நேர்மையின் எல்லை

This entry is part 14 of 16 in the series 20 செப்டம்பர் 2020

     அந்த அமைச்சர் நேர்மையின் வடிவம் என்று பேரெடுத்தவர். வங்கிக் கணக்கில் அவர் பெயரில் இருந்த தொகை ஒரு நடுத்தரக் குடிமகனின் சேமிப்புக்கு ஈடானது. இந்தியா  விடுதலை பெற்ற புதிதில் அவர் ஒரு மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பதவி ஏற்றவர். கையூட்டு என்றால் என்ன வென்பதையே அவர் அறியாதவர். அந்த மாநிலத்தின் முதலமைச்சரும் அப்படிப்பட்டவரே! ஐம்பதுகளின தொடக்கத்தில் நம் நாடு பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. எனவேதான் காவல்துறையை முதலமைச்சார் அவரிடம் ஒப்படைத்திருந்தார். எல்லா அமைச்சர்களுமே நாணயமானவர்கள் என்று கூற இயலாவிடினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பத் தகுந்தவர்களாகவே இருந்தார்கள். இதனால் உயர் அரசு அலுவலர்களும் நாணயமானவர்களாக இருக்க நேர்ந்தது. தலை ஆடாமல் வால் ஆடாது என்பது உண்மைதான் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

      அந்த அமைச்சர் தம் மகனையும் நேர்மையானவனாக இருக்கும் வண்ணம் வளர்த்திருந்தார். தம் செல்வாக்கின் அடிப்படையில் அவர் அவனுக்கு அரசுப் பதவி எதையும் ஏற்பாடு செய்யவில்லை. பிற அமைச்சர்களுள் எவரையும் அதைச் செய்ய அனுமதிக்கவும் இல்லை. தன் தகுதிக்கு ஏற்ற வேலையைத்  தன் சொந்த முயற்சியால் அவனே தேடிக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். வேலைக்கான தன் விண்ணப்பங்களில் தான் அந்த அமைச்சரின் மகன் என்பதைக் குறிப்பிடவே கூடாது என்றும் கூறிவிட்டார். முகவரியைக்கூடத் தம் சகோதரியின் “மேற்பார்வை” முகவரியாய்க் கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டார். சுருங்கச் சொன்னால், அவர் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஓர் அப்பட்டமான காந்தியவாதி !

      தன் அப்பாவைப் புரிந்துகொண்டிருந்த அவனும் அவருடைய கண்டிப்பான விதிகளை அப்படியே பின்பற்றி நடந்துகொண்டிருந்தான்….இப்போது அந்த சிவநாத்துக்குப் பதினாறு வயதில் ஒரு மகள் இருந்தாள். தான் இன்னாரின் பேத்தி என்பதை அவள் தன் நெருங்கிய தோழிகளுக்குக்கூட வெளிப்படுத்தக்கூடாது என்பது சிவநாத்தும் அமைச்சரான அவள் தாத்தாவும் அவளுக்கு விதித்திருந்த கண்டிப்பான கட்டளை. அவளிடம் இருவரும் சத்தியமே வாங்கியிருந்தார்கள். அவளும் அதை அப்படியே பின்பற்றிவந்தாள். அவளுடைய பள்ளித் தலைமை ஆசிரியைக்குக்கூட அவளது குடும்பப் பின்னணி தெரியாது.

      எத்தனையோ முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்த போதிலும், அவள் அந்த அமைச்சரின் பேத்தி எனும் தகவல் எப்படியோ கசிந்துவிட்டது. தலைமை ஆசிரியை அவளை அழைத்து அது பற்றிக் கேட்டபோது, அவள் அதை ஒப்புக்கொள்ள நேர்ந்ததுடன் அதற்கான பின்னணியையும் தெரிவித்தபோது அந்த அம்மாள் வியந்து போனார்.

 “நான் இன்னாருடைய பேத்தி என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று அவளும் வியந்து வினவிய போது, “இதையெல்லாம் நிரந்தரமாய் மறைக்க முடியாதம்மா!” என்று அவர் பதிலளித்துச் சிரித்தார். அதுமட்டுமின்றி, அவள் தாத்தாவின் நேர்மையைப் பெரிதும் பாராட்டிவிட்டு, அவர் சொற்படி உண்மையை அதுகாறும் மறைத்துவந்துள்ள அவளையும் புகழ்ந்தார்.

அன்றே அவள் தன் தந்தையிடம் சேதியைச் சொல்ல, அவரும் ரகசியம் எப்படியோ கசிந்து விட்டிருந்த உண்மையைத் தம் தந்தைக்குத் தெரிவித்தார்.   “அட, கடவுளே!’ என்று பெருமூச்செறிந்தவாறு அவர் தம் தலையில் கையை வைத்துக்கொண்டார்.

தலைமை ஆசிரியை அவளை அழைத்து விசாரித்த போது அவள் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தாள். அந்தப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து தன் வகுப்பில் அவள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தாள். ஆண்டு இறுதித் தேர்வில் அவளே எப்போதும் போல் முதலாவதாய்த் தேறுவாள் என்பது எல்லாருடைய எதிர்பார்த்தலாகவும் இருந்து வந்தது.

நிவேதிதா நல்ல மதிப்பெண்களுடன் தேறியிருந்த போதிலும் முதலாவதாய் வரவில்லை என்பதோடு வழக்கமான நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணைச் சில பாடங்களில் பெற்றிருக்கவும் இல்லை. அது பள்ளி இறுதித் தேர்வு என்பதால் வழக்கத்தை விடவும் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த அவளுக்குத் தேர்வின் முடிவு பேரதிர்ச்சியை அளித்தது.

கூட்டலில் தவறு நேர்ந்திருக்கவேண்டும் என்பதே தலைமை ஆசிரியையின் எண்ணமாய்க் கூட இருந்தது. கல்வித் துறைக்கு அவள் மறு மதிப்பீட்டுக்கும் மறு கூட்டலுக்கும் மனுச் செய்ய விரும்பியபோது அவள் அப்பா தம் தந்தையிடம் அதைத் தெரிவித்தார். ஏனெனில் கல்வித்துறை அப்போது அவர் வசம் வந்துவிட்டிருந்தது, அவருக்குச் சொல்லாமல் மனுச்செய்தால் அவர் பின்னர் அது தமக்குத் தெரியவரின் கோபிப்பார் என்பதே காரணம்.

      அவரது உடனடியான பதில் தம் பேத்தி மறு மதிப்பீட்டுக்கும், மறு கூட்டலுக்கும் மனுச்செய்யவே கூடாது என்பதுதான். அதை அவள் தந்தை நிவேதிதாவுக்குத் தெரிவித்ததும் அவள் நேரில் தன் அமைச்சர்த் தாத்தாவைச் சந்தித்தாள்.

             “வாம்மா. உட்கார். நீ என்ன விஷயமாய் என்னைப் பார்க்க வந்திருக்கிறாய் என்பது எனக்குப் புரிகிறது. நீ என் மேல் ரொம்பவும் கோபமாய் இருக்கிறாய் என்றும் தோன்றுகிறது….முதலில் உட்கார்…”

       “நான் உட்கார வரவில்லை, தாத்தா… எப்போதும் நான் நூற்றுக்கு நூறு வாங்கும் இங்க்லீஷ், மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களில் கூட எண்பதுக்கு மேல் எதிலும் என் மதிப்பெண் ஏறவில்லை. ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பது கண்கூடாய்த் தெரிகிறது. அதனால் நான் மனுச்செய்யப் போகிறேன்.  நான் உங்கள் அனுமதியில்லாமல் அதைச் செய்யக் கூடாதென்பது அப்பாவின் கட்டளை. அவர் அது சம்பந்தமாய் உங்களை அணுகிய போது நீங்கள் கூடாதென்று சொல்லிவிட்டீர்களாம். அதனால் நான் நேரிலேயே வந்திருக்கிறேன்…”

       “முதலில் உட்காரம்மா.”

       “நீங்கள் முதலில் எனக்குப் பதில் சொல்லுங்கள், தாத்தா…”

       “இப்போது நான் கல்வி அமைச்சராகவும் இருக்கிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும், நிவேதிதா!”

       “நீங்கள் கல்வி அமைச்சராகவோ இந்த நாட்டின் பிரதமராகவோ கூட இருந்தாலும், அது எனது அடிப்படை உரிமையை எவ்வாறு பாதிக்கலாம், தாத்தா? சாதாரணக் குடிமக்களுக்கு இருக்கும் அற்ப உரிமையைக்கூட உங்கள் பேத்தியாக நான் இருக்கிறேன் எனும் துரதிருஷ்டத்துக்காக நீங்கள் மறுக்கலாமா? இதென்ன நியாயம்?”

       “இதோ பாரம்மா. நான் காந்தி வழியில் வந்தவன். என் மீது கண்ணுக்குத் தெரியாத அற்பக் கறை படிவதைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது ! தெரிந்ததா?”

       “என் மீது எந்தத் தப்பும் இல்லாத போது உங்கள் பேத்தி என்பதால் அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுவதை நான் மட்டும் சகித்துக்கொள்ள வேண்டுமா?”

       “என் பேத்தியாக நீ இருக்கும் துரதிருஷ்டத்தை விடவும் நான் உன் தாத்தாவாக இருப்பதுதான் அதிக துரதிருஷ்டமானது, நிவேதிதா!”

       “இப்படியெல்லாம் வக்கீல்தனமாய் வாதாடி என் வாயை அடைக்கப் பார்க்காதீர்கள், தாத்தா! அப்பா உங்கள் அனுமதியைக் கேட்டதே தப்பு! என் தனிப்பட்ட உரிமையில் தலையிட நீங்கள் இருவரும் யார்?”

       “என்னது! உன்னைப் பெற்று, வளர்த்துப் படிக்கவும் வைத்துக்கொண்டிருக்கும் உன் அப்பாவையும், அவனைப் பெற்றவனையுமா யாரென்று கேட்கிறாய்?”

       “அப்படித்தான் கேட்பேன். என்ன தப்பு? பெற்று வளர்த்தால் குழந்தைகளெல்லாம் அடிமைகள் என்று ஆகிவிடுமா? உங்கள் விருப்பம் போல் குழந்தைகள் ஆட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பெறுகிறீர்களா?”

      அமைச்சரின் முகம் சுருங்கியது: “நீ நன்றாக வாயாடுகிறாய். வக்கீலுக்குப் படி! அதற்கு இந்த மதிப்பெண்கள் கொள்ளையோ கொள்ளை! டாக்டராக வேண்டும் என்பது உன் ஆசையாமே?”

       “ஏன்? என்ன தப்பு? அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக நீங்கள் ஆசைப்படலாம், ஆனால் நான் டாக்டராக ஆசைப்படக் கூடாதாக்கும்!”

       “இதோ பாரம்மா. நீ மறு மதிப்பீட்டுக்கும், மறு கூட்டலுக்கும் மனுச்செய்து, ஒருவேளை அதில் வெற்றியும் பெற்று நீதான் முதல் மாணவி என்பது நியாயமான முறையிலேயே வெளிப்பட்டாலும் கூட எல்லாரும் என்ன சொல்லுவார்கள்? அதை நினைத்துப் பார்த்தாயா? அவளுடைய தாத்தாவே கல்வி அமைச்சர். அந்தச் செல்வாக்கைப் பயன் படுத்தி அவள் முதலாவதாக மறுகூட்டலில் வந்துவிட்டாள் என்று பேசுவார்களா இல்லையா?”

       “அப்படி யாராவது பேசினால் அது அவர்கள் தப்புத்தானே?”

       “அது அவர்கள் தப்பு என்பது யாருக்குத்தெரியும்? அப்படி ஏதும் நடக்கவில்லை என்று நான் விளம்பரமா செய்யமுடியும்? அப்படிச் செய்தால் அதுவே ஒரு பொய் என்றல்லவோ மக்கள் பேசுவார்கள்?”

       “மறு கூட்டலில் உண்மையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு உண்மை தெரியுமே? வேறு யாருக்குத் தெரிய வேண்டும்?”

       “இதெல்லாம் எடுபடாது, அம்மா. என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய இந்த உன் மனுவுக்கு நான் அங்கீகாரம் தர முடியாது…”

       “ நீங்கள் என்ன தருவது, தாத்தா? நானே மனுச் செய்துகொள்ளுகிறேன்…”

அமைச்சரின் மூக்கு முனை சிவந்தது.

       “அதைத் தடுக்க என்னால் முடியாதென்றா நினைத்தாய்? உன் மனுவைப் பரிசீலிக்கக் கூடாதென்று இப்போதே நான் கல்வி அதிகாரிக்குத் தெரிவித்து விடுகிறேன். …”

       “உங்கள் செயல் தவறானது, தாத்தா…”

       “எது சரி, எது தப்பு என்று நேற்று முளைத்த நீ எனக்குச் சொல்லுகிறாயா?” என்று அமைச்சர் குரலை உயர்த்திக் கத்தினார்.

       “ஒரு சாதாரணக் குடிமகளுக்கு இருக்கும் உரிமையை நான் பயன்படுத்தக்கூடாது என்று தடுக்கும் அதிகாரம் தவறானது, தாத்தா! நீங்கள் உண்மையாக நடந்து கொள்ளுவது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும் போது நீங்கள் ஏன் ஆதாரமற்ற வம்புப் பேச்சுக்கும் குற்றச் சாட்டுக்கும் பயப்படவேண்டும்?”

 “ நான் மனச்சாட்சிக்குப் பயப்படுபவன், அம்மா!”

       “மனச்சாட்சிக்குப் எதிராக நீங்கள் என் விஷயத்தில் நடந்துகொள்ளாத நிலையில்  மனச்சாட்சிக்குப் பயப்படுவது எனும் பேச்சுக்கே இடமில்லையே, தாத்தா!”

       “ நீ எப்படியாவது என்னைச் சம்மதிக்க வைக்கலாம் என்று பார்க்கிறாய். அது ஒரு போதும் நடக்காது.”

       “ சரி, தாத்தா. நீங்கள் சம்மதிக்க வேண்டாம். ஆனால், கல்வித்துறை அதிகாரிக்கு என் மனுவை ஏற்கக்கூடாது என்று சொல்லாமலாவது இருங்கள்.”

       “அதெப்படி? நீ என் பேத்தியாக இருக்கும் போது, எப்படி நான் இதில் தலையிடாமல் இருக்க முடியும்? அப்பழுக்கற்ற அமைச்சர் என்று பெயர் வாங்கியுள்ள எனக்கு உன்னால் அவப்பெயர் வரப் போகும் நிலையில் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிப்பது துளியும் சரியில்லை, நிவேதிதா! நான் காந்தியின் நேரடிப் பயிற்சியில் வளர்ந்தவன்!”

       “அவ்வளவு மனச்சாட்சியுள்ளவரானால், நீங்கள் ராஜினாமா செய்யலாமே! அதன் பின் நான் மனுச் செய்வேன்…”

      அவளது கூற்றில் இருந்த நியாயத்தால் அவரது வாய் கண நேரம் போல் அடைத்துப் போயிற்று. எனினும் அவரும் விடுவதாக இல்லை.

  “நிவேதிதா! உனக்கு இவ்வளவு துடுக்குத்தனம் ஆகாது. இங்கிருந்து வெளியே போ!” என்ற அமைச்சர் தொலைப்பேசியில் ஏதோ இலக்கத்தைச் சுழற்றலானார். அது கல்வி அதிகாரியின் இலக்கமாய்க்கூட இருக்கக்கூடும் என்று ஊகித்த நிவேதிதா கண்ணீருடன் அவரது அறையை விட்டு வெளியே சென்றாள்.

      வெளியே சென்றவள் சில கணங்களுக்கு அங்கேயே நின்றாள். அவர் கல்வி அதிகாரியின் இணைப்பைத் தருமாறு தன் செயலரிடம் சொன்னது காதில் விழுந்ததும் கண்ணீரை அடக்கிக்கொள்ள முடியாமல் அவள் அவசரமாய் வெளியேறித் தன் ஸ்கூட்டியில் தாவி ஏறினாள்….

      … மறு நாள் கல்வி அமைச்சரின் பேத்தி தற்கொலை செய்துகொண்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் வெளிவந்தது.

. . . . . . . . .

Series Navigationகுஜராத்- காந்தியின் நிலம் – 1ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *