தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்

This entry is part 5 of 8 in the series 29 நவம்பர் 2020

 

ஸிந்துஜா 

மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள்நிஜமாகவே ஆறுதான் – இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறதுஅவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில்  க்ஷேம  லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும் பகை மூண்டு விடுகிறது. அடுத்தவர்கள் என்பவர்கள் எதற்கு இருக்கிறார்கள்இப்படிக் குளிர் காய்வதே ஓர் லட்சியமெனச் சுற்றி வருகையில்?

நாட்டாண்மைக்குமுத்திரை ஸ்டாம்பு விற்கிறதும், கோர்ட்டு, சாசனம் மனு எழுதிக் கொடுக்கிறதும்தான் வயிற்றுப பிழைப்பு. ஆனால் முக்கிய வேலை அவருக்கு நாட்டாண்மை. மனிதர், மூங்கில்காரரிடம் வந்துநியாமில்லாத காரியம் ஊரில் நடந்து கொண்டிருக்கும் போது உங்களை மாதிரி பெரிய மனிதரெல்லாம் சும்மா இருந்தா எப்படி?’ என்கிறார். தன்னைப் பெரிய மனிதர் என்று நாட்டாமை வாயிலிருந்து வருகிறதே என்று மூங்கில்காரருக்கு உச்சி குளிர்ந்து விடுகிறது. அவர் நாட்டாமையிடம் என்ன விஷயம் என்று கேட்க அதுவரை பதினைந்து வருஷமாக ஊரில் பிரசிடெண்டாக இருக்கும் காசுக்காரர் தனக்கு முடிய வில்லை என்று ஈயக்காரரிடம் சொல்லி விட்டு ‘இனிமே நீங்களேபாத்துக்குங்கஎன்கிறார். இது என்ன ஊர்ப் பொறுப்பா, இல்லை, தனி மனிதன் இஷ்டமா என்று கேட்டு மூங்கில்காரரை எலெக்ஷனுக்கு நிற்க வைத்து விடுகிறார் நாட்டாமை

தேர்தலில் மூங்கில் கடைக்காரருக்கு சின்னம் மரம். ஈயக்காரருக்கு செடி. ‘மாயவரத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்து வாடகைக்கார்கள் வருகின்றன. ரெயிலடிக்குப் போக ஊரில் ஒரு வண்டி கிடைப்பதில்லை . மரத்துக்கும் செடிக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனமூங்கில்காரர் மரியாதைப்படி நடந்து கொண்டு விடுகிறார்.. வீடு வீடாக நுழைந்து கேட்டுக் கொள்கிறார். கடைகடையாக ஏறிக்  கேட்டுக் கொள்கிறார். பள்ளிக்கூடத்துக்குக் கொட்டகை போட்டுக் கொடுக்கிறார். மார்க்கெட்டுக்கு சரக்கு ஏற்றி வரும் வண்டி மாடுகளுக்கு அவசர அவசரமாகத் தண்ணீர் தொட்டி கட்டி வைக்கிறார். வயிற்றுக்கும் நிறைய போடுகிறார்வெறும் காபி, டீ,இல்லை; கழுத்து வரை சாப்பாடு. ஒரு மரியாதை குறைவில்லை.

ஆனால் தேர்தல் முடிவு மூங்கில்காரருக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தனக்குத் தோற்றுப் போகும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. மரியாதைக் குறைவாகவோ தரித்தரத்தனமாகவோ நடந்து கொண்டால்தானே பயப்பட வேண்டும்? அவர் காசைக் காசாகப் பார்க்கவில்லையேசின்ன மனிதன் பெரிய மனிதன் என்று பார்க்கவில்லையே என்று புழுங்குகிறார். அவரைத் தேற்ற வந்த நாட்டாண்மைக்காரர், வோட்டுப் போட்ட ஜனங்களுக்கு செடிக்கும் மரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது. போஸ்டரில் இரண்டும் சாண் உசரம்.என்கிறார். மூங்கில்காரருக்கு வயிறு குமைகிறது: “இப்பிடியா புத்தியில்லாத கூட்டமாயிருக்கும்? குருமாண்டும், பிரியாணிண்டும் சாப்ஸுண்டும் மூச்சு முட்டத் தின்னுப்பிட்டு மரமிண்டும் செடியிண்டுமா தெரியாத போயிடும்? பிரியாணியை முழுங்கிச்சே ஒளிய அப்படியே ஆட்டுக்கூட்டமா?” என்று புகைகிறார்.   

நாள்கள் செல்கின்றன. ஈயக்காரர் ஊரில் பெரிய மனிதராக நடமாடுகிறார். ஆனால்மரமும் செடியும் ஒன்றாகி விடுமா? மரத்துக்கு வயசு அதிகம். வைரம் அதிகம். உரம் அதிகம் சமயம் வரட்டும்‘ என்று மூங்கில்காரர் காத்திருக்கிறார். சமயம் வந்து விடுகிறது. கொடிகட்டிப் பறக்கும் ஈயக்காரருக்கு அவர் புதிதாக ஆரம்பித்திருக்கும் சர்பத் கடைக்கு எலுமிச்சம் பழம் வேண்டியிருக்கிறது. மூங்கில்காரரின் எலுமிச்சைக்கொல்லையை ஈயக்காரரின் மகன் விலைக்குக்  கேட்கிறான். ஈயக்காரரும் அவர் பிள்ளையும் வந்து கொல்லையைப் பார்க்கிறார்கள். ஒன்றரை ஆள் உயரத்துக்கு நெருக்கமாக வேலி போட்டு சகல காபந்துகளும் செய்திருந்த கொல்லைக்குள் நுழைந்ததுமே, ஈயக்காரருக்கு முகம் மலர்ந்து விடுகிறது. குண்டுகுண்டாக உதிர்ந்து கிடக்கும் பழங்கள் ஆயிரக்கணக்கில் கொல்லை  முழுவதுமே, புற்களுக்கு இடையிலும், வேலிக்கு அடியிலும் அங்கும் இங்கும் எங்கும் இறைந்து கிடக்கும் பழங்கள். பேரம் பேசி கொல்லையைப் பதினாயிரத்துக்கு விற்று விடுகிறார் ஈயக்காரரிடம்.  

அவர்கள் சாசனம் வாங்கிக் கொண்டு போன பின் மூங்கில்காரர்  “ஈயக்காரரே, மரமும் செடியும் ஒன்ணாயிடாதுய்யா. எலக்சன்லே சயிக்கலாம். இதிலே நடக்காது. நீங்க பாத்த அத்தினி பழமும் முந்தா  ராத்திரி கும்மா ணத்திலேந்து வாங்கியாந்து கொல்லையிலே கொட்டியதுமரத்திலேந்து உதிந்த பழமா, கையாலே கொட்டின பழமான்னு கூடக் கண்டு பிடிக்க முடியல்லே. எலெக்சன்லே சயிக்கிறாராம்!” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார்.

அதன் பிறகு பயத்தினால் அவர் கொல்லைப்பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருக்கிறார். ஆனால் ஒரு நாள் சலவைக்காரனைப் பார்க்கப் போக வேண்டிய கட்டாயத்தில் அந்தப் பக்கம் போகிறார். அப்போதுஎன்ன பெரியப்பா?” என்று வேலிக்குள்ளிருந்து குரல்  .ஈயக்காரரின் மகன்

இந்தப்பக்கம் தலை காட்ட வாண்டாம்னு இருக்கீங்களா? இங்க வந்து பாருங்கஎன்று கூப்பிடுகிறான். மூங்கில்காரர் உள்ளே போகிறார்.  “காப்பெல்லாம் எப்படி இருக்கு?”

நீங்களே பாருங்களேன்.”

மூங்கில்காரர் பார்க்கிறார்நன்றாகப் பார்க்கிறார்ஏகத்தாறாக் காய்த்துக் கிடக்கிறது. குண்டு குண்டாகப் பழம். இலை தெரியாத பழம்.

இப்ப மரத்திலேயே காய்க்குது”  என்கிறான் அவன்.

என்ன வெகண்டை !

“……….”

நீங்க காமிச்சப்ப தரையிலேல்ல காச்சிருந்தது. இப்ப மரத்திலேயே காய்க்குது, அதே மாதிரி பழங்க!”. 

பேசுவது விஷமமா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியாத போது எப்படிக் கோபித்துக் கொள்வது?

அதிகாரிகளின் உதவியும், பஞ்சாயத்து போர்டு உதவியும் கிடைத்து  மரத்திலேயே காய்க்க ஆரம்பிச்சிருச்சுஎன்று சிரிக்கிறான். மூன்று தடவை சொல்லியாயிற்று. விஷமச் சிரிப்பு.

மூங்கில்காரர் விடை பெற்று வெளியே வருகிறார். ‘முன்னூறு குழிக்குப் பதினாயிரம், மூன்று விலைதான்அப்படி என்ன ஏமாந்து விட்டோம்?’ என்று தேற்றிக் கொண்டு நடக்கிறார்.      

தி. ஜானகிராமன் கதைகளில் நான் ஜானகிராமனைத் தேடுகிறேன். அவர் பௌதீக உலகில் என்னவாக இருந்தாரோ அதுவாகத்தான் அவர் எழுத்திலும் இருக்கிறார் என்று எனக்கு உறுதியாகத் தோன்றுகிறது. Consistency என்னும் அகஇசைவுடைமை  அவர் எழுத்தில் வற்றாத ஜீவநதி போலும் ஓடுகிறது. ‘என் எழுத்து வேறு.என் வாழ்வு வேறு. எழுத்தை மட்டும் பார். ‘ என்னும் வியாபாரிகளைப் பரிகசித்து  நிற்கிறது தி. ஜா.வின் எழுத்து

ஜானகிராமன்மரமும் செடியும்கதையை மூங்கில்காரர் ஈயக்காரரை ஏமாற்றுவதோடு முடித்திருக்கலாம். தனது தேர்தல் தோல்வியைக் கொல்லை விற்பனையின் வெற்றியில் ஈடு கட்டிக் கொள்ளும் ஒரு மனித நிலையைப் பரிசீலித்ததாகவும் இருந்திருக்கும்கதையின் உருவ அமைதி கெடும் சாத்தியமில்லாமலும் கதை முடிந்து போயிருக்கும்.

ஆனால் கதை இந்தக் கட்டத்துக்கு மேலே போகிறதுஈயக்காரர் தேர்தலில் மூங்கில்காரருக்கு எதிராக ஒரு பொழுதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு திட்டு, ஒரு ஏச்சு, ஒரு காலை வாரல்  என்று எந்தவிதமான தேர்தல்யுத்திகளையும் மூங்கில்காரருக்கு  எதிராக ஒரு பொழுதும் ஈயக்காரர் பின்பற்றவில்லையேமூங்கில்காரர் தோல்வியைத் தழுவியதற்கு ஜனங்களின் தீர்ப்புதானே காரணம்அதற்கு அவரை மூங்கில்காரர் ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்அதனால் ஜானகிராமனின் நியாய புத்தி கதையை மேலே எடுத்துச் செல்லுகிறது. ஈயக்காரரின் மகன் மூங்கில்காரரின் முகத்தில் மென்மையாக ஆனால் வலுவாக வார்த்தைகளை வீசி வறுத்தெடுக்கிறான். காலமும் சூழலும் மனிதர்களும் ஈயக்காரரின் நல்ல குணத்தை, அல்லது பொல்லாத்தனம்  எதுவுமில்லாத நடமாட்டத்தைப் பாராட்டுவது போல எலுமிச்சக் கொல்லையில் அவர் செய்த முதலீடு  நல்ல விளைச்சலை ஈயக்காரருக்குத் தருகின்றது

ஜானகிராமன் எங்கோ ஓரிடத்தில்பழிகார முண்டை ! என்ன நியாய புத்தி !’ என்று ஒரு கணவன் இறந்து விட்ட 

மனைவியை நினைத்து மறுகுவதாக எழுதுவார். அந்த நியாய புத்தி ஜானகிராமனை எப்போதும் வழி நடத்திச் சென்ற  நியாய புத்தி என்பதை அவர் எழுத்து காண்பிக்கிறதுஇந்தக் கதையிலும்.

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – புதுமைப்பித்தனின் டாக்டர் சம்பத்சீனா
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *