புள்ளிக்கள்வன்

This entry is part 3 of 14 in the series 15 நவம்பர் 2020

                             

                                         

பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு சுட்டிக் காட்டுகிறது. மருதத்திணையின் மூன்றாம் பத்திற்குக் கள்வன் பத்து என்றே பெயராகும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பாடல்களிலும் கள்வன் பெயர் காணப்படுவதால் இப்பகுதி கள்வன் பத்து என்னும் பெயரைப் பெறுகிறது.

            ”முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்

            புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்

            தண்துறை ஊரன் தெளிப்பவும் 

            உண்கண் பசப்ப[து] எவன்கொல்? அன்னாய்!”

என்பது முதல் பாடலாகும். தலைவியிடம் அவள் தோழி சொல்லும் பாடல் இதுவாகும். முள்ளிச் செடி என்பது முட்கள் பல உடையதாகும் அதன் பூக்கள் நீலவண்ணத்தில் இருக்கும். அச்செடி நீரோடும் வாய்க்கால் கரைகளில் இருக்கும். அதைத்தான் முதுநீர் அடைகரை என்பது குறிக்கிறது. அகநானூறு “முண்டகங் கலித்த முதுநீர் அடைகரை” என்று காட்டும்.

அச்செடிகள் இருக்கும் குளிர்ச்சியான வாய்க்கால் கரைகளில் ஆம்பலும் பூத்திருக்கும். புள்ளிகளைத் தன்மேல் கொண்ட நண்டானது அந்த ஆம்பலின் தண்டை அறுக்குமாம். அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் தலைவன். ”அவன் நான் இனி உன்னைப்பிரிந்து எங்கும் செல்ல மாட்டேண்” என்று கூறிவிட்டானே; ஆனாலும் உன் கண் ஏன் இன்னும் பசப்பது ஏன்” என்று தோழி கேட்கிறாள். ஆம்பலை நண்டு அறுக்கும் எனக் காட்டப்படுவதால் அவன் இனி பிறமாதர் தொடர்பை விட்டுவிடுவான் என்பது மறைபொருளாகும்.

அடுத்த பாடலில் சேற்றில் ஆடிக்கொண்டிருந்த நண்டு முள்ளிச்செடியின் வேரில் இருக்கும் வளையில் போய் அடைவது காட்டப்படுகிறது. அப்படி நண்டுகள் இருக்கும் ஊரைச் சேர்ந்த தலைவன் முன்பு வந்தான். நன்றாக உரையாடினான். தலைவியை மணந்தான். இனிப் பிரியமாட்டேன் என்றும் உரைக்கிறான். தலைவி ”இதற்கு என்ன பொருள்?” என்று தன் தோழியிடம் கேட்கும் பாட்டு இது. நண்டு வளையினுள் செல்வது போல அவனும்  தன்னை விட்டுவிட்டு அகன்றிடுவானோ எனத் தலைவி அஞ்சுவது மறைபொருளாகும்.

            ”அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்

            முள்ளி வேர்அளைச் செல்லும் ஊரன்

            நல்ல சொல்லி மணந்[து]இனி

            நீயேன் என்ற[து] எவன்கொல்? அன்னாய்”

அள்ளல் என்பது சேற்றினைக் குறிக்கும். முத்தொள்ளாயிரத்தில் அள்ளற் பழனத்தாம்பல் என்று வருவது நினைவு கூரத்தக்கது. பெரும்பாணாற்றுப் படை “கவைத்தான் அலவன் அளற்றளை சிதைய” என்று பாடுகிறது.

            ”முள்ளி வேர்அளைக் கள்வன் ஆட்டிப்

            பூக்குற்[று] எய்திய புனல்அணி ஊரன்

தேற்றம் செய்துநப் புணர்ந்[து]இனித்

தாக்[கு]அணங்கு ஆவ[து] எவன்கொல்? அன்னாய்!”

இப்பாடலில் பூக்குற்று என்பது பூப்பறித்து என்று பொருள்தரும். நீரில் இருக்கும் பூக்களைப் பறிப்பது, முள்ளிச்செடியின் வேரிலிருக்கும் நண்டை ஆட்டி அலைத்து விளையாடுவது என்பதெல்லாம் நீரில் ஆடுபவர்கள் செய்வதாகும். அப்படி எல்லாம் ஆடும் ஊரைச் சேர்ந்த அவன் வந்து தலைவியைக் கூடினான். “அவன் இப்பொழுது வருத்தும் தெய்வம் போல வருத்துகிறானே? அது ஏன்” எனத் தலைவி தன் தோழியைக் கேட்கிறாள்.

தாய் நண்டு குஞ்சுகளை ஈன்றவுடன் இறந்து விடுமாம். முதலையானது தன் பிள்ளைகளையே தின்றுவிடுமாம். ”அவை இருக்கும் ஊரினைச் சேர்ந்த அத்தலைவன் வந்தான்; அணிந்துள்ள வளைகளெல்லாம் ஒலிக்குமாறு கலந்தான்; இப்பொழுது பிரிந்து போகிறானே? ஏன்?” என்று தோழி கேட்கும் பாடல் இது.

            ”தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு

            பிள்ளை தின்னு முதலைத்[து] அவன்ஊர்

            எய்தின்ன ஆகிநின்று கொல்லோ மகிழ்நன்

            பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்

            நலம்கொண்டு துறப்ப[து] எவன்கொல்? அன்னாய்!”

என்பது அப்பாடலாகும்.

மழை வளத்தால் வளர்ந்த, முற்றாத பிஞ்சு இருக்கும் வயலைக் கொடியை நண்டு அறுக்கிறது.  அப்படிப்பட்ட வயல்களை உடைய அத்தலைவனின் மார்பு பல பெண்களுக்கும் அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் நெகிழும்படிக் காமநோயை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். இவ்வாறு தோழி கூறுகிறாள். முற்றாத பிஞ்சை நண்டு அறுப்பதாகக் கூறுவது தலைவியின் இளம்புதல்வன் மனம் வருந்தும்படித் தலைவன் செயல் இருக்கிறது என்பதைக் காட்டும் மறைபொருளாகும். இதோ பாடல்.

            ”புயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்

            வயலைச் செங்கொடிக் கள்வன் அறுக்கும்

            கழனி ஊரன் மார்பு பலர்க்[கு]

            இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்!”    

கரந்தை என்று ஒரு கொடி சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. “கரந்தையஞ் செறுவின் வெண்குருகோப்பும்” என்று அகநானூறு [226] காட்டுகிறது. வள்ளை என்பதும் கொடிவகைகளில் ஒன்றாகும். வயலில் இவை படர்ந்திருக்கின்றன. ஐங்குறு நூறு இக்கொடிகள் இரண்டையும் ஒரே பாடலில் காட்டுகிறது.

            ”கரந்தையஞ் செறுவில் துணைதுறந்து கள்வன்

            வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்

            எம்மும் பிறரும் அறியான்

            இன்னன் ஆவ[து] எவன்கொல்? அன்னாய்!?”

நண்டானது தன் துணையை கரந்தைக்கொடி படர்ந்திருக்கும் வயலில் விட்டுவிட்டுப் போகிறது. அப்படிப் போகும்போது அந்த நண்டு அங்கிருக்கும் வள்ளைக்கொடியின் மெல்லிய தண்டை அறுத்துக் கொண்டு செல்கிறது. அப்படிப்பட்ட நண்டுகளை உடைய ஊரினைச் சேர்ந்தவன் தலைவன். “அவனுக்கு எம்மைப் பற்றியும் கவலையில்லை; எங்கு செல்கிறானோ அங்கிருப்பவரைப் பற்றியும் கவலையில்ல; அவன் இப்படி இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை”
 என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

ஐங்குறு நூறு செந்நெல் என ஒருவகை நெல்லைக் கூறுகிறது. இதைச் செஞ்சாலி என்றும் வழங்குவதுண்டு. திருமங்கையாழ்வார் திருக்கோவலூர் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்” என்று குறிப்பிடுவார்.

            ”செந்நெல்அம் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் 

            தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்[கு]

            எல்வளை நெகிழாச் சாஅய்

            அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்”

தலைவன் இன்னும் வராததைக் கண்ட தோழி தன் தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல். “நண்டானது செந்நெல் விளையும் வயலில் புகுந்து  முற்றியுள்ள கதிர்களை அறுத்துக் கொண்டு தன் குளிர்ச்சியான வளைக்குள் போய்த் தங்கும். அப்படிப்பட்ட ஊரை உடைய தலைவனுக்காக நம் வளைகள் கழன்று விழும்படி நாம் உடல் மெலிந்து துன்பம் அடைந்து வருந்துவது ஏனோ” என்று தோழி சொல்கிறாள்.

அவன் பொருள் தேடி வரத்தான் போயிருக்கிறான். நண்டு கதிருடன் வளைக்குள் வருவது போல அவனும் செல்வத்துடன் திரும்பி வருவான் என்பது மறைபொருளாகும்.

தலைவனைப் பிரிந்திருப்பதால் தலவியின் உடலுக்குப் பசலை நோய் வருகிறது. உடம்பு மெலிகிறது. வளையல்கள் நெகிழ்கின்றன. அது கண்ட செவிலித்தாய் இவளுக்கு தெய்வத்தால் இவை ஏற்பட்டுள்ளன எனக் கருதுகிறாள். அத்தாயிடம் தோழி சொல்லும் பாடல் இதுவாகும்,

            ”உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்

            தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்[கு]

            ஒண்தொடி நெகிழாச் சாஅய்

            மெந்தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்!”

”நண்டு குளிர்ச்சியான சேற்றில் கோலம் போடுவது போல அழகாக ஊர்ந்து செல்லும் ஊரைச் சேர்ந்தவன் அவன். அவனைப் பிரிந்து இருப்பதால்தான் இவள் இப்படி இருக்கிறாள்” என்கிறாள் தோழி. கோலம் அழகாக இருப்பதால் அவனும் சீக்கிரம் வந்து விடுவான் என்று கூறுகிறாள் தோழி.

தலைவன் இல்லிலிருந்து தலைவியைப் பெண் கேட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் விரும்புவதை அறியாத செவிலித்தாய் மறுப்பு சொல்லி அனுப்புகிறாள். அப்பொழுது தோழி சொல்லும் பாடல் இதுவாகும்.

            ”மாரி கடிகொளக் காவலர் கடுக

            வித்திய வெண்முளை கடுவன் அறுக்கும்

            கழனி ஊரன் மார்புற மரீஇத்

            திதலை அல்குல் நின்மகள்

            பசலை கொள்வ[து] எவன்கொல்? அன்னாய்!”

”அன்னையே! மழை அதிகமாகப் பெய்கிறது. காவல்காரர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது கூட நண்டு அஞ்சாமல் வந்து விதைத்த நெல்லின் முளைகளை அறுத்துக் கொண்டு போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் அத்தலைவன். அவனை நன்கு மார்புறத் தழுவிய பின்னும் இவளுக்குத் தேமலும் பசலையும் ஏற்படுவதற்கு என்ன காரணம்?”

மழைக்கும் காவலருக்கும் அஞ்சாமல் நண்டு முளைகளை அறுப்பது போலத்தான் அவன் வந்து அவளைத் தழுவினான் என்பது மறைபொருளாம். எனவே மறுப்பு சொல்ல வேண்டாம் என்பதைத் தோழி சொல்லாமல் சொல்கிறாள்.

கள்வன் பத்தின் இறுதிப்பாடல் இதுவாகும்.

            ”வேப்புநனை அன்ன நெடுங்கண் கள்வன்

            தண்ணக மண்அளை நிறைய நெல்லின்

            இரும்பூ உறைக்கும் ஊரற்[கு]இவள்

            பெருங்கவின் இழப்ப[து] எவன்கொல்? அன்னாய்?”

இப்பாடலில் நண்டின் கண்களுக்கு வேப்பம்பூவின் அரும்பு உவமையாகச் சொல்லப்படுகிறது. கடந்த பாடல் போலவே பெண் கேட்டு வந்தவரைச் செவிலி மறுப்பு சொல்லி அனுப்பி விடத் தோழி சொல்கிறாள்.

“அன்னையே! வேப்பம்பூவின் அரும்பு போல நீளமான கண்களை உடைய நண்டின் வளைகளில் நெற்பயிரின் தாள்கள் நிறைய இருக்குமாம். அப்படி இருக்கும் ஊரைச்சேர்ந்தவன் இவள் தலைவன். அவன் பிரிவிற்காகத் தன் அழகை இவள் இழப்பது ஏன்”

இப்படிச் சொல்லி  அவனையும் அவளையும் விரைவில் சேர்த்து வைக்கவேண்டும் என்று தோழி மறைபொருளாக வலியுறுத்துகிறாள். இப்படி  ஐங்குறு நூறு காட்டும் கள்வன் பத்தில் புள்ளிக் கள்வனான நண்டு அகத்துறையில் இடம் பெற்றுச் சிறந்துள்ளது என்று கூறலாம்.    

Series Navigationவாழ்வே தவமாக …கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *