மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 9 of 12 in the series 17 ஜனவரி 2021

மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் [ Jaroslav Seifert – Czechoslovak Poet 1901—1986 ]

ஆங்கிலம் : எவால்ட் ஓசர்ஸ்   [ Ewald Osers ]

தமிழில்   : தி.இரா.மீனா

கவிஞனாக இருப்பதென்பது

வாழ்க்கை நமக்குத் தரமுடிகிற

பூமியின் மிக அழகான வியங்கள்

இசையும் கவிதையும் என்று

எனக்கு பலகாலங்களுக்கு முன்பே வாழ்க்கை கற்றுத்தந்தது.

நிச்சயமாக காதல் நீங்கலாகத்தான்.

விருசிலிக்கி இறந்த ஆண்டில்

இம்பீரியல் அச்சு மையம்

பிரசுரித்த ஒரு பழைய பாடப் புத்தகத்தில்

கவிதைக் கொள்கைகள் மற்றும் கவிதை அணி

பகுதியைப் பார்த்தேன்.

பிறகு ஒரு டம்ளரில் ஒரு ரோஜாவை வைத்தேன்.

ஒரு மெழுவர்த்தி ஏற்றினேன்.

பிறகு என் முதல்செய்யுளை எழுதத் தொடங்கினேன்.

வார்த்தை பிழம்பு வெடித்துப் பறந்தது.

என் விரல்கள் கூடப் பற்றியெரிந்தன.

ஸ்தம்பிக்கச் செய்யும் ஓர் உவமையென்பது

ஒருவன் விரலிலிருக்கும் மோதிரத்தை விட மதிப்பானது.

ஆனால் புச்மேஜரின் இயைபொலி அகராதியால் கூட

எனக்கு எந்தவிதப் பயனுமில்லை.

பறித்த என் யோசனைகள் வெறுமையாக இருந்தன

மாயாஜாலமான முதல் வார்தையைக் கேட்டுவிட வேண்டுமென்பதற்காக

வலிந்து என் கண்களை மூடிக்கொண்டேன்.

ஆனால் இருளில், வார்த்தைகளுக்கு பதிலாக

ஒரு பெண்ணின் காற்றில் பறக்கும் கூந்தலையும்

புன்னகையையும் பார்த்தேன்.

அதுதான் என் விதியாக இருந்திருக்கிறது.

என் வாழ்க்கை முழுவதும் மூச்சுமுட்ட அதை நோக்கி

தள்ளாடிப் போய்க் கொண்டிருக்கிறேன்

[  Vrchlický   ,  Puchmajer ]

கவிதை என்று அழைத்தீர்களெனில்.

கவிதையை நீங்கள் பாடல் என்று அழைத்தால்—

மக்கள் அடிக்கடி அதைச் செய்கிறார்கள் —

எனில் நான் என் ஆயுள் முழுவதும் பாடியிருக்கிறேன்.

கைக்கும் வாய்க்கும் போதாமல் எதுவுமேயின்றி

வாழ்ந்தவர்களுடன் நான் அணிவகித்திருக்கிறேன்.

நான் அவர்களில் ஒருவனாக இருந்தவன்

அவர்களின் விசுவாசம், நம்பிக்கை, துன்பத்தைப் பாடியிருக்கிறேன்,

அவர்கள் எதையெல்லாம் கடக்க வேண்டியிருந்ததோ

அவர்களுடன் அதை நானும் கடந்திருக்கிறேன். அவர்களின்

பலகீனம், பயம், மற்றும் தைரியம்,

வறுமையின் ஆழ்ந்த துயரம் என்று

அவர்களின் உளைச்சல்களினூடேயும்…

அவர்களின் இரத்தப் பாய்வு  

என்னைச் சிதற அடித்திருக்கிறது

இந்த மண்ணின் நதிகள், புல், பட்டாம்பூச்சி, உணர்ச்சி பூர்வமான பெண்கள்

என்று எப்போதும் அது அதிகமாகவே பாய்ந்திருக்கிறது.

அதையும் பாடியிருக்கிறேன்.

காதலால் கண் மறைக்கப்பட்ட நான்

விழுந்து கிடந்த பூங்கொத்திலோ

அல்லது ஒரு தேவாலயப் படியிலோ

என் வாழ்க்கை முழுவதும் தள்ளாடியிருக்கிறேன்.

காதலர்கள், அந்த மாலை யாத்ரீகர்கள்…

காதலர்கள், அந்த மாலை யாத்ரீகர்கள்

இருளிலிருந்து இருளிற்குள் 

காலியான நீண்ட இருக்கைகளைப் பார்த்து நடக்கின்றனர்,

பறவைகளை எழுப்புகின்றனர்.

குளத்தின் கரையிலுள்ள அலரிக் கிளைகளின் அடியில்

வாத்துடன் கூட்டை பங்கு போட்டுக் கொண்டிருக்கிற

எலிகள் மட்டும்

சில நேரங்களில் அவர்களை எச்சரிக்கும்.

வானின் மினுமினுக்கின்ற துளைகளை

மேகங்கள் மூடும்போது

கதவுக் குமிழின் மேல் கை வைத்து,

ஒரு மர்மத்தை எதிர்நோக்கி நம்பிக்கையோடு

காத்திருந்த கண் வெறுமையை வெறிக்கிறது.

–நான் எதைக் கண்டுபிடிப்பேனோ என்பதை அறியாத பயம் தவிர

கதவைத் திறப்பதென்பது எனக்குப் பெரிய விஷயமல்ல

நெருங்கிய தழுவலில்

பாரமற்ற நிலையில்

ஆச்சர்யத் திருகலில்

இப்போது அந்த ஜோடி இணைந்து கீழே விழுந்தது

டெய்சி மலர்வளையங்களைச் சுற்றிக் கொண்டு,

பறவைகளின் எச்சம் அணிந்து,

அந்தி மாலையின் செம்மையை விட அதிகமான.

தங்களின் சிவந்த சுழலும் மேலங்கியோடு

மூடுபனி நடனமாடுகிறது.

ஆனால் அந்த இரண்டு இதழ்களுக்குள் இதழ்

இந்த உலகத்திற்கு அப்பாலாய்,

சொர்க்கத்தின் கதவுகளுக்கு அப்பாற்பட்டதாக.

–நீ கீழே விழும்போது ,என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொள்

உன் கழுத்துத் துண்டையும்!

நன்றி.

The poetry of Jaroslav Seifert. Translated by Ewald Osers. Edited an with prose translations by George Gibian. North Haven: Catbird Press, 1998.

Series Navigationதோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)பல்லுயிர் ஓம்பல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *