கவரிமான் கணவரே !

This entry is part 7 of 10 in the series 22 நவம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா

(1997 இல் ஆனந்த   விகடனில் வந்தது. “வாழ்வே தவமாக…” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

      இப்படி ஓர் இக்கட்டு வருமென்று சாந்தி கனவு கூடக் கண்டதில்லை. திரைப்படங்களிலும், ஏட்டுக்கதைகளிலும் வரும் போக்கிரிகள் மெய்யான வாழ்க்கையிலும் உள்ளனர் என்பது அவளுக்குத் தெரியும்தானென்றாலும், அப்படி ஒரு பொல்லாதவன் தன் வாழ்க்கையிலேயே குறுக்கிட்ட போது அவளுக்கு நேர்ந்த அச்சத்தை விடவும் திகைப்பு அதிகமாக இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை!

      ஒரு முறை ஏதோ ஒரு கற்பனைக் கதையில் ஒரு மருத்துவரைப் பொல்லாதவனாக அதன் ஆசிரியர் சித்திரித்த போது மருத்துவர்களின் உலகம் பொங்கி எழுந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. கெட்டவர்களும், பிறரின் சங்கடங்களைக் காசாக்கப் பார்க்கும் நயவஞ்சகர்களும் எந்தத் தொழில் செய்பவர்களிடையேயும் தான் இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தொழிலாளியை ஒரு டாக்டராகவோ, ஆசிரியராகவோ ஓர் எழுத்தாளன் காட்டிவிட்டால் மட்டும் அவர்களுக்கு மூக்குக்கு மேல் சினம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறதே! என்னமோ அந்தத் தொழிலில் உள்ள அனைவருமே பத்தரைமாற்றுத் தங்கங்கள் என்பது போலவும், அவர்களில் அயோக்கியர்களே இல்லை என்பது போலவுமன்றோ துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்? ஆனால் இப்போது அவள் வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ள இக்கட்டுக்கு அவர்கள் என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்? அதிலும் நாலு பேரிடம் இப்படி ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது என்று சொல்லிக் கொள்ளும்படியான சங்கடமா அது? ‘அட, ஆண்டவனே! நான் எப்படி இதிலிருந்து மீண்டு வரப் போகிறேன்? ‘கணவனா, கற்பா’ என்று பட்டிமன்றம் வைக்கிற அளவிலான சிக்கலில் அல்லவா மாட்டிக்கொண்டுள்ளேன்? …’ – சாந்தியின் கண்கள் கலங்கிகொண்டே இருந்தன.

      புரண்டு படுத்துக் கண் விழித்துப் பார்த்த சிங்காரவேலு கன்னங்களில் உருண்டு விழத் தயாராக அவளின் இமை விளிம்புகளில் கண்ட கண்ணீரைக் கண்டதும் வாடிப் போனான்.

       “சாந்தி!” – மிக மெதுவாக ஒலித்த அவனது குரல் அவள் எண்ணங்களைக் கலைக்க, அவள் தன் விழிநீரைப் புடைவைத் தலைப்பால் ஒற்றித் துடைத்துக்கொண்டாள்.

      அவன் தன் கையை நீட்டி அவளது தொடையைத் தொட்டான்.

       “கடவுள் அருளால் எல்லாம் சரியாயிடும், சாந்தி! அதான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொன்னயில்ல? அழுவாதே. நான் பிழைச்சு வந்ததும், என் சக்திக்கு ஏத்த ஏதாச்சும் அலட்டிக்க வேண்டாத வேலை பண்ணிச் சம்பாதிச்சுக் கடன் மொத்தத்தையும் அடைச்சுடலாம், சாரந்தி! ஏதோ, இந்த மட்டும் பணம் கிடைச்சுதேன்னு சந்தோஷப்படுவியா? அதை விட்டுட்டு இப்படிக் கண்ணீரும் கம்பலையுமா உக்காந்துட்டிருக்கியே?”

      சாந்தி பதில் சொல்லாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளால் அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க இயலவில்லை. இனி, வெந்து மடிகிற வரையில் அவன் விழிகளைக் குற்ற உணர்வின்றித் தன்னால் சந்திக்கவே முடியாது என்று தோன்றியதில் அவள் விழிகளில் மறுபடியும் ஈரம் படர்ந்தது.

       “நீ அழுதா என்னால தாங்க முடியாதுன்னு தெரியுமில்ல? அதான் பணம் கிடைச்சிடுச்சே? முந்தாநாள் வரையில நாம ரெண்டு பேரும் எவ்வளவு டென்ஷன்ல இருந்தோம்!  அந்த டென்ஷன் இப்ப இல்லேல்ல? அதை நினைச்சுப் பாரு. பணத்தை எப்படியாச்சும் திருப்பிக் கட்டிடலாம். ஆபரேஷன் முடிஞ்சதும் மொத வேலையா நானே உங்க மேனேஜரை வந்து பார்த்துப் பேசறேன். … எப்படியாச்சும் கடனைத் திருப்பிக் கொடுத்துடுவோம்னு நானும் அவரைச் சந்திச்சுச் சொன்னா அவருக்கும் நம்ம மேல ஒரு நம்பிக்கை விழுமில்ல?”

      சாந்தியின்முகம் கணத்துள் வெளிறிவிட்டது. “வேணாங்க. நீங்க ஒண்ணும் அவரை எல்லாம் வந்து பார்த்துப் பேச வேணாம். அதான் என்னோட சம்பளத்துல கழிச்சுக்கறேன்னிருக்காரில்ல? மொத்தமாக் கொடுக்கறதுன்னா நீங்க வந்து அவரு கிட்ட கெஞ்சணும். அதெல்லாம் வேணாம்!” – அவளது படபடப்பும், சொற்கள் ஒன்றன் மீதொன்று வந்து விழுந்த வேகமும் சிங்காரவேலுவின் புருவங்களை உயர்த்தின. ‘எதற்காக இவள் இவ்வளவு படபடக்கிறாள்?’

       “எதுக்கு, சாந்தி, படபடங்குறே? சம்பளத்துல பெருந்தொகையாப் பிடிச்சுட்டா என்ன செய்யிறதுன்னு கவலைப்பட்றியா? அதை அப்ப பார்த்துக்கலாம்…”

       சாந்தி  இதற்கும் பதில் சொல்லாதிருந்தாள்.

       “முக்கியமா அதுக்குத்தான் நான் உங்க மேனேஜரைப் பார்த்துப் பேசறேன்கறேன். அவருக்கு தாங்க்ஸ் சொன்ன மாதிரியும் இருக்கும். அப்படியே, பெருந்தொகையா பிடிக்காதீங்கன்னும் கேட்டுப்பேன்.”

       “அதெல்லாம் வேணாங்க. அப்புறம் புருஷனைப் பிச்சைக்காரன் மாதிரி அனுப்பி வெச்சிருக்கான்னு எங்க கம்பெனி முழுக்கப் பேசுவாங்க. தயவு செஞ்சு அது மட்டும் வேணாம்…”

       “உன்னிஷ்டம்.”

       ‘கடவுளே! இவர் எங்க கம்பெனிக்கு வந்து தொலைக்காம இருக்கணுமே! மேனேஜர் கிட்ட ஒரு வார்த்தை எதுக்கும் முன் கூட்டி சொல்லி வெச்சுடலாமா? கம்பெனியிலதான் இருபத்தஞ்சாயிரம் போலக் கடன் வாங்கியிருக்கிறதா புருஷன் கிட்ட சொல்லியிருக்கேன். அவரு வந்து கேட்டாருன்னா ஆமான்னு சொல்லிடுங்கன்னு முத காரியமா சொல்லி வெச்சுடணும்… ஆனா அந்த மேனேஜர் என்னைப் பத்தி என்ன நினைப்பாரு? நியாயமான வழியில புரட்டின பணமாயிருந்தா புருஷன்காரன் கிட்ட எதுக்குப் பொய் சொன்னணும்கிற சந்தேகம் அவருக்கு வருமே? வந்தா என்னவெல்லாம் கற்பனை பண்ணுவாரோ? …’

       “என்ன சாந்தி இது? முந்தாநாள்லேருந்து நேத்து சாயந்தரம் வரைக்கும் சிரிச்சுக்கிட்டே எனக்குத் தைரியம் சொல்லிட்டிருந்த நீ இப்படி திடீர்னு முகம் கறுத்துப் போய் உக்காந்திருக்கியே? திடீர்னு உன் முகம் இப்படிக் கறுத்துக் கிடக்குதே?”  

      சிங்காரவேலு தன்னை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது விழிகளை உயர்த்திப் பார்க்காமலே புரிய, சாந்தியின் இதயம் மேலும் படபடப்புக்கொண்டு தாளந்தப்பித் துடிக்கலாயிற்று. தொண்டைக் குமிழ் ஏறி இறங்குவதைத் தடுத்துச் சமாளிக்க முடியவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு ஒரு வழியாய் வாய்திறந்தாள்.

       “என்னங்க, இப்படிக் கேக்கறீங்க? எவ்வளவு பெரிய ஆபரேஷன் இது! டாக்டர் என்னதான் தைரியம் சொன்னாலும், அது முடிஞ்சு நீங்க வீடு திரும்புற வரையில எனக்கு ஏதுங்க நிம்மதி?”

       ‘அதற்குப் பிறகும் நிம்மதிக் குறைவு இருக்காது என்பதுதான் என்ன நிச்சயம்?  ராஜேஷ்குமாரின் கதையில் வருவது மாதிரி அந்தப் பொறுக்கி டாக்டர் என்னை நிரந்தரமாகத் தொந்தரவு செய்ய மாட்டான் என்று எப்படி நம்புவது? … ‘உன் கணவரோடு நீ வீட்டுக்குப் போன பிறகு நீ யாரோ, நான் யாரோ?’ என்று அவன் வாக்குக் கொடுத்திருக்கிறான் தானென்றாலும், கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்ளுவான் என்பதுதான்  என்ன நிச்சயம்? அட, கடவுளே!’

அவள் முகம் மேலும் இருண்டதைக் கவனித்த சிங்காரவேலு, இன்னும் அதிகமான ஆதரவுடன் அவள் தொடையில் தனது கையை அழுத்த, சாந்தியின் துயரம் தீவிரமுற்றது. அவள் சட்டென்று நொறுங்கிப் போய் அழத் தொடங்கினாள். ‘தன்னுடைய உறவைத் தொடர்வதற்காக அந்தப் பொறுக்கி டாக்டர் இவருடைய் நர்சின் ஹோம் தங்குதலை நீட்டிப்பானோ? கடவுளே! இவருக்குத் தெரிய வந்தால் … ?’

அப்போது அவ்வறையின் கதவு தள்ளப்பட்டு உள்ளே டாக்டர் பலராமன், தாதிப்பெண் பின் தொடர வந்து, “என்ன, மிஸ்டர் சிங்காரவேலு?  ராத்திரி நல்லாத் தூங்கினீங்கல்ல?” என்று விசாரித்தவாறு சாந்தியை ஓரத்து விழிகளால் ஏறிட்டார். சாந்தி மரியாதைக்காக எழுந்து நின்றாள்.

 “சிட் டவுன், மை கேர்ள்!” என்ற பலராமன் அன்பு தெரிய அவள் தோளில் தட்டினார். அந்தத் தட்டல் அளவுக்கு மீறிய அழுத்தத்துடன் இருந்தது.  முந்திய இரவை ஞாபகப்படுத்தும் அசிங்கம் அந்த அழுத்தமான தொடுகையில் வெளிப்பட்டது அவளுக்கு மட்டுமே புரிய சாந்தியின் முகம் சிறுத்தது.  நாற்பத்தைந்து வயதை விழுங்கிய சாக்கில், ஒரு தந்தை மகளைத் தொடுவதாக நாலு பேரை நினைக்க வைக்கும் தொடுகையாக அது தோன்றினாலும் – அவள் கணவனும் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டானென்றாலும் – அவருக்கும் அவளுக்கும் மட்டுமே புரிந்த விரசம் அவளுள் தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்தியது.

 நாடி, மார்புத் துடிப்பு இரண்டையும் பார்த்துச் சில கேள்விகள் கேட்டதன் பிறகு. “நாளைக்கு வச்சுக்கலாமா?!” என்றவாறு பலராமன் திரும்பி சாந்தியை ஒரு பார்வை பார்த்தார். சாந்தியின் உதடுகள் துடித்தன. ‘கடவுளே! என்னை ஏன் படைத்தாய்? என்ன மோசமான இக்கட்டு இது …இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டுக்கொள்ளுவது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்! நடந்தது தெரிந்தால்? ….இவர் என்ன சொல்லுவார்? இவருக்குத் தெரியத்தான் வேண்டுமா? …’

 “என்னம்மா, ஒரு மாதிரி இடிஞ்சு போய் நிக்கிறே? இதைவிடப் பெரிய பெரிய ஆபரேஷனெல்லாம் செஞ்சிருக்கேன். இது சுண்டைக்காய் ஆபரேஷன். ஒண்ணும் பயப்படாதே! எல்லாம் சரியாயிடும். … கொழந்தையை உங்கம்மா கிட்ட விட்டிருக்கேன்னு சொன்னயில்ல? அது படுத்தாம இருக்குதாமா?”

 “ …ம் …” என்று சாந்தியிடமிருந்து ஒரு முனகலே பதிலாக வந்தது.

 அந்த மலர்ச்சியற்ற முகத்தில் ஒரு மரியாதைக்குறைவும் அலட்சியமும் தென்பட்டதாகத் தோன்றியதில் சிங்காரவேலு அவளை வியப்புடன் பார்த்தான். ‘என்ன ஆயிற்று இவளுக்கு? மனத்துள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இப்படியா வேண்டாவெறுப்பாகப் பேசுகிற தொனியில் பதில் சொல்லுவது? டாக்டர் எவ்வளவு கவலைப்பட்டு விசாரிக்கிறார்!’

 ‘… குழந்தையை உத்தேசித்துத் தானே உன் அக்கிரமச் செயலுக்கு உடன்பட்டேன்! அதிலும் மூன்று வயதுப் பெண்  குழந்தை! பையனாக இருந்தால், இப்படி உன் அயோக்கியத்தனத்துக்கு உடன்பட்டதற்குத் தற்கொலை செய்துகொள்ளுவேன் – இவரை வீட்டுக்குக் கொண்டு போன பிறகு … பெண் குழந்தையாக இருப்பதால் என்னால் அதைச் செய்ய முடியாது… இது மாதிரியான சங்கட நிலைகளைத்தானே உன்னைப் போன்ற நரிகள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்!’  

 “கவலைப்படாதே, மை கேர்ள்!” என்று மறுபடியும் டாக்டர் பலராமன் செய்த அந்தச் சொற்பிரயோகம் அவளுள் மேலும் ஆத்திரத்தைக் கிளர்த்தியது. ‘ …. மை கேர்ள்! … தகப்பனுக்கு ஆகிற வயதைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் போர்வையில் இப்படி எல்லாம் அக்கிரமம் புரியும் அநியாயக்காரர்கள்! …. ‘மை கேர்ள்!’ அதுதான் நேற்று ஆக்கிக்கொண்டுவிட்டாயேடா, பாவி!’

சில மருந்துகளை எழுதிக்கொடுத்த பிறகு பலராமன் யாரும் அறியாமல் அவளைப் பார்த்து ஒரு நமட்டுப் புன்னகை புரிந்துவிட்டு வெளியேறினார். அந்தப் புன்னகைக்குப் பின்னால் புலப்பட்ட அசிங்கங்கள் அவள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டின.

கதவு மூடிக்கொண்ட பிறகு, “என்ன சாந்தி இது? நம்ம மனசுல ஆயிரம் கவலைகள் இருக்கும். அதுக்காக டாக்டர் கிட்ட ஏனோதானோன்னு இருக்கணுமா? எவ்வளவு அக்கறையா விசாரிச்சாரு!  என்னமோ, வேண்டா வெறுப்பா உம்னு முனகினியே? அவரு என்ன நினைச்சுப்பாரு?” என்ற சிங்காரவேலு, அவள் பதில் சொல்லாதிருக்கவே, “பணத்தையெல்லாம் பத்திரமா வெச்சிருக்கியில்ல?” என்றான்.

 “நகைகளை அடகு வெச்சதுல ஒரு இருபத்தஞ்சு, கம்பெனியில கடன் வாங்கினதுல ஒரு இருபத்தஞ்சு … அம்பதுல முப்பதை நர்சிங் ஹோம்ல கட்டியாச்சு. மீதி இருபதை ஆபரேஷன் முடிஞ்சதும் கட்டச் சொல்லியிருக்காங்க…”

       “எவ்வளவு நல்ல டாக்டர்! லட்சம் வாங்கற ஆபரேஷனுக்கு அம்பதாயிரம் குறைச்சு வாங்கிக்கிறாருன்னா எப்பேர்ப்பட்ட இரக்க சுபாவம் உள்ளவரு! கடவுள் அவரை நல்லா வைக்கட்டும்! …”

       ‘மூஞ்சி! மீதிப் பணதுதுக்குப் பதிலா நான் கொடுத்த விலை தெரியுமா உங்களுக்கு? தெரிஞ்சா என்ன பாடு படுவீங்க!’ – சாந்தி மறுபடியும் பொங்கிய கண்ணீரை உள்வாங்க முயன்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டு கைப்பையில் எதையோ தேடினாள்…

      … அறுவைச் சிகிச்சை முடிந்து சிங்காரவேலு வீடு திரும்பியாகிவிட்டது. இரண்டு நாள்கள் போல் அவனுக்குப் பணிவிடை செய்தபின் அரை மனத்துடன் சாந்தி அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போனாள். அவர்கள் இருந்தது ஒண்டுக்குடித்தனமாதலால், பக்கத்துக் குடித்தனக்காரர்களிடம் கணவனைக் கொஞ்சம் அவ்வப்போது எட்டிப்பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந்தாள். கடந்த ஓராண்டுக்காலமாக நிறைய விடுப்பு எடுத்துவிட்டதால், இனிமேலும் விடுப்பில் இருந்தால் சம்பள இழப்பு என்னும் நிலை. இதனால் அவள் போயே ஆகவேண்டிய கட்டாயம். குழந்தையை அவள் அம்மா – அமிஞ்சிக்கரையில் இருந்தவர் – பார்த்துக்கொண்டார்.  …

      அன்று பிற்பகலே அவளுக்கு டாக்டர் பலராமனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. சாப்பாட்டு வேளையாகப் பார்த்துப் பேசியது திட்டமிட்ட செயல் என்று தோன்றியது.  ‘பக்கத்துல யாரும் இல்லியே?’ என்பதுதான் அவர் கேட்ட முதல் கேள்வி. ‘இருக்காங்க’ என்று பொய் சொல்லத்தான் முதலில் எண்ணினாள். ஆனால் அழைப்புத் தொடரும். எனவே, அதற்கு முடிவுகட்டும் நினைப்புடன், “யாருமில்லே. சொல்லுங்க,” என்றாள்.

       அது இணைப்பகத்தின் மூலமாக வராத நேரடித் தொலைப்பேசி அழைப்பு. எனவே, துணிச்சலுடன், “உன் நெனப்பாவே இருக்கு, சாந்தி! மறுபடியும் எப்ப …?” என்றார்.

      நோய்வாய்ப்பட்ட கணவனைக் காப்பாற்றுவதற்காகத் தன்னை அந்த டாக்டருக்கு விலையாகக் கொடுத்திருந்த சாந்திக்கு இப்போதைய அவரது பேச்சு அருவருப்பைத் தந்தது. உடம்பு முழுவதும் கரப்பான் பூச்சிகள் மேய்வது போன்ற வெறுப்புச் சிலிர்ப்பில் அவளது உடல் அதிர்ந்தது. என்னென்னமோ சொல்லித் திட்ட நினைத்தாலும், வாயிலிருந்து ஒரு சொல் கூட உதிரவில்லை. அப்படியே உட்கார்ந்துபோனாள்.

       “என்ன, பேசாம இருக்கே? மவுனம் சம்மதம்னு வச்சுக்கலாமா?”

      சாந்தி சுதாரித்தாள் “இத பாருங்க! எங்க வீட்டுக்காரருக்குத் தெரிய வந்தா உங்க உசிரு உங்களுது இல்லே. எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல எவனோ ஒரு தெருப்பொறுக்கி எம்மேல இடிச்சதுக்காகக் கையிலிருந்த பேனாக்கத்தியால அவனைக் குத்திட்டு ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்தவரு! அவரோட எதுவும் வச்சுக்கிறது உங்களுக்கு நல்லதில்லே!” – சொன்னது பொய்யானதால் அவளுள் ஒரு நடுக்கம் பரவியது.

       “நான் வச்சுக்க நினைக்கிறதெல்லாம் உன்னோடதானே!”

       “சீ! பொறுக்கி! வைடா!”

       நெற்றியில் துளித்திருந்த வேர்வையைக் கையால் தேய்த்தவாறு அவள் தொலைப்பேசித் தொடர்பைத் துண்டித்தாள். அவள் கால்கள் தரையில் பாவாது அதிர்ந்துகொண்டிருந்தன.

       தொலைப்பேசி மறுபடியும் கூப்பிட்டது. எரிச்சலுடன் எடுத்து, “யெஸ்?” என்றாள்.

       “என்னம்மா அவ்வளவு கோவம் உனக்கு! நீ சொல்ற நாள், இடத்துல …”

       “நோ! என் புருஷன் உசிருக்குப பணயமா நீங்க கேட்டதை நான் குடுத்தாச்சு. இனி அது நடக்காது. நானே அவர் கிட்ட சொல்லிடப் போறேன். இவ்வளவு பெரிய சுமையை மனசுல வச்சுக்கிட்டு இனிமே என்னால நிம்மதியா வாழ முடியாது. அதனால எனக்கு என்ன ஆனாலும் சரி. ஆனா எம் புருஷன் ஒரு கிரிமினல்ங்கிறது மட்டும் ஞாபகம் இருக்கட்டும். உங்க உசிரோட விளையாடாதீங்க!”

      மறு முனை மறு கணமே மவுனமாயிற்று. இரண்டு கணங்கள் கழிந்த பின் ஒலிவாங்கி கிடத்தப்பட்ட ஓசை கேட்க, ‘நம்பிட்டான்னு தோணுது’ என்று எண்ணியபடி சாந்தி இருக்கையில் சாய்ந்தாள்.

      எழுதிக் கொடுக்கப்பட்ட மாத்திரையை நாள்தோறும் மூன்று வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டு வருமாறும், நெஞ்சுவலி வந்தால் மட்டும் திரும்பி வந்தால் போதுமானது என்றும் சொல்லப்பட்டிருந்ததால், சாந்தி கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.  அப்படி நேர்ந்தாலும், சிங்காரவேலுவை வேறு டாக்டரிடம் கூட்டிப் போகவேண்டியதுதான் என்றும் முடிவு செய்தாள்.  ஏற்கெனவே மருத்துவம் செய்த டாக்டர்தான் பார்க்கவேண்டும் என்று கணவன் பிடிவாதம் செய்தால் என்ன காரணத்தைச் சொல்லுவது என்று திகைத்தாள்.

       … “என்ன விஷயம், சாந்தி? இப்பல்லாம் நீ பழைய மலர்ச்சியோடவே இல்லே.  சாகக்கிடந்த புருஷன் பொழைச்சு வந்ததுல எந்தப் பொண்ணுக்கும் இயற்கையா வர்ற வேண்டிய சந்தோஷம் உங்கிட்ட இல்லாத மாதிரி தெரியுது. ஏதோ பிரச்சினையில மாட்டிக்கிட்டு நீ தவிக்கிற மாதிரி தெரியுது! … டாக்டர் வெச்ச கெடு இன்னும் ஒரு வாரத்துல முடியப் போகுது. அதுக்குப் பெறகு …” என்று தொடங்கியதை முடிக்காமல் அவன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

      ஒரு திடீர் உந்துதலில், “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுங்க. நீங்க எப்படி எடுத்துப்பீங்களோ? ஆனாலும் எனக்கு ஒரே உறுத்தலா யிருக்கு. என்னைக்காவது சொல்லிடுவேன். அதை இன்னைக்கே சொல்லிடலாம்னு …” என்றாள்.

       “என்ன, சாந்தி?”

       “இத்தனை நாளும் நான் உங்க கிட்ட மறைச்சதே தப்புத்தான். ஆனா உங்க உடம்பு தேறணும்னு தோணிச்சு. அதான் ஒத்திப் போட்டுக்கிட்டே வந்தேன்…”

       கண்கள் நிறைய கண்ணீருடன் அவள் அவனை நோக்கினாள். ‘அழும்போது கூட இவள் எவ்வளவு அழகு!’ எனும் பிரமிப்புடன் அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

       “பீடிகையைக் கேட்டா விஷயம் ஏதோ ரொம்பப் பெரிசா இருக்கும் போல இருக்கே?  ஆனா  எதுக்கு இப்ப அழறே? என்னதான்  நடந்திச்சு? நர்சிங் ஹோம்ல என்னைச் சேர்ந்ததுலேருந்தே நீ சரியா இல்லே …”

       “நீங்க நினைக்கிறது சரிதாங்க!” என்ற சாந்தி திக்கித் திணறி நடந்ததைச் சொல்லி முடித்தாள்.  சொல்லி முடித்த பின், “எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல்லீங்க. கம்பெனியில கடன் தர மாட்டேன்னுட்டாங்க. நஷ்டத்துல ஓடிக்கிட்டிருக்குன்னு கையை விரிச்சுட்டாங்க. கொஞ்சம் ரேட்டைக் குறைச்சுக்கிட்டு தர்ம காரியமா நினைச்சு உதவுங்கன்னு கேட்டதுக்குத்தான் அந்தப் பாவி நீங்க நர்சிங் ஹோமை விட்டுப் போகிற வரையில … அவனோட இஷ்டத்துக்கு இணங்கணும்னுட்டான் … உங்க உசிரு எனக்குப் பெரிசாத் தெரிஞ்சிச்சு … அதனால  …”

       “அடிப்பாவி!”

       “பாவிதாங்க! நான் அதுக்கு இணங்கலைன்னா நீங்க செத்துடுவீங்க. எல்லாத்தையும் விட நீங்க எனக்குப் பெரிசாத் தெரிஞ்சீங்க!”

       “அதுக்காக?”

       “உங்க மேல உள்ள பிரியத்தால அதுக்கு மனசே இல்லாம ஒத்துக்கிட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு வேற எந்த வழியும் தெரியல்லே.”

       கண்ணீரூடே அவள் பார்த்த சிங்காரவேலு முற்றும் புதிய ஆளாய்த் தெரிந்தான். அவன் முகம் கறுத்துச் சுருங்கி இருந்தது. கண்களில் வெறுப்புத் தெரிந்தது.

       “ரொம்ப சரி.  நீ பண்ணினது சரின்னே வச்சுக்குவோம். ஆனா, என்னைக் காப்பாத்தினதுக்குப் பெறகு, நீ ஒரு மானமுள்ள பொம்பளையா இருந்தா, உசிரை விட்டிருக்க வேணாமாடி? எவ்வளவு கிரிசை கெட்ட – மானங்கெட்ட – பொம்பளையா யிருந்தா இப்படி எதுவும் நடக்காதது மாதிரி வளைய வந்துக்கிட்டிருப்பே? ஏண்டி …”

       சாந்தியை அவன் “டீ” போட்டுப் பேசியதே இல்லை. அவளுக்கு அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. அவளைக் காதலித்துக் கைப்பிடித்தவன். ‘கடைசியில் இந்த மனிதர் காதலித்தது இந்த வெற்று உடம்பைத்தானா!’

       “என்னடி அப்படிக் கண்கொட்டாம முழிக்கிறே? செய்யக்கூடததைச் செஞ்சே. சரி. போகுது. அதுக்கு அப்புறமாவது நீ உசிரை விட்டிருக்கணுமில்ல? ஒரு பொண்ணுக்கு மானந்தாண்டி பெரிசாத் தோணணும். மத்ததெல்லாம் அப்புறந்தான். இந்த மாதிரி மானத்தை வித்துட்டு உசிரை வெச்சுக்கிட்டிருக்கிறதை விட விஷத்தைக் குடிச்சுட்டு சாகலாம்டி!”

        “எனக்குப் பெறகு உங்களைக் கவனிக்க யாரும் இல்லைங்கிறது ஒரு காரணம். நம்ம மூணு வயசுக் கொழந்தை பத்தின கவலை. இந்த ரெண்டும் இல்லாம இருந்திருந்தா, உங்களைக் காப்பாத்தினதும் நான் உசிரை விட்டிருப்பேன்!”

       “அதெல்லாம் வீண் பேச்சு.  நீ ஒரு மானங்கெட்டவதான்! இப்படிப் பண்ணினது எந்தக் காரணத்துக்காக இருந்தாலும், இது மானங்கெட்ட காரியந்தான்!’

       சாந்தி விருட்டென்று எழுந்து உள்ளே போனாள். இரண்டே நிமிடங்களில் திரும்பிய அவள் கையில் மூட்டைப்பூச்சி மந்ருதுக் குப்பி இருந்தது. அதை அவள் அவன் கட்டிலுக்கு அருகே இருந்த குட்டி மேசை மீது  வைத்தாள்.

       அவன் அதிர்ந்து போய் அவளையும் அந்தக் குப்பியையும் மாறி மாறிப் பார்த்தான்.

       “என்ன பார்க்கிறீங்க? கொண்டு வந்தது உங்களுக்குத்தான்! குடிங்க! பொண்டாட்டி தன்னோட மானத்தை வித்துப் புருஷனைக் காப்பாத்தினது மானங்கெட்ட செயல், அதுக்காக அவ உசிரை விட்டுடணும்கிறது சரின்னா, பொண்டாட்டி தன்னோட மானத்தை வித்துக் கொண்டுவந்த பணத்துல உசிர் பொழைச்சு வாழ்ந்துக்கிட்டிருக்கிறது அதை விடவும் பெரிய மானங்கெட்ட செயல் இல்லியா?”    

…….

Series Navigationகவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்நட்பு என்றால்?
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *