
எழுதிய / பிரசுரமாகிய காலமோ, இதழ் பெயரோ குறிப்பிடப்படாத பதினைந்து கதைகளை உள்ளடக்கி ஐந்திணைப் பதிப்பகம்
“தி. ஜானகிராமன் படைப்புகள்” என்று இரண்டு தொகுதிகள் கொண்டு வந்தது. அந்தப் பதினைந்து கதைகளுள் ஒன்றுதான்
“23இ பேருந்தில்”
முதல் தடவை வாசிக்கும் போது இந்தச் சிறுகதையில் உள்ளடங்கியிருக்கும் சூக்ஷ் மம் என்ன என்று தெரிவதில்லை. ஒரு பஸ்ஸில் சில பிரயாணிகளுக்கு இடையே நடக்கும் மனஸ்தாபத்தின் காரண காரியங்களையும் அது எவ்வாறு முடித்து வைக்கப்படுகிறது என்பதையும் பற்றிய கதை போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் கதையின் முடிவில் தி.ஜா.ஒரு குறிப்பு தருகிறார்.
அதனால் இப்போது இந்தக் கதையை இரண்டாம் முறை, மூன்றாம் முறை படிக்கத் தோன்றுகிறது.
ஒருநாள் இரவு ஏழு மணிக்கு எழும்பூர் செல்லும் பேருந்தில் ஒரு முப்பது வயது மனிதர், அவர் மனைவி குழந்தைகளுடன் பிரயாணம் செய்கிறார். அதே பேருந்தில் ஒரு நாற்பது வயதுப் பெண்மணி அவள் கணவன், கணவனின் மச்சான், மச்சாள் அடங்கிய குடும்பம் ஒன்றும் பயணிக்கிறது. முப்பது வயது மனிதர் ஒரு பெரிய சூட்கேசையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு வந்து தனக்கு அருகில் வைத்திருக்கிறார். பேருந்து செல்லும் போது ஓரிடத்தில் குலுங்கி நிற்கையில் சூட்கேஸ் நின்ற நிலையை விடுத்து நடையில் சரேலென்று விழுந்து படுத்துக் கொள்கிறது.
நடைக்கப்பால் உட்கார்ந்திருந்த நாற்பது வயதின் கால் விரல் நசுங்கி இருக்க வேண்டும். நசுங்கவில்லை. ஏனெனில் அவளுடைய கால், பெட்டி விழுந்த இடத்தில் இல்லை. பெண்மணியின் கணவர் ‘காலில் அடிபட்டதா?’ என்று அவளிடம் கேட்க, ‘இல்லை’ என்பவள்
‘இந்தப் பொட்டியை எல்லாம் டாக்சியில் வைத்து எடுத்துக் கொண்டு போக வேண்டும்’.என்கிறாள். அவள் புருஷன் ‘காலில் விழுந்திருந்தால் அஞ்சு விரலும் முனியாண்டி விலாஸ் சட்னியாட்டம் ஆகியிருக்கும்’ என்கிறான். பதிலுக்கு அவள் ‘அப்படி பயப்படுகிறவனாய் இருந்தால், பொட்டியைப் பிடிச்சுக்கோன்னு சொல்லியிருக்கணும்’ என்கிறாள். அவள் கணவன் கிண்டலாகப் பெட்டியைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்து முப்பது வயதுக்காரரின் மனைவி பற்றியெல்லாம் தொடர முப்பது வயதுக்காரர்
‘ஜோக்கல்லாம் அடிக்க வேண்டாம்’ என்கிறார். நாற்பது வயதுப் பெண்ணின் கணவன் ‘நான் வம்புக்கு இழுக்கிறேனா, சம்சாரத்தை ஒத்தக் கையிலே புச்சுக்கினு இருந்தாருன்னு சொல்றதுக்கே இப்படி மொறைக்கிறாரே’ என்று மறுபடியும் வம்புக்கு இழுக்கிறார். முப்பது வயது இப்போது நிஜமாகவே கோபமாக முறைக்கிறார். அப்போது கணவனும் அவனது மச்சானும் “யோவ், இந்தா மாரி பொட்டியெல்லாம் எடுத்துகினு பஸ்ஸிலே போக்கூடாதய்யா. என்னமோ கோர்ட்டு கணக்கா பேசுறியே. என்னமோ பாத்தா பாங்கிலே ஏதோ பெரிய ஆபீசரு மாதிரி சட்டை பேண்டெல்லாம் போட்டுக்கினு வந்திருக்கே. ஒரு டாக்சில போறதா
னய்யா !” என்கிறார்கள். மேலும் மேலும் அவர்கள் இருவரும் பேச்சை வளர்த்தி முப்பது வயது மனிதரையும் அவர் மனைவியையும் படுத்தி எடுக்கிறார்கள்.
அப்போது பின்னாலிருந்து ஒரு இளங்குரல் நாற்பது வயதின் கணவரை அதட்டுகிறது: “உனக்கு என்ன வயசாச்சி ! நானும்
அப்பலேந்து பாத்துகிட்டு வரேன். அவரை சத்தாச்சுகிட்டே வர்றே. பொட்டி கால்லியும் விளலே. விரல்லியும் விளலே . அவரும் எடுத்து சரியா வச்சிட்டாரு “
கணவன்: “உயுந்திருந்தா என்னா ஆகியிருக்கும்?”
இளங்குரல்: “உன் தலை ஆயிருக்கும். அட சை, சும்மா இருய்யா.”
மச்சான் இளங்குரலிடம் “நீ யாரய்யா நடுவிலே?பூனைகளுக்கு ஆப்பம் பிரிச்ச குரங்காட்டம்.!” என்கிறான்.
குரங்கு என்றதும் வார்த்தைகள் வலுத்து விடுகின்றன. இளங்குரலுடன் அவனது நாலைந்து தோழர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.
அடுத்த நிறுத்தத்தில் நாற்பது வயதுப் பெண்மணியும் அவள் கணவனும் மச்சாளும் இறங்கிக் கொண்டு மச்சானை இறங்கச் சொல்லுகையில் அவன் சவடாலாகப் பேசுகிறான். இளங்குரலும் அவன் நண்பர்களும் மச்சானைப் பிடித்து இழுத்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்குகிறார்கள். வாய்க் கலப்பு.
பஸ் பயணத்தைக் தொடர்கிறது. கண்டக்டர் முப்பது வயதிடம் சொல்லுகிறார், அந்த மச்சாளுக்கு முன்னால் நாற்பது வயதுப் பெண்மணியின் கணவன் தன்னைப் பெரிய ஆள் என்று மீசையை முறுக்கிக் காட்ட நினைத்ததுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று.
தன்னுடைய குறிப்பில் தி. ஜா. “சின்னப் புயல்கள்” என்று கூறுகிறார். இந்த மனுஷன் போகிற போக்கில் வார்த்தைகளை உதிர்த்து விடும் ஜாதியைச் சேர்ந்தவர் இல்லையே ?
சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் தமிழ் இலக்கிய உலகில் ஓர் நிகழ்வு ஏற்பட்டது. சிறு பத்திரிகைகளில் தொடங்கி (பேருந்து) பெரும் பத்திரிகைகளுக்குச் (டாக்சி) சென்று பிறகு சிறு பத்திரிகைகளுக்கே திரும்பி விட்ட ஓர் எழுத்தாளர் ( பாங்கிலே ஏதோ பெரிய ஆபீசரு மாதிரி சட்டை பேண்டெல்லாம் போட்டுக்கினு! !) அணுகப்பட்ட போது பெரிய திரையில் தன் கைவண்ணம்
வரட்டுமே என்று சம்மதித்துத் தொடங்கினார். பாதிப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே திரையைப் போட்டு மூடி விட்டார் திரைப்படக் கம்பனி மேனேஜர். இதை எதிர்த்து ஒரு கோபக்கார சாமியாடி (இளங்குரல்) திட்டியதை – இதற்கு முன்னால் சினிமாவுக்குப் போன சித்தாளை ஆதரித்த ஒருவர் (மச்சான்) “நீ யாருய்யா குரங்கு நடுவிலே ?” என்று கேட்க சாமியாடி நீ சித்தாள்கள் பின்னால் சுற்றிக் கொண்டு அலைந்த போது நான் என்ன பேசியிருக்க முடியும் என்றார். ஆனால் திடீரென்று ஒருவர் ஒரு கூட்டத்தோடு (நாற்பது வயது குடும்பம்) சாமியாடியைக் கிழிக்கிறேன் என்று கிளம்பிய போது ஒரிஜினல் சாமியாடி
அந்தச் “சின்னப் புயல்களை” வெளுத்து வாங்கிவிட்டார்.
தி.ஜா. கதை முடிவில் தரும் குறிப்பு இதுதான் :
“இது நிஜக் கதை. எழுத்தாளர்களோடும், இன்னும் மற்ற பிரமுகர்களோடும் நிகழும் பேட்டிகள், அவைகளின் பின்னால் வரும் சின்னப் புயல்கள் பற்றிய உருவகக் கதை அல்ல.”.
.
- திருநறையூர் நம்பி
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்
- திரைப்பட வாழ்க்கை
- பாதி முடிந்த கவிதை
- படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு
- தேடல் !
- கவிதைகள்
- மறு பிறப்பு
- கொ பி
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- நேர்மையின் தரிசனம் கண்டேன்
- காலம் மாறிய போது …
- மரணத்தின் நிழல்
- ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..
- புதுப்புது சகுனிகள்…
- ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …
- காந்தி பிறந்த ஊர்