எஸ்.சங்கரநாராயணன்
(தினமணிகதிர் 1999)
வாழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்று எதைப் பற்றியாவது சிந்திப்பதும் அதை உரக்க விவாதிப்பதுமாய் இருந்தான் அவன். படிக்கிற காலத்தில் இருந்தே அவன் படிப்பில் கெட்டிக்காரன். முதல் இரண்டு இடங்களுக்குள் அவன் கட்டாயம் வருவான். இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தில் சரளமாய் வாசித்துத் தள்ளுவான். பொடிப்பொடி எழுத்துக்களை இரவின் சிறு வெளிச்சத்தில் படுக்கையில் படுத்தபடி வாசித்து வாசித்துத்தான் கல்லூரி முடிக்குமுன்னே சோடாபுட்டி கண்ணாடி போட வேண்டியதாகி விட்டது.
அவன் ஒல்லியாய் ஆளே ஒடிந்து விழுகிறாற் போல இருப்பான். முருங்கை மரம். ஆனால் பேசினாலோ எங்கிருந்தோ அத்தனை அழுத்தம் வந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு குறி வைத்துக்கொண்டு அதைநோக்கி அவன் ஆவேசப் பட்டாற் போலிருந்தது. “சாமெர்செட் மாம் ஒரு சினிக். இருந்திட்டுப் போட்டுமேய்யா. சடையர் இலக்கிய வகை ஆகாதா என்ன?” என்பான். “யாரைப் பற்றியாவது பொய்யா, தப்பா அவர் கிண்டலடிச்சிருக்கிறாரா?” என்று கேட்பான். “நம்ம தமிழிலேயே வசை பாடுதல்னு இருக்கே. காளமேகப்புலவர்… புகழறாப்ல இகழறுதுலயும், இகழறாப்ல புகழறதுலயும் யப்பா மன்னன். கத்துகடல் சூழ்நாகை காத்தான்தன் சத்திரத்தில்… ஞாபகம் இருக்கா?” என்று அந்த வஞ்ச இகழ்ச்சியை மனதில் நினைத்துப் புன்னகைப்பான். “நந்திக் கலம்பகம்?… ஐயோ, அந்தக் கடைசிப் பாடல்களை வாசிக்க வாசிக்க, நமக்கே உடம்பு பத்திக்கிட்டு எரியறாப்ல இருக்கும்,” என்பான்.
யார் யாரோ வந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவனை மறித்தோ எதிர்த்தோ யாரும் பேசி அவள் கேட்டதேயில்லை. அவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். எந்த விஷயம் பற்றியும் அவனிடம் எப்போதும் பேச முடியும். அவனிடம் அதற்கு ஒரு சுயமான கருத்து தயாராய் இருந்தது.
“தமிழில்… ஐயய்ய, முன்தலைமுறை எழுத்தாளன் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளணும்யா,” என்பான் பல் குத்திக்கொண்டே. “எல்லாரும் திண்ணைப் பயல்க. ஒத்தன்ட்டக் கூட கமிட்மென்ட், ஆதன்ட்டிசிட்டி கிடையாது. எல்லாம் ஊறின கட்டைங்க,” என்றவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். “ஓர் இலக்கியப் பிஸ்தா. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது. ஓர் உதாரணம்னு இதைச் சொல்றேன். அத்தனை மகானுபாவன்களும் இந்த லெட்சணத்துலதான் எழுதறாங்க, ஊஞ்சல்… டிகிரிகாப்பின்னு… இந்த மகான் ஒரு கதையை இப்பிடி ஆரம்பிக்கிறார். (அவன் முகத்தில் பேச்சில் எத்தனை குசும்பு. அடாடா!) திருச்சினாப்பள்ளி ஸ்டேஷன்லதான் சாப்பாடு நன்னாருக்கு. ஆனா ரயில் அங்க அஞ்சி நிமிஷந்தான் நிக்கறது – இப்பிடி சுகவாசிகளா எழுதி எழுதியே சிந்தனை பண்ணிப் பண்ணியே நம்மளக் காயடிச்சிட்டானுங்க. அதான் இந்தத் தலைமுறையே மங்கி மக்கிப்போய்க் கெடக்கு.”
தலைவலி உடம்புவலி என அவன் படுத்து அவள் பார்த்ததே இல்லை. ஒருவேளை அவன் காட்டிக் கொள்வதில்லையோ என்னவோ. பார்க்க எப்போதுமே அவன் அலுப்பாய் ஆயாசமாய் இருந்தான். முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருப்பான். அதில்தான் சில்லரையோ பீடித்துண்டுகளோ வைத்திருப்பான். விரும்பாதது போலவே, ஆனால் கட்டாயம் அவன் பீடி குடித்தான். அவன் வாழ்வதே கூட வேண்டா வெறுப்பு போல, அலட்டிக்கொள்ளாத பாவனையில் தான் வாழ்வதாக அவளுக்குப் பட்டது. மச் அடோ எபவ்ட் நத்திங்.
தான் பார்க்கிற வேலை பற்றி, தன் உடல் பற்றி அவனிடம் ஓர் அலட்சியம் கவனமின்மை இருந்தது. இவ்வளவு அழகாய் ட்டு தி பாயின்ட் பேசுகிறவர், தலையை வாரிக்கொள்ளவாவது கொஞ்சம் சிரத்தை காட்டலாம். நியதி தவறாமல் ஷேவ் செய்து கொள்ளலாம். அவனது உடைகளை நன்றாக ஸ்டார்ச்சும் நீலமும் போட்டுத் துவைத்து மடித்து இஸ்திரி போட்டு அவள் எடுத்து வைத்தாள். சில சமயம் குளித்து விட்டு வந்து அவற்றை அவன் பீரோவிலிருந்து உருவியெடுத்துப் போட்டுக் கொள்ளும்போது அக்குள்ப் பக்கம், காலர்ப் பக்கம் என்று அது கிழிந்திருப்பதோ தையல்விட்டுப் போயிருப்பதோ அவளுக்குத் தெரியும். தைக்க மறந்திருப்பாள் அவள். அடாடா, என எழுந்து கொள்வாள். “குடுங்க. இதோ தெச்சிக் குடுத்திர்றேன்” என கைநீட்டுவாள். “ச். பரவால்ல” என்று அப்படியே மாட்டிக்கொண்டு அவன் வெளியேறுவான். அவளுக்கு வருத்தமாய் இருக்கும்.
எதைப்பற்றியும் அவன் அவளைக் குறை சொன்னானில்லை. எப்பவாவது இரவுகளில் அவளுடன் அவன் ஆசுவாசமாய்ப் பேசுவதுண்டு. அவை அவளுக்கு மிகவும் பிடித்த கணங்கள். மென்மையான உன்னதமான கணங்கள். அவன் வேடிக்கையாய்ப் பேசினால் கேட்டுக்கொண்டே யிருக்கலாம். புதுசாய் எதாவது விஷயம் கிடைக்கும் அவளுக்கு. ‘‘ஹ, நம்ம பாரதிதாசன்… பெண்ணுரிமை பெண்விடுதலைன்னு குரல் கொடுத்ததா அவருக்குப் பேரு. அவரோட பாபுலர் ஹிட் சாங் எது தெரியுமா?” என்று புன்னகைப்பான். “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?… என்னவொரு ஆணாதிக்க பெண்ணடிமைச் சிந்தனை, இல்லையா?”
“ரகுநாதன் மியூசிக்ல சுதா ரகுநாதன்… தேஷ். அருமையாப் பாடிருப்பா. இல்லே?” என்பாள் அவள். அவன் தலையாட்டி அங்கிகரித்தபடியே அவளைப் பார்ப்பான்.
“நீ டிகிரி படிச்சிருக்கே. என்னளவுக்குப் படிச்சிருக்கே… யார் கிட்டயும் இல்லாத அளவு நான் நிறையப் புத்தகங்கள்… வெரி ரேர் புக்ஸ்… வெச்சிருக்கேன், இது உனக்கே தெரியும். உனக்கு ஏன் படிக்கறதுல ஆர்வமே இல்ல?” என்று அவன் கேட்பான். நிஜமாய் அவனிடம் ஒரு வருத்தம் இருக்கும். “மாம் எழுத்துக்கு கேக்ஸ் அன்ட் ஏல் மட்டுமாவது படிச்சிப் பாரு…” என்பான். மனைவியை இன்னும் சாதுர்யமாய் அவன் வரித்திருந்திருக்கலாம். ஆனால் அப்படி இல்லாததில் ஏமாற்றம் அவனிடம் கிடையாது, என்பது அவளுக்குத் தெரியும். அவளிடம் அவன் சொன்னதே யில்லை. இதுகுறித்து அவளுக்கு அவன்மேல் மரியாதை இருந்தது.
அவனது புத்தியின் தாகத்தை அவள் மிக மதித்தாள். இதுபற்றி அவன் யோசித்தானா தெரியாது. அநேக விஷயங்களை அவர்கள் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது இல்லை. பேசிக்கொள்ளக் கூடாது, என்பதில்லை. விலாவாரியாய்ப் பேசி அறிவித்துக் கொள்கிற எளிய நிலையை இருவரும் தவிர்க்கிறவர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறார்கள். ஆளுமை அவனிடம் இல்லை. தன் ஆளுமையை அவன் அவள்மீது பிரயோகிக்காத அளவில், அவளுக்கு அவனது ஆளுமை உறுத்தாத அளவில், அவன் நடந்து கொண்டான். ஒரு விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவள் பேசிக் கொண்டிருக்கும்போது தன்பங்குக்கு மௌனமாகி விடுவான். ஆமை தன்னை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல, மெல்ல பிடி உருவிக் கொள்ளுதல்… அவளுக்கு அது புரிந்தது.
அவனைப் பார்க்க வரும் நபர்களும் பல்வேறு தரப்பில் இருந்து வந்தார்கள். இந்தியப் பொருளாதாரக் கொள்கை பற்றிப் பேசவும் அவனிடம் ஆள் வருவார்கள். ஓஷோ பற்றிப் பேசவும் வருவார்கள். கம்யூனிஸ்டுகளும் வருவார்கள். மதவாதிகளும் வருவார்கள். எல்லாரிடமும் மாற்றுக் கருத்துக்களை அவன் தைரியமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துச் சொன்னான். அதைமீறி அவர்கள் அவனை மதித்தார்கள், என்பது முக்கியம். அவனை அவர்கள் விரும்பகிற அளவுக்கு அவன் அவர்களை விரும்பினானா, மதித்தானா தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அவனிடம் என்றாவது முரண்பட்டால், அதை அவர்கள் அவனிடம் அவனைப்போலவே அழுத்தமாக வெளிப்படுத்தினால், அவன் எப்படி எடுத்துக் கொள்வான் தெரியவில்லை.
இதுவரை வந்தவர்கள் எல்லாருமே, அவன் பேச, கேட்டுக் கொள்கிறவர்களாகவே இருந்தார்கள். ஆச்சர்யமாய் இருந்தது. வீடு என்றில்லை, பொது இடங்களிலும் அவன் இப்படியேதான் நடந்து கொள்வான், என்றிருந்தது. எங்காவது கூட்டம் என்று அவன் அடிக்கடி போய்வருவதும் உண்டு. அங்கேயும் இப்படித்தான் திமில் சிலிர்த்த காளையாகவே நடந்துகொள்வான், என்றிருந்தது. உண்மையில் அவன் அப்படிப் பேசுவதற்கு ஒரு ரசிகர் கூட்டமே இங்கு ஏற்பட்டு விட்டிருந்தது. எதையும் ஒத்துப்போய் அவன் பேசினால் ஒருவேளை அந்தக் கூட்டம், பேச்சு ரசிக்கவில்லையே, என்று ஆதங்கப் படவும் கூடும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு களை கட்டியது. சில சமயங்களில் பேச வந்த ஆட்களும் பல்வேறு தரப்பில் இருந்து வந்திருந்தார்கள் என்றால் அன்றைக்கு விவாதம் தூள் கிளப்பும். அவர்கள் எதாவது பேசிக்கொண்டு அவன்வரக் காத்திருப்பார்கள். அவன் அவர்களில் சட்டாம்பிள்ளை போல. தலையைத் துவட்டிச் கொண்டோ, கழிவறையில் இருந்து செய்தித்தாளுடனோ அவன் வெளியே வர, அவர்கள் சட்டென்று மௌனமாகி, அவனைப் பார்த்துப் புன்னகைப்பார்கள். “வாங்க வாங்க” என்று அவன் அவர்களைப் பார்த்து சம்பிரதாயமாய்ப் புன்னகை செய்வான்.
“என்னவோ பேசிட்டிருந்தீங்க போலுக்கு?”
அவர்கள் லஜ்ஜையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்.
சிறிது மௌனம் நிலவும். பிறகு ஆளாளுக்கு அவனது செய்தித்தாளின் பக்கங்களை பாகம் பிரித்துக் கொள்வார்கள். அவன் பேச ஆரம்பிக்க அவர்கள் காத்திருக்கிறாப் போலவே இருக்கும் எல்லாம். அவனாகவே “கிங் லியர், படிச்சிருக்கீங்களா?” என்பது போலத் துவங்குவான். அவர்களில் சிலர் படித்திருப்பார்கள். ஆனால் அவர்களும் அதைப்பற்றி அவன் என்ன சொல்லப் போகிறான் என்றறிய ஆர்வப்பட்டு பேப்பரை மடக்கியபடியே திரும்பி உட்கார்ந்து கவனிக்க ஆயத்தமாவார்கள்.
“அதோட பாதிப்புல உலக மகா திரைப்பட மேதைகள் மூணு பேர் மூணு விதமாய்ப் படம் பண்ணிப் பார்த்திருக்காங்க. அப்டின்னா ஷேக்ஸ்பியர் எத்தனை பெரிய மேதைன்னு நினைச்சிப் பாக்கணும்…”
“இப்சனோட ஒரு நாடகத்தை வெச்சி நம்ம சத்யஜித் ரே கூட ஒரு படம் பண்ணிர்க்கார்…” என்று ஓர் அன்பர் தனக்குத் தெரிந்த தகவலைச் சொல்லுவார். அதைச் சட்டை செய்யாத பாவனையில் அவன் மேலே பேசுவான். “எனக்கென்னவோ பெர்க்மென்னை விட, ஏன் குரோசோவாவை விட, கோடார்டோட வியூகம் ரொம்பப் பிடிச்சது.”
அவளுக்கு ஓர் அட்சரம் புரியாது. இதெல்லாம் இவன் எப்போ பார்க்கிறான், எங்கே பார்க்கிறான் என்றிருக்கும். ஆனால் போலியாகவோ தெரிந்த பாவனையிலோ தவறான கருத்துக்களை அவன் சொல்ல மாட்டான், என்று அவனைப் பற்றி அவள் அறிந்திருந்தாள். சாமர்செட்டின் சிஷ்யன் அல்லவா?
சில சமயம் அவனோடு விவாதம் செய்ய கம்யூனிஸ்டுத் தோழர்கள் வருவதுண்டு. அவர்களைப் போல, வாதங்களைப் புன்னகை மாறாமல் பொறுமையாய்க் கேட்டுக்கொள்ளும் நபர்களை அவள் பார்த்ததே யில்லை. எல்லாம் கேட்டுக்கொண்டு பிறகுதான், “அப்டி யில்லைங்க தோழர்” என்று அவரகள் எதாவது சொல்வார்கள். ஆனால் அவர்கள் பேச அவன் காது கொடுக்கப் பிரியப்பட்டதே யில்லை.
“கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக நாடுதான் வசதி, கம்யூனிசம் பேச…” என்பான் அவன். முரட்டுத்தனமாகக் கூட சில சமயம் “மாறும் என்பது தவிர எல்லாமே மாறும், என்பார்கள். மாறாதது இன்னொன்று உண்டு. அதான் இந்தக் கம்யூனிஸ்டுகளோட ஐடியாலஜி” என்பான்.
“தோழர் நீங்க ஒண்ணு கட்டாயம் புரிஞ்சிக்கிட்டாகணும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமக்கு ‘இங்க’ ஜனநாயகத்துல உள்ள குறைபாடுகள்லாம் வெட்ட வெளிச்சமா தெளிவாத் தெரியுது. இல்லிங்களா?”
“ம்.”
“ஏன் தோழர், அப்டின்னா சோவியத் ருஷ்யால கம்யூனிசம் தோத்துப் போச்சின்னு அவங்களே டிக்ளேர் பண்ணினாஅப்பமட்டும் அப்டி இல்லைன்றீங்களே?…”
தோழர் கடகடவெனச் சிரிப்பார். “அப்டி இல்லிங்க தோழர்…” என்று ஆரம்பிப்பார். அதற்குள் அவன் விவாதத்தை வேறு பக்கமாகத் திருப்பி வேறு நபருடன் பேச ஆரம்பித்திருப்பான்.
அலுவலகத்தில் அவன் எப்படி யிருந்தான் தெரியவில்லை. அவன் எவ்வளவு கடுமையாய்ப் பேசினாலும் ஏனோ அவனிடம் கேட்டுக் கொள்கிறவர்களாகவே எல்லாரும் நடந்து கொண்டார்கள். ஒருவேளை முகக் குறிப்பிலேயே, தன் வாதம் எடுபடாது என்று உள்ளுணர்வால் அளந்து விடும் நபர்களை அவன் தவிர்த்து விடுகிறானோ என்னவோ? அந்த சாமர்த்தியம் அவனுக்கு உண்டுதான். எப்படியோ எதிராளியிடம் தன்னைப் பற்றிய ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆர்வத்தை ஏற்படுத்தி, தன் அபிப்பராயத்தை அவனிடம் திணித்து விடுவதில் அவன் குறியாய் இருந்தான்.
வாதம் செய்வதில் காலப்போக்கில் அவன் அலாதிப் பிரியம் கொண்டவனாகி விட்டான். கருத்துச் சொல்லும் நிலையை விட, பரபரப்பான கருத்துக்களைச் சொல்ல, அவன் தன்னளவிலேயே தூண்டப் பட்டான். வக்கிர நவிற்சி எப்படியோ அவனுக்குப் பிடித்திருந்தது. கண்ணதாசன் வக்கிரமாய்ச் சொன்னது போல, அவன் திருமண வீட்டில் மணமகனாக இருக்கவும், இழவு வீட்டில் பிணமாக இருக்கவும் ஆசைப்படுகிறவனாய் இருந்தான்… கணவனைப் பற்றி இவ்வளவு கடுமையாய் நினைத்துக் கொண்டதில் அவளுக்கு சங்கடமாய் இருந்தது.
பெண்களிடம் எத்தனைக்கு அவனுக்கு மரியாதை இருந்ததோ அத்தனைக்கு நடைமுறை வாழ்க்கையில் காணும் பெண்களிடம் ஏமாற்றமும் அவனுக்கு ஏற்பட்டது. இரவுகளில் சிலசமயம் அவளிடம் கூட இந்த அபிப்ராயத்தை சற்று நிஜமான வருத்தத்துடனே தான் சொல்லுவான். “இந்த உலகம் என்பது ஆண்களும் பெண்களும் சம அளவில் அனுபவிக்க வேண்டிய ஒண்ணு. இதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை… பிரச்னை என்னன்னா அதை ஆண்டு அனுபவிக்க எந்தப் பெண்ணாவது தன்னைத் தகுதி யாக்கிக் கிட்டிருக்காளான்னா, இல்லை…”
அவள் புன்னகை செய்வாள். “பொம்பளைங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்? வீட்டு வேலைகளே சரியா இருக்கு எங்களுக்கு…”
மிகுந்த கரிசனத்துடன் அவன் அவளைப் பார்ப்பான். “இந்தக் குடும்பம்ன்ற புதைகுழிலேர்ந்து பெண் வெளில வரணும் முதல்ல… அப்பறந்தான் அவளுக்கு விமோசனம்” என்பான். இதெல்லாம் நடக்கிற காரியமா, என்று நினைத்துக் கொண்டாள்.
“என்ன யோசிக்கறே?” என்றான் கவனித்து. சூட்சுமமான மனிதன் தான்.
“இல்ல. பெண்களுக்கு குடும்ப வாழ்க்கைன்றதே அவளோட தடங்களை அழிக்கிற ஒரு விஷயந்தான்… அதைத் தாண்டினவங்க சாதிச்சிருக்காங்க.”
“நீ என்ன சொல்றே?”
“காரைக்கால் அம்மையார். ஔவையார். ஆண்டாள்… இவங்க மூணு பேருமே பாருங்க… இல்லறத் தளையில மாட்டிக்காதவங்கன்னு நினைச்சிக்கிட்டேன்…”
“ஓ” என்றான் யோசனையாய். இப்படி அவன் யோசிததுப் பார்த்திருக்க மாட்டான் போலிருந்தது. மேலடியாக அவன் எதுவும் சொல்ல விரும்பி யிருக்கலாம். பேச அவனிடம் எதுவும் இல்லாதிருந்தது. அப்படியே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.
அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது தான் பேசியது.
கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகளில் அவள் கலந்து கொள்வாள். அது ஒரு பருவம். பரபரப்புக்கு தாகித்துக் கிடக்கிற பருவம். முன்னால் பேசியவள் பேசியதை கவனித்து, சட்டென்று அதிலிருந்தே அதை முரண்பட்டு தன் வாதத்தைத் துவக்க அவளுள் ஓர் உற்சாகம். பொதுவான பழக்கத்தில் என்ன பேசுவது என்பதையே அவள், மேடையேறும் தக்கணத்தில் மனதில் பிடித்துக் கொள்கிறவளாய் இருந்தாள். மேடையேறிப் பேச அவள் தயங்கியதே பயப்பட்டதே கிடையாது. யாரிடமும் எழுதித்தரச் சொல்லியோ, யோசனை கேட்டோ பழக்கமே கிடையாது.
இதுபற்றி ஒருதரம் அவள்அப்பா அவனிடம் சொன்னார். ஒரு வேடிக்கைபோல தலையாட்டியபடியே அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். என்ன பேசிவிடப் போகிறாள், என நினைத்தான் போல. அவளுக்கு வெட்கமாய் இருந்தது. நிறைய வாசித்தவன் அவன். மேற்கத்தியத் தாக்கம் உள்ளவன். அவன் எங்கே நான் எங்கே, என நினைத்துக் கொண்டாள்.
ஒருமுறை மகளிர் மாநாடு ஒன்றிற்கு அவனைப் பேச அழைக்க வந்தார்கள். இது எதிர்பாராதது அல்ல. பல சந்தர்ப்பங்களில் அவன் மகளிரை உயர்த்திப் பேசியும் எழுதியும் இருக்கிறான். வெறும் உடம்பாக அவர்களை அணுகுவது பற்றி அவனிடம் கடுமையான முரண்பாடு உண்டு. எந்தப் பெண்ணிடமும் உடல்ரீதியாய் அவன் கவரப்படாதவனாகவே இருந்ததும் கூட அவளுக்கு தன் கணவன் மேல் இருந்த மரியாதையான விஷயங்களில் ஒன்று.
சம்பிரதாயமாய் அவர்கள் கூட்டத்துக்கு ஒத்துக்கொண்ட பிறகு “நீங்கள்லாம் கருத்து அதிகாரத்தின் அடிமைகளாப் போயிட்டீங்க… உங்களுக்குன்னு தனி அபிப்ராயம் இல்லாதவரை… தனித்தன்மை, அடையாளம்… எப்பிடி வரும் உங்களுக்கு? வெறும் பிம்பங்கள்தான் நீங்க, இல்லையா? இதுல சுதந்திர சிந்தனை, உரிமை மறுக்கப்பட்ட ஆவேசம் எப்பிடி வரும் உங்களுக்கு?” என்று ஆரம்பித்தான்.
அந்தப் பெண் எழுத்தாளர் தலையை ஆட்டியபடியே புன்னகையுடன் குளிர்பானத்தை எடுத்துக் கொண்டாள். “பொதுவா, நான் பார்த்த அளவுல, எஸ்பெஷலி தமிழ்நாட்ல பெண்ணுரிமை வாதம்ன்றதே வெறும் பாவனைதான்…” என்று அந்த நான்கு பெண்களையும் அவன் பார்த்தான். “பெண்கள் முன்னேற்றத்துக்குத் தடையா ஆண்களைச் சொல்றது தப்பு. அதுக்குப் பெண்கள் தான் காரணம்…” என்றான் தொடர்ந்து.
“சார் இப்பவே எல்லாத்தையும் பேசிருவார் போலருக்கே…” என்று இன்னொருத்தி சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள். அவன் முகமே சிறுத்துப் போனது. பேச வாய்ப்புக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இவன் அலைவதாக நினைத்து விட்டார்களா என்ன, என்று தனக்குள் கோபப் பட்டாற் போலிருந்தது. இந்த மேல்தட்டு வர்க்கப் பெண்கள், இவங்களுக்கு இந்த மாநாடே பொழுதுபோக்கு, அவ்வளவுதான்… என நினைத்துக் கொண்டிருக்கலாம் அவன். பெண்ணுரிமையை பேச்சுக்குரிய விஷயமாய் அவர்கள் வேடிக்கை பார்ப்பதில், பொழுது போகாமல் அவர்கள் கூத்தடிப்பதில், தானும் பங்கு கொள்ள வேண்டுமா?… என அவன் உள்ளூற யோசிப்பதாகப் பட்டது. ஒருவேளை கூட்டம்லாம் வேணாம், போய்ட்டு வாங்க, என்று அவர்களை அனுப்பிவைத்து விடுவானோ என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. அவன் பிறகு எதுவும் பேசாமல், தேதியை மாத்திரம் டைரியில் குறித்துக் கொண்டு, கைகூப்பி அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் போனதும் அலுப்புடன் “பாத்தியா?” என்றான் அவளைப் பார்த்து. “பெண்ணுரிமைன்னு வாயால சொல்றவங்களுக்கே அதோட நிஜமான வியூகம் பத்தித் தெரியல. இந்தப் பெண் எழுத்தாளர்ங்க என்ன எழுதறாங்க… கணவனுக்குத் தாலி கட்டுவோம்னு, இல்லாட்டி தாலியறுத்துக் கைல குடுன்னு எழுதறாங்க. புரட்சி எழுத்தாளர்னு மனசுல நெனப்பு வேற…”
அவள் புன்னகைத்தாள். சரியாய்த்தான் சொன்னான் அவன். டம்ளர்களை எடுத்துக் கொண்டு உள்ளேபோகப் பொனவளை அவன் அருகே அமர்த்திக் கொண்டான். கண் சிமிட்டியபடியே “ஏய் நீ பேச்சுப்போட்டி அது இதுன்னு தூள் பண்ணினவதானே? வா. இப்பிடி உக்காரு” என்றான். அவளுக்குக் கூச்சமாய் இருந்தது. அவன் விடவில்லை.
“சொல்லு. இந்தப் பெண்ணுரிமை பெண்ணுரிமைன்றாங்களே, அதைப்பத்தி நீ என்ன நினைக்கிறே?”
“எனக்கென்ன தெரியும்?”
“அட என்னதான் சொல்றேன்னு பாப்பமே. ஓடிறாதே” என்றான்.
அவள் அவனையே பார்த்தாள். “இந்திய சமூகச் சூழல்ல…”
“யப்பா, அஸ்திவாரமே பலம்மாப் போடறியே?”
“நீங்க கிண்டல் பண்றீங்க…”
“இல்லவே இல்ல. சரி. நான் பேசாமல் கேட்டுக்கறேன். நீ பேசு…”
“நம்ம கலாச்சாரச் சூழல்ல பெண்ணுரிமைன்னில்ல ஆணுரிமைன்றதே, பெரிய அளவுல… தன்னிச்சையா ஆகறதுன்றது சாத்தியம் இல்லைன்னு எனக்குத் தோணுது.”
“ம்.”
“என்ன ம்? அவ்ளதான்” என்று அவள் புன்னகைத்தாள்.
“சரி” என்று அவன் தலையாட்டினான். “உனக்கு ஏன் அப்பிடித் தோணுது?”
அவள் அவனைப் பார்த்தாள்.
“நான் சொல்றேன். ஏன்னா… நீங்க கோழைகள். அடிமை வாழ்க்கைலியே ருசிதட்டிப் போனவர்கள். இந்தியப் பெண்களுக்கு அசட்டுப் பாதுகாப்பு உணர்வு ரொம்ப முக்கியம். எத்தனை கஷ்டம் வந்தாலும் குடும்பம்ன்ற வட்டத்துக்குள்ள இருக்கவே அவங்க நினைக்கறாங்க.”
அவள் புன்னகைப்பதைப் பார்த்து, நிறுத்திக் கொண்டான்.
“என்ன?”
“ஒண்ணில்ல.”
“என்னவோ சொல்ல வந்தியே?”
“இல்ல, குடும்பம் சிதர்றதுன்றது ஒரு மேற்கத்திய கலாச்சார ஐடியா. சிதறடிக்கறது பெரிசில்லை. சிதறிட்டா சேக்கறது கஷ்டம். வயலன்ஸ் லீட்ஸ் ட்டு வயலன்ஸ், இனவிடபிளி அன்ட் இன்வேரியபிளி…”
“காந்தியன் தாட். ஓகே. ஆனா…”
“நான் முடிச்சிர்றேன். அதான் பொறுமைன்னு நம்ம பெரியவங்க சொல்லி வெச்சாங்க. காலம் தாண்டியதும், நிதானப் பட்டப்பறம் யோசிச்சிப் பாத்தா, பாதி விவாகரத்து ஐடியாவே ரத்தாயிரும். காலம் பெரிய மருந்து, இல்லியா?”
“ஹா ஹா” என்று சிரித்தான் அவன். “கோபத்தை அடக்கு, கோபத்தை அடக்குன்னு சொல்லித்தான் உங்க அத்தனை பொண்ணுகளையும் இந்த ஆண்வர்க்கம் தூக்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டது. இந்தியா நாசமாப் போனதே இந்த சகிப்புத் தன்மைலதான். நிகழ்காலத்தைக் கேள்வி கேட்காமல் எல்லா முடிவுகளையும் சும்மாவாச்சும் தள்ளிப் போடறதுக்கு இடதுசாரி இயக்கத்தில் ஒரு பேர் சொல்லுவான்…”
“ரைட். எனக்கு உள்ள வேலை இருக்கு…” என்று எழுந்துகொண்டாள்.
“இரு. சும்மா வீட்டுவேலை வீட்டுவேலைன்னு செக்குமாடா ஆயிர்றீங்க நீங்க. நீங்க வேறும் ஸீரோவாவே அன்னிலேர்ந்து இன்னிவரைக்கும் இருக்கறதுக்கு இதான் காரணம்” என்றான் தொடர்ந்து.
சுருக்கென்றது அவளுக்கு. அவள் புன்னகை ஒளிமங்குவதை கவனித்தான். “ஐ மீன், நாட் யூ” என்றவன், “உண்மைல நீயும் பெரிய விதிவிலக்கு ஒண்ணுமில்லை. அதையும் சொல்லணும். எ ஸீரோ இஸ் எ ஸீரோ, வெதர் இட்டிஸ் பிக் ஆர் ஸ்மால்…” என்றான் அடக்க முடியாமல்.
அவள் அவனைப் பார்த்தாள். “இந்து தர்மப்படி, அர்த்தநாரிஸ்வர பாவமே பெண்ணை சமமா நடத்தற ஐடியாவுல வந்ததுதான்…” என ஆரம்பித்தாள். “நம்ம சம்பிரதாயம் என்ன சொல்லுது? ஆம்பளைக்கு வலப்பக்க ஸ்தானம் பெண்ணுக்குக் கொடுத்திருக்கு. எதுனால? பெண்ணை கௌரவிக்கத்தான்… நாங்க ஸீரோ. நீங்க ஒண்ணுன்னாக்கூட… நாங்க ஒண்ணுக்கு வலது பக்கத்து ஸீரோ” என்றாள் அவள்.
“வெரி குட்” என்று அவன் தலையாட்டினான்.
“நீங்க ஒருதரம் சொன்னீங்களே, ஞாபகம் இருக்கா?”
“என்ன?”
“கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக நாடுதான் கம்யூனிசம் பேச வசதின்னு…”
“சொல்லிருப்பேன். அதுக்கென்ன?” என்று ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
“அது மாதிரிதான்… ஸீரோக்களின் மத்திலதான் ஒண்ணுக்கு அர்த்தம் வருது. விஞ்ஞானத்துல படிச்சிருப்பீங்களே, நெகடிவ் போல் எவ்வளவு முக்கியம்னு?”
“இன்னிக்கு என்னைத் தாளிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா நீ?”
“புத்தகம் படிச்சிதான் வாழ்க்கை புரியணும்னு அவசியம் இல்லை…” என்றாள் அவள். “உங்க அபிப்ராயங்கள், உங்க கிண்டல், உதாரணமா மதவாதின்னா உங்க எகத்தாளம் எனக்குப் புரியல…”
“சொல்லு, என்ன புரியல. புரியலன்னா கேட்க வேண்டிதானே?”
“மதங்களை அபின்னு சொன்னாரு…”
“காரல் மார்க்ஸ்…”
“ஆமா. அதை லெனினும் ஒத்துக்கிட்டாரு. லெனின்கிட்ட அவருக்குப் பிடிச்ச எழுத்தாளர் யார்னு கேட்டபோது, அவர் லியோ டால்ஸ்டாய் பேரைத்தான் சொன்னார். டால்ஸ்டாய் எவ்வளவு அழுத்தமான மதவாதி, இல்லியா?”
“யப்பா, நீ ரியலி நல்லாப் பேசற. இத்தனை நாள் நீ என்கூட பேசினதே யில்லையே இப்படி?”
“மாற்றுக் கருத்துக்களை நீங்க எப்பிடி எடுத்துக்குவீங்களோன்னு யோசனையா இருந்தது. அதான் தனியா இருக்கும்போது சொல்றேன்…”
அவன் அவளைப் பார்த்தான். “உண்மைதான். கூட்டத்துல உன்னை நான் மேலடி அடிச்சிருப்பேன். அதான் என் குணம்” என்று ஒத்துக்கொண்டான்.
“உங்க அளவுக்கு எனக்குப் பேசத் தெரியாது. ஆனா நீங்க மனிதர்களைப் படிக்கணும்.அது முக்கியம்னு சொல்லத் தோணுது. வசதியும், சுதந்திர உணர்வும் மிகுந்த வேற்று நாட்டோட கருத்துக்களை ஏட்டளவில் படிச்சிட்டு, நீங்க இங்க அப்ளை பண்ணிப் பாக்கறதும், கிண்டல் பண்றதும் சரி கிடையாது. இது மேற்கு அல்ல, கிழக்கு. தி சன் நெவர் செட்ஸ் இன் தி பிரிட்டிஷ் எம்பயர்ன்னான் அவன். நான் சொல்றேன்… பட் இட் ரைசஸ் இன் தி ஈஸ்ட்…”
“ஆகா ஆகாகா” என்றான் அவன். “இது என்ன, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியா?”
“ஸீரோ… ஸீரோவைக் கண்டுபிடிச்சவனே இந்தியன்தான் தெரியுமா? ஸீரோவைக் கண்டுபிடிச்சதும் கணிதம் எத்தனை புதிர்களை விடுவிச்சது தெரியுமா?”
“ஏதேது… சாமர்செட் மாம் மாதிரி என்னை வெச்சே, சினிக்கா நீ ஒரு கதை எழுதிருவே போலுக்கே?”
“நீங்க நம்பர் ஒன்னா இருங்க. வாழ்த்துக்கள். சம் ஃப்ராக்ஷன்லேர்ந்து ஒண்ணா ஆகறது உங்களுக்குத் தெரியும்… ஆனா, எதுலேர்ந்தாவது ஸீரோவா ஆறது?… அது இதைவிட எத்தனை கஷ்டம், இல்லியா?” என்றபடி அவள் டம்ளர்களை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். அவள் போனபின்னும் அவள் விட்டுச்சென்ற அந்த ‘வெற்றிடம்’ அர்த்தபூர்வமாய் இருந்தது.
—
storysankar@gmail.com
mob 91 97899 87842 whats app 91 9445016842
- முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
- அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்
- இன்றைய அரசியல்
- வாழத் தலைப்பட்டேன்
- முள்
- மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்
- அதோ பூமி
- வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10
- பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
- ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12
- குஜராத்- காந்தியின் நிலம் – 1
- நேர்மையின் எல்லை
- ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்
- காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2