சோம. அழகு
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. – ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. படம் blockbuster வெற்றி என்று பிளிறுவதும் யாரைப் பார்த்தாலும் திரும்பத் திரும்ப அதன் புகழ் பாடுவதும்… பொறுத்தது போதும் என எழுத்தாணியுடன் பொங்கி எழுந்து விட்டேன்.
இத்தமிழ் மண்ணில் உருண்டு புரண்டு கதறி ஓலமிடும் அளவிற்கு அப்படம் உலகிற்குப் பறைசாற்ற விழையும் செய்தி அல்லது கடத்த விரும்பும் அம்மேன்மையான உணர்வு என்னவோ? ஆழ்ந்து உயர்ந்து குறுகி நீண்டு யோசித்துப் பார்க்கையில்தான் அந்த உன்னதச்(!) செய்தி புலப்பட்டது. ‘மணமான பின்னும் பழைய காதலின்/காதல்களின் நினைவுகளில் திளைத்துக் கிடக்கும் அந்த உயரிய (!) உணர்வு தவறில்லை’ என்பதே அது. ‘ஏன், மணமான பின் உணர்வு என்பதே இருக்கக் கூடாதா? உணர்வு என்பது உணர்வுதானே? அது எப்போது/எதற்கு/எங்கு வேண்டுமானாலும் வரலாம்’ என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்து என் அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த அந்த அறிவுக் கூடங்களுக்கான பாராட்டு(!) வாசகங்களைத் தயார் செய்ய 11 பேர் கொண்ட குழு ஒன்றை ஏவி விட்டிருக்கிறேன்.
அந்த அரும்பெரும் படைப்பை அநேகமாக எல்லோரும் கண்டிருப்பார்கள் என்பதால் இங்கு கதைச்சுருக்கம் தராமல் நேரடியாக எனக்கு உறுத்திய காட்சிகளைப் பகிரலாம் என எண்ணுகிறேன். பள்ளிப் பருவ இனக்கவர்ச்சி தற்காலத்தில் மிகச் சாதாரணமாக ரசனைக்குரியதாக உயர்த்திப் பிடித்துக் காட்டப்படுவதைப் பற்றிய நெருடல் மனதில் ஓடிக் கொண்டிருக்கையிலேயே அடுத்தடுத்த கொடுமைகள் அரங்கேறின. சாநக்கி எனப்படும் சானு – இவள்தான் கதையின் சானை… மன்னிக்கவும், தானைத் தலைவி. அவள் தலைவன் சிங்கப்பூரில் என்பதால், தானைத் தலைவனாக ர்ர்ராம். பள்ளிக்காலத்தில் சூழல் காரணமாகப் பிரிய நேரிட்டு பல வருடங்கள் கழித்து இருவரும், நண்பர்கள் அனைவரும் கூடுகையில் சந்தித்துத் தொலைக்கிறார்கள் ! சானு அப்போது ராமின் இதயத்துடிப்பை தொட்டுணர்வது கண்டு அவன் மயங்கி விழுவது; சானு தான் உண்ட உணவின் மிச்சத்தை அவனுக்கு அளிப்பது, ராம் அதே தட்டில் அதே ஸ்பூன் கொண்டு மிகுந்த பயபக்தியோடு பிரசாதம் போல் பாவித்து அத்தனை வருட பிரிவாற்றாமையை எண்ணி அதை ஆத்மார்த்தமாக உள்வாங்கி ரசித்து உண்பது; இருவரும் நடுராத்திரியில் சாலையில் உலாவித் திரிவது (ஆமா ! ஆமா! கையப் புடிக்காம தனிமனித விலகலோடதான்!), அவன் வீட்டிற்குச் சென்று (மழை! அவள் என்ன செய்வாள்? பாவம்!) குளித்து அவனது உடையை உடுத்திக் கொள்வது, அதுவும் எப்படி? அதை அணிந்து கண்களை மூடி ஆழ நுகர்ந்து அதில் அவனை உணர முற்படும் அந்தக் கண்றாவியையெல்லாம் எப்படி கவித்துவம் என ரசித்துத் தொலைப்பது? தன் கழுத்தில் தாலி ஏறும் கடைசி நொடியிலும் கூட அவனது வருகையை எதிர்ப்பார்த்திருந்ததாகவும், இன்று வரை மனம் ஒரு மாதிரி இருக்கும் போதெல்லாம் அவனது முகமே தனக்கு ஞாபகம் வருவதாகவும் கூறும் இந்த வெட்கங்கெட்டத்தனத்தை என்னவென்று சொல்ல? அதிலும் ராம் தனது திருமணத்திற்கு வந்திருந்தான் என்பதை அறிந்ததும், தலையில் அடித்து அவள் வெடித்து அழும் காட்சி உச்சக்கட்ட அசிங்கம். அப்படிப்பட்டவள் திருமணத்திற்கு இசைவு தெரிவித்திருக்கவே கூடாது. ‘அவள் சூழ்நிலை அப்படி’ என்ற ஓட்டை வாதத்துடன் வருபவர்களுக்கு – எனில், எல்லாவற்றையும் மனதில் இருந்து தூக்கி எறியும் துணிவும் தெளிவும் வாய்க்கப்பெற்றவளாக, புதிய வாழ்க்கைக்கு உண்மையாக நடந்து கொள்ளும் நேர்மை கொண்டவளாக இருந்திருக்க வேண்டும்.
‘காதல்ங்கிறது ஆழ் மனசில அடிச்ச ஆணி மாதிரி; ஆப்லங்கேட்டாவில் அடி பட்டாலும் மறக்காது…’, ‘வாழ்க்கை கடைசி வரை அப்பப்போ நாம கடந்து போற ஏதோ ஒரு விஷயம் (இடம், பாடல், கவிதை, கதை, இத்தியாதி இத்தியாதி) மனசின் ஒரு ஓரமா உறைந்திருக்கும் பழைய காதலை நினைவு படுத்திட்டேதான் இருக்கும்’ என்பதெல்லாம் மனதின் ஓரம் படிந்துவிட்ட அசட்டுத்தனமான கறையை நியாயப்படுத்தி, மனசாட்சியை சாமர்த்தியமாக ஏமாற்றி, மிக வசதியாகக் குற்றவுணர்வில் இருந்து தப்பித்து, ஆக மொத்தத்தில் தன்னை நல்லவனா/ளாக வரித்துக் கொள்ள கூறப்படும் பிதற்றல்கள். இதுவெல்லாம் ‘காதல்’ என விளிக்கப்படுவதால்தான் அவ்வார்த்தை எனக்குக் கடுமையான ஒவ்வாமையைத் தருகிறது! இன்னும் ஒரு படி மேலே போய் ‘இதெல்லாம் ரொம்ப இயற்கையான விஷயம். அப்படியெல்லாம் switch போட்ட மாதிரியெல்லாம் இந்த உணர்வை தூக்கி எறிய முடியாது’ என்பார்கள் சானுக்களின் ஒன்று இரண்டு மூன்று விட்ட சகோதர சகோதரிகள். அந்த switch போட்டு மறக்க இயலவில்லை எனில், அந்த உடன்பிறப்புகள் மணம் புரிந்து கொள்ள மனதளவில் தயாரில்லை; அதற்குத் தகுதியும் இல்லை என்றே பொருள். போதாக்குறைக்கு சில அரைப்பைத்தியங்கள் ‘நாங்க இப்போ நல்ல நண்பர்கள் மட்டுமே. எங்களுக்கிடையில் வேறொன்றும் இல்லை’ என்று உளறுவது (புதிதாக வரையப்படும் அந்தக் கோட்டின் வரம்பைத் தீர்மானிப்பது மனது அல்ல! Afterall it is all a matter of pure biology and play of hormones.), முற்றுப் பெற்ற உறவை மீண்டும் மிகவும் பண்பார்ந்த நாகரிகமான முறையில் பேணிக் காப்பதாக(!) வாழ்த்துச் செய்திகள், பொதுவான குறுஞ்செய்திகள் பரிமாறி (இவையெல்லாம் மானங்கெட்டுப்போய் மனம் தேடும் காரணங்களே!) ஒருவருக்கொருவர் சொறிந்து கொள்வது, சுரண்டிப் பார்ப்பது என ஈனத்தனங்களில் ஈடுபடுவது – இவை அனைத்தும் ஒரு வகையான மனப்பிறழ்வே. சானுக்கள்(சானு வகையறாவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் குறிக்கும்!) தங்கள் வாழ்க்கைத் துணைக்கு அவர்கள் இருவரது எதிர்கால வாழ்வின் மீது, அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தின் மீது ஒரு நிலையற்ற தன்மையைக்(uncertainty) கற்பிக்கிறார்கள். இதையே அந்த வாழ்க்கைத் துணை செய்தார்களானால் கண்டிப்பாக இவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது. ‘என்னால மறக்க முடியல’ என்று மணமான பின்பும் கடந்த காலக் காதலை நினைந்து ஒப்பாரி வைத்து, கண்கள் பனித்துக் கண்ணீர் உகுப்பார்களாயின், அதை விடப் பச்சைத் துரோகம் இருக்கவே முடியாது. அவர்கள் அந்தப் பசுமையான(!) நினைவுகளுடனேயே தனியாகக் காலத்தை ஓட்டுவதுதானே? எதற்கு இன்னொருவரின் வாழ்க்கையையும் பாழாக்கி…? அந்நபரின் வாழ்க்கைத்துணை இந்தக் கிறுக்குத்தனத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்நபரிடமிருந்து தூரமாக விலகிச் சென்று காலப்போக்கில் ஓர் உணர்வற்ற வறட்சி நிலையை அடைவதுதான் இயற்கை. ஏதோ தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் இருப்பதற்குப் பதிலாக ஒரே வீட்டில் (இந்தச் சமூகத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பொறுமை இல்லாமல்) குப்பை கொட்டுவார்கள்.
‘எப்படி மற்றவர்களுக்கு இப்படம் சற்றும் உறுத்தவில்லை?’ என்று எண்ணியபோது இயக்குநரி(யி)ன் தந்திரத்தை சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு கேடு கெட்ட கதையாயினும் அற்புதமான ஒளிப்பதிவு, நெஞ்சை ஊடுருவிச் செல்லும் வயலின் இசை மற்றும் மிகையில்லா நடிப்பு ஆகிய வஸ்துக்களைக் கொண்டு அந்தக் கருமம் பிடித்த கதையை உலகம் வியக்கும் படைப்பாகச் சமைத்திருக்கிறார்கள். எவ்வளவு சீர்கேடான விஷயத்தையும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சமூகத்தில் எளிதாக ஏற்றிவிடலாம் போலும். இப்படியாக படத்தின் ஒவ்வொரு நொடியும் வெறுப்பும் அருவருப்புமாகக் கழிந்தது. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அநியாயத்திற்கு நல்லவனாகக் காட்டப்பட்ட ‘ராம்’ என்னும் பாத்திரப் படைப்பு. அவனது கண்ணியம் (!) படத்தின் வெற்றிக்குப் பெரும் காரணம். ஒருவேளை அந்தப் பெண் திருமணமாகதவளாகவும் ஒழுக்கமானவளாகவும், அவன் திருமணமானவனாகி இருந்து, சானு நடந்து கொண்டதைப் போல் அவன் அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருப்பானாயின் (உதாரணமாக ‘நீ இன்னும் virginஆ?’ என்று சானு ராமிடம் கேட்டதைப் போல் கேட்பது… இன்னும் பல) அவனை எளிதில் ‘பொறுக்கி’ என அடையாளம் கண்டிருக்கும் இச்சமூகம். சமூக மதிப்புகள் இரு பாலருக்கும் பொதுதானே !
ஒவ்வொரு காட்சியிலும் திரையில் இறுதிவரை காட்டப்படாத சானுவின் கணவனுக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவிற்கும் அவள் கணவன் கொடுமைக்காரன் என்ற இம்மி அளவிலான நியாயப்படுத்துதல் இருந்தாலும் பரவாயில்லை. அவன் நல்லவன் என்றும் அருமையான குடும்பம் வாய்க்கப் பெற்றது என்றும் அவளே தரும் நற்சான்றிதழ் வேறு. ‘அந்த அப்பாவி ஜீவனுக்கு இன்னும் தன் மனைவியின் மனதில் இன்னொருவன் (ஓரமாகவோ என்ன எழவோ!) இருக்கிறான் என்ற உண்மை தெரிந்தால், இங்கு நடந்து கொண்டிருப்பது அறிய வந்தால் எவ்வளவு வலிக்கும்? சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விட மாட்டானா? இத்தனை நாள் அவளுடனான வாழ்க்கை மொத்தமும் பொய்யாகத்தானே தெரியும்?’ என்றெல்லாம் அந்த முகமறியா கதாபாத்திரத்தின் மீது கழிவிரக்கம் உருவானது. பாவப்பட்ட அந்தப் பிறவிக்காகப் பச்சாதாபமே மேலிட்டது. இவ்வாறாகத் திரைப்படம் முழுக்க துரோகத்தின் நெடியே தூக்கலாக… நாற்றம் தாங்கவில்லை !
‘அதான் ஒன்றும் தவறாக நடந்துவிடவில்லையே? இருவரும் கண்ணியம் காத்தார்களே?’ என்று மகோன்னதமான கருத்தை முன்வைக்கும் ஆன்றோரே! சான்றோரே! அவள் சிங்கப்பூர் கிளம்பும் வரையிலான ஒவ்வொரு நிமிடத்தையும் தன் கணவனிடம்…. ஏன், அவள் தோழியிடம் விவரிக்கும் தைரியம் அவளிடம் உண்டா? ம்ஹூம்… இது சரிப்பட்டு வராது. இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்கு உறைக்காது. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பெண் மணமான பிறகு அர்த்த ராத்திரியில் யாருடனோ பொறுமையாக அளவளாவிக் கொண்டே நடந்து செல்வதைக் காணுகையில், ‘பாரேன் ! எவ்ளோ ஒழுக்கமா ஒரு அடி தள்ளி இருந்தே பேசிட்டு நடந்து போறா? பிரமாதம்’ எனப் புளகாங்கிதம் அடைவீர்களா அல்லது ‘இந்நேரம் யாரு கூட இப்பிடிப் போகுது இந்தத் தறுதலை, அதுவும் பிள்ளைய வீட்டுல விட்டுட்டு’ என்பீர்களா? ‘அந்தப் படம் ஓர் அழகான கற்பனை மட்டுமே ! எல்லாவற்றையும் வாழ்வில் பொருத்திப் பார்க்கக் கூடாது’ எனத் தத்துவம் பேசுபவர்களுக்கு – Rapunzel, Cinderella, Snow White போன்ற fantasyகள் ரசனைக்குரியவையே. இந்தப் படம் நிதர்சனத்திற்கு வெகு அருகில் இழையோடிச் சென்று அந்நிகழ்வுகளை ஏதோ எதார்த்தம் போலவே காண்பித்து ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே இதைப் போற்றுதலுக்குரியதாகப் பாவிப்பது மடமை.
படம் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது என்பதற்காகவே அது சரி என்றாகிவிடாது.
“If fifty million people say a foolish thing, it is still a foolish thing” – Bertrand Russell
“A lie doesn’t become truth, wrong doesn’t become right and evil doesn’t become good just because it’s accepted by a majority” – Rick Warren
‘காதல்ங்கிறது ஒரே ஒரு செடியில் ஒரே ஒரு முறைதான் பூக்கும்…’, ‘காதல்ங்கிறது பட்டாம்பூச்சி மாதிரி; புழுப்பூச்சி மாதிரி….’, ‘வாழ்க்கையில் ஒரு தடவையாவது காதலித்துத் தோல்வி அடையாதவர்கள் இருக்கவே முடியாது’, ‘கல்யாணத்திற்கு முன்னால கண்டிப்பா எல்லோருக்கும் ஒரு காதல் இருந்திருக்கும்’, ‘காதல்னா……’ என சில பல மேதாவிகள் சினிமாவில் மொன்னைத்தனமாகப் பக்கம் பக்கமாக வசனம் பேசி வைத்ததில், ‘ஆ’ன்னா ‘ஊ’ன்னா அவனவன் தத்துவம் என்ற பெயரில் கொக்கரித்து வைத்ததில், கண்ட குப்பையையும் ‘இதுதான் உலக நியதி’ என வசனகர்த்தாக்கள் அற்பமாக ஒரு விதியை உருவாக்க முனைந்ததில் விளைந்த தாக்கம்தான் இந்தக் கைகூடா காதல்களின் ஆராதனை. சமூகப் பொறுப்பின்றி சமூகப் பிறழ்வுக்கான போதனை. காதல் தோல்விக்குப் பிறகு அதிலிருந்து விடுபட இயலாமல் அல்லது விரும்பாமல், அதேசமயம் வாழ்வில் தனிமையை எதிர்கொள்ளப் பயந்து ஒரு துணையைத் தேர்வு செய்வது சுயநலம் அல்லாமல் வேறு என்ன? இவர்களுக்கு அத்துணையின் உணர்வுகளோடு விளையாட எந்த உரிமையும் கிடையாது என்பதை யார் புரிய வைப்பது ? பழைய காதலைத் தூக்கிப் போடுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை. தயவுசெய்து தண்டக் கருமாந்திரங்களுக்கெல்லாம் புனிதத்தை ஏற்றித் தொலைக்காதீர்கள் !
– சோம. அழகு
- புனிதக் கருமாந்திரம்
- டெனிஸ் ஜான்சன் கவிதைகள்
- பீதி
- படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
- எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு
- மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி
- காலம் மகிழ்கிறது !
- மற்றொரு தாயின் மகன்
- இலைகள்
- மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்
- ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)
- நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்