சுவேதா

author
2
0 minutes, 24 seconds Read
This entry is part 1 of 15 in the series 13 டிசம்பர் 2020

               ஜனநேசன்                                                                

திருச்சியில் எறிப்படுத்தவன் தான், இரயிலின்  தாலாட்டில் இரண்டாம் வகுப்பு  குளிரூட்டியின் மதமதப்பில்  தூங்கிக் கொண்டிருந்தேன்  . ரயில் நிற்கவும் தூக்கம்  அறுந்தது. படுத்தபடியே  ஜன்னல் திரையை விலக்கினேன் ,எட்டுமணி வெயில் முகத்தைக் கிள்ளிச்   சிரித்தது. காட்பாடி வந்திருந்தது. மின்னலாக எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு  ஓடி நடைமேடையில் ஒரு பொட்டலம் இட்டலி வடை வாங்கி  எனது இருக்கைக்கு வந்தேன். எதிரில்  ஐம்பது வயது மதிக்கத் தக்க கனத்த சரீர பெண்மணி சுருதி பிசகாத குறட்டையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் .இப்போது தான் கவனித்தேன். கனத்த நெஞ்சு உறக்கத்தின் ஆரோகன அவரோகனங்களில்  ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. பாவம், வாடிய முகத்தில் துயர் மறந்த தூக்கம் …                                   

நான் படுக்கையை ஒழுங்குப்படுத்தி விட்டு கழிவறைக்குப் போய் பல்துலக்கி முகம் கழுவி திரும்பினேன்.                                    

எனது  இருக்கை பகுதியில் இருந்து ரோஜா நிறத்தில் சுடிதார் அணிந்த நீண்டு அடர்ந்த  குதிரைவால்   கூந்தல் குமரி, நளினமாக நடந்து  போனாள். நம் இருக்கை  அருகே இப்படி ஒர் அழகான  பெண் வந்து போகிறாளே என்று வியந்து மகிழ்வோடு இருக்கைக்கு விரைந்தேன் . அந்த முதுபெண்ணின் தலைமாட்டருகே இருந்த சிறு பலகையில்  இரண்டு சிற்றுண்டிப்  பொட்டலங்கள் இருந்தன. அந்த முதுபெண் ஆடைவிலகாத கவனத்துடன் எழுந்து உட்கார்ந்தாள். ,பல்துலக்கி ,பசையை  எடுத்து  உடல்வலி முகத்தில் தெரிய கழிவறை நோக்கி  ஊர்ந்தாள்.

ரயில் ஓடத்தொடங்கியது. ஜன்னல் காட்சிகளைப் பார்த்தபடியே  இட்டிலிகளை  விழுங்கினேன். சுகந்த மணம் வீசியது. திரும்பினேன். அந்த அழகான பெண் பின்புறம் தழுவிய கூந்தலை லாவகமாக மடியில் போட்டபடி  எதிரில் அமர்ந்தாள். பார்த்தேன். முகத்தில்  ஒப்பனையை மீறிய ஆண்தன்மை தென்பட்டது. அந்த பெண்மணியின் உறவென்ற சாயலும் தெரிந்தது. அந்தம்மா கழிவறைக்கு போயிருக்கிறார் என்றேன்.  அவுங்க  என் அம்மா தான் என்ற குரல் அந்தப் பெண் திருநங்கை என்று உறுதி செய்தது . எனக்குள் ஏமாற்றம் புதைந்து  கழிவிரக்கம் சுரந்தது.

“தங்கச்சி , நீங்க எங்கேம்மா போறீங்க? “ என்ற எனது மொழி அவளை கரைத்தது . அவள்  மென் முறுவல் பூக்க என்னிடம் பேசினாள் . அன்புக்கு ஏங்கியவள்  போல்  அவளது குரலில் நெகிழ்வு  தென்பட்டது.              “ நாங்க  ஜான்சி  போறோமண்ணே. இவுங்க  எங்க அம்மா . சேலம் தான் எங்க சொந்த ஊரு.  நான் பத்து வயசு பயலாய் இருக்கும் போதே ஊரை விட்டு வடக்கே ஓடியாந்திட்டேன். அப்பவே என் உடம்பிலே ஏற்பட்ட மாற்றத்தை யாரும் ஏத்துக்கலை .எனக்கு முன்னாலே மூணு பொம்பளை  பிள்ளைகள். நான் நாலாவதாக பிறந்த ஆம்பிளைப் பிள்ளை. செல்லமாக வளர்த்தார்கள். .நான் அக்காமார்களின் சட்டை பாவாடைகளை போட்டுக் கொள்ள அழுது அடம்பிடிப்பேன். அம்மா ஒத்துக் கொள்ளாமல் அடிப்பாள்.  காலப்போக்கில் பசங்களோடு சேர்ந்து விளையாடும் போது சரியாகிருவான் என்றார் அப்பா . நான்  தூங்கிய பின் எனக்கு ஆம்பிளை சொக்காய்  போட்டு விடுவார்கள். காலையில் எழுந்து பார்த்து அழுவேன். சாப்பிட மாட்டேன் ,பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன் என்பேன். கட்டாயப்படுத்தி பையன்  துணிமணி போட்டுவிட்டு பள்ளிகூடத்தில் விட்டுவிட்டு அப்பா   தனது டைலர் கடைக்குப்போய் விடுவார்.                                                           

ஒரு நாள்  பள்ளிகூடத்திலிருந்து  அக்காமார்களுக்கும்  தெரியாமல் ரயிலேறி விட்டேன். ரயிலில் அறிமுகமான  ஹிஜ்ரி அக்கா மூலம்  நான் ஜான்சிக்கு வந்திட்டேன்.  அந்த அக்கா சுந்தரமா இருந்த என்னை என் விருப்பபடியே  சுந்தரி ஆக்கியது .சேலத்தில்  அம்மாவும் அப்பாவும் என்னைத் தேடி தேடி நொந்து ஓய்ந்து போனார்கள். கடவுள் கொடுத்த ஆண் வாரிசு உதவாமல் போய்விட்டதே என்று கவலையில் விழுந்தார்கள்.

ஹிஜ்ரிகள் ,  ,நான்   அழகாக இருந்ததால் என்னை பெண்பிள்ளை யாகவே  வளர்த்தார்கள். வடமாநிலங்களில் உள்ள ஹிஜ்ரிகளைப் போல எனக்கு சமஸ்கிருதம் ,ரிக் வேதம் உபநிசதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். காவியங்களிலும், கவிதைகளிலும்  நான் திறமையை வளர்த்துக் கொண்டேன். தேர்ந்த பண்டிதர் போல்  என் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள் என்று எனக்கு  சுவேதா எனப் பேரு வைத்தார்கள்.” சுவேதா சொல்லும் போது எனக்கு  சம்புகன் தவம் நினைவுக்குள் மின்னியது.                                                               

அவளே தொடர்ந்தாள். “வடக்கே புராணங்களிலும் ,இதிகாசங்களிலும் எங்களைப் போன்றோரை கடவுளின் அருளைப் பெற்றவர்களாக சொல்லப்படுகிறது. அதனால் என் போன்றவர்களுக்கு அங்கே மரியாதை உண்டு. குழந்தை பிறந்த வீடுகளிலும் ,கல்யாண வீடுகளிலும்  வாழ்த்து பாடல்களைப் பாடி ஆசிர்வதிக்க என்னையே விரும்பி அழைத்தார்கள் என்னுடைய சம்ஸ்கிருத உச்சரிப்பும் ,ஸ்லோகங்கள் சொல்லும் லாவகமும் கண்ட பல பண்டிதர்களும், சாஸ்திரிகளும்  என் மீது பொறாமைப்  படுவர்.” என்று அவள் சொல்லும் போது அவளது  நீளவட்ட  முகத்தில்  ஒளிரும் கண்களில்  பெருமிதம்  ஜொலித்தது .                                                              

“ என்னை அழைத்து வந்து வளர்த்தவரை  அம்மாவென்றே அழைத்தேன். பத்து பேர் உள்ள எங்கள் கூட்டத்தாருக்கு என்னால்  பேரும் செல்வாக்கும் பெருகியது. ஆனால்  தனியாக நான் இருக்கும் போது  என்னை பெற்றவர்கள் , கூடப் பிறந்தவர்கள் நினைவு வரும்.  வளர்ப்பு அம்மா விடம்  கேட்டதுக்கு  என்னை  சேலத்துக்கு போக அனுமதிக்கவில்லை. பெத்தவங்களுக்கு எதாவது பணம் அனுப்பு. ஆனால் உன் விலாசத்தை சொல்லி விடாதே. அவர்கள் பாசம் காட்டி உன் வாழ்கையை பாழாக்கி விடுவார்கள் என்றார்.

எங்கள் சங்கம்  மூலமாக சேலத்தில் இருக்கும்  திருநங்கையர் சங்கத்தை தொடர்பு கொண்டு  அப்போதைகப்பபோது  எங்க அம்மா அப்பா பற்றி விசாரிப்பேன். அப்பா குடித்து குடித்து உடல்கெட்டு இறந்துவிட்டார் என்றும் ,அம்மாதான் வீட்டை விற்று  அக்காமார்களைக்  கட்டி கொடுத்தார் என்றும்  அம்மாவை அக்காமார்கள் கவனிக்காமல்  விட்டு விட்டார்கள். அம்மா  விதவை பென்சனை வாங்கி பிழைப்பை நடத்த சிரமப் படுகிறாள் என்றும் கேள்விப் பட்டேன்.

நான்  இங்கே பேரும் புகழோடு காசு பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கும் போது என்னை பெற்ற அம்மா ஏன்  வறுமைப்பட்டு சாகவேண்டும் என்று  எனது வளர்ப்பு அம்மாவிடம் வாதாடி அனுமதி பெற்று  அம்மாவை அழைத்துப் போக வந்தேன் . .தான் பெத்தபிள்ளை  வீணாகவில்லை  என்று என் அம்மா நிம்மதிப் படணும்   .அதை நான் பார்க்கணும்.” என்றாள்.                                              

அவள் சொல்லி வரும்போது, ரயில் ஜன்னலில்  வறட்சியும் செழிப்புமாய் , தரிசும்  வீடுகளுமாய் காட்சிகள் மாறுவது  போல்  அவள் முகத்திலும் மாற்றங்களைக் காண முடிந்தது.                                                   

நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது  பளீர் வெள்ளை பைஜாமா குர்தாவும் கழுத்தில் சுண்டுவிரல் தண்டி தங்கச் சங்கிலியும்  அணிந்து  செண்டு வாசனை மூக்கை துளைக்க    ஒருவர்  அவளைப் பார்த்தபடி போனார். பின் ஐந்து நிமிடத்தில் அவரே திரும்பி வரும் போதும் பான்பராக்கை மென்றபடி அவளைப் பார்த்து  சென்றார்.  பலரும் கவனிக்கும் படியான ஓர் அழகியுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற  எண்ணம் என் மனதில் குமிழியிட்டு முகத்தில் வண்ணம் காட்டியது. அதை நான் மறைக்க முயன்று தோற்றேன். ஆனாலும்  தங்கச்சி என்று ஒரு வார்த்தை நான் சொன்னதும் தனது முழு வரலாற்றையும் ஓர் அழகிய நங்கை  சொல்கிறாள் என்றால் அவள் மனதுக்குள்  பாசத்துக்கும் அன்புக்குமான எக்கம் பதுங்கி இருப்பது  தானே காரணம் என்று மனது  அசைப் போட்டது.                                                  

இந்த நேரத்தில் கழிவறையிலிருந்து திரும்பி வந்த அம்மாவைப் பார்த்து  “எவ்வளவு நேரம்மா  … பசிக்குது வாம்மா..உன்னோடு சேர்ந்து சாப்பிடத் தானே  காத்திருக்கிறேன் ”.அவள்  சிணுங்கினாள் .

“இதோ சாப்பிடுவோம்டா .” என்று தஸ் புஸ்ன்னு  பெருமூச்சு விட்டு அம்மா தனது  கனத்த உடலை சீட்டில்  ஒடுக்கி உட்கார்ந்தாள்                    

” தங்கச்சி, அம்மா  சிரமமில்லாமல்  உட்காரட்டும் , நீ என் சீட்டில்  உக்கார்ந்து சாப்பிடம்மா “ என்று  நான் ஜன்னலோரம் நகர்ந்தேன்.                                                

“ பரவாயில்லை அண்ணே,  அம்மகூடவே   உக்கார்ந்துக்கிறேன்”   என்றாள். சுவேதா   என்னை அண்ணே என்று சொன்னதைக்  கேட்டு அம்மாவின் வாடிய முகம் பூத்து விரிந்தது.

அம்மாவும் மகளும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு கண்ணீர் ஒழுக பேசியது கண்டு எனக்கும்  கண்ணில் கசிவதுபோல் உணர்வு. ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். ஆனால் எனது முதுகெல்லாம் கண் முளைத்தது போல் அவர்களது பாசத் ததும்பலை உணர்ந்து கொண்டிருந்தேன்.                                                

சுவேதா  உண்டு முடித்த பின் அம்மாவை எழுந்திருக்க விடாமல் அம்மா விடமுள்ள டிபன்பாக்ஸ் டப்பாவிலே குடிநீர் கொண்டு கைகழுவச் செய்தாள். தானும் அதிலே கை கழுவிக் கொண்டு அம்மாவுக்கு சக்கரை மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து விழுங்கச் செய்தாள்.  பின்  சாப்பிட்ட பொட்டலக் காகிதத்தை  எடுத்துக் கொண்டு  கழிவறை பக்கம் போனாள் .” நல்ல பாசமான பிள்ளை “ என்றேன். அம்மா நீண்ட பெருமூச்ச் விட்டாள். அதில் ரணமிக்க பல வார்த்தைகள்  உறைந்து இருந்தன .                                                      

 “ஆமாம் அய்யா, பல வருஷங்களுக்குப் பின் தேடிவந்த மகாலட்சுமி “ என்றாள். அவளது முகத்தில் பல சம்பவங்கள் ஓடி மறைந்தன. அவள் எதையும் வாய் திறந்து சொல்லவில்லை. அவள் மீண்டும் பெருமூச்சு விட்டு  ஜன்னல் பக்கம் பார்வையைத்  திருப்பினாள்.

சுவேதா  வந்தாள். “அம்மா  ராத்திரி  மூணு மணி வரை உனக்கு தூக்கம் இல்லை. நீ படுத்து தூங்குமா. நெல்லூரில் மதியம் சிக்கன்  சாப்பாட்டுக்கு நெட்டில் புக் பண்ணியிருக்கேன். வந்துரும் . நாம சேர்ந்து சாப்பிடுவோம்.

நானும் கொஞ்ச நேரம் தூங்கறேன் “ என்று  இருபது சீட்டு தள்ளி உள்ள தனது இருக்கைக்குப் போனாள். அம்மா படுத்தவள் உடனே குறட்டை விட்டாள். ராத்திரி தூக்கமின்மையும் , வாழ்கையில் இழந்த பிள்ளை திரும்ப கிடைத்த சந்தோசமும் ,அவள் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வும் கூட காரணமாக இருக்கலாம்  .பட்டுப்போன உறவு தளிரக் காணும் இன்பம் கிடைத்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.! நான் கொண்டு வந்த புத்தகத்தை வாசிக்கலாம்.அதற்குமுன் கழிவறைக்குப் போய் வரலாம் என்று எழுந்தேன். கழிவறைப் பக்கம், எதோ ஆவேசமாய் இந்தியில் கத்தும்  சத்தம் கேட்டது. விரைந்தேன்.

கழிவறைப் பக்கம்  அந்த பளீர் பைஜாமாகாரர் தன்  கன்னத்தை தடவிய படியே ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார். கொஞ்சம்  தள்ளி  அவரை எரிப்பது போல் பார்த்தபடி சுவேதா  தனது வலதுகை  விரல்களை பெருவிரலால் நீவி சூடாற்றினாள் . நெஞ்சுக்கூடு அனலை வெளியே  விட்டு தணித்துக்  கொண்டிருப்பது போல் ஏறி இறங்கியபடி .இருந்தது .துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றில்  அனல் கொப்பளிக்கப் பார்த்தது நினைவுக்கு வந்தது. நான் அவர்களை நெருங்கியதைக்  கண்ட பைஜாமா ஆசாமி ,” என்னிடம் ரிவால்வர்  இருக்கிறது , நீ  இறங்குவதற்குள் உன்னை சுட்டு வெளியே தள்ளுகிறேன்  பார்…” என்று சுவேதவை நோக்கி சொல்லி, சிவந்த கன்னத்தை தடவியபடி  நடையோட்டத்தில் போனார்.

நான் பதற்றத்தோடு “ என்னமா நடந்தது ?” அவளது  கைகளைப் பற்றப் போனேன். அவள்  ஆவேசத்தில் முகம்  சிவந்து, உதடுகள் துடிக்க , இறுகிய  குரலில்  உடைந்த  சொற்களில்  “ கையைப் பிடிச்சு கக்கூசுக்குள் இழுக்கிறாண்ணே . என்னை யாருன்னு நினைச்சான் . திமிறி ,கன்னத்தில் விட்டேன் ஒரு அறை. பல்லு விழுந்திருக்கணும். ”                        

தன்னை சரஸ்வதியின் வடிவமாக நினைத்துக்கொண்டு இருப்பவளை  அப்படி அவன் செய்யலாமா …இந்த சம்பவம் மூன்றாம் வகுப்பு பெட்டியில் நடந்திருந்தால் இந்நேரம்  அந்த பைஜாமாக்காரன்  தர்ம அடியில் கிழிபட்டிருப்பான் .இது இரண்டாம் வகுப்பு பெட்டியானதால் பிறர் கவனிப்பில்லாமல் தப்பினான்.

“ அறைஞ்சது சரி தான். ஆனா துப்பாக்கி இருக்குதுன்னு .மிரட்றான் .. பயப்படாதே . நீ  என்னோட இடத்தில் உங்கம்மா எதிரில்  வந்து படுத்துக்கோ. எனக்கு மேலே இருக்கிறவரை உன் இடத்துக்கு அனுப்பிட்டு ,அந்த இடத்தில்  நான் இருக்கிறேன். நான்  உங்களுக்கு முன்னே இறங்கியிருவேன்  எனக்கு தெரிந்த  ரயில்வே பாதுகாப்பு அலுவலர்  நண்பரிடம் சொல்லி நீங்க  ஊரு போய்  இறங்கிற வரை பாதுகாப்பு தர ஏற்பாடு செய்கிறேன் .பயப்பட வேண்டாம்மா.! “ என்றேன். அவள் கண்ணோரம் துளிர்ப்பில்  நன்றி வெளிப்பட்டது .                                    .” முகம் கழுவிகிட்டு வர்றேன் அண்ணே .அம்மாகிட்ட இதையெல்லாம் சொல்லியிறாதீங்க. “ என்றாள் சுவேதா .

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ட்டி.ஆர். நடராஜன் says:

    புறக்கணிக்கப்படுபவர்களைப் பற்றிப்
    பரிவுடன் எழுதப்பட்டிருக்கும் நல்ல கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *