அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

This entry is part 1 of 13 in the series 14 பெப்ருவரி 2021

 

 

 

இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் என்ற நூல். பணம் சம்பாதிக்க மட்டுமே துபாய்க்கு செல்வார்களென அறிந்திருக்கிறோம். துபாய்க்கு எத்தனை பெயர்கள் வழக்கில் இருக்கின்றன, எந்தக் காரணங்களால் அந்தப் பெயர்கள் வந்தன போன்ற வேர்ச்சொல் விபரங்களுடன் வரலாறு, சமூகம், பொருளாதாரமென பல பரிமாணங்களில் ஏழு தேசத்தைப் பற்றிய ஒரு அதிக துல்லியமான சித்திரமாக ஆவணப் பதிவாக இந்த நூல் உருவாகி இருக்கிறது.

புஜைரா, ராஸ் அல் கைமா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், துபாய், ஷார்ஜா என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களைப் பற்றிய அருமையான சித்திரம் இந்நூல். அமீரகங்கள் ஒவ்வொன்றின் அமைப்பு, அதன் ஆட்சி முறை, அவர்களின் உரிமைகள், சமூகச் சூழலுக்கேற்ற அவர்களின் நீதி முறை எல்லாவற்றையும் அழகுற பதிவு செய்திருக்கிறார் அபிநயா. மற்ற உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் அமீரகங்களின் பங்கையும் பதிவு செய்திருக்கிறார்.

அரபுக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாய் விளங்கும் ஷார்ஜாவைப் பற்றி ஏராளமான வியக்கத்தக்க செய்திகள். செய்தித்தாள்களின் வரலாறு, அற்புதமான அருங்காட்சியகங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பிலிப்பினோ தாதிகள், சர்வதேச புத்தகத் திருவிழா, வியக்க வைக்கும் பாலைவன உலா சவால்கள், வேடிக்கைகள் இன்னும் கேளிக்கைகளென எல்லாவற்றையும் சுற்றி வந்த சுவையோடு ஒட்டக சவாரியாய் உயரத் தந்திருக்கிறார். மணல் ஓவியங்கள் முதல் தனுரா நடனங்கள் பற்றிய செய்திகளும் உண்டு. பாலைவனச் சமையலை அழகாக எழுத்தில் சமைத்து தந்திருக்கிறார்.

நான் அவன் இல்லை படத்தின் ஏனெனக்கு மயக்கம் என்ற பாடலில் படமாக்கப்பட்ட அமீரகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முசண்டம் கருமலைகளையும் எழுத்தில் காட்சிப் படுத்தி தந்திருக்கிறார். உள்ளூர் பெண்களைப் பாதுகாத்த அந்தப் பகுதி குகைகளைப் பற்றிய செய்திகளும் சுவையானவை. இபன் பதூதாவின் குறிப்புக்களையும் அவரின் இந்தியப் பயணப் பதிவுகள் பற்றிய தகவல்களும் இந்நூலில் இருக்கின்றன. துக்ளக் ஆட்சியில் அவரின் அரசியல் பணியில் இருந்த இபன் பதூதா மொத்த நீதி நிர்வாகத்தையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்.

இந்தியாவின் அக்கால செல்வச் செழிப்பினையும் அங்குள்ள பதூதா பேரங்காடியின் இந்திய அரங்கில் காண இயலுமாம். தாஜ்மகால், செங்கோட்டை போன்ற நினைவுச் சின்னங்களுடன் பன்னிரெண்டு ராசிகளைவிளக்கும் சின்னங்களும் அங்கே வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பதிவு செய்திருக்கிறார். இந்திய யானையின் அம்பாரியிலிருக்கும் அழகான மணிக்கூண்டையும் அழகுற சித்திரப் படுத்தி இருக்கிறார் நூலாசிரியர். துபாய் உலக வர்த்தக மையம், மிருகக்காட்சி சாலை, துபாய் பட்டத் திருவிழா, உயரப் பறக்கும் உணவுக் கூடம் முதல் ஸ்கை டைவிங்கென பரந்த பறவைப் பார்வை இந்த நூலில் கிடைக்கிறது.

பண்டையக் காலத்தில் பாலை விவசாயத்திலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபட்ட அமீரகப் பெண்களைப் பற்றிய செய்திகளும் இந்நூலில் உண்டு. பெண்களுக்காக ஒரு ராணுவக் கல்லூரியையே அமீரகத்தில் தொடங்கி இருக்கிறார்கள் என்ற செய்தியையும் இந்த நூலில் அறிய இயல்கிறது. அமீரக கோவில்கள், தேவாலயங்கள், குருத்வாரா, ஜெயின் வழிபாட்டு தலங்கள் பற்றிய செய்திகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

அரபு தேசங்களின் நீர் மேலாண்மை பற்றி நுட்பமாகச் சொல்கிறார். பட்டாம்பூச்சி பூங்கா பட்டாம்பூச்சிகளோடு நம்மை பறக்க வைக்கின்றது.அபுதாபியைப் பற்றியும் அபுதாபியின் புரட்சிக் கவிஞனைப் பற்றியும் செய்திகள் உள்ளன அபிநயாவிடம். அமீரகத் தேசிய வாகன அருங்காட்சியகம், லிவா பேரீட்சைத் திருவிழா உட்பட்ட செய்திகளைச் சுவைபட எழுதி இருக்கிறார் இந்நூலில்.

ஒட்டகப் பால். ஒட்டக ஐஸ் கிரீம், ஒட்டகப் பந்தயம் என ஏராளமான தகவல்கள் சுவையாக இருக்கின்றன. அஜ்மான் தேன் திருவிழாவைப் படித்த போது நூலின் சுவை நினைவிற்கு வந்தது. தேனீ போன்ற நூலாசிரியரின் சுறுசுறுப்பும் அவரது எழுத்தில் தெரிந்தது. அமீரக எழுத்தாளர்களைப் பற்றியும் வானொலி நிலையம் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். அமீரக வாழ்வியலில் அன்றாடம் வழக்கிலிருக்கும் சில சொற்களை தமிழ் பொருளுடன் பதிவு செய்திருக்கிறார். அமீரக உணவு முறையை அறிய இயல்கிறது.

வியப்பவைகளை மட்டும் அவர் நூலாக்கி விடவில்லை. வியப்போடு உள்வாங்க நிறைய வரலாற்று தகவல்களையும் கலையுணர்வோடு பதிவு செய்திருக்கிறார். இதற்கெல்லாம் மிகுந்த பொறுமை, பொறுப்புணர்வு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு, ஆழ்ந்த ஆர்வம், எழுத்து திறன், கலைப் பிடிப்பு என எல்லாம் நிறைந்திருந்தால்தான் அது சாத்தியப்படும். அதை அந்த தகுதிகளுடன் அழகாக தந்திருக்கிறார் அபிநயா ஸ்ரீகாந்த். இது ஐக்கிய அரபு அமீரகங்களின் ஒரு வரலாற்று ஆவண நூல்.

அமீரகத்திற்கு சுற்றுலா சார்ந்தும் பணிக்காகவும் செல்வோர் நிச்சயமாக இந்த நூலைப் படித்தால் ஏற்கனவே பயணித்த நாட்டிற்கு நீங்கள் பயணிப்பது போன்ற முன்னனுபவத்தை உணர்வு பூர்வமாக இந்த நூல் கொடுக்கும். நம் நாட்டைப் பற்றி நாம் எழுதியதை விட பல ஆங்கிலேயர்கள் எழுதிய நூலைப் பார்த்து படித்து நாம் வியப்பதுண்டு. அதேபோல் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் என்ற நூலின் தரத்தில் அந்த நாட்டைப் பற்றி அவர்களிடம் ஆவணமாய் இந்த அளவிற்கு ஒரு நூலிருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. அந்த அளவிற்கு மிகத் துல்லியமாய் ஒரு அதி உன்னத துல்லிய ஒளிப்படக்கருவியிலிருந்து வருகிற படமாக இந்த நூலைத் தந்திருக்கிறார்.

ஆடம்பர கேளிக்கை வாழ்வின் மாய உலகத்திற்குள் மதி நுட்பத்துடன் அதி நுட்ப கலையுணர்வுடன் இந்த நூல் வழி அழைத்துச் செல்கிறார் அபிநயா ஸ்ரீகாந்த்.

நூலின் பெயர் – ஏழு ராஜாக்களின் தேசம்

நூலாசிரியர் – அபிநயா ஸ்ரீகாந்த்

நூல் பக்கங்கள் – 248

நூல் விலை – ரூ 275

வெளியீடு – யாவரும் பப்ளிஷர்ஸ்

மின்னஞ்சல் – abinayadurai@gmail.com

editor@yaavarum.com

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *