நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்

This entry is part 14 of 14 in the series 24 ஜனவரி 2021

குமரி எஸ். நீலகண்டன்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் என்பது ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல். ஆழிக்கடலின் சூறாவளியாய் வந்தவை இந்த அழகியக் கவிதைகள்.

ரவிசுப்பிரமணியன் அவர்கள் இசையிலும் கவிதையிலும் ஆழ்ந்த அறிவும் நுடபமும் அறிந்தவர். அமைதியாய் உலவுகிற இந்த அற்புத மனிதரிடம் வலை வீசாமலேயே அகப்பட்டு விடுகின்றன அபூர்வமானபடிமங்களோடு பலதரமான அழகியல் அனுபவங்கள் கவிதைகளாய். இவர் கவிதைகளை படைப்பதாய் நான் பார்க்கவில்லை. கவிதைகள் இவரின் வளமான ஈரமான இதயத்தில் முளைத்து வளர்ந்து பரந்து படர்கின்றன. அவரின் வலிக்கு வல்லமையுள்ள மருந்தாக இவருடன் கவிதை வாழ்கிறது.

இவரின் அகக் கவிதைகள் இவரின் வாழ்க்கையின் பலப் பரிமாணங்களை அழகுறச் சித்திரப்படுத்துகின்றன.

செறிவான சிக்கனமான வார்த்தைகளில் அவரது சிந்தனைக் காட்சிகள் ஆழமான சித்திரங்களாய் நம் மனதில் ஆழமாய் பதிகின்றன. நாதவெளியில் இறையன்புடன் வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞனுக்கு பதின்ம வயது பெண்ணால் கிடைக்கிற அற்புதமான அங்கீகாரத்தை காலம், இடம், மொழி, கலையென எல்லா அம்சங்களையும் வண்ணங்களாக்கி அழகுற சித்திரப்படுத்தி இருக்கிறார் ரவி சுப்பிரமணியன்.

ஒரு தனிமையின் துயரை அழகுற மரம் வழி சொல்லி இருக்கிறார் இந்தக் கவிதையில்

அண்மையெனும் தலைப்பில்.

பல ஆண்டுகள் கழித்து

ஊர் எல்லைக்குள் நுழைந்ததும்

ஆளற்ற பொட்டலின் வேகாத வெய்யிலில்

எல்லோரும் கைவிட்ட பித்தனைப்போல்

தாறுமாறான கிளைகளுடன் மடங்கி வளர்ந்த அந்த

மரம்

தன்னந்தனியே நின்றது

என்னவோ போலிருந்தது.

பறவைகளுமற்ற அதனருகில்

ஆறுதலாய் கொஞ்ச நேரம் சாய்ந்து நின்றேன்

அப்படியொரு சந்தோஷம்.

அநாதரவாய் இருப்பவருக்கு ஆறுதல் அளிப்பதிலும் சந்தோஷம் பெறுவதென்பது கவிஞனுக்கே சாத்தியமானது.

அடுக்ககத்து ஆசாமியின் நாய் வளர்ப்பு ஆசையில் அவரின் லபிப்பினை வார்த்திருக்கிறார் இந்த கவிதையில்…

லபித்தல்

செல்லமாய் ஒரு நாய்க்குட்டி

வளர்க்க நினைக்கிறீர்கள்

வாசலுக்கு வரும் வாசனையுணர்ந்து

வாலசைத்து ஓடி வர வேண்டுமென ஆசை

நடக்கும் போதெல்லாம்

பின்னாலே வர வேண்டுமென

படுத்திருக்கும்போது காலடியில்

கிடக்க வேண்டுமென

விருந்தினர்களிடம்

அதன் இனத்தைச் சொல்லிப்

பெருமைப்பட வேண்டுமென

இப்படி

மகனும் மகளும் விரும்பாத

அடுக்கக வீடு அனுமதிக்காத நாய்

சுவரில் ஓவியமாய் மாட்டப்பட்டிருப்பதை

அவ்வப்போது பார்த்துக்கொள்கிறீர்கள்

சில சமயம்

அது குரைக்கும் சப்தம்

உங்களுக்கு மட்டும் கேட்கிறது.

இவ்வாறு இல்லாத ஒன்றை இருப்பதாய் லயிக்க இயலும் கவிதை மனதிற்கு.

சலிப்பாயிருக்கிறது என்ற தலைப்பில் ஒரு கவிதை…

குறைந்த நம்பகமற்ற இவ்வாழ்வில்

பதற்றப்படுத்தும் கேள்விகளுக்கு மத்தியில்

சதா நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டியிருப்பது

முன்பை விட மென்மையானவனென்று

வன்ம மற்றவனென்று

ஒரு பிரச்சனையுமில்லையென்று

அவ்வளவு வயதாகிவிடவில்லையென்று

சோகமேதுமில்லையென்று

யென்று யென்று யென்று

மனச்சுழலின் அடியில் மறைந்திருக்கும்

துயர்களை தோல்விகளை மறைத்தபடி…

 சமூகத்தின் முன் தன் களங்கமற்ற ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஒரு தனி மனிதனின் சலிப்பில் ஒலிக்கிற தன் சார்ந்த உணர்வு வாதங்களை அழகுற வெளிப்படுத்தி இருக்கிறார் இந்தக் கவிதையில். 

நான் ஏமாத்துக்காரனுமில்லை. நீ எனக்கு எதிரியுமில்ல. புரிஞ்சிக்காம குயுக்தி புத்தியிலிருந்து விடுபடறது வரை நான் காத்திருக்கிறேன். அப்படி ஒரு நண்பனிடம் சொல்லும் விஷயத்தை கவிதையாய் உணர்வுடன் வெளிப்படுத்தி இருப்பதுதான் புரிதல் எனும் கவிதை. உண்மையின் பிரகாசத்தை ஒளி வழி தந்திருக்கிறார் ஒளியெனும் கவிதையில்.

இசையறிந்த கவிஞரானதால் கவிதைகளெல்லாம் இசைவாய் ஒலிக்கின்றன.

தண்ணீர் தாகம் தீர்ந்த முனையில் கவிஞருள் இன்னொரு தாகம் பிரவாகமெடுக்கிறது. அதுதான் உனை என்ற கவிதை

இந்த வேகாத வெங்கோடையில்

காலை எழுந்து

பல்துலக்கி

அருந்துகையில்

அத்தனை சில்லிப்பு

அத்தனை இதம்

சுளுக் சுளுக்கென

விடைபெற்றது தாகம்

குடித்து முடித்ததும்

லேசான பூ வாசனையும் 

அவர்கள் விரும்பியதுதான் நடந்தது என்ற கவிதையில் வெறும் சொற்களையே சேமித்து வைத்திருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு ஏழைக் கவிஞனின் மன நிலையை இதைவிட அழகாக யாரும் அவ்வளவு இலகுவாய் சொல்லிவிட இயலாது.

தாத்தா பாட்டிக்குள் உறங்கும் குழந்தையை இழுத்து வெளியேக் கொண்டுவந்து விளையாடுகிற பேத்திதான் அந்த  தருணம் என்ற கவிதை.

மகளின் மீது அடங்காத அன்பை வெளிப்படுத்துகிற ஒரு அப்பாவின் கவிதை சீதனம்.

தந்தையென்று ஒரு நாய், தாய், பாசம் என மானுடத்தின் புனித உறவுகளை ஆழமான அன்பினை அதிநுட்பத்துடன் வெளிப்படுத்தும் கவிதைகளும் இருக்கின்றன. வளமான வார்த்தைகளும் உளத்தின் உன்னத உணர்வுகளும் மானுட யுகத்தின் மகோன்னத பண்புகளும் இந்த நூலின் முத்திரை முகங்கள். தெளிவுற அறிந்தவர் தெளிவுடன் மொழிந்திருக்கிறார் அழகியலுடன் இந்த அற்புதக் கவிதைகளை

நூல் விபரம்

தலைப்பு – நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

ஆசிரியர் – ரவிசுப்பிரமணியன்

பக்கங்கள் – 132, விலை ரூ.150

வெளியீடு – போதிவனம்,

அகமது வணிக வளாகம்,

12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை,

இராயப்பேட்டை,

சென்னை – 600 014,

bodhivanam@gmail.com

Series Navigationபால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *