அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்

This entry is part 14 of 15 in the series 13 டிசம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா

     நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார்.

     அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான். ஒரு நாள் தியாகராய நகர்ப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் என் தோழி ருக்மிணியும் நானும் நின்றிருந்தபோது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ருக்மிணியைச் சந்தித்துவிட்டு அன்று எங்கள் வீட்டுக்குச் செல்லும் பொருட்டு நான் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். ருக்மிணி என்னை வழியனுப்ப வந்திருந்தார். பிற்பகல் மூன்று மணி இருக்கலாம்.

     அப்போது தெருவில் நடந்துகொண்டிருந்த ஒருவர், எங்கள் அருகில் வந்து, “நீங்கதானே …..எழுத்தாளர் ….” என்று என் பெயரைச் சொல்லித் தயுக்கத்துடன் வினவினார்.

      “ஆமாங்க…”

      “உங்க புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்துள்ளேன். அதான் அடையாளம் கண்டு கேட்டேன். நான் மாசிலாமணி. கலைஞன் பதிப்பக உரிமையாளர். நேரம் இருந்தால் நீங்கள் என் கடைக்கு வந்துவிட்டுப் போகலாமே? வர முடியுமா?” என்று  கேட்டார்.

      அன்று நான் விடுப்பில்தான் இருந்தேன். எனவே, சம்மதித்து அவருடன் மிக அருகில் இருந்த அவரது பதிப்பகத்துக்கு இருவரும் சென்றோம். எந்த ஆண்டில் என்பது ஞாபகத்தில் இல்லை. எழுபதுகளில் ஏதோ ஓர் ஆண்டு.

      கடையை அடைந்ததும் காபிக்குக் கடைப் பையனைப் பணித்தார். சற்று முன்னர்தான் சாப்பிட்டிருந்தோம் என்று சொல்லியும், “அதனால் என்ன? ஒரு சின்னக் காபி சாப்பிடலாம், “ என்று சொல்லிவிட்டு, பையனிடம் சில சின்ன காபிகளுக்குப் பணித்து அனுப்பினார். (சின்ன காபி என்பது சிங்கிள் டீ என்பது போல் அரைக் கப் என்று அவரே விளக்கமும் அளித்தார்.)

     பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்த போது, நான் வசித்தது சிண்டிகேட் வங்கி ஊழியர் குடியிருப்பு என்பதால் நான் வங்கியில் பணி புரிபவளா என்று விசாரித்தார். ‘என் தம்பி, தம்பியின் மனைவி, ஒரு தங்கை, ஆகியோர்தான் சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் என்றும் நான் அஞ்சல் துறைத் தமிழகத் தலைவரின் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் கூறினேன்.

      “எதற்குக் கேட்கிறேன் என்றால், சில வங்கிகள் தங்களிடம் சிறு தொகையைக் கடன் வாங்கி யிருக்கும் ஏழைகளையும் நடுத்தர மக்களையும் பாடாய்ப் படுத்தி வருகிறார்கள். இந்திரா காந்தி அம்மையார் பல வங்கிகளை நாட்டுடைமை யாக்கியதால் மக்கள் நன்மை யடைந்து வருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சில வங்கிகள் கடனாளிகளைப் படுத்திவருவதாய்க் கேள்விப்படுகிறேன். அதைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவதற்காகத்தான் கேட்டேன். எனக்குத் தெரிந்த ஓர் ஏழைப் பெண்மணி – அப்பளம், குழம்பு வடகம் போன்றவை தயாரித்து விற்பவர். இன்னோர் அம்மாள் இட்லி வியாபாரம் செய்பவர். தொழில் நடத்த இருவரும் கடன் வாங்கியுள்ளார்கள். அப்பளம் விற்கும் அம்மாள் ஒரு தவணைத் தொகையைக் கட்ட முடியாததால் வங்கிக்குக் போய்த் தனது நிலையைத் தெரிவித்து அந்த மாதத்துக்கு மட்டும் சலுகை காட்டக் கோரியுள்ளார். வங்கி மேலாளர் சம்மதித்துள்ளார்.  ஆனால், அதற்குப் பின் ஒரு வாரம் கழித்து வங்கி ஊழியர் ஒருவர் அவர் வீட்டுக்குப் போய் அவரை மிரட்டியுள்ளார். அவர் உண்மையை விளக்கியும் பயனில்லை, கூச்சல் கேட்டு நான் எட்டிப்பார்த்தேன். நடந்தது தெரிந்ததும், “ஏன்யா? லட்சக் கணக்குல கடன் வாங்கிட்டு, வட்டி கூடக் கட்டாத பணக்காரங்களை யெல்லாம்  விட்டுடுவீங்க., இந்தம்மா மாதிரி ஏழைபாழைங்களைச் சதாய்ப்பீங்களா? எந்த வங்கிய்யா உங்களுது? நான் வந்து உங்க மேனேஜரோட பேசறேன்,” என்றேன்.

             “கொஞ்சம் பயந்து போன ஊழியர்,  ‘இந்தம்மா வங்கி மேலாளரைப் பார்த்து விலக்குக் கேட்டது தெரியாதுங்க. சாரி…’ என்று கூறி ஓட்டம் பிடித்தார். அதன் பிறகு அந்தப் பெண்மணி தன்னிடம் அந்த ஆள் இருபத்தைந்து ரூபாய்  லஞ்சம் கேட்டதாய்ச் சொன்னார். ஆனால் நான் வங்கி மேலாளரைப் பார்த்துப் பேசுவதாய்ச் சொன்னதும், ‘வேணாங்கய்யா. மேனேஜர் மாத்திப் போனதுக்கு அப்புறம் இந்த ஆள் என்னைச் சதாய்ப்பாரு. விட்றுங்க,’ என்றார். …

      “ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள் ஏன் தான் இப்படி உபரி வருமானத்துக்கு நேர்மையற்ற முறையில் அலைகிறார்களோ! இதே போல் இட்லி போட்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் ஓர் அம்மாளையும் ஒரு வங்கி இதே போல் துன்புறுத்தியது. அந்த அம்மாளும் புகார் செய்ய வேண்டாம் என்று என்னைத் தடுத்துவிட்டார். பின்னாளில் வங்கியுடனான தன் உறவு சுமுகமாய் இருக்காது என்பதே அவர் சொன்ன காரணம். ஏழைகளின் வயிற்றெரிச்சலை எப்படி யெல்லாம் இவர்கள் கொட்டிக்கொள்ளுகிறார்கள், பார்த்தீர்களா?” என்று மாசிலாமணி மனம் கசந்து நீளமாய்ப் பேசினார்.

     கோடீசுவரர்களை யெல்லாம் – அவர்களிடம் பெருந்தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு – வெளிநாடுகளுக்கு வங்கிகள் சில தப்பி ஓட விடுகிற அவலம் இன்றளவும் தொடர்வது நாம் அறிந்ததுதானே?

     சின்னக் காபிகள் வந்ததும் எல்லாரும் பருகியதன் பிறகு பத்திரிகைகள் பற்றிப் பேசலுற்றார். ஒரு பத்திரிகை ஆசிரியர் ஊரைக் கெடுக்கும் வண்ணமாய்ப் படங்கள், கதைகள் வெளியிட்டு வந்தது பற்றிக் குமுறலோடு பேசினார். ‘இதில் என்ன வேடிக்கை, தெரியுமா? அடிக்கடி இவர் பகவத் கீதை வுகுப்புகளை நடத்துகிறாராம்! என்ன ஏமாற்று வேலை இது!” என்று அங்கலாய்ப்புடன் புன்னகை புரிந்தார்.

      மேலும் ஒரு தகவலைத் தெரிவித்தார். ஆன்மிகத் துறையைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி புத்தகங்கள் எழுதி ஒரு பிரபலப் புத்தக  வெளியீட்டகத்தின் மூலம் அவற்றை வெளியிட்டுக்கொள்ளுவதாகவும், ஆனால் அவற்றை அவர் தாமே எழுதுவதில்லை என்றும், ஆங்கிலத்தில் “கோஸ்ட் ரைட்டர்” என்பார்களே அப்படி ஓர் ஆளை அதற்கென்று அமர்த்தி அவரை எழுதச் செய்து தம் பெயரில் அவற்றை யெல்லாம் வெளியிட்டுக் கொள்ளுவதாகவும் தெரிவித்துச் சிரித்தார். ஆன்மிகம் தொடர்புள்ள சில் கருத்துகளை மட்டும் அவர் கூறுவதுண்டாம். எழுதுவதென்னமோ அந்த “ஆவி” எழுத்தாளராம்.       “ஆன்மிகவாதிகளே இப்படி இருந்தால் நாம், யாரை நோவது?” என்று அங்கலாய்த்தார்.

     மாசிலாமணி பெருந்தன்மை யுள்ளவர் என்பதற்கு இதோ ஒரு சான்று. அவரது பதிப்பகத்தில் பணி புரிந்துகொண்டிருந்த ஓர்

ஊழியர் பதிப்புத் துறையின் நெளிவு சுளிவுகளையெல்லாம் கற்றுத் தேர்ந்த பின்னர் தாமே ஒரு பதிப்பகத்தைத் தொடங்க ஆசைப்பட்டார். அந்தத் தமது எண்ணத்தை மாசிலாமணியிடமே மனம் விட்டுச் சொல்லித் தன்னைப் பணியிலிருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்ட போது, மனமுவந்து அவருக்குத் தம் ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவரை அனுப்பிவைத்தாராம். அந்த ஊழியர் தொடங்கிய பதிப்பகம் என்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அதன் உரிமையாளரே இந்த விஷயத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்,

     என் சில புத்தகங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் காலமாவதற்குச் சில நாள் முன்னர் நான் எழுதி, நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருந்த “மத்தளங்கள்” எனும் நகைச்சுவை நாவலை என்னிடமிருந்து பெற்றதோடு அதைக் கவனமாய்ப் படித்த பின் அதைத் தாம் படித்ததற்கு அடையாளமாய் அதன் பல பகுதிகளை என்னோடு தொலை பேசியில் விமர்சிக்கவும் செய்தார்.

     அவர் மகன் திரு நந்தா அவர்கள் தம் தந்தையின் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். கலைஞன் பதிப்பகத்தோடு சில நாள் முன்னர் நான் பேச நேர்ந்த போது, வாய் தவறி, “மிஸ்டர் மாசிலாமணி, ப்ளீஸ்!” என்று கேட்டுவிட்டேன். அவர் அமரர் ஆகிவிட்ட நினைவே இல்லாமல்..

      சிலர் எப்போதும் பிறர் நினைவில் வாழ்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. அவர் காலமானது ஒரு டிசம்பர் மாதத்தில் என்பதால் நினைவு கூர்ந்துள்ளேன்.

…….

Series Navigationஅனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்மொழிபெயர்ப்புக் கவிதைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *