ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

This entry is part 15 of 16 in the series 20 செப்டம்பர் 2020

சின்னக்கருப்பன்

சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள்.

இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம்.

இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை.

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்த பேதை உரைத்தான் என்று பாரதியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பியது இன்னமும் புலம்பலாகவே இருக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன்..

(இந்த நிலையில் கவிதாயினி என்று தமிழ் ஆன்றோர் போன்றோர்களால் புகழப்படும் கனிமொழி எம்பி அவர்களது 2008 உளறலையும் படிக்க நேர்ந்த துரதிர்ஷ்டமும் அடியேனுக்கு வாய்க்கப்பட்டது. அதனை கண்டித்து சரத்குமார் எழுதியதை ஒன் இந்தியா இதழில் படித்து இன்னமும் அதிக துயரடைந்தேன்.
https://tamil.oneindia.com/art-culture/essays/2008/27-sarath-kumar-criticizes-kanimoli-for-talk.html

“தமிழ் மெல்லச் சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல். தமிழ் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும்” என்று “வீர உரை” ஆற்றினாராம் கனிமொழி.

கருணாநிதி, ஸ்டாலின் (சுடாலின் அல்ல), கனிமொழி, உதயநிதி, இன்பநிதி போன்றோருக்கு சூளுரை செய்தாலே போதுமானது. தமிழ் வளர்ந்துவிடும். ஆகையால் அவர்களிடம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை.

அரைகுறை அரசியல்வாதிகளை விட்டுவிட்டு பாரதியிடம் செல்வோம்.

புத்தம் புதிய கலைகள்
பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லை
அவை சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும்
அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்

இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”


புத்தம் புது கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேன்மைக்கலைஞர் தமிழினில் இல்லை.

உண்மைதானே?

பாரதி இதனை கூறி நூறுவருடங்களுக்கு மேலாகிறது.

2012 இல் நடந்த கணினி தமிழ் வளர்ச்சி மாநாட்டில் கூட

http://kaninithamilvalarccimaanadu.blogspot.com/2012/12/blog-post_4046.html

6 முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.

அவ்வளவே தான் கேட்டிருக்கிறார்கள். அதனைக் கூட தமிழ்நாட்டில் தமிழ் வளர்ப்பதற்காகவே தினந்தோறும் சூளுரை எடுக்கும் திமுகவினரும் அதிமுகவினரும் 60 ஆண்டுகள் ஆளும் தமிழ்நாட்டில் நடத்தி வைக்கமுடியாது. உண்மைதானே?

தமிழ் மொழி மாநாடு நடத்தி அதில் கருணாநிதி குடும்பத்தினரை முன் வரிசையில் அமர்த்தி, கருணாநிதி குடும்பத்துக்கு வாழ்த்துப்பா படித்துவிட்டால் தமிழ் வளர்ந்துவிடும் என்று ஒவ்வொரு திமுகவினரும் கருதலாம்.

நான் துரதிர்ஷ்டவசமாக அப்படி கருதவில்லை.

சொல்லப்போனால், பாரதியார் தமிழ் வளருவதற்கான சரியான யோசனையை சொன்னாலும் தமிழர்கள் வளர்வதற்கான சரியான யோசனை அது அல்ல.

வெறுமே ஆங்கில ப்ரெஞ்ச், ஜெர்மானிய சீன மொழி அறிவியல் தொழில்நுட்ப மற்ற இதர கலை செல்வங்களை தமிழில் மொழிபெயர்த்தால் போதாது.

ஏனெனில் தமிழர்கள் புத்தகங்களை படிப்பதே இல்லை.

இந்த கேவலமான விஷயத்தை சொல்லிவிடத்தான் வேண்டியிருக்கிறது. தமிழர்கள் புத்தகங்கள் படிப்பதே இல்லை. யாரோ எதையோ சொல்லுகிறார்கள் என்று அதனை திரும்ப சொல்லுகிறார்களே தவிர தமிழர்கள் புத்தகங்கள் வாங்குவதில்லை. படிப்பதில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் புத்தக கண்காட்சிகள் படு தோல்வி அடைகின்றன.

தமிழில் மிக அதிகம் விற்பவை ஜோதிட புத்தகங்களும், சமையல் குறிப்புகளும்தான்.

8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ஒரு புத்தகம், 500 புத்தகங்கள் விற்பனை ஆகிவிட்டால் மிகப்பெரிய வெற்றி என்று அறிவித்துவிடலாம். அந்த லட்சணத்தில்தான் தமிழில் புத்தகங்கள் வாங்குகிறார்கள் படிக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா பதிப்பகத்தினருக்கும் தெரியும். அரசாங்கம் தனது நூலகங்களுக்கு புத்தகம் வாங்குவதாலேயே தமிழ்நாட்டில் நூல் பதிப்பக தொழில் குடிசைத்தொழிலாக இருக்கிறது.

அதுவும் கவிதை கதை புத்தகங்கள்தானே தவிர, க்வாண்டம் இயற்பியல் புத்தகம் அல்ல. க்வாண்டம் இயற்பியல் புத்தகம் தமிழில் வராது. வந்தாலும் ஒரே ஒரு பிரதி கூட விற்காது. காரணம் அதனை படிக்க வேண்டிய கட்டாயம் எந்த இயற்பியல் மாணவருக்கும் இல்லை. எந்த பதிப்பக உரிமையாளரும் க்வாண்டம் இயற்பியலுக்கோ, அல்லது குழு தேற்றம் பற்றிய கணித புத்தகத்துக்கோ மறந்தும் நூல் பதிப்பு செய்யமாட்டார்.

மிக எளிய தமிழில் பாரதியார் எழுதிய கவிதையையே படிக்காமல், பாரதியாரை கண்டித்து வீர உரை ஆற்றும் முதலமைச்சரின் மகள் இருக்கும் நாட்டில், க்வாண்டம் இயற்பியலை யார் தமிழில் படிப்பார்கள்?

சரி ஏன் தமிழர்கள் க்வாண்டம் இயற்பியலை தமிழில் படிக்க வேண்டும்? ஏன் ஆங்கிலத்தில் படித்துகொள்ளக்கூடாதா?

ஏனெனில் தமிழர்களுக்கு சரியாக தமிழே தெரியாத போது, எப்படி ஆங்கிலத்தில் படித்து புரிந்துகொள்வார்கள்?


தமிழர்கள் சரியான மாங்கா மடையர்களாக ஆனதற்கு முக்கிய காரணம், அனைத்து அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதுதான்.

இதுதான் உண்மையான உண்மை.

தமிழை வளர்க்க வேண்டாம். தமிழர்களை முன்னேற்றுங்கள். தமிழர்கள் முன்னேற வேண்டுமானால், தமிழ்நாட்டில் பிரதேச மொழியாக இருக்கும் தமிழில் மட்டுமே அனைத்து உயர்கல்வியும் இருக்க வேண்டும். வெறும் ப்ராஜக்ட் ரிப்போர்ட்டுகள் மட்டுமல்ல.

தமிழில் உயர்கல்வி கற்கும்போதுதான் தமிழர்களுக்கு தாங்கள் என்ன படிக்கிறோம் என்று புரியும். இதனை மறுபடி மறுபடி அழுத்தந்திருத்தமாக சொல்லுகிறேன்.

ஆங்கிலமே முழுக்க முழுக்க பேசும் கான்வெண்டில் கூட தமிழர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள பாடத்தை புரிந்துகொள்வது சிரமம்.

ஆங்கிலத்தில் அந்த கல்வி இருப்பதற்கு பதிலாக இந்தியில் கூட இருக்கலாம். ஆனால் தயவு செய்து ஆங்கிலம் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

எத்தனை எத்தனையோ பிரம்மாதமான இளைஞர்கள், புத்திசாலி இளைஞர்கள், ஆங்கிலம் புரியாததாலேயே பத்தாம் வகுப்பில் தோற்று வாழ்க்கை இழந்து போனார்கள் இந்த தமிழகத்தில்.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற என் நண்பன், ஆங்கிலத்தில் 30 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான்.

இன்னும் அவனின் கண்ணீரை என்னால் மறக்க முடியவில்லை. ஆங்கிலம் நமதுமொழி அல்ல. ஆங்கிலம் அன்னிய மொழி. அதன் வார்த்தைகளும், அதன் இலக்கணமும், அதன் சொற்றொடர்களும், அதன் idioms and phrases நமக்கு அன்னியமானவை. அவற்றை புரிந்துகொண்டு அதன் பிறகு அதன்மூலம் கலைகளை கற்பது என்பது தமிழ் மாணவர்களை நெருப்பு பாதையில் இழுத்து வருவது போன்ற கொடுமையானது.

அது நம் நினைவு தெரிந்த நாள் முதலாகவே அறிந்திருப்பதால், அதனை சகஜமாக ஏற்க பழகிவிட்டோம்.

தெலுங்கை, மலையாளத்தை, இந்தியை நாம் மிக எளிதில் கற்றுகொள்ளலாம். ஏனெனில் அவை நமக்கு அன்னிய மொழிகள் அல்ல. அதில் இருக்கும் வார்த்தைகள், இலக்கண அமைப்பு, அதன் idioms and phrases நமக்கு பழக்கமானவை. பரவாயில்லை என்பத பர்வா நஹி என்றுதான் இந்தியில் சொல்லுகிறார்கள். இந்த மொழிகள் நம்முடன் 2000க்கும் மேலான வருடங்களாக நம்முடன் உறவாடி இருக்கின்றன. அதனால்தான் இளையராஜா மிக எளிதில் தெலுங்கில் உரையாடுகிறார். மோகன்லால் தமிழில் பேசுகிறார், ஹர்பஜன் சிங் தமிழில் உரையாடுகிறார்.

இதனால்தான் தமிழ் வியாபாரிகள் பெல்காமுக்கு பஸ்ஸில் சென்று அங்கு வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பின்னால் சென்று வசூலித்துகொண்டு திரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆங்கில ஆதரவு, தமிழ் வளர்க கோஷம், இந்தி அரக்கி கோஷம் ஆகியவற்றை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

இந்தி எதிர்ப்பும், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்பதும் நமது வரலாறு. ஆனால், வரலாறு நமது விலங்காகிவிடக்கூடாது.

இந்திக்கு பதிலாக தமிழ் என்று இருப்பதற்கு பதிலாக, இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்று உருவாக்கிவிட்டோம். அதுதான் மிகப்பெரிய இமாலய தவறு.

இன்று தமிழர்களின் கழுத்தில் தொங்கும் தூக்கு கயிறாக ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலத்தை ஒழித்து, அதன் இடத்தில் தமிழை உட்கார வைப்பதே எதிர்கால தமிழர்களின் முன்னேற்றத்துக்கு நாம் செய்யக்கூடிய ஒரு பணி.

ஆங்கிலம் ஒழிப்போம், தமிழரை காப்போம். தமிழ் தானாக வளரும். தமிழரை ஆங்கிலத்திடமிருந்து காக்கமுடியவில்லை என்றால் தமிழ் நிச்சயம் அழியும்.

Series Navigationநேர்மையின் எல்லைகாந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2
author

சின்னக்கருப்பன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  குணா says:

  திரு சின்னகருப்பன் அவர்களின் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது, வரவேற்கப் பட வேண்டியது. அதுவே துவேஷமாகவும், வெறியாகவும் மாறிவிடக்கூடாது. இந்த குறிப்பினை நீண்ட யோசனைக்குப் பிறகே பதிவிடுகிறேன். மனதைப் புண்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை. தமிழை பாதுகாக்க வேண்டியது தமிழ் கூறு நல்லுலகின் கடமை. நம்மை நாம் காப்போம். இதை அடுத்த மொழியின் அழிவு அல்லது அழிப்பு என்று சொல்வதைவிட, நம் மொழியை மேலும் செப்பனிடுதல் என்று கொண்டால் சரியாகுமோ…

 2. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  செய்யலாம், ஆனால் அதற்கு முன்பாக, தமிழகம் வேலைவாய்ப்புகளை பல்லாயிரக்கணக்கில் உருவாக்கித்தந்துகொண்டே இருக்கவேண்டும். காரணம், ஆண்டுதோறும் லட்சகணக்கான பட்டதாரிகள் படிப்பு முடித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே வேலைபார்க்குமளவுக்கு – வெளிமாநிலங்களை நாடிப்போகவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு, இங்கு வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும்.

  அதற்கு முன்னால் நல்ல தமிழில் அறிவியல், கணித, தொழில்நுட்ப நூல்கள் வெளிவரவேண்டும். அவற்றுள் கணித, அறிவியல், தொழில்நுட்ப சொற்கள் பெரும்பாலானவற்றை அப்படியே பாவிக்கலாம். கால்குலஸை, கால்குலஸ் என்றே சொல்லலாம். வகைக்கெழு என்பது தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  ஆனால், இதன் நடைமுறை சாத்தியம் என்ன என்பது பெரும் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *