுகரம் நிலைமொழியாக இருக்கும்போது வரும்மொழியாக, க, ச, த, ப ஆகிய வகையறாவின் எழுத்துகளில் தொடங்குகிறச் சொற்கள் வந்தால் ஒற்று மிகும். இந்த இலக்கண விதியை அடிப்படையாகக் கொண்டே நம் புலவர் பெருமக்கள் வாழ்த்துக்கள் என்றும் எழுத்துக்கள் என்றும் எழுதி வந்துள்ளனர். இவை புழக்கத்திலும் உள்ளன. இக்கட்டுரை எழுதுவதற்கு முன்பாகப் பலரைப் பேசச் சொல்லிக் கேட்டேன். அவர்கள் “வாழ்த்துக்கள்” என்றே சொல்லிக் கை குலுக்கினர். அவர்களையே பாராட்டு என்பதற்கான பன்மைச்சொல் என்ன என்று கேட்டேன். அனைவரும் பாராட்டுகள் என்றுதான் உச்சரித்தார்கள்.
வாழ்த்துக்கள் என்று சொல்லும் போது…. அதில் ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆழம் இருக்கிறது. அன்பின் வலு இருக்கிறது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதை அவர்கள் பாணியிலேயே மறுக்கலாம். அன்பு என்பது மென்மையானது. அன்பின் வலிவைக் காட்ட, அதை அழுத்தமாக வலுவாக உச்சரிக்கக்கூடாது என்று சொல்லலாம். இவையெல்லாம் வாதத் திறமையை வெளிப்படுத்துமே தவிர… உண்மை கண்டறிவதற்கு உதவாது. இப்படிப் பேசுவதில் நயம் காண முடியுமே தவிர, ஞாயம் காண முடியாது.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பேராசிரியர் மு.வரதராசனார், புலவர் குழந்தை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் “எழுத்துக்கள்” என்றுதான் எழுதியுள்ளனர். நன்னூல் விருத்தி உரைக்கு விளக்கவுரை எழுதியுள்ள பெரும் புலவர் பேராசிரியர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். கற்றறிந்த தமிழறிஞர்களாகிய அவர்களின் அடியொற்றி எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என்று எழுதலாம் என்கிறார்கள். இதில் இருந்து வேறு ஒன்றும் தெளிவாகிறது. இந்த அறிஞர்கள் யாவரும் கள் விகுதியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பின்னர் வந்தது என்று புறக்கணிக்கவில்லை.
சொல்லோடு சொல் சேர்வதற்கு மட்டுமே இந்த வன்தொடர்க் குற்றியலுகர விதி பொருந்தும். விகுதிக்குப் பொருந்தாது. எனவே எழுத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி என்று வாதிடுவோர் உள்ளனர்.
இரண்டு சொற்கள் இணையும் போதுதான் ஒற்று மிகுமா மிகாதா எனப் பார்க்க வேண்டும். “கள்” என்பது சொல் இல்லை. அது விகுதிதான். ஆகவே “கள்” என்ற விகுதி வரும்போது ஒற்று மிகாது என்றே தமிழ் இலக்கணம் சொல்வதாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அதற்கான இலக்கணச் சான்றுகள் என்ன என்று காட்டவில்லை. அவர்கள் சொல்வது சரியில்லை என்றே கருதுகிறேன்.
நன்னூல் வகுத்த விகுதிகளில் “ப“ என்பதும் ஒரு விகுதி. நட + ப என்பன சேர்ந்து நடப்ப… என்று வருகிறது. இந்த இடத்தில் விகுதிக்கு முன் ஒற்று மிகுந்துள்ளது.
நிலா, பலா, தாத்தா, ஆயா என ஆகாரம் ஈற்றாக வரும் சொற்களில் “கள்“ விகுதி சேரும் போது ஒற்று மிகுகிறது.
எ.கா. : நிலாக்கள், பலாக்கள், தாத்தாக்கள், ஆயாக்கள்
கணு, மரு, பசு, கரு, உரு, பரு, உடு என வரும் ஈரெழுத்து உகர ஈற்றுச் சொற்களில் “கள்” விகுதி இணையும் போது ஒற்று மிகத்தான் செய்கிறது.
எ.கா. : கணுக்கள், மருக்கள், பசுக்கள், கருக்கள், உருக்கள், பருக்கள், உடுக்கள்.
பூ, ஈ போன்ற ஒற்றை நெட்டெழுத்துச் சொற்களில் கள் விகுதி சேரும் போது ஒற்று மிகுகிறது.
எ.கா. : பூக்கள், ஈக்கள்
ஆக… பலவாறு சிந்தித்தாலும் “கள்“ விகுதிக்கு முன் ஒற்று மிகும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சொல்லும் ஒரு விகுதியும் சேரும் போது ஒற்று மிகாது என்று இவர்கள் எப்படி அடித்துச் சொல்கிறார்கள்?
ஃஃஃ
வாழ்த்து, எழுத்து ஆகிய வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதி இணையும் போது ஒற்று மிகும் என்று சொல்கிற மறுதரப்பினர் இருக்கிறார்கள்.
கணக்கு, நாக்கு, சிரிப்பு, வளர்ப்புப் போன்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதியைச் சேர்த்து எழுதவோ பேசவோ சொல்லிப் பாருங்கள். அவர்கள் அத்தனை பேரும் கணக்குகள், நாக்குகள், சிரிப்புகள் வளர்ப்புகள் என்றே எழுதுவார்கள்; பேசுவார்கள்.
தோப்பு என்பதன் பன்மையாகத் தோப்புகள் என்றே எழுதுகின்றனர். தோப்புக்கள் என்று எழுதுவது இல்லை. தோப்பிலுள்ள கள் என்று மற்றொரு பொருள்தரும் என்பதால் அப்படி எழுதுவது இல்லை என்கிறார்கள். வாழ்த்துக்கள் என்றாலும் வாழ்த்து எனும் கள் என்று பொருள்தரும். சொற்களில் சிலேடை காண்பது புலவர்களின் நுண்திறன். அதை இலக்கண விதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கருத்துத் தெளிவுக்காக இருபொருள் குழப்பம் தவிர்க்கலாம்.
வாழ்த்து, எழுப்பு, நொறுக்கு, முறுக்கு, நிரப்பு ஆகிய வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் “தல்” விகுதி சேரும்போது வாழ்த்துதல், எழுப்புதல், நொறுக்குதல், முறுக்குதல், நிரப்புதல் என்றே வருகின்றன. வாழ்த்துத்தல், எழுப்புத்தல், நொறுக்குத்தல், முறுக்குத்தல், நிரப்புத்தல் என்று எழுதுவது இல்லை. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் “தல்” விகுதி சேரும்போது ஏன் ஒற்றுமிகவில்லை என்று இந்த மறுதரப்பினரும் சிந்திக்கட்டும்.
இலக்கிய அன்பர்கள் இடையே வாழ்த்துகளா… வாழ்த்துக்களா… எழுத்துகளா… எழுத்துக்களா… என்ற விவாதம், தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. இந்தக் குழப்பம் களைய அவ்வப்போது சிலர் முயன்று வருகின்றனர்.
இப்படியும் எழுதலாம்… அப்படியும் எழுதலாம்… என்று சில பெரும்புலவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள்தாம் உண்மையிலேயே நடுநிலை வகிப்பவர்கள்.
இப்படியும் எழுதலாம் அப்படியும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று சொல்வது விதியில்லை, நல்ல வழிகாட்டல் இல்லை. இரண்டில் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்போரும் எதிர்க்குரல் கொடுப்போரும் உண்டு.
குழப்பங்களைத் தீர்க்கவும் தெளிவு பிறக்கவுமே இலக்கண விதிகள் வகுக்கப்படுகின்றன. காலத்துக்கு ஏற்ப இலக்கண விதிகளை ஆராய்ந்து அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரலாம். புது விதிகளும் உருவாக்கலாம். இலக்கியம் வளர்வதுபோல் இலக்கணமும் வளர வேண்டும்.
இந்தச் சிக்கலுக்கு என்ன செய்வது?
“கள்” விகுதி வந்தால் ஒற்று மிகும் என்று ஒற்றை விதியை வகுத்துவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் சில இடங்களில் இடிக்கின்றன.
“கள்” விகுதி வந்தால் எந்த இடத்திலும் ஒற்று மிகாது என்று சொல்லிவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் நிலா, பலா, உரு, உடு போன்ற சொற்கள் வந்து இடித்துரைக்கின்றன.
இப்படியும் போக முடியவில்லை. அப்படியும் போக முடியவில்லை. குழம்பிப்போய்த் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிடுவதா என்றும் தெரியவில்லை.
ஆக, “கள்” விகுதி ஒற்று மிகுந்தும் வருகிறது. ஒற்று மிகாமலும் வருகிறது. கள் என்பதால்தான் இப்படித் தடுமாறுகிறதோ என்னவோ?
ஆழ்ந்து சிந்தித்தால் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் மட்டும்தாம் “கள்” விகுதி, குழப்பத்தை விளைவிக்கிறது.
மொழி என்பது ஆய்வகத்தில் வைத்து உருவாக்கப்பட்டது இல்லை. மொழி என்பது முன்திட்டம் இட்டுக் எழுப்பப்பட்ட கட்டடம் இல்லை. இயற்கையாகத் தோன்றும் மொழிகளுக்கு இலக்கண விதிகளை வகுக்கும்போது விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்யும். அந்த அடிப்படையில் கீழ்க்கண்டவாறு ஒரு முடிவுக்கு வரலாம்.
ஓரெழுத்து ஒரு மொழியாக இருக்கும் பா, பூ, ஈ போன்ற நெடில் எழுத்துச் சொற்களோடும்- நிலா, பலா, தாத்தா, ஆயா போன்ற ஆகார ஈற்றுச் சொற்களோடும்- உரு, உடு போன்ற ஈரெழுத்து உகர ஈற்றுச் சொற்களோடும் “கள்” விகுதி சேரும்போது ஒற்று மிகும். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் உட்பட வேறு எந்தச் சொற்களோடும் “கள்” விகுதி சேருகிற போது ஒற்று மிகாது.
மேலே குறிப்பிட்ட, ஒற்றை நெட்டெழுத்துச் சொற்களில் ஐ இனத்தைச் சேர்க்கவில்லை என்பதை அறிக. பைகள், கைகள் என்றே அவை ஒற்று மிகாமல் வருகின்றன. ஐ என்பதை யாப்பிலக்கணத்தில் குறிலாகவும் கொள்வார்கள் நெடிலாகவும் கொள்வார்கள். அதன்படி ஐ என்பதைக் குறிலாகக் கருதலாம். அல்லது ஐ என்பதை விதிவிலக்காக வைக்கலாம்.
எந்த விளக்கம் சொன்னாலும் அதிலிருந்து ஒரு கேள்வி கிளைத்துக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து ஒரு விதிவிலக்கு முளைத்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் கள் மயக்கத்தை எப்படித்தான் தெளிய வைப்பது?
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதி சேரும்போது மட்டுமே குழப்பம் வருகிறது. வேறு எந்த இடத்திலும் “கள்” மிகுமா மிகாதா என்ற மயக்கம் நமக்கு ஏற்படுவதில்லை. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தவிர்த்துப் பிற சொற்களைக் கையாளும்போது இயற்கையாகவே “கள்” விகுதியைச் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.
எனவே,
குழப்பத்துக்குக் காரணம் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்தாம் என்பதால், “கள்” விகுதி வருகிறபோது வன்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி விதி பொருந்தாது என்று அறிவித்துவிடலாம்.
வாழ்த்துகள் என்றே வாழ்த்துங்கள்.
எழுத்துகள் என்றே எழுதுங்கள்.
இன்றைய மொழிப்பயன்பாட்டு முறைமைக்கும் கற்றலின் எளிமைக்கும் இதுவே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எனினும் ஒருபோதும் புலவர்களின் சண்டை ஓய்வதே இல்லை, அலைகளைப் போலவே…
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ்
- சொன்னதும் சொல்லாததும் – 1
- கண் திறப்பு
- கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்
- “ஞானப்பால்” – ந.பிச்சமூர்த்தி – சிறுகதை வாசிப்பனுபவம்
- ஐங்குறு நூறு — உரை வேற்றுமை
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- நாம்
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி
- தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்