ட்டி. ஆர். நடராஜன்
1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது
ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட்
என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது.
என் அறைகள் அறைகளுக்கான அளவில்
அதன் ஆத்மா ஆத்மாவின் அளவில்.
பின்னணியில் உயிரணுவின் ரீங்காரம்
அதற்கு மேலாக சூரியன், மேகங்கள், கிரஹங்கள்
அது எலிவேட்டர்களையும், புல்லட் ரயில்களையும்,
பல்வேறு விமானங்களையும்
ஒரு கழுதையையும்
ஓட்டியது.
அது காலுறைகளையும், சட்டைகளையும்அணிந்தது
அதற்கென்று அதன் சொந்தக் காதுகள், மூக்கு.
அது சாப்பிட்டது, தூங்கிற்று, கைகளையும், ஜன்னல்களையும்
திறந்தது மூடியது.
வாழ்வின் ஆழங்களும் வித்தியாசமானவை.
நானும் என் வாழ்வும் ஒருவருக்கொருவர்
ஜோக் சொல்லிக் கொண்ட தருணங்கள்.
ரொட்டி தயாரித்த தருணங்கள்
என் வாழ்க்கையிடம் சொன்னேன்.
எப்போதாவது மற்றவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டுமென
ஒரு வாரத்தில் நானும் என் காலியான சூட்கேஸும் திரும்பி விட்டோம்.
எனக்குப் பசித்தது.
என் வாழ்க்கைக்கும்.
எங்களால் முடியவில்லை
எங்கள் உடைகளின் மீதும்
எங்கள் நாக்குகள் மீதும் /
கை வைக்காமல் இருக்க.
(1953ல் நியூயார்க்கில் பிறந்த ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட் அமெரிக்கக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் . அவருடைய ஒன்பது கவிதைத் தொகுதிகள் , இரு கட்டுரை நூல்கள் , ஒரு சொற்கோவை, மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.)
2. சாவுக்கு எதிராக
ஆக்டாவியா பாஸ்
அது ஒரு நீண்ட அமைதியான தெரு.
அது ஒரு நீண்ட அமைதியான தெரு.
நான் இருட்டில் நடந்து தடுமாறிக் கீழே விழுகிறேன்.
எழுந்து குருடனைப் போல் கற்களின்,
உதிர்ந்த இலைகளின் மீது காலடி வைக்கிறேன்
எனக்குப்பின் யாரோ நடந்து வருகிறான் .
நான் நின்றால் அவனும் நிற்கிறான்
நான் ஓடினால் அவனும் ஓடி வருகிறான்.
திரும்பிப் பார்க்கிறேன்: யாருமில்லை.
எல்லாம் கறுப்பு நிறத்தில் உள்ளன, வெளியேறும் வழியின்றி,
நான் மூலைகளைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்.
அவை தெருவுக்கு இழுத்துச் செல்லுகின்றன.
அங்கு யாரும் எனக்காகக் காத்திருப்பதில்லை,
யாரும் பின்னே வருவதுமில்லை.
நான் ஒரு மனிதனைப் பின் தொடர்கையில்
அவன் கீழே விழுந்து
எழுந்து
என்னைப் பார்த்துச் சொல்லுகிறான்: யாருமில்லை.
(இலக்கிய நோபல் பரிசு பெற்ற மெக்சிக கவி, (1914-1998)
சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம் இயக்கங்களில்
பங்கு பெற்றவர்.)
3. எலும்புகளின் சிறு கோரிக்கை
சிண்டி வில்லியம்ஸ் குடியெரெஸ் *
என் உடல் உணருவது பொய்யல்ல.
ஆம் அது பொய்யல்ல.
நான் சொல்கிறேன். அது பொய்யல்ல.
அது உண்மையை விடச் சிறியதுமில்லை.
பெரியதுமில்லை.
என் ஊனில் உறங்கும் என் இறந்த காலம்.
அதைப் பெயர்த்தெடுப்பதால் /மாற்று எதுவும் சிக்காது.
மற்றவரின் துயரங்கள்
என் துக்கத்தைக் கடுகளவாக்கி விடுகின்றன.
ஆனால் இந்த எலும்புகள் என்னுடையவை.
அவை கிரீச்சிடுகையில்
அவை முனகுகையில்
அவை சிணுங்குகையில்
தெரிவிப்பது ஒரே ஒரு விஷயம்தான்:
இந்த எலும்புகள் என்னுடையவையென்று
உன்னிடம் சொல்லுகிறேன்,
அவை என்னுடையவைதாம்
அவற்றைப் புறக்கணிப்பதென்பது
இயலாத காரியம்
ஏனெனில் அவை உருவாக்கும்
என் நாடித் துடிப்பு எனக்கானது மட்டுமே .
*அமெரிக்கக் கவிதாயினி. நாடக ஆசிரியையும் கூட. 2014ல் அவருடைய “எலும்புகளின் சிறு கோரிக்கை” கவிதைத் தொகுதி வெளியானது