எங்கெங்கு காணினும்

author
0 minutes, 1 second Read


கௌசல்யா ரங்கநாதன்
      ———

மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது..தத்தளிக்கிறது..என்ன முயன்றும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை..வயதான எந்த வருமானமும் இல்லாத, என் பெற்றோர்தான் என்ன செய்ய முடியும்? அவர்களைப் பார்த்தாலும் பாவமாய்த்தான் இருக்கிறது. சொற்ப நகைகள்,   என் தங்கை கலியாணத்துக்கு சேமித்து வைத்திருக்கிறார்கள்.கொஞ்சம் பணமும்.எப்படியாவது மேலும் கொஞ்சம் பணம் புரட்டி விடலாமென நினைத்தபோது முதல் அழைப்பிதழை வைக்கும் முன் சம்பந்தி வீட்டார் மேலும்,மேலும் பேராசை உந்த பேசியதற்கு மேல் இன்னம் அதிகமாக, பணமும்,நகைகளும் கேட்க,  ஆடித்தான் போனேன்..பெற்றோர் கண்ணீர் சிந்த, தங்கை திகைத்து நிற்க, நான் சொன்னேன் “ஏன் கலங்கணும் நீங்க எல்லாரும்? ஒரு கலியாணம்னாலோ, வீடு கட்டறதுனாலோ போட்ட பட்ஜெட்டுக்குள் வராதுதான்….ஆனாலும் என் மனதிலும் ஒரு கலக்கம்..ஏன் திடீரென பிள்ளை வீட்டார் மேலும், மேலும் அது வேண்டும்,இது வேண்டுமென கேட்டு எங்களை தர்மசங்கடத்தில்  ஆழ்த்த வேண்டுமென..அப்போதுதான்,என்  உயிர் நண்பன், என் எல்லா சுக, துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவன்(நானும் அப்படித்தான் இருப்பேன் அவன் விஷயத்தில்.)”ஈங்கிவனை யாம்பெறவே” என்று என்னை எண்ண வைத்தவன், ஒரு புன்னகையுடன் என்னிடம் சொன்னான்..”என்ன இது? இதுக்கெல்லாமா போய் கவலைப் பட்டிருப்பாங்க? ஏம்பா, நான் இல்லை!என்னை உன் நண்பனாய்க்கூட நினைக்க வேண்டாம். அதுக்கும் மேலே,உடன்பிறப்பாய் நினைச்சுக்கலாம்ல. இது ஒரு ஜுஜூபி மாட்டர்..கவலையை விட்டுட்டு, மத்த வேலையில கவனத்தை செலுத்து” என்றான். .

“நான் அப்படித்தானே நினைச்சுக்கிட்டிருக்கேன் உன்னை”, என்ற போது, “அப்ப ஏன் வீண் கவலை? உன் தங்கை கலியாணம், என் தங்கை கலியாணம் போல..விடு..இந்த இடம் உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்குல்ல..சில மனுஷங்க இப்படித்தான் இருக்காங்க, அகப்பட்டவரை சுருட்டிக்கலாம்னு.. த பார், போட்டடிச்சு, தேவைப்பட்டா, மறுபடியும் சம்பந்தி வீட்டார்கிட்ட பேசி, நம்ம நிலையை விளங்க வைக்க பார்ப்போம்..அப்ப அவங்க மனசும் இளகலாம்ல

 “ஆனாலும் அன்னைக்கு உட்கார்ந்து  ஒருமுறை பேசி, முடிவு பண்ணி, அதுக்கேத்தாப்பல பட்ஜட்  போட்டப்புறம் மேல, டிமாண்ட் பண்றது நியாயமா?”

“நியாயமில்லைதான்..என்ன பண்றது”? என்றவன் முத்தாய்ப்பாய் “நான் சொல்றேன்னு தப்பாய் நினைக்காதே..உங்க சாதிக்காரங்களே ,இப்படித்தான்” என்ற போது திகைப்பாய் இருந்தது எனக்கு இதில் சாதி,மதம் எங்கிருந்து வந்தது என்று..பொதுவாய் மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று
 எல்லா மதங்களிலும், சாதிகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்..அப்படியிருக்கும்போது இவன் கூட ஏன் இப்படியொரு வார்த்தையை விட்டான்? எல்லா மனிதர்களுக்குள்ளும் அவரவர் மத, சாதீய உணர்வு கனன்று கொண்டுதான் இருக்கிறது போலும்..”சாதி,சமயமற்ற,சமதர்ம சமுதாயம்,  அமைப்போம்” என்பது மேடைப்பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாய் இருக்கும்.கைத்தட்டலை அள்ளிக் கொடுக்கும்…

இவனிடம் மேற்கொண்டு இது பற்றி பேசினால் “நான் உன்னை சொல்லவில்லை” எனலாம்..ஒரு கசப்புணர்வுதான் தலைதூக்கும்..அதனால் மௌனம் காத்தேன்..அதனால் அவன் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டதாய் எண்ணக்கூடும்..அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டுமே! இவன் திருமணத்தின்போது, இவன் பெற்றோர் மணமேடையில்  தன் சம்பந்தியிடம் பேசியதற்கு மேலாய் கேட்டு, அவரை மனம் நோக வைத்ததை இவனுக்கு இந்த தருணத்தில் நான் நினைவு படுத்த விரும்பவில்லை..  என்னைப் பொறுத்தவரையில் மனிதர்களை அவரவர் நிறை, குறைகளுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைப்பவன் நான்..

பிறிதொரு சந்தர்பத்தில் என் இன்னொரு உயிர் நண்பனின் தம்பிக்கு ஒரு தனியார் காலேஜில் இடம் வாங்கித்தர என்னிடம் வேண்டுகோள் வைத்தான்.


அதன் தாளாளர் சமூகத்தில் ஒரு வி.வி,ஐ,பி..பொ¢ய தர்மிஷ்டர் என்றே அறியப்பட்டவர்..அரசியலிலும் செல்வாக்குள்ளவர்..நான் பல சமயங்களில் அவரை அண்ணாந்து பார்த்து வியந்தவன்..அப்பேற்பட்டவர் தன் ஒரே மகனுடன் (அந்தப் பையனுக்கு 7/8 வயதிருக்கலாம்),ஒரு இனிய மாலை நேரத்தில்,
 கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு கடல் அலை வந்து அந்த, சிறுவனை கடலுக்குள் இழுத்து செல்ல, பையன் அலறித் துடிக்க, சுற்றி நின்றவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்க, அந்த  மனிதரும் கூக்குரலிட்டார் “யாராவது என் பிள்ளையை காப்பாத்துங்களேன்” என்று..


 கடல் சீற்றம் கொண்டிருந்தது.அலைகள் பனைமர உயரத்துக்கு போய்,  வந்தது..யாருமே அஞ்சி நடுங்கக் கூடிய தருணம்தான்..அப்போதுதான் எனக்குள் ஒரு சிறு பொறி தட்டி,நாம் ஏன் இவனைக் காப்பாற்ற முயற்சிக்க கூடாதென்று தோன்றவே, துணிந்து, சீற்றம் கொண்ட கடலுக்குள் துணிந்து குதித்திட,
 (நான் சின்ன வயதில் எங்கள் ஊரான திருவிடைமருதூர் வீரசோழன்,  ஆறு, பொங்கி, பிரவிகித்து இரு கரைகள் தொட்டுக் கொண்டு ஓடும்போது, இந்த கரையிலிருந்து எதிர்கரை வரை நீச்சலடிப்பேன் எங்கள் வீட்டார் எதிர்ப்பையும் மீறி..பிறகு சென்னைக்கு வேலை நிமித்தம் வந்த பிறகு  சம்சார சாகரத்தில்
எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறேன் இன்றளவும் என்பதே உண்மை)..அந்த சிறுவனை காப்பாற்று என்று எந்த மனசாட்சி எனக்கு  உத்தரவிட்டதோ என்று விளங்கவில்லை இன்றளவும்..அந்த  மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து, கடல் அலைகளுடன் சில நிமிடங்கள் போராடி எப்படியோ அந்த சிறுவனை கரைக்கு கொண்டு வந்து சேர்த்து, அவனுக்கு தேவையான  முதலுதவியும் அளித்து, பிறகு ஆம்புலன்சில் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவன் சிகிச்சை முடியும் வரை கூடவே இருந்து அவனை காப்பாற்றி…”காப்பாற்றி”: என்ற சொல் கூட எனக்கு பிடிக்கவில்லை.. அன்று இரவு வீடு திரும்ப 11 மணிகு மேலாகி விட்டிருந்தது…மறுநாள் அந்த சிறுவனின் தகப்பன்,எப்படியோ, எங்கெங்கோ அலைந்து, என் வீடு தேடி வந்து, நன்றி சொல்லி,
 என் வீடு தேடி வந்து நன்றி சொல்லி, “நீ யாரோ, எவரோ, என் ஒரே மகனை காப்பாற்றி கொடுத்தாய்..”என்ற போது  நான் சொன்னேன் “ஐயா, இதுக்கோசரம் இந்த குறுகலான முட்டு சந்துக்குள் கார் கூட நுழைய முடியாத தெருவுக்கு நீங்க  வரணுமா என்ன? ஒரு வார்த்தை “நான் உன்னை பார்க்க விரும்பறேன்னு சொல்லி அனுப்பியிருந்தா  வந்திருப்பேனே” என்ற போது,  “அது ஒரு வி,ஐ,பி.லொகாலடி. பங்களா, விசலாமான தோட்டம், கார்கள்னு  ஆடம்பரமான மனுஷங்க இருக்கிற இடம்..சுருக்கமா சொல்லணும்னா மனிதாபிமானமே இல்லாதவங்கதான் அங்கே அதிகம்..இது மட்டும் போதாதுனு உன்  செய்கை எனக்கு உணர்த்திருச்சு.எவ்வளவு விசாலமான மனசு உனக்குனு இப்ப விளங்கிடுச்சு..உன் வீட்டை பார்க்கிறப்ப நீ ரொம்ப சிரமத்தில் இருக்கேனு தோணுது..சொல்லு உனக்கு என்ன வேணும்னு..எதுவாயிருந்தாலும் செய்ய கடமைப் பட்டிருக்கேன் நான்..” என்ற போது,பிரமிப்புடன் சொன்னேன்.
 “எனக்கு ஒண்ணும் வேணாம் ஐயா..நீங்க பணம், காசு கொடுப்பீங்கனு நினைச்சு நான் பையனை காப்பாத்தலை..அந்த இடத்தில் யாராயிருந்தாலும் மனசாட்சி உள்ளவங்க காப்பாத்தியிருப்பாங்க.” என்று எவ்வளவோ சொல்லியும், அவர் “நீ எதாச்சும் எங்கிட்ட வாங்கிக்கிட்டுதான் ஆகணும் .சொல்லு..”

“ஐயா, எனக்கு இப்ப எதுவும் வேணாம்..ஐயாவோட மனப்பூர்வமான ஆசிகள் மட்டும் இருந்தா போதும்..சமயம் வரும்போது உங்ககிட்ட வருவேன்..இப்ப ஏதனாச்சும் வாங்கிக்கிட்டா, அது கூலி போல ஆயிடும்..அதை நான் விரும்பலை.” என்ற போது அவர் தன் விசிட்டிங் கார்டையும், தன் பிரத்தியேக ரகசிய தொலைபேசி,மற்றும் கைபேசி எண்களையும் என்னிடம் கொடுத்து, “நீ எப்ப வேணா என்னை பார்க்க வரலாம், ஒரு போன் மட்டும் பண்ணிட்டு..ஒகே..  எந்த உதவி வேணும்னானாலும் தயங்காம கேட்கலாம்..நான் காத்துக்கிட்டுடிருப்பேன் உனக்கு, உதவி செய்ய” என்றவர் வார்த்தைகள் நினைவுக்கு வர, அவரைப் பார்த்து உதவி கேட்டால் செய்யாமலா போய் விடுவார்..அதுவும் நண்பன் என்னைத் தேடி வந்து, “இந்த காலேஜ் தாளாளர் உனக்கு ரொம்ப
நெருக்கமாமே! நீ மனசு வச்சா என் தம்பிக்கு அந்த பொறியியல் காலேஜில் சீட் வாங்கிதரலாமே..பிளீஸ்..ஹெல்ப் மீ” என்று கேட்டபோது,அவர் முன்பு சொன்னது நினைவுக்கு வர, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க, நேரம் ஒதுக்கிக்கொடுக்க கேட்டபோது, குதூகலத்துடன்,அவர்,
” நீ எப்ப வேணாலும் அது ராத்திரி  மணியானாலும் தயங்காம என் வீட்டு கதவை தட்டலாம்” என்ற வார்த்தைகளை நம்பி அவர் வீட்டுக்கு போனபோது, அபார வரவேற்பு கொடுத்து “உனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு..செய்ய காத்திருக்கேன்” என்ற போது நண்பனின் தம்பி அட்மிஷன் விஷயம் பற்றி சொல்ல, அவர் கேட்டாரே ஒரு கேள்வி!!!

“உன் பிரண்ட் என்ன சாதி ? என்று…அப்போதே எனக்கு விட்டுப் போயிற்று..இருந்தாலும் அவன் சாதி பற்றி சொல்ல, அவர் “வேற என்ன வேணும்னாலும், கேளு..அது எத்தனை லட்சங்களானாலும் உனக்கு கொடுப்பேன்..இல்லைனா,உனக்கு அரசாங்கத்தில் ஏதனாச்சும் வேலை ஆகணும்னாலும் செய்ய நான் சித்தமாய் இருக்கேன், நீ என் சாதிக்காரன்றதால..இந்த காலேஜில் நம்ம சாதிக்காரங்களுக்கு மட்டும்தான் அட்மிஷன்”என்றவரைப் பார்த்து,”உங்க மகன் அன்னைக்கு கடல்ல தத்தளிச்சுக் கிட்டிருந்தப்ப நான் சாதி பார்த்தா காப்பாத்தினேன்” என்று நான் அவரை கேட்க விரும்பவில்லை..
                                                                                                                           ———-

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *