க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

author
1 minute, 9 seconds Read
This entry is part 3 of 10 in the series 22 நவம்பர் 2020

முருகபூபதி – அவுஸ்திரேலியா

தற்காலத் தமிழ் அகராதியில் ஈழத்தமிழ்ச்சொற்களையும்  இணைத்த மூத்த பதிப்பாளர்

                                             

இம்மாதம்  17 ஆம் திகதி அதிகாலை சென்னையில்   கொரோனோ  தொற்றினால் மறைந்த மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனுக்காக   நினைவேந்தல் இணைய வழி காணொளி  அரங்கு நேற்று முன்தினம்   நடைபெற்றது.  சிட்னி  அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்                            ( A.T.B.C ) வானொலி ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான கானா. பிரபா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் அ.ராமசாமி,  ஆவணப்பட இயக்குநர் அம்ஷன்குமார், பதிப்பாளர் வேடியப்பன்,  அமெரிக்காவிலிருந்து எழுத்தாளர் ஶ்ரீதர் நாராயணன்,  அவுஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர் முருகபூபதி   ஆகியோரும் உரையாற்றினர்.  இந்நிகழ்ச்சியில்   முருகபூபதி சமர்ப்பித்த உரை  )

மூச்சுவிடாமல் பேசியவாறு தமிழுக்கு அரும்பணியாற்றியவர்களை பார்த்திருக்கின்றோம். மூச்சுவிடத்திணறிக்கொண்டிருந்த வேளையிலும் தமிழுக்கு தனது அரியதொண்டினை செய்திருப்பவரைப்பற்றி முன்னர் கேள்விப்பட்டிருப்போமா..?

அப்படியும் ஒரு அற்புதமான மகத்தான மனிதர் எம்மத்தியில் வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தியையும் எமக்கு வரவாக்கிவிட்டு,  தனது கொடிய கரங்களை உலகெங்கும் விரித்து பரப்பிக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடிக்கொண்டே,   சமூக இடைவெளிபேணியவாறு இக்காணொளியில் நாம் இணைந்திருக்கின்றோம்.

க்ரியா இராமகிருஷ்ணனும் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன்.  அதற்கு முன்னர் நாம் மதித்த மரியாதை செலுத்திய மேலும் சில கலை, இலக்கிய, ஆளுமைகளை –  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உட்பட இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் பறிகொடுத்துவிட்டோம். இலட்சக்கணக்கான மக்களுடன் இவர்களும் சென்றுவிட்டனர்.

மேலும்  இலட்சக்கணக்கானோர்  இன்னமும் தொடர் சிகிச்சையிலிருக்கின்றனர்.  பலர்  இதிலிருந்து மீண்டும்  முற்றாக மீளமுடியாமல் தவிக்கின்றனர்.

க்ரியா இராமக்கிருஷ்ணன் மறைந்த செய்தி கேட்டதும் அதன் அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்காக அவருக்கான குறிப்பினை எழுதி,  அவரது ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது, சோவியத் நாட்டைச்சேர்ந்த மற்றும் ஒரு தமிழ் அபிமானி –  பாரதி இயல் ஆய்வாளர் பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி அவர்களையும் இந்த பாழாய்போன கொரோனா இழுத்துக்கொண்டு சென்றுள்ள செய்தி வந்தது.

இரவு உறக்கத்திற்குசெல்லும்போதும்,  காலையில் பொழுது விடியும்போதும்,  இந்த எதிரியின் அழைப்பில் எமனிடம் செல்பவர்களின் எண்ணிக்கையை கேட்டுக்கொண்டு வாழும் ஒரு அவல வாழ்க்கையை நாம் கடந்துகொண்டிருக்கின்றோம்.

பல வருடங்களுக்கு முன்னர் 1982 ஆம் ஆண்டு   எமது தாயகம் இலங்கைக்கு   அச்சமயம்  தமிழக அரசில் அமைச்சராக பதவியிலிருந்த நாவலர் நெடுஞ்செழியன்,  இலங்கை தமிழ்மொழி அமுலாக்கல் இந்து சமய விவகார அமைச்சர் செல்லையா இராசதுரையின் அழைப்பில் பாரதி நூற்றாண்டு விழாவுக்கு வருகை தந்து,  கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் உரையாற்றினார். அச்சமயம் இந்திய இசை மேதையும்  ஜெயகாந்தனின் நண்பருமான எம்.பி. ஶ்ரீநிவாசனும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த மேடையில் பேசிய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன்,  தமிழில்  “ சும்மா  “  என்ற சொல் அகராதியிலும் இல்லை. சும்மா இருக்கும் சோம்பேறிகளுக்காக  உருவாக்கப்பட்ட சொல்தான் இந்த சும்மா என்று சொன்னார்.

அந்த நிகழ்ச்சிக்குப்பின்னர் கொழும்பு பிறைட்டன் விடுதியில் நாம் இசையமைப்பாளர் எம்.பி. ஶ்ரீநிவாசனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, அமைச்சரின் அந்த சும்மா பற்றிய உரைகுறித்து  விமர்சித்துக்கொண்டோம்.

கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு மறைந்த நாவலர் நெடுஞ்செழியன்,  அவருக்கு அருகிலேயே வாழ்ந்த  க்ரியா இராமகிருஷ்ணன் 1992 இல் முதல் பதிப்பாக வெளியிட்ட க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை பார்த்துவிட்டுத்தான்  மறைந்தாரா..? என்பது எமக்குத் தெரியாது.

பத்மநாப அய்யர்

இலங்கையில் நான் வாழ்ந்த காலப்பகுதியில்,  எமது நண்பரும் தற்போது லண்டனில் வதிபவருமான பத்மாநாப அய்யர், எமக்கு அடிக்கடி சொல்லும் பெயர்தான் க்ரியா இராமகிருஷ்ணன்.  இலங்கை எழுத்தாளர்களுக்கும் தமிழக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்குமிடையில் பத்மநாப அய்யர் பாலமாகவே விளங்கியவர். அவரும் பல நூல்கள், மலர்களின் வெளியீடுகளில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.

 அதனால், மற்றும் ஒரு அர்ப்பணிப்பாளர்  க்ரியா இராமகிருஷ்ணன் பற்றி எம்மிடம் அவர்  விதந்து குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லை.

1970 இற்குப்பின்னர் இலங்கையில் நான் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில்,   பத்மநாப அய்யர்தான் எமக்கு   எழுத்து, கொல்லிப்பாவை, கசடதபற, வானம்பாடி, தீபம்  முதலான  தமிழக சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தினார்.

இவற்றில் கசடதபற இதழில் நா.கிருஷ்ணமூர்த்தி. கூத்துப்பட்டறை நா.முத்துசாமி ,  சா.கந்தசாமி ஆகியோருடன் பின்னாளில் இணைந்துகொண்டவராகத்தான் க்ரியா இராமகிருஷ்ணனைப்பற்றி அறிந்துகொண்டோம்.

தரமான படைப்புகளை பிரசுரிப்பதும் தரமற்ற படைப்புகளை விமர்சிப்பதும் கசடதபறவின் நோக்கமாக இருந்தது.  அக்காலப்பகுதியில் வெளியான ஜெயகாந்தனின் ஞானரதம் இதழில்தான் நாம் ஜி. நாகராஜனின் நாளை மற்றும் ஒரு நாளே நாவலையும் படித்தோம். அதனை தனி நூலக வெளியிடுவதற்கும் ஜெயகாந்தன் பல பதிப்பகங்களின்  வாசல்களையும் தட்டியிருக்கிறார்.

ஏனைய இதழ்களினால் புறக்கணிக்கப்பட்ட தரமான படைப்புகளை ஞானரதத்திற்கு தாருங்கள் என்றும் ஜெயகாந்தன் அச்சமயத்தில்  வெளிப்படையாக எழுதியிருந்தார்.

இக்காலப்பகுதியில் அதாவது 1974 இல் தமது முப்பது வயதில் க்ரியா பதிப்பகத்தினை இராமகிருஷ்ணன்  உருவாக்கியிருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.

அவுஸ்திரேலியா மெல்பனில் வாழ்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் சிட்னியில் தமது 98 வயதில் மறைந்த எழுத்தாளர் கலைஞர் கலைவளன் சிசுநாகேந்தின் தொகுத்து வெளியிட்ட பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதியின் வெளியீட்டு நிகழ்வில் நான் உரையாற்றும்போதும், க்ரியா இராமகிருஷ்ணன் பற்றித்தான் நினவுபடுத்திப் பேசியிருந்தேன்.

 அவர் விளம்பரத்துறை பணியிலிருந்து பதிப்புத்துறைக்கு வந்தவர். சிறந்த நூல்களை வெளியிடவேண்டும் என்பதில் இறுதிவரையில் மிகுந்த அக்கறையோடு இருந்தவர். ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும் பதிப்பித்தவர்.

பலருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு  விசேட குணாதிசயங்கள் வேண்டும்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்பு   பார்க்காமல், தன்முனைப்பு – மேலாதிக்க சிந்தனையற்றிருக்கவேண்டும்.  அத்துடன் பரந்த மனப்பான்மையும் வேண்டும்.  இந்த இயல்புகள் அனைத்தும் கொண்டிருந்தமையால்தான் க்ரியா இராமகிருஷ்ணன் அவர்களால் தற்காலத் தமிழ் அகராதியை வெளிக்கொணர முடிந்திருக்கிறது என நம்புகின்றேன்.

எமது மெல்பன் வாசகர் வட்டத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையினர் தமிழக வாசகர்கள்.  அவர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கின்ற பல வாசகர்களுக்கும்,  ஏன் பல  தமிழக எழுத்தாளர்களுக்கும் கூட ஈழத்தின் அன்றாட தமிழ் பேச்சுவழக்குகளின் அர்த்தம் தெரிவதில்லை.

குறிப்பாக படலை என்ற சொல்லுக்கு அர்த்தம் கேட்டவர் தமிழக இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜன். இது நடந்தது 1980 களில் .

கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு வேண்டும் என்றார். இது நடந்தது 1970 களில்.

1984 இல் தமிழக எழுத்தாளர் கி. ராஜநாராயணனை நான் அவரது இடைசெவல் கிராமத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்திற்கு யார் காரணம்..?  எனக்கேட்டதும், நான், அது  சிங்களக் காடையர் என்றேன்.

உடனே அவர், கொஞ்சம் பொறுங்கள் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்று,  ஒரு நோட்டுப்புத்தகம் எடுத்துவந்து,                                “ மீண்டும் சொல்லுங்கள்… அது என்ன காடையர்  … ? என்று கேட்டு அர்த்தம் அறிந்து குறித்துக்கொண்டார்.

பின்னாளில் கரிசல் வட்டார வழக்கு அகராதி என்ற நூலை அவர் தொகுத்து வெளியிட்டதை அறிவீர்கள்.

சொலவடைகள் என்ற பதத்தையும் அவர்  பாவித்திருக்கிறார்.

இந்த  பின்னணி நிலைமைகளில்  எங்கள் மெல்பனில் வதியும் தமிழக வாசகர்கள் படலை,  (  தட்டிக்கதவு ) பற்றை ( புதர் ) , சத்தி             ( வாந்தி ) முதலான சொற்களுக்கு அர்த்தம் கேட்பது அதிசயமான விடயம் அல்ல.

அவுஸ்திரேலியாவுக்கு  சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் தனது நான்கு வயதில் வந்த எனது மகனுக்கு சாவுக்கிராக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிகிறது.

 “ எங்கே தெரிந்துகொண்டாய்..?  “   எனக்கேட்டதற்கு,  தமிழ் சினிமாவில் என்றான்.  இந்த தமிழ் சினிமாதான் எமக்கு டுபாக்கூரு, கலாய்த்தல்  முதலான சொற்களையும் அறிமுகப்படுத்தியது. ஜெயமோகனும் இந்த டுபாக்கூரு என்ற சொல்லை தனது கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த சுவாரசியங்களின் பின்னணியில்தான் நாம் க்ரியா இராமகிருஷ்ணன் தனது நீண்ட கால உழைப்பில் எம்மிடம் விட்டுச்சென்றிருக்கும் தற்காலத் தமிழ் அகராதியை மதிப்பீடு செய்ய நேர்ந்திருக்கிறது.

இங்கு நான் குறிப்பிட்ட படலை, பற்றை, சாவுக்கிராக்கி , சும்மா, சத்தி  முதலான சொற்களுக்கும் இந்த அகராதியில் அர்த்தம் இருக்கிறது.

சும்மா என்று ஒரு சொல்லே அகராதியில் இல்லை என்றார் நாவலர் நெடுஞ்செழியன். ஆனால் சும்மா,   சும்மா வந்த சொல் அல்ல !  அதற்கு எட்டு அர்த்தங்கள் ஏற்கனவே இருக்கின்றன என்று  விளக்கமும் தந்திருக்கிறார் இராமகிருஷ்ணன்.

அத்துடன் ஆங்கிலத்திலும் மேலதிக விளக்கத்தை இவ்வாறு தருகிறார்:

Without any purpose or motive – Without having anything to do.  

க்ரியா இராமகிருஷ்ணன் அவர்களை ஒரு சிறந்த தீர்க்கதரிசி என்றும் சொல்லலாம். கி.வா. ஜகந்நாதன், போன்றவர்கள் எம்மிடமே அடிக்குறிப்பு கேட்டுக்கொண்டிருந்த பின்னணியில்,  ஈழத்து இலக்கியம் பத்தாண்டுகள் பின்னிற்கிறது என்று  தமிழக கங்கை இதழ் ஆசிரியர் பகீரதன் வந்து சொல்லிவிட்டுச்சென்ற கதைகளின் பின்னணியில், ஈழத்தவர்களும்  தமிழ் சார்ந்த பல முன்னோடியான பணிகளுக்கு காரணமாகத்திகழ்ந்தவர்கள் என்பதை நன்கு அறிந்தும், அடுத்தடுத்து  இலங்கையில் நிகழ்ந்த வன்முறைகளினால் மனித உயிர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரசித்திபெற்ற பெறுமதியான யாழ். பொது நூலகமும் தீய சக்திகளினால் தீ அரக்கனுக்கு பலியாக்கப்பட்டதையும் அறிந்தவர் அவர்.

  ஈழத்து தமிழ் மக்கள் அந்நியம் சென்றாலும் தமிழை தக்கவைப்பார்கள் என்பதையும் அறிந்திருந்தவர். அதனால்தான் தமது ஈழ  –  புகலிடத் தொடர்புகளின் ஊடாக எங்கள் இலங்கை பேராசிரியர் நண்பர் நுஃமான் அவர்களையும் இணைத்துக்கொண்டு, இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் முதலான தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் புழக்கத்திலிருக்கும் தமிழ்ச்சொற்களையும் பெற்று அவற்றுக்கான அர்த்தங்களை பதிவுசெய்வதிலும் தீவிர அக்கறை காண்பித்திருக்கிறார்.

தற்காலத் தமிழுக்கென்றே அவரால்  நீண்ட காலத்தேடலிலும் கூட்டு முயற்சியினாலும்  உருவாக்கப்பட்ட முதல் அகராதி  என்ற புகழையும் பெருமையையும் பெற்றுள்ள இந்த அகராதி,  தற்காலத் தமிழில் உள்ள சொற்களின் பொருளையும் விளக்கி, அவற்றுக்கு  உதாரணமான  வசனங்களையும்  ஆங்கில விளக்கங்களையும், அத்துடன் பொருத்தமான படங்கள் – கோட்டோவியங்களுடனும் விளக்கும் முதல் அகராதியாகவும் முதல் தரமான ஆவணமாகவும்  விளங்குகிறது.  

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் தமிழ்ச்சொற்களில் பேச்சுவழக்குகளில் நேர்ந்த மாற்றங்களையும் இதில் நாம் அவதானிக்கின்றோம்.

இதனை அவர் ஒரு தொழிலாகச்செய்யாமல்,  தவமாகவே அர்ப்பணிப்புடன் செய்தவர்.

இராமகிருஷ்ணன் அவர்களுக்கு இது விடயத்தில் தொடக்கத்தில்  நிதியுதவி வழங்குவதில் உந்துதலாக இருந்த க்ரியாவின் நிறுவனர்களில் ஒருவரான ஜெயா என்ற ஜெயலட்சுமி பற்றியும் அவர் நன்றிணர்வோடு பதிவுசெய்திருக்கும் தகவலை படிக்கும்போது நெகிழ்ந்துபோகின்றோம்.

அந்த ஜெயா,  தனது மரணத்திற்குப்பின்னர் தம்மிடமிருந்த சேமிப்பு முதலில் இந்த அகராதியின் வெளியீட்டுக்கே செல்லவேண்டும் என்று அதற்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டுத்தான் கண்களை மூடியிருக்கிறார்.  அதனால் இந்த அரிய ஆவணத்தை குறிப்பிட்ட ஜெயா என்ற ஜெயலட்சுமியின் நினைவுக்கே  இராமகிருஷ்ணன் சமர்ப்பணம் செய்துமிருக்கிறார்.

இத்தகவலை இங்கு நினைவுபடுத்தவேண்டிய தேவை இருப்பதனால் சொல்கின்றேன்.

இந்த அகராதியின் முதல் பதிப்பு வெளியான 1992 ஆம் ஆண்டு தமிழகத்தில்  பதவியில் இருந்தது  முத்தமிழ்  அறிஞர்,  கலைஞரின் ஆட்சி.  அவர்தான் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலையும் இயற்றி,  செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுத்தந்தவர்.

ஆனால், அன்றைய அவரது அரசின் நூலக ஆணையம் இந்த அரிய அகராதியை கண்டுகொள்ளவில்லை. இதன் வெளியீட்டுக்கு எங்கேயோ இருக்கும் அமெரிக்க ஃபோர்ட் பவுண்டேஷன் உதவி வழங்கியிருக்கிறது.

தமிழரல்லாத சிங்கப்பூர் அதிபர் லீகுவான்யூ அவர்களின் அரசு, சிங்கப்பூர் பொது நூலகம் உட்பட அனைத்து நூலகங்களுக்கும் அங்குள்ள பாடசாலைகளுக்கும் இதனை பரிந்துரைத்து கொள்வனவு செய்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இந்த அகராதியை தமிழகத்தின் ஒரு அரசியல் பிரமுகர் பரிசாகவும் அனுப்பியிருக்கிறார்.

க்ரியா இராமகிருஷ்ணனின் மறைவுக்குப்பின்னர்தான். இந்தச்செய்திகள் கசிந்திருக்கின்றன.

செம்மொழியான தமிழ் மொழியாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயா…?

க்ரியாவின் பிதா மகர்  மறைந்ததும் தமிழகத்  தலைவர்கள் முக்கியமாக தற்போதைய முதல்வர் முதல் எதிரணி தலைவர்கள் வரையில் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.  நடிகர் கமல்காசன் உட்பட.

அரசுகள் செய்திருக்கவேண்டிய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணையகம் செய்திருக்கவேண்டிய மகத்தான அரும்பணியை அயர்ச்சியின்றி செய்திருக்கும் இராமகிருஷ்ணன் அவர்கள் மூச்சுவிடத்திணறியபோதும், திருத்திய புதிய பதிப்பினை தந்துவிட்டுத்தான் விடைபெற்றிருக்கிறார்.

எனவே அவர் விட்டுசென்றிருப்பது இந்த அகராதியை  மாத்திரமல்ல, இனிமேலும் இந்தத் துறையில் ஈடுபட வேண்டியவர்கள் என்ன செய்யவேண்டும்…? எப்படிச்செய்யவேண்டும் !  என்ற செய்தியையும்தான்.

அவருடைய இந்த உழைப்பில்  பங்கேற்ற அகராதி உருவாக்கிய குழுவின் தலைவராக விளங்கிய பேராசிரியர் இ. அண்ணாமலை சொல்லியிருக்கும் கருத்துடன் எனது இரங்கலை நிறைவுசெய்கின்றேன்.   

“  அகராதியில் ஒரு சொல்லின் பழைய பொருள் அருகிப் புதிய பொருள் பெருகும் பதிவுகளும் உண்டு. தமிழ்மொழி வரலாற்றில் சொல் வளர்ச்சி போல், சொல்லின் பொருள் வளர்ச்சியும் முக்கியமானது. இதைப் பற்றிய ஆராய்ச்சி குறைவாகவே இருக்கிறது. சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் பொருள் வளர்ச்சி பற்றித் தெரிய வேண்டியது நிறைய இருக்கிறது.

தொண்டு என்ற சொல்லின் பழைய பொருள், கடவுள் காரியம், ஆண்டைக்குச் செய்யும் வேலை என்ற இரண்டு மட்டுமே. இந்தச் சொல்லின் இக்காலப் பொருள் அதன் நிலப் பிரபுத்துவப் பொருளிலிருந்து விலகி, பொதுநலச் சேவை என்னும் மதச் சார்பற்ற பொருளைப் பெற்றிருக்கிறது.

பேராசிரியர் அண்ணாமலை எம்மவர்களுக்கு சொல்லியிருக்கும் இக்கருத்திலிருந்து க்ரியா இராமகிருஷ்ணனின் அளப்பரிய மகத்தான  தொண்டையும்  இனம் காண முடிகிறது.

வாய்ப்புத் தந்த தம்பி கானா. பிரபாவுக்கும் மற்றும் அன்பர்களுக்கும் மனமார்ந்த  நன்றி. வணக்கம்.

—0—

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்தமிழை உலுக்கியது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *