முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

This entry is part 1 of 16 in the series 20 செப்டம்பர் 2020

                             

யானைக்கு அஞ்சிய நிலவு

      சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் கண்டு மகிழ்வார்கள். ஒருவர்க்கொருவர் மனம் மகிழும்படிப் பேசிக்கொள்வார்கள். அதுபோல ஒரு நாள் இருவரும் சென்றனர்.

அப்போது தலைவி தோழியைப் பார்த்து, “ஏனடி தோழி! இதோ இந்த முழுநிலவு இருக்கிறதே; இது தினமும் தேய்ந்துகொண்டே வருகிறதே; ஏன் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்குத் தோழியோ, “எனக்குத் தெரியாது; நீயே விடை சொல்” என்றாள்.

தலைவி, தோழியைப் பார்த்து, “நம் மன்னன் கிள்ளிவளவன் இந்த மண்ணுலகையே தாங்குகின்ற பருத்த தோள்களை உடையவன்; ஒருமுறை அவனுடைய யானை போர்க்களம் சென்றது. அங்கு மாற்றாரிடம் மிக்க வீரத்துடன் போரிட்டது. கடும் சினம் கொண்டு பகையரசருடைய வெண்கொற்றக் குடையெல்லாம் பிடுங்கியது. அதைக் கண்ட இந்த நிலவு தானும் வெண்மையாக இருக்கிறோமே; நம்மீதும் இந்த யானை பாய்ந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்குகிறது; அந்த நடுக்கத்தின் காரணமாக வானத்திலேயே நின்று அது தேய்கின்றது” என்று கூறுகின்றாள்.

இயற்கையான ஒரு நிகழ்விற்குத் தலைவி தன்குறிப்பை ஏற்றித் தெரிவிக்கும் முத்தொள்ளாயிரப் பாடல் மிகவும் சுவை தருகிறது.

       ”மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்

       வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்—விண்படர்ந்து

       பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்

      தேயும் தெளிவிசும்பில் நின்று”                             [59]

யானையின் நாணம்

கிள்ளியை மிக எளிமையாக  எண்ணி மாற்றார் அவன் நாட்டின் மேல் படை எடுக்கின்றனர். மலைபோன்று வலிமையாயும், பருத்தும் உள்ள தோள்களைக் கொண்ட கிள்ளியின் நால்வகைப்படைகளும் போருக்கு எழுகின்றன. அவனுடைய யானைப் படை மிகவும் வலிமையானது.

அதிலும் ஒரு யானை மிகுந்த போர்த்திறம் உடையது. அது மிக்க சினம் கொண்டுப் பகைவரைத் தாக்கியது. தனது கொம்புகளால் பகைவரின் கொடி பறக்கின்ற மதிலை முட்டித் தகர்த்தது. அப்பொழுது அதன் கொம்பு ஒடிந்து விட்டது. ஆனால் அது மேலும் முன்னேறியது. பகையரசர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கீழே தள்ளித் தன் கால்களால் இடறிக்கொண்டே போகிறது. அதனால் அதன் கால்களின் நகங்களும் தேய்ந்து போகின்றன. கிள்ளி வெற்றி பெறப் போர் முடியப் படைகள் நாடு திரும்புகின்றன.

      அரசன் அரசியின் கவலையைத் தீர்க்க அரண்மனையின் அந்தப்புரம் செல்லப் படை வீர்ர்கள் தத்தம் மனைவியர் முகங்காண அவர்களின் இல்லங்களை அடைகின்றனர்.

ஆனால் வீரத்துடன் போரிட்ட அந்த ஆண்யானை மட்டும், யானைக் கொட்டகை உள்ளே செல்லாமல் வெளியே நிற்கின்றது. ஏன் தெரியுமா? அந்த ஆண் யானையின் பிடி [பெண்யானை] உள்ளே இருக்கிறது. தன்னுடைய கொம்பு ஒடிந்ததாலும், நகம் தேய்ந்ததாலும் தான் இப்போது அழகிழந்து விட்டோமே! இக்கோலத்துடன் எப்படித் தன் பிடியின் முன்னால் போய் நிற்பது என்று நாணித்தான் அது வெளியே நின்றுவிட்டதாம்.

இக்காட்சி பழந்தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில் காட்டப்பட்டுள்ளது.

            ”கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்

            முடிஇடறித் தேய்ந்த நகமும்—பிடிமுன்பு

            பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

            கல்லார்தோள் கிள்ளி களிறு.

[பாடல் எண் :72]

இயல்பாகப் போர்க்களத்திற்குப் போய்த் திரும்பி வந்துப் புறங்கடையில் நிற்கும் யானயினை இவ்வாறு கூறல் தற்குறிப்பேற்ற அணியாகும்.

 யானையின் பெண்மை

இந்தப்பாட்டில் ஒரு பெண் யானையின் பெண்மையைக் குறித்தே ஐயப்படுகிறாள். எப்பொழுதும் மன்னர் வீதி உலா வரும்போது பெண்யானை மீது உலாவருதல் மரபாகும். அப்படிப் பாண்டியன் ஒரு பெண்யானை மீது உலா வருகிறான். பார்க்கின்ற மகளிர் எல்லாம் அவன் மீது மையல் கொள்கின்றனர். இன்னும் அவன் அழகைக் கண் குளிரக் காண வேண்டுமென்று அருகே செல்கின்றனர். ஆனால் அதற்குள் அந்தப் பெண் யானை விரைந்து நடந்து சென்று விடுகிறது.

      ”ஏன் இந்தப் பெண்யானை கொஞ்சம் மெதுவாக நடக்கக் கூடாதா?” என்று அவள் நினைக்கிறாள். அந்த யானையின் மீது அவளுக்குக் கோபம் வருகிறது. அதனால் அந்தப் பெண்யானையிடம் கேட்கிறாள்.

      ”இளமையான பெண் யானையே! நீ எனக்குத் தோழி போன்றவள்; நான் உன்னிடத்தில்தானே நடை பயின்றேன்; அப்பொழுதெல்லாம் நீ மெதுவாக நடந்தாயே! இப்பொழுது புலால் தோய்ந்த வேலை உடைய எங்கள் மதுரை மன்னன் உன்மேல் ஏறி உலா வரும்போது உனக்கு மெதுவாக நடக்கத் தெரியவில்லையா?  இவ்வளவு வேகமாக நடக்கிறாயே? என் நிலை உனக்குத் தெரியவில்லையா? ஒரு பெண்ணான நீ என்னுடைய காதல் மனம் அறிந்திருக்க வில்லையா? நீ இப்படி வேகமாக நடப்பது உன் பெண்மைத் தன்மை மீதே ஐயம் வரும் நிலைமையை ஏற்படுத்தி விட்டதே? இது சரியா?”

      தான் பாண்டியனைக் காண முடியாத ஏக்கத்தில் இருக்கும் அவள் அந்தப் பெண் யானையின்மீதே முத்தொள்ளாயிரப் பாடல் இது.

            ”எலாஅ மடப்பிடியே! எங்கூடற் கோமான்

புலாஅல் நெடுநல்வேல் மாறன்— உலாஅங்கால்

பைய நடக்கவும் தேற்றாயால் நின்பெண்மை

ஐயப் படுவது டைத்து”

இதே போன்ற கருத்தில் சிந்தாமணியில், “கடுநடை கற்றாய்…………………………..பிடியலை பாவி” என்று கூறப்பட்டுள்ளது.     [51]

     யானையே அருகில் வா!

பாண்டியன் யானையின் மீது ஏறி உலாவரப் போகிறான். அவன் அழகைக் கண்டால் கன்னியர் அவன் மீது மையல் கொள்வர். அதனால் உடல் மெலிந்து பசலை நோய் கொள்வர். எனவே அம்மகளிரின் தாயர் அப்பெண்களை வீட்டினுள்  ளேயே இருக்கச் செய்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் பெண்கள் எப்படியும் மாறனைக் கண்டு களிக்க எண்ணுகின்றனர்.

”எப்படியும் நம் தெருவின் வழியாகத்தானே அவன் யானை மீது ஏறி உலா செல்வான். அப்போது நாம் நம் இல்லச் சன்னல் வழியாகப் பார்த்து விடுவோம்” என்று எண்ணுகின்றனர். ஆனால் அந்த யானை நம் இல்லச் சன்னல் அருகில் வரவேண்டுமே! அப்போதுதானே நாம் அதனையும் அதன் மீது வீற்றிருக்கும் மன்னனையும் பார்க்கமுடியும் என எண்ணி அதற்காக அந்த யானையிடம் வேண்டுகின்றனர்.

“உடுக்கையைப் போன்ற அடியினையையும், கேடகம் போன்ற காதினையும், அசைகின்ற துதிக்கையினையும், தொங்குகின்ற வாயினையும் உடைய பெண் யானையே! நீ நல்ல மணம் பொருந்திய மாலைகளை அணிந்து கொண்டு செந்தூர வண்ணனான எம் மன்னனுடன் எங்கள் தெருவிற்கு வரும்போது எங்கள் இல்லச் சன்னல் பக்கம் வருவாயாக”

வீட்டினுள் அடைபட்டிருந்தாலும் எப்படியும் மாறனைக் கண்டு விட வேண்டும் என்னும் ஆவலினால் பெண் யானையிடம் வேண்டும் இக்காட்சி முத்தொள்ளாயிரத்தில் காட்டப்பட்டுள்ளது.

            ”துடிஅடித் தோல்செவித் தூங்குகை நால்வாய்ப்

            பிடியேயான் நின்னை இரப்பல்—கடிகமழ்தார்ச்

            சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்

            சாலேகம் சார நட”

[பாடல் எண் : 50]

[துடி= உடுக்கை; தோல்=கேடகம்; நாலுதல்=தொங்குதல்;  தூங்குதல்=தொங்குதல்; சேலேகம் செந்தூரம்]

                                              ==========================================================================

Series Navigationஅரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *