21.11.2020
அழகியசிங்கர்
டாக்டர் சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை. இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
ரெங்கசாமி என்பவர் உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்கடர் (போதகர்). அவர் வருஷாந்திர கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி – சுலோசனா நாடகம்.
ரெங்கசாமி கூற்றாக இந்தக் கதை சொல்லப்படுகிறது.
இந்த நாடகம் அரங்கேறிய அன்று சபேசய்யர் சுலோசனையாகவும், குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள். நாடகம் மெதுவாக நகர்ந்தது. லீலாவதி தன் தங்கைக்குபாலில் விஷம் கொடுக்கும் கட்டம். சகோதரி கொடுத்த பாலை குடித்துவிட்டு, மரணத்தின் இன்பத்தைப் பற்றிப் பாடிக்கொண்டே, பக்கத்தில் அலங்கரித்திருந்த மஞ்சத்தில் போய் ஒய்யாரமாகப் படுத்தாள்.
அந்தக் காட்சியின் அகப் பதைப்பை எடுத்துக் காட்டுவதுபோல நாடக மேடையை இருள் நிறைந்ததாகச் செய்திருந்தார்கள். சுலோசனை படுக்கையில் சாய்ந்தவுடன் அந்தப் படுக்கையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகள் மின்னல் தோன்றி மறைவதுபோல இரண்டு வினாடிகள் எரிந்து அவிந்தன. திரையும் விடப்பட்டது.
முதல் வரிசையில் டாக்டர் சம்பத் பக்கத்தில் ரெங்கசாமியும் அமர்ந்திருக்கிறார். திரை திரும்பவும் தூக்குவதற்குத் தாமதம் ஆகிறது. அவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணம் என்று பார்த்து வர ரெங்கசாமி எழுந்து கொள்கிறார்.
அப்போது ஸ்டேஜ் மானேஜர் திரு ராமானுஜம் திரையிலிருந்து வெளிப்பட்டு அரங்கத்திலிருந்து இறங்கி இவர்கள் பக்கம் வருகிறார். அவர் முகம் வெளுத்து வியர்த்திருந்தது. டாக்டர் சம்பத்திடன் வந்து ரகசியமாக ஏதோ சொல்கிறார்.
அவசரம் அவசரமாக டாக்டர் சம்பத்தும் ரெங்கசாமியும் நாடகம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அன்று நாடகத்திற்காக விசேஷமாக வந்திருந்த டிப்டி கமிஷனரும் கூடவே வந்தார்.
அங்கே ஒரு புறத்தில் எவெக்டிரிக் வெளிச்சத்தில் கோரமான தேற்றத்துடன் முகத்தை வலித்துக்கொண்டு, சுலோசனா வேஷத்தில் சபேசய்யர் இறந்து கிடந்தார்.
டாக்டர் இங்கே பாருங்களேன். மாரடைப்பால் இறந்து விட்டார் சபேசய்யர் என்று சத்தம் போட்டார் ராமானுஜம்.
டாக்டர் அவரைச் சோதித்துவிட்டு, மாரடைப்புமில்லை ஒன்றுமில்லை ஏதோ விஷத்தினால் இறந்து விட்டார், என்றார். லி
டிப்டி கமிஷனர் நாடகம் பார்க்க வந்திருந்த கும்பலை நாடகம் இனிமேலில்லை அமைதியாக போகும்படியும், சுலோசனா வேஷம்போட்ட சபேசய்யருக்கு உடல் நலம் சரி இல்லை என்றும் கூறி துரத்தி விட்டார்.
இப்போது இது கொலையாக இருக்கலாமென்று அந்தக் கொலை எப்படி நடந்திருக்குமென்றும் ஆராய்ச்சியில் இந்தக் கதை போய்க் கொண்டிருக்கிறது.
அதுவரை அந்தக் கோரச் சம்பவத்தினால் திடுக்கிட்டு மூலைக்கொருவராக ஒடுங்கி நின்றுகொண்டிருந்த நடிகர்கள் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டனர். டாக்டர் சம்பத், அவருக்குப் பால் கொடுக்கப்பட்ட டம்ளர் எங்கே என்று கேட்கிறார்.
பதட்டத்துடன் இருந்த குற்றாலம் பிள்ளை, “அதை இப்போதுதான் அலம்பி கொட்டிவிடடுத் தண்ணீர் குடித்தேன்,” என்கிறார்.
“எங்கே கொட்டினீர்கள்?” என்று டாக்டர் கேட்க, ஒரு மூலையைக்
காட்டினார் குற்றாலம் பிள்ளை. டாக்டர் அந்த இடத்திற்குப் போய் அந்த இடத்தை ஆராய்கிறார்.
“அந்தக் கூஜாப் பாலில் சர்க்கரை போட்டிருக்கிறதா?” என்று ராமானுஜத்திடம் கேட்கிறார் டாக்டர்.
“ஆமாம். போட்டிருந்தது,” என்று பதில் வருகிறது.
நடேசன் என்பவன் காலானாவிற்கு கடையிலிருந்து சர்க்கரை வாங்கிக் கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டான்.
“சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்குமா?” என்று கேட்கிறார் டாக்டர்.
நடிகர்களிடையே ஒருவர், “இதோ இருக்கிறது,” என்று சர்க்கரை வாங்கிவந்த காகிதத் துண்டை கொடுத்தார்.
“என் வேலை முடிந்து விட்டது. நாளை ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனையின்போது பார்த்துக்கொள்கிறேன்,” என்கிறார் டாக்டர். சபேசய்யர்
“விஷத்தினால் இறந்திருக்கிறார் செம்பிலுள்ள பாலில் விஷம் இல்லை. அவர் குடித்த பாலில்தான் இருக்திருக்க வேண்டும்.,” என்கிறார் .
இது விஷயமாக இருவர் கைதி செய்யப்படுகிறார்கள். ஒருவர் குற்றாலம் பிள்ளை, இரண்டாவது வேலையாள் நடேசன். உண்மையிலே குற்றாலத்திற்கும் சபேசய்யருக்கும் தொழில் முறையில் போட்டியுண்டு. இருவரும் போலீசு கோர்ட்டில் பிரபல வக்கீல்கள் போன வருடம் குற்றாலப்பிள்ளைக்குக் கிடைக்க வேண்டிய பப்ளிக் பிராசிகூட்டர் வேலை சபேசய்யர்ரால் கிடைக்காமல் போய்விட்டது.
மறுநாள் ரெங்கசாமி ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர் சம்பத்தையும், ஜெனரல் டாக்டர் ஒருவரையும் பார்க்கிறார்.
ரங்கசாமியைப் பார்த்து டாக்டர் சம்பத் சொல்கிறார், அவர்களுக்கே தெரியவில்லையாம் அவர் எப்படி இறந்தாரென்று. அவருடைய முகத்து நரம்புகளும், கழுத்து நரம்புகளும் ஏதோ கொடிய வலிப்பு நோயால் இறந்திருப்பதாகக் காட்டுகின்றன என்றார் டாக்டர் சம்பத்.
அங்கிருந்து டாக்டரும், ரெங்கசாமியும் நாடகக் கொட்டைக்குப் போனார்கள்.
அவர்கள் கொட்டகை வாசலையடையும் சமயம், அருகில் வலது கைப்புறத்திலிருந்த டிக்கட் அறையில் யாரோ ஒருவர் எரிந்து கொண்டிருந்த எலெக்ட்ரிக் விளக்கை அவசரமாக அணைத்தார். அதைக் கண்ட டாக்டர் சட்டென்று அப்படியே நின்றுவிட்டார்.
மூன்றாவது நாள் காலையில் டாக்டர் ரெங்கசாமியை எம்.யு.ஸிக்கு (மதராஸ் யுனைடெட் கிளப்) வந்து பார்க்கச் சொல்கிறார்.
ரங்கசாமி அங்கு வந்தபோது, டாக்டர் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கையில் சுருட்டுடன் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.
ரெங்கசாமியைப் பார்த்தவுடன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பக்கத்தில் அமரச் சொல்கிறார்.
ரெங்கசாமி உடனே பதட்டத்துடன், “கொலையா தற்கொலையா?” என்று கேட்கிறார்.
டாக்டர் நிதானமாக சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை மின்சாரத் தாக்குதலால் இறந்துவிட்டார் என்கிறார்.
குற்றாலம் பிள்ளை, வேலைக்காரன் நடேசன் ஸ்டேஜ மானேஜர் ராமாநுஜம் இவர்கள் யார்மீதும் சந்தேகம் இல்லை என்கிறார் டாக்டர்.
பின் யாரய்யா என்று பொறுமை இழந்து கேட்கிறார் ரங்கசாமி.
“நீர்தான் என்கிறார் டாக்டர் நிதானமாக. அதைக் கேட்டவுடன் ரெங்கசாமி திகைத்து விட்டார்.
இந்த இடத்தில் புதுமைப்பித்தன் இப்படி வர்ணிக்கிறார்.டாக்டர் சம்பத் என்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். என் உடல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. முகத்தில் வியர்வை அரும்பியதை என் உணர்ச்சிகளுக்கு மேல் உணர்ந்தேன்.
திரும்பவும் டாக்டர் எல்லா சம்பவங்களையும் நிதானமாக வர்ணிக்கிறார்.
நாடகத்தில் சுலோசனா பாலருந்தும் காட்சி ஏறக்குறைய இருளிலேயே நடந்தது. ஆனால் அவள் மஞ்சத்தில் படுத்தவுடன் அந்த மஞ்சத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த விளக்குகள் பளிச்சென்று எரிந்து அணைந்தன. அதில் ஒரு இடத்தில் மின்சாரக் கம்பி மேல் ரப்பர் உறை பிரிந்து இருந்தது. அதுவும் மஞ்சத்தில் படுத்தவர் கழுத்துக்குச் சரியாக. அதை நான் பார்த்தபோது நீர் என்ன சொன்னீர் என்று கேட்கிறார் டாக்டர். முட்டாள் பயல்கள். அன்றைக்கே இதைச் சரிப்படுத்தச் சொன்னேன் இன்னும் அப்படியே இருக்கிறது என்று சொல்லவில்லையா என்று ரங்கசாமி சொன்னதை ஞாபகப்படுத்துகிறார் டாக்டர்.
ரங்கசாமி கொலை செய்வதற்கு எதாவது காரணம் வேண்டுமே என்று மேலே விசாரிக்கிறார் டாக்டர்.
சபேசய்யர் நிஜமாகவே ஒரு புழு. என் விசாரணையின் போது அவனைக் கொல்வது மூலம் உலகத்திற்கு உபகாரம் செய்துள்ளீர்கள். என்கிறார் டாக்டர் ரெங்கசாமியைப் பார்த்து.
ரெங்கசாமி இந்தக் கொலையிலிருந்து தப்பிக்க தற்செயலாக சபேசய்யர் மின்சாரம் தாக்கி இறந்ததாக விவரமாக எழுதப்பட்டிருந்த காகிதத்தில் அவரும் ஆஸ்பத்திரி டாக்டரும் கையெழுத்திட்டிருந்தார்கள்.
டாக்டர் சம்பத் ரெங்கசாமிக்கு உயிர்ப் பிச்சை அளித்துவிட்டார். ஆனால் ரங்கசாமியின் மனைவியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தையும் ரங்கசாமி கையில் உள்ள ரத்தக் கறையையும் யாரால் துடைக்க முடியும்? என்று புதுமைப்பித்தன் இறுதி வரிகளில் முடித்திருக்கிறார்..
கதையின் ஓரிடத்தில் இப்படி எழுதியிருக்கிறார் கதாசிரியர். வேலைக்கார நடேசன் முதலில் சபேசய்யரிடம் வேலை செய்து கொண்டிருந்தான். சபேசய்யர் ஒரு பெரிய ஸ்திரீ லோலன். நடேசன் அவருடைய கையாள். சபேசய்யரைப்பற்றி ஊரில் கொஞ்சம் வதந்தியும் உண்டு. அவர் சிபாரிசின் மேல்தான் நடேசனுக்குச் சபாவில் வேலை கிடைத்தது.
உண்மையில் ரங்கசாமிக்கு டாக்டர் சம்பத்தும், இன்னொரு டாக்டரும் துணை நிற்கிறார்கள். ஒரு சமூக விரோதியாக சபேசய்யர் கட்டம் கட்டப் படுகிறார்.
மின்சாரத்தால் தற்செயலாக சபேசய்யர் மரணம் அடைந்து விடுவதுபோல் காட்டப்படுகிறது. ஆனால் கொலையைச் செய்த ரங்கசாமி தன் நடவடிக்கை மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார். முக்கியமாகக் கண்களைப் பார்த்து டாக்டர் சம்பத் எடை போடுகிறார்
இறுதி இரண்டு வரிகளில்தான் இந்தக் கதைக்கு அர்த்தம் புரிகிறது.ரெங்கசாமி ஏன் கொலை செய்யவேண்டுமென்று. இந்தக் கதையைப் படித்துக்கொண்டு வரும் வாசகருக்கு ரெங்கசாமி ஏன் கொலையாளி என்கிறபோது ஆச்சரியம் ஏற்படாமலிருக்காது. இறுதி வரிகளில்தான் அது வெளிப்படுகிறது.
இந்தக் கதை மணிக்கொடி இதழில் 14.04.1935 வெளிவந்த கதை. ஒரு கொலை கதையை வெகு சுலபமாக விவரித்த விதம் நன்றாக உள்ளது.
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- சிலப்பதிகாரத்தில் புலிக்கொடியோன்கள்
- மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- ஒரு கதை ஒரு கருத்து – புதுமைப்பித்தனின் டாக்டர் சம்பத்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்
- சீனா
- தெளிவு
- பெண்கள் அசடுகள் !