மறதிக்கு …….
“தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!”
“எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே, தாத்தாச்சாரி?
“ஓய் தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு பொடிப்பட்டை வாங்கிண்டு வாரும்.மறந்து போயிடப்படாது. உம்மைத்தான் நம்பியிருக்கேன்.”
” தாத்தாச்சாரி , இன்னிக்கி துவாதசியாச்சே. இங்கேதான் சாப்பிட்டுப் போயிடுமே.”
” தாத்தாச்சாரி, போகிறபோது இந்த லேகிய டப்பாவைச் சிங்கார உடையார் கிட்டே கொடுத்துடுமே.”
“வெயில் கண்கொண்டு பார்க்க முடியலே. ஏனையா இந்த அபர வயசிலே, இந்த அவதி? ரொம்ப கௌரவமான உத்தியோக
மாச்சீன்னு விட மனசு வல்லியா?”
“சாமி, நம்ப மவன் அக்கரையிலேர்ந்து எளுதியிருக்குறானா?”
” தாத்தாச்சாரி , இப்படிச் சித்தே உள்ளே வாருமே. புளியோதரைக்குச் சாதம் பதம் போருமான்னு சொல்லிட்டுப் போம்
நீர்தான் பண்ணிக் கொடுக்கறேன், கொடுக்கறேன்னு ஏமாத்திப்பிட்டீர். இன்னிக்கி அவளே பண்ண ஆரம்பிச்சுட்டா. பதமாவது பார்த்துச் சொல்லிட்டுப் போம்.”
” தாத்தாச்சாரி, தீபாவளிக்கு ஒரு வேஷ்டி வாங்கலாம்னு இருக்க்கேன். உமக்குச் சிவராயர் கரை தேவலியா, கம்பிக்கரை வேணுமா, இப்பவே சொல்லிப்பிடும். இன்னிக்கிச் சாயங்காலம் வண்டி கட்டிண்டு மன்னார்குடி போப்போறேன்.”
“ஐயா,ஒரு கடுதாசி எழுதிக் கொடுக்கணுங்க!”
“என்னையா தாத்தாச்சாரி, கட்டையைக் கீழ கிடத்தற வரைக்கும், தபால் கட்டை விடமாட்டீர் போல இருக்கே!”
தாத்தாச்சாரி ஏழு ஊர்களின் க்ஷேம லாபங்களை முப்பது வருஷங்களாகச் சுமக்கும் தபால்காரர். அதற்கு முன்னால் சாரனூர் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்தவர். இப்போது தபால்காரராக ஓயாத ஒழியாத நடை.தினத்துக்கு
எட்டு மைல் நடை. முப்பது வருஷத்துக்கு நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சின்னதும் பெரிதுமாக பொழுது விடிந்தால் ரெண்டாயிரம் நெஞ்சுகள் அவருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற ஏக்கம். நடையா, அன்பா எது முக்கியம் எது சுகம் என்று நெஞ்சு திணறுகிறது. மனதில் உள்ள குமுறல்களை மறக்க நடைதான் அவருக்கு உத்தமம். அப்படி என்னதான் குமுறல்கள்?
அவரைத் தன் ஏழு வயதிலேயே கணவனாக வரித்து விட்ட ஜனகத்தைத்தான் தாத்தாச்சாரி திருமணம் செய்து கொண்டான். அப்போது அவனுக்கு வயது இருபத்தி ஐந்துக்கு மேலே. ஜனகத்துக்குப் பனிரெண்டு. அவளது பதினாறாவது வயதில் தகதகவென்று ஸ்வர்ண விக்ரகம் மாதிரி வீட்டிற்கு வந்து குடித்தனத்தை ஏற்றுக் கொண்டாள்.
தாத்தாச்சாரி (அல்லது தி. ஜானகிராமன்) ஜனகத்தை வருணிப்பது “இப்போதும் கண் முன்னே நிற்கிறது. அவள் காலைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். பளபளவென்று உன்னதமான அந்தப் பாதங்களை, நடக்கும் போது பார்க்க வேண்டும். மலர்ந்த புஷ்பங்கள் இரண்டு தத்துவது போல ஒரு தோற்றம். கற்பனை என்று சொல்ல முடியவில்லை. என் கண்ணுக்கு, மனதுக்கு இதே தோற்றம். மடவாத் தவளை போல் பிரபந்தம் சொல்லும் தாத்தாச்சாரி வீட்டில் இப்படி ஒரு ஸ்வர்ணமயமான சௌந்தர்யம்…. வாக்கியத்தை எப்படி முடிக்கிறது என்று தெரியவில்லை. கருவிலே திருவுடன் பிறந்து, பெரு வாழ்வு வாழும் குடும்பத்தில் நடமாட வேண்டிய உருவம்!”
குடும்பத்தில் இருக்கும் அத்தை அவள் பெண் வீட்டுக்குப் போயிருந்தாள். அவளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை என்று தகவல் வரும் போது தாத்தாச்சாரியம், ஜனகமும் போய்விட்டு வருவார்கள். ஒரு தடவை தாத்தாச்சாரியால் போக முடியாத போது ஜனகத்தை மட்டும் அனுப்ப முடிவு செய்து தாத்தாச்சாரி ஸ்டேஷனுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு போனான். ஆறு மைல் தூரத்திலிருக்கும் ஸ்டேஷனுக்கு மாட்டு வண்டியில் போனார்கள். மசமசத்த மாடு. வீரையன் வாலைக் கடித்துக் கடித்து வால் புண்ணானதுதான் மிச்சம். இவர்கள் ஸ்டேஷனை அடையும் போது ரயில் வண்டியும் ஸ்டேஷனுக்குள் வந்து நின்று விட்டது.
தன் மனைவியை வண்டியில் ஏறிக் கொள்ளச் சொல்லி விட்டு டிக்கட் வாங்கி வர ஓடும் தாத்தாச்சாரி திரும்புவதற்குள் வண்டி கிளம்பி விட்டது. ஜனகம் வண்டியில் இருந்து கையசைத்து கவலைப்பட வேண்டாம் என்பது போல சைகை செய்தாள்.
ஊரிலிருந்து திரும்பி வந்த ஜனகம் “உயிரை விடறதுன்னா ஏன் மனசு வரமாட்டேங்கிறது?” என்று கேட்டாள்.
“உயிரை விட்டுட்டா பகவான் படைச்ச சந்தோஷங்களை உலகத்தை எப்படி அனுபவிக்கிறது?”
இம்மாதிரிப் போகும் சம்பாஷணையில் ஓரிடத்தில் தாத்தாச்சாரி ஜனகத்திடம் அவள் டிரெய்னில் ஏறிக் கொண்ட அன்று கூட்டமாக இருந்ததா, இடம் கிடைத்ததா என்று கேட்டான்.
“இடம் கிடைச்சது. ஒரே ஒருத்தர்தான் இருந்தார்.”
“வண்டி முழுக்கவா?”
அவள் ஏறியது கார்டு வண்டி.
இரண்டு மூன்று தடவை கார்டு அவளை இடம் மாறி மாறி உட்காரச் சொன்னான். நாலாந் தடவையும் அப்படி ஆகும் போது ஜனகத்துக்கு “சிரிப்பா வந்தது” அவனுக்கும்.
“உன் பேரென்ன?’ன்னான்”
“உங்க பேரென்னனேன்”
“உன் பேர்னு?”
“ஹூம்.”
“சொன்னேன். ‘உனக்கு மேலே பேரும் அழகா இருக்கே.’ ‘நான் ஒண்ணும் அழகில்லேன்னேன். ‘நீயா, நீயா, நீயா?’ன்னு கிட்ட வந்து …”
“ம் …”
“………..”
பேச்சு நின்று விட்டது. விளக்கின் முத்தொளியில் அவள் முகம் இழுத்துக் கொண்டது.
இது நடந்ததற்குப் பின்னர் தாத்தாச்சாரி தனிச் சமையல் தனித்தண்ணீர் என்று எல்லாமே தனியாகச் செய்து கொண்டான்.. அவளுக்குத் தனிச் சமையல் தனித்தண்ணீர். வெளிக்கு சிரிப்பிலும் பேச்சிலும் குறைவில்லை. நான்கு வருஷம் இம்மாதிரி கழிந்தபின் ஜனகம் ஒரு நாள் இறந்து போனாள். தாத்தாச்சாரி தபால்கார வேலையில் நடையாய் நடந்து அதன் போதையில்
எல்லாவற்றையும் மறக்க முயன்று தோல்வி கண்டு….ரிடையராகவிருக்கும் இரண்டு வருஷத்துக்குள் சாவை எதிர்பார்த்துக் கொண்டு…..
இச்சிறுகதையின் அடிநாதம் ஜனகத்தின் உண்மையை உரைக்கும் நேர்மைதான். அவள் நடந்ததைச் சொல்லாமல் இருந்திருந்தால்? ஆனால் தி. ஜாவின் பாத்திரங்கள் – உயிர்த்தேனில் செங்கமலம் , செம்பருத்தியில் சட்டநாதன், மோகமுள்ளில் பாபு, யமுனா, மலர் மஞ்சத்தில் தங்கராஜ் இவர்களெல்லாம் எதற்காக ஒளிவு மறைவு என்ற வார்த்தைகளுடன் பரிச்சயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்? நேர்மையும் சத்தியமும் மறைக்கப்பட முடியாதவை, மறைக்கக் கூடாதவை என்று உலகத்துக்கு அறிவிக்கும் கூட்டமாக அல்லவா இருக்கிறது இது? இவர்களை எந்தவித உரத்த குரலும், விம்மிதமும் இல்லாமல் சாதாரணர்களாகக் காண்பிப்பது என்பது தி.ஜா.வின் அடிமனதில் ஆழமாகப் படிந்திருக்கும் ஓர் உணர்வின் எதிரொலிதானோ?
ஜனகம் சொன்ன விஷயத்தின் தாத்பர்யம் தாத்தாச்சாரியின் மனதில் ஏற்படுத்திய இருமையையும், வலியையும், கசப்பையும், அதிர்ச்சியையும் உலகம் எப்படி எதிர் கொள்கிறது?. “வாசலுக்கு வந்து குறட்டில் நின்றேன். ஊர் முழுவதும் தூங்கிற்று. கோயிலின் பெரிய மதில் ஒரு துக்கமில்லாமல் ஒரு துன்பமில்லாமல் நின்று கொண்டிருந்தது! மதிலை ஓட்டிப் போட்டிருந்த தாழ்ந்த சார்ப்பில் அடுத்த வீட்டு மாட்டின் மணியும் கன்றின் மணியும் உலகத்தில் ஒன்றுமே நடக்காததுபோல ஒலித்துக் கொண்டிருந்தன. மாடு வைக்கோலைப் பிடுங்கும் சலசலப்பு என்னைக் கண்டு சிரித்தது. பளபளவென்று இளமையும் வைரமும் பாய்ந்த என் உடலைக் கண்டு வைக்கோல் நகைத்ததா, ‘ஐயோ பாவம் !’ என்று சொல்லிற்றா, தெரியவில்லை.இந்த இருட்டில் ‘உன் வைரமும், அழகும் எனக்கா தெரியப் போகிறது?’ என்று சொல்லுகிறது போல அடுத்த வீட்டுத் திண்ணையில் குறட்டை கேட்டது.புழுதியில் படுத்திருந்த நாய், என் கனைப்பைக் கேட்டு என்னை ஒரு தடவை திரும்பிப் பார்த்து என் அருகில் வந்து ஒரு தடவை வாலைக் குழைத்து விட்டு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டது.”
மேலே உள்ள வரிகளைப் படிக்கும் போது , அதுவும் ஜனகத்தின் நேர்மையின் பின்னணியுடன் இணைத்துப் பார்க்கும் போது தாத்தாச்சாரி கூட கோயில்மதில், மாடு, அதன் கன்று, வைக்கோல், நாய் போலத் தனது வாழ்க்கையை இயல்புடன் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று படுகிறது. ஏதோ ஒரு க்ஷண ஆபத்தால் திரிந்து விட்ட பாலைத் தூக்கி எறிந்து விட்டு, புதிய பால் என ஜனகத்தைக் காலையில் ஏற்று அருந்துபவனாக தாத்தாச்சாரி நடந்து கொண்டிருக்கலாம். தி.ஜா. இந்தக் கதையை எழுதியது 1955. அதற்குப் பின் வந்த 65 ஆண்டுகளில் உலகம் மாறி விட்டது. மனிதர்களின் வாழ்க்கைப் போக்கு மாறி விட்டது. மதிப்புகள் முற்றிலும் மாறி விட்டன. இந்த மாற்றங்களை இன்றைய கலை வெளிப்பாடுகள் – நாடகம், சினிமா, இலக்கியம் ஆகியன – மிகவும் வெளிப்படையாக , உணமையைக் காண முயலும் தேடலாக மேற்கொண்டுள்ளன. இதற்கான ஒரு சிறு விளக்கைத் தமிழில் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு ஜானகிராமன் ஏற்றி வைத்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.
- முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
- அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்
- இன்றைய அரசியல்
- வாழத் தலைப்பட்டேன்
- முள்
- மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்
- அதோ பூமி
- வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10
- பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
- ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12
- குஜராத்- காந்தியின் நிலம் – 1
- நேர்மையின் எல்லை
- ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்
- காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2