
வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு கருத்துகளை மனத்தில் பதியவைக்கும் கலை கைவரப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய மனிதநேயம் மிக்க பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட கவிஞர். அவருடைய ஆறு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் ஏழாவது தொகுப்பாக, “கம்பன் கவியரங்கில்……” என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது.
பல கவிஞர்களின் கவியரங்கக் கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளன. ஆனால் நானறிந்து இதுபோல நூல் வந்ததில்லை. பல்வேறு நகரங்களில் உள்ள ஒரே சார்புடைய அமைப்புகளின் கவியரங்குகளில் பாடிய கவிதைகளின் தொகுப்பு இது.
எல்லாமே கம்பன் கழகங்களில் பாடியவை.
திருவள்ளுவர் புலவர்களைச் சொல்லேர் உழவர் என்பார். ”நிலத்தில் விதைவிதைத்துச் சம்பாநெல்லை உழவர்கள் விளைவிப்பதுபோல் உன்னைப் போற்ற இங்கு புலவர்கள் வந்துள்ளார்கள் கம்பா” என்கிறார் கவிஞர். உழவர்களும் புலவர்களும் ஒன்றே என்று பாடிய வள்ளுவரை ஒட்டிய கருத்து இதுவாகும்.
ஒரு தந்தைக்கு அவர் இருக்கையில் மகன் இறப்பது மிகப்பெரிய சோகத்தைத் தரும். அச்சோகம் தயரதனுக்கும் இராவணனுக்கும் நேர்கிறது. சோகம் இருவருக்கும் ஒன்றேதான். ஆனால் இருவர் மனத் துன்பத்திற்கும் இரு வேறு உவமைகள் இங்கே வந்து விழுகின்றன. தயரதன் மனம் மண்பானை போல உடைகிறதாம் இராவணனின் இரும்பு நெஞ்சமும் கரைக்கிறதாம். அதைவிடக் கவிஞர் தாஜ்பால் ஒரு கேள்வி கேட்டுப் பதில் சொல்கிறார்
”தந்தையர் சோகத்தைக் கம்பன் உணர்ந்து
தந்திட எப்படி முடிகிறது?—அதில்
அம்பிகாபதியை இழந்த அவனது
சொந்த வேதனை தெரிகிறது”
கம்பனின் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அவன் கவிதையில் தெரிவதை அற்புதமாய்க் காட்டுகிறது கவிதை. அனுபவம்தானே கவிதை என்பதைச் சொல்லும் பாடல் அடிகள் இவை.
கமபன் இராமாயணம் என்ற ஒரு கதையைத்தான் காப்பியமாக வடித்துத் தந்தான். ஏன் அவன் இராமனின் கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தாஜ்பால் சொல்கிறார். அவன் நீதிசொல்ல வந்தான். ஆனால் அவன் அதைக் கதை மூலம் சொன்னால்தான் மனத்தில் படியும் என நினைத்தான். இதைத்தான் கவிஞரின் இந்தப் பாடல் அடிகள் காட்டுகின்றன.
”நீதியைக் கம்பன் நேரடியாய் சொல்லவில்லை!
நாட்டில் பாமரரும் நன்கறிந்த கதையிலே—அவன்
ஏற்றினான் நன்னெறியைக் கதைமாந்தர் வடிவிலே!’
மிதிலையில் ஒரு காட்சி. சீதை மேல்மாடத்தில் நிற்கிறாள். இராமன் வீதியிலே நடந்து போகிறான். இருவரின் கண்களும் சந்திக்கின்றன. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வின. கம்பன் ஒருவர் கண் மற்றவர் கண்ணை உண்டது என்று கற்பனை செய்கிறான். அந்தக் கற்பனைக்கு மெருகேற்றி வல்லம் தாஜ்பால் இப்படிக் கூறுகிறார்.
”தேரையைப் பாம்பு கவ்வும்
பாம்பினைக் கீரி கவ்வும்
பூச்சியைப் பல்லி கவ்வும்
புலியையும் முதலை கவ்வும்
எலியினைப் பூனை கவ்வும்
கிளியினைப் பருந்து கவ்வும்.
கவ்வி
உண்ணுவது ஒன்று
உண்ணப்படும் மற்றொன்று
வேட்டையில் இதுதான் பழக்கம்—காதல்
கோட்டையில் வேறொரு வழக்கம்
அங்கே
கவ்வியதும் உண்ணுமாம்
கவ்வப்படுவதும் உண்ணுமாம்-இது
காதலின் வண்ணமாம்
கம்பனின் எண்ணமாம்
கண்களைக் கண்கள் கவ்வி
ஒன்றினை ஒன்று உண்ண
கண்டதாய்க் கம்பன் சொன்ன
கற்பனைக் குசும்பு என்ன!”
பாரதிதாசன் பார்வையில் கம்பன் என்ற ஒரு தலைப்பு தாஜ்பாலுக்குத் தரப்படுகிறது. பாவேந்தரையும் கம்பனையும் இணைத்து யாருமே நினைத்துப் பார்க்காத அளவுக்கு அருமையான கவிதையை இக்கவிஞர் அளித்துள்ளார். பாவேந்தரே இன்றிருந்தால் மிக மகிழ்ந்திருப்பார். கம்பனின் கவிதைக்குப் பாவேந்தர் அடிகளிலிருந்து சான்று காட்டுவது எளிதன்று. இவர் வெற்றி பெற்றுள்ளார்.
கம்பன் பாடல் அடிகளில் மிகவும் புகழ் பெற்ற அடிகள் இவை. “கைவண்ணம் அங்கு கண்டேன்; கால் வண்ணம் இங்கு கண்டேன்” இந்த வண்ணம் என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கம்பன் போலவே பாவேந்தர் பாடல் யாத்திருப்பது யாருக்குத் தெரியும்? இக்கவிஞர் எடுத்துக் காட்டி நமக்கும் தெரிய வைக்கிறார்.
”காகுத்தன் புகழ் சொன்ன கம்பன் போல் பூசணிக்
காயை தாசனிவன் கவி பாடுகின்றான்
மெய்வண்ண வீடு கட்ட
உனைத்தொங்க விடுகின் றார்கள்
செய்வண்ண வேலை செய்து
திருமாடம் முடிக்கின் றாய்நீ
பொய்வண்ணப் பூச ணிக்காய்!
கறிஉனைச் செய்துண் டேன்உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்
கறிவண்ணம் இங்கும் கண்டேன்”
இப்படிக் கம்பனக்கும் பாவேந்தருக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கவிஞர் பாடுகிறார். மேலும் தாஜ்பால் எழுதும் ஒரு நயம் இதோ:
”காதலிலும் இருவருக்கும் காணலாம் ஒற்றுமையை
’அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’
என்றான் கம்பன்.
’பாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில்
பட்டுத் தெறித்தது மானின் விழி’ என்றான் தாசன்.
வீரம் என்பதற்குப் பல விளக்கங்கள் இதுவரை வந்திருக்கின்றன. கம்பன் காதையில் இராமன், இலக்குவன், அனுமன், கும்பன், இராவணன் போன்றோரின் வீரம் மிகவும் போற்றற்குரியது. ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு சீதையின் வீரமே தலைசிறந்தது என்பது போல் ”கம்பன் காவியத்தில் வீரம்? என்னும் தலைப்பில் பாடுகிறார் இக்கவிஞர். மேலும் ஓர் அறிவியல் கருத்தையும் கூறி அக்கருத்து சீதையிடம் தோற்றுப் போவதையும் அருமையாக விளக்குகிறார்.
”எட்டு யானைகளை வென்றவன் வீரமே
ஒற்றை மானிடம் ஒடுங்கிப் போனது”
என்ற வரிகளில் வலிமை பொருந்திய யானையைப் போன்ற இராவணனின் வீரம் மென்மையான் மான் போன்றவளான சீதையிடம் தோற்றுப் போனதை விளக்குகிறார்.
”எந்தத் திடப் பொருளும்
ஏதோ ஓர் கொதிநிலைக்கு
உருகும் என்பது அறிவியல்.
எந்தக் கொதிநிலைக்கும்
இளகாத திட மனது
சீதை காட்டிய அறவியல்”
என்னும் அடிகள் அறிவியல் என்பது அறவியலிடம் தோற்றுப் போனதைக் காட்டுகிறது. மேலும் “திமிர் அல்ல வீரம்—இந்தத்/ திடம்தான் வீரம்/ வாள்வீச்சு அல்ல—இந்த வைராக்கியம்தான் வீரம் என்று சீதையின் வீரம் இக்கவிதையில் போற்றப்படுகிறது..
”இராமன் இன்று வந்தால்” என்பது தலைப்பு. அத்தலைப்பை உள்வாங்கி தாஜ்பால் பாடுகிறார். கவிஞன் இன்றைய சமுதாயத்தைப் பார்க்க வேண்டும் அன்றோ? இன்றைய திரைகள் மக்களை எப்படி மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன என்பதை மறைமுகமாய்ச் சொல்கிறது இக்கவிதை.
”அவதாரப் புனிதன் நீ இன்று வந்தால்
அதிகாரம் பெறுவது அவ்வளவு எளிதல்ல!
அரிதாரம் பூசி நீ திரையிலே வந்தால்தான்
பரிவாரம் செய்யும்
உன் ’உருவெட்டு’க்குப் பாலாபிஷேகமும்
உனக்கும் பட்டாபிஷேகமும்”
இன்று மிகப்பெரிய அளவில் வைக்கின்ற ‘பேனரை” உருவெட்டு என்னும் புது சொல்லாக்கத்தால் குறிப்பிடுகிறார். பாராட்டுகள்.
”சீதை இருக்குமிடம் அறிந்து வா” என இராமன் அனுமனை அனுப்புகிறான். இராமன் அனுப்பிய ஈமெயில் என அனுமனைக் காட்டுவது நயம் கூட்டுகிறது. இலங்கை முழுவதும் அனுமன் சுற்றிச் சுற்றித் தேடிப் பார்க்கிறான். இன்றைய எளியவருக்க்குப் புரியும் உதாரணங்களுடன் சற்று நகைச்சுவையுடன் கவிஞர் எழுதுகிறார். அப்பொழுதுதான் கவியரங்கமும் கேட்க முடியும். கைதட்டல் பெறவும் முடியும். கருத்தை மனத்தில் ஏற்றவும் முடியும். இதோ பாடல் அடிகள்:
அசோகவனமென இலங்கையில் ஒரு ஜெயில்—அந்த
ஜெயிலில் இருந்தது சீதை எனும் மயில்
சீதை என்னும் பெண் மயில் காண
இராமன் அனுப்பிய ‘ஈமெயில்’ அனுமன்
அலைகடல் தாவி இலங்கை நகரில்
அனுமன் கால்கள் சுற்றும்
அதனால் அவன்தான் தசதர ராமனின்
தகவல் அறியும் சட்டம்
இராம காவியத்தில் மண்டோதரி மறக்க இயலாப் பாத்திரம். கணவனையே தெய்வம் எனத் தொழுத பாத்திரம். அதனால்தான் சீதைக்கு நிகராக அவள் போற்றப்படுகிறாள். மண்டோதரிக்கும் சீதைக்கும் உள்ள வேறுபாட்டைக் கவிஞர் தாஜ்பால் கவி நயம் தோன்ற எழுதுகிறார். இருவருமே கொடிகள்தாம். பெண்கள் கொடிகளன்றோ? ஆனால் கொடிகளுக்கிடையே எவ்வளவு வேற்றுமை என்பது இப்பாடல் அடிகள் படித்தபின் நமக்கு நன்கு விளங்குகின்றன.
”சீதை
சந்தன மரத்தில் படர்ந்த முல்லைக் கொடி
மண்டோதரியோ
முள்ளில் படர்ந்த முல்லைக் கொடி
சீதை
ரோஜா வனத்தின் ராணித் தேனீ
மண்டொதரியோ
கருவேலங்காட்டின் வண்ணத்துப் பூச்சி”
படித்துக் கொண்டு வரும்போது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓர் இடம் உண்டு. அது என்னெவெனில் இந்திரஜித்தையே இராமன் என்று ஓரிடத்தில் இவர் பாடுகிறார். இராமன் தந்தை சொல்கேட்டே வானகம் சென்றான். தந்தை சொல்லை மீறாதவன் இராமன். அப்படி வாழ்ந்து களம்புகுந்து தந்தைக்காகவே உயிர் விட்டவன்தானே இந்திரஜித். இப்படி இந்திரஜித்தைப் பார்ப்பது ஒரு புதிய பார்வை.
”தந்தை சொல்லே மந்திரம் என்பதில்
இந்திர ஜித்தும் இன்னொரு ராமன்”
என்னும் அடிகள் புதியன என்பதோடு புதுமையானவை என்றும் சொல்லலாம்.
மந்தரை பற்றியப் பாடல் மிகச்சிறப்பாக உள்ளது. எல்லாப் பாடல்களுக்கும் இதுவே மகுடம் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் மந்தரை பற்றிக் கூறுவதற்குச் செய்திகளே சிறிதளவில்தான் காப்பியத்தில் உள்ளன. அதை வைத்துக்கொண்டு அந்த நூல்களால் தாஜ்பால் பட்டுச்சேலை நெய்து தருகிறார்.
”நறுமண கைகேயி குணம் மாற்ற
நரி மன மந்தரை வந்தாள்”
என்னும் அடிகள் இருவரது குணத்தையும் மந்தரை வரும் நோக்கத்தையும் சிறப்பாக விளக்குகின்றன. மேலும் மந்தரையின் சொல்வன்மையை,
”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
மந்தரை கரைத்தால் மலையே கரையும்”
”வில்லம்பை விடவும் வீரியமான
சொல்லம்பைத் தொடுத்தாள் சூனியக் கிழவி”
என்னும் அடிகள் காட்டுகின்றன.
”தாழ்வுநிலை
காற்றழுத்த மண்டலத்தில் என்றோ இருக்கும்…
மந்தரை மனதிலோ என்றும் இருக்கும்…”
”சேலை கட்டிய சகுனியாம் மந்தரையின்
மூளைச் சலவையால் முடிவுகள் மாறியது”
மந்தரையப் படம்பிடித்துக் காட்ட இவற்றைவிட மகத்தான அடிகளே இல்லை.
பெரும்பாலும் கவியரங்கப் பாடல்கள் கேட்போரை முன்னிறுத்தி எழுதப்படுவன. அவற்றை அரங்கில் பாடும்போது விளைவுகள் உடனேயே தெரிந்துவிடும். ஆனால் அவற்றைப் பிறகு தனித்தனியே வாசிக்கக் களைப்புதான் உண்டாகும். சலிப்புதான் தோன்றும். இந்த விதிகளை மாற்றி வெற்றி பெறுகின்றன தாஜ்பாலின் கம்பன் கவியரங்கக் கவிதைகள் என்று துணிந்து சொல்லலாம்.
[கம்பன் கவியரங்கில்—கவிதைகள்—வல்லம் தாஜ்பால்—மனை எண்:9, ஜெயாகார்டன், ரெங்கசாமிநகர் இரண்டாம் தெரு, ரெட்டிப்பாளையம் ரோடு, தஞ்சாவூர்-613004. பக்: 98; விலை: ரூ60/ thanjaidhamu@yahoo.com பேச: 94435 08846
- கைக்கட்டு வித்தை
- இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது
- ‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஒரு துளி காற்று
- “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)
- “அப்பா! இனி என்னுடைய முறை!”
- ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
- மேரியின் நாய்
- தோள்வலியும் தோளழகும் – இராமன்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்
- தோள்வலியும் தோளழகும் – இராவணன்
- ”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்