கணக்கு வாத்தியார்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 13 in the series 14 பெப்ருவரி 2021

   பநியான்

எல்லா   கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும்  ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன்  வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன  செய்வார்  ? எப்படிப்  பார்த்தாலும்  அவர்   பூகோள  வாத்தியார்தானே ? .அவர்  போட்ட  நாலைந்து  கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான் பிரச்சினையே.  அதுவும் அவர் ஓய்வு  பெற்ற  காலகட்டத்தில் .

 

தன் பையன்கள் இரண்டு பேருக்கும் அடலேறு , ஆடலழகன் என்று பெயர் வைத்திருந்தார்.  தமிழ் நாட்டில்  தமிழில் பெயர் வைப்பது பற்றின் வெளிப்பாடு மட்டுமல்ல. தறுகண்மையும்  கூட   என்பது அவர் கணக்குகளில்  ஒன்று .

     அது  ஒரு ஜூன்  மாதம் . ஆமாம் நன்றாகவே  நினைவில் இருக்கிறது . அவர் பணி புரிந்த பள்ளிக்கூடத்தின்  ஐம்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி  பெரிய விழாவுக்கென்று  ஏற்பாடுகள்  செய்யப்பட்டு  ஊர் முழுவதும்  ஒரே  கோலாகலம் . . கலக்டர் , எம் .எல் .ஏ  என்று பிரமுகர்கள் வருகையோடு   அவரையும்  முதன்மைப்படுத்தி மலர் வெளியிடுவதென்று  அவரை  சிறப்பாக  அழைத்திருந்தார்கள்   அந்த  விழாநாளும்  அந்த  மாத பென்ஷன்  வாங்கும் நாளும் ஒன்றாக  வந்தது. .  அதனால்  அடலைக்  கூப்பிட்டு     பென்ஷன்  வாங்கும்  வேலைய கொஞ்சம் போய் பார்த்துட்டு வாப்பா என்று அதற்கான    ஒப்புதல்  தாட்களைக்  கொடுத்தார் .அவனுக்கு அன்று இரவுப் பணிதான்  என்பதால்  தனியாக  லீவுஎடுக்க வேண்டிய   தேவையும் இல்லை . 

ஒரு நிமிஷம் போய் சொல்லிட்டு வந்திடறேன்னு உள்ளே போனவன்தான் .சிறிது நேரம் கழித்து வந்தான் .

 தம்பிகிட்ட கொடுத்திருக்கம்பா; இதோ பொறப்பட்டுக் கிட்டிருக்கான்பா என்றான் .இரண்டு பேரும்  ஒரே  ஊறலிலான   மட்டைகளே   என்றாலும்  வெவ்வேறு வேலைகளைப்   பிரித்துதான்  கொடுப்பார் .சின்னவன் பணப்பட்டுவாடா , பணப்பரிமாற்றம்  எதுவாக இருந்தாலும்  தனக்கு குறிப்பிட்ட சதவீதம் நிறுத்திக்கொள்ளுவான். கடைக்காரர்கள்  ஆடித்தள்ளுபடி ,  ஆவணித்தள்ளுபடி போல  இது ஆடல் தள்ளுபடி .    எப்படியிருந்தாலும்  பெட்டிப்பாம்பாக ஆகி விட்டது  வீட்டில் மட்டுமல்ல  வெளி வேலைகளிலும்தான்.  ஆனால் என்ன ? அவர் கணக்கு தப்பாகப் போனதாகச்   சொல்லமுடியாது .  ஏனென்றால் அவர்கள் ரெண்டுபேருமே   எண்கணித  அடிப்படையில் தமிழ்ப் பெயரிலிருந்து  நவீனமாக  மாற்றிக்கொண்டு விட்டார்கள் .

  இன்றைய  வேகமும்  விறுவிறுப்பும்  கூட்டுக் குடும்பம்  என்ற ஓட்டைப் பிரிக்கும்  என்று ஆகிவிட்டபடி  அவர் வெளியே வந்து   தனியே  சுவர்  எழுப்பாமல்  பெரியவன் வீட்டுப் பக்கவாட்டில்  சாரம்  இறக்கியது  போல  இறக்கி விட்டார் . அதையே  வீடு போல ஆக்கி   தங்க  ஆரம்பித்தார்கள் . சாதம் மட்டும் வடித்துக்கொண்டு  சாம்பார் , பொரியல்   போல  மற்றது  கொடுக்கச்சொல்லி கேட்டார் .அவர் கேட்ட  தாமதம் ,கொஞ்ச  நேரத்தில் ஒரு பட்டியலோடு  வந்தான் சின்னவன்.. குறுக்கும் நெடுக்குமாக கோடுபோட்டு  ஒரு  தாள் . .   கட்டம் கட்டவில்லை. அவ்வளவுதான் ..இருவரில் சுட்டி இவன்தான் என்பது இதுதான் போலிருக்கிறது. தேதி ,கிழமை  வரிசைப் படுத்தி யார் வீட்டிலிருந்து ரசம், எங்கிருந்து  சாம்பார் ,  பொரியல்  ,கூட்டு இதற்கான  ஏற்பாடு , யார் கொண்டு வந்து கொடுப்பார்கள் ,ஊருக்குப் போயிருந்தால் என்ன மாற்று ஏற்பாடு என்று துல்லியமாகப்  பட்டியலிட்டிருந்தது .                                                                            

அவர் வேலை பார்த்தபோது  சில பாடம் நடத்தும்  ஆசிரியர்கள் ஒத்துப் போகாதபோது ,தலைமை  ஆசிரியர்க்கு    உதவியாக  இவர்தான் வகுப்பு, ஆசிரியர் ,பாடவேளை என்று அட்டவணையாகவே போட்டுக் கொடுப்பார் .   ஏதோவொரு   விதத்தில் அந்த சாமர்த்தியம் அப்படியே தொடர்கிறது போலும் .

ஒரே குடும்பத்தில்  அக்கா,தங்கை  இரண்டு பேரையும் அண்ணன் ,தம்பிக்கு கல்யாணம் செய்து  வைத்தால்   ஒற்றுமையாக இருப்பார்கள் என்று இவர்தான் இப்படி ஒரு கணக்கு போட்டார் .அந்தக் கணக்கும் தப்பாகப்போய் விட்டதென்று  சொல்ல முடியாது.இவரைக் காயப்படுத்தி,கதறடிப்பதில் பட்டியல் போட்டு ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்    அக்கா  தங்கை ரெண்டு பேரும் ?

எங்கோ பிறந்து ,கல்லூரி  படித்து , வேலைக்கு  வேறிடம் வந்து, கடைசிக் காலத்தில்  எங்கே தேங்கி  திகைத்துப்போய்  கிடக்கப் போகிறோம்  என்று இப்போதே முடிவு செய்யமுடியாதென்று , ஸ்ரீரங்கத்தில்  பெருமாள்சன்னிதியிலிருந்து  எட்டிப்பார்க்கும்  தூரத்தில் அரண்மனை  போன்ற மனை என்ற  விளம்பரம் பார்த்து  இதை வாங்கிப்போட்டு வைத்தாலென்ன  என்று  முடிவு  செய்தார் நெருங்கியபின்தான்  தெரிந்தது .நூற்றிருபதுஅடி    உயரத்துக்கு  மேடையெழுப்பி தொலைநோக்கி வைத்துப்பார்க்கும்போதுதான்  எட்டிப்பார்க்கும் தூரம் என்பதுஎன்று . மனைமட்டும்  வாங்கிப்போட்டு விட்டாரேதவிர  வீடுகட்டுவதற்கு  நேரம் வரட்டும் .  பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் .

இதற்கப்புறம்தான்  தலைவலியும்,  கழுத்து வலியும்  வேறுவேறு வேஷம் போட்டுக்கொண்டு  வந்தன. பஸ்நிலையத்தை  வேறுஇடத்துக்கு  மாற்றுவது  என்ற யோசனை  கட்சிக்காரர்கள்  தலையில்  வேர்விட்டு  இவர்வாங்கிய  மனையின்  பக்கம்தான் புதிய  பேருந்து நிலையம்  என்று  தீர்மானமானது.  இவர்  மனையில்  டயர்கள் , காலிபாட்டில்கள் என்று ஒவ்வொன்றாக  குவியத் துவங்கின . சாமியார்  பூனைவளர்த்த  கதையாக  ஆனது . இந்த மாதிரி தொந்தரவுகளைத்  தவிர்ப்பதற்காக ,பக்கத்திலிருந்த  பூக் கடைக்காரரை  பார்த்துக்கொள்ளச்  சொல்லலாம்    என்று   அருமையான  யோசனை கொடுத்தார்  ஒருவர் . அவர் பையன்களை  மாசத்துக்கு ஒரு முறையாவது  போய் பார்த்து விட்டு வரச்சொன்னால்  அவன்கள் இரண்டு பேருமே  காது ஒன்று இருப்பதாவே  காட்டிக்கொள்ளவில்லை . அவ்வளவு ஒற்றுமை . ரொம்பநாளாகிறதேவென்று  சமயபுரம் திருவிழாவையொட்டி  பார்த்துவிட்டு வரலாம் என்று போனவர்தான் .   அவர்  மனையில் திருவரங்கம் இளநீர் என்று  பெயர்ப்பலகை  மற்றும் கைபேசி எண்ணோடு வியாபாரம்  பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது . திரைகளை நீக்கியபின்தான்   ஜோதி  தெரிவது போல வாரம், மாதம் என்று திரைகளை நீக்கியபின்தான் ஆரம்பத்தில் காவலாளி மாறி பார்த்துக்கிறேன்னு சத்தியம் செய்த   ஆள்தான் அந்த பிரகஸ்பதி  என்பது  தெரிந்தது . இதற்குமேல்  அந்த வார்டு கவுன்சிலருக்கு பினாமியென்பது அவனுடைய  தகுதிப் பட்டியலின்  முக்கியமான இன்னொரு அம்சம் .இதற்கு  என்ன செய்யலாம் என்று அந்தப் பகுதி வெள்ளை  வேட்டிகளைப்  பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டால் ஒவ்வொரு இடத்திலும் அண்ணனைப்பார்த்துட்டு வாங்க என்று ஒரே மாதிரியான பதிலே   எதிர் கொண்டார் . அதன் சூட்சுமம்  என்னவென்று கண்டுபிடிக்க அவர்  எடுத்த முயற்சிக்கு  பூகோளத்தில்  டாக்டர்  பட்டமே வாங்கியிருக்கலாம் .இதுஇப்படியே  நீண்டுகொண்டேபோனதும்  நீதிமன்றம்தான் புகலிடம்   என்று போனவருக்கு வனவாச கணக்கெல்லாம் தாண்டி முடிந்தாலும் தீர்ப்பான தொகையை வாங்கிக்கொடுப்பதற்கு  வக்கீல் விழுக்காடு விழுங்கினால்தான்  ஆச்சு என்று. விடாப்பிடியாக  இருந்தார்..   வாங்கிய  ஃபீஸ்  வாதாட மட்டுமே  என்பது அவர் வாதமாக  இருந்தது . இவர் மனையில் கடை போட்டவனை  வெளியேற்றுவதற்கு   போலிஸ் தரப்பிலும் கேட்டதைப் பார்த்து  இவர் ஆடிப்போய்  விட்டார் . பையன்களும்  எனக்கு மட்டுமா கொடுக்கப் போகிறார்னு ஐச்சாட்டியமா  அசையமாட்டோம்னு  இருந்துகிட்டானுவ . 

இதுக்கு மத்தியில பழையபள்ளிமாணவர்கள்  சந்திப்பாக ஏற்பாடு செய்த விழாவுக்கு  அழைத்தார்கள்  என்று போயிருந்தார் . ஜெயப்ரகாஷ், கோபாலகிருஷ்ணன்  என்று அவரிடம் படித்து உயர் பதவியில் இருப்பவர்கள்  வந்து சந்தன மாலை  அணிவித்து . நினைவுப் பரிசும் அளித்து  வணங்கி நின்றார்கள் . அவர்களோடு கூடவே அந்தக் கூட்டத்திலேயே   நெடுநெடுவென்று அண்ணாந்து பார்க்கும்படியான  உயரத்தில்  இருந்தவரைப் பார்த்து அவரால்  நினைவுக்குக்  கொண்டு வர முடியவில்லை .

சார்  என்ன ஞாபகம்  இருக்கா?  எப்பவுமே முதல்ல வருவானே  பாலக்குமார்  அவன் கூடவே வால் மாதிரி ஒட்டிக்கிட்டே  வருவேனே  அந்த டேவிட்தான்   சார்  நான் .

ஆமாம் டிஸ்கன்டினியூ இல்ல ?

அதனால என்ன சார் ? கற்றுக்கொள்ளாத மாணவன் காணிக்கைன்னு   சொல்லி

ஒரு புத்தகம் , காசோலை ,ஒரு கட்டிடத்தின் வெளிப்புறத்தை  வரைந்து லேமினேட்  செய்த  கோப்பு  என்று  கொடுத்து விட்டுப்போனான் .  சார் சாயங்காலம் வந்து அம்மாவையும் பாக்கிறன்  சார் என்று போனான் . வீட்டில் வந்து பார்த்தபோது  அந்த காசோலை   தீர்ப்பளிக்கப்  பட்டு வாங்கித்தரச்சொல்லி   வக்கீலிடம் மன்றாடிய தொகை. அந்த வரைபடம்  அவர் மனையி லிருந்த     கடையை அப்புறப்படுத்தி  சுற்றுச்சுவர்  கட்டி எடுத்தபடம் . மாடு மேய்க்கத்தான் லாயக்கென்று    சொல்லப்படுபவர்கள் உருப்படமாட்டார்கள்  என்பது  அவர்   போட்ட  மூன்றாவது கணக்கு . அதவும் தப்பாகிப் போனாதற்கு சாட்சியாக இதோ இந்த  டேவிட்

இன்னும் ஒருநாள் .வேகவேகமாக வீட்டுக்குள்  வந்த கஸ்தூரிபாய் முருகன்பட  காலண்டர் ஆணியில்  தொங்க விட்டிருந்த பையை எடுத்து  சேலை, ரவிக்கை  என்று ஒவ்வொன்றாக  அடுக்கி வைக்க ஆரம்பித்தாள் . பெரிய கோணிசாக்கை  படுக்க வைத்த  அகலத்துக்கு இருக்கும்    அந்தப் பை . ஒரு வாரத்துக்கான  துணிகள் ,சோப்பு ,சீப்பு  எல்லாம் அதில் அடக்கி விடலாம் . முன்பதிவு  செய்து  குறிப்பிட்ட  நேரம் புறப்படும் ரயிலுக்கே  கடைசி நேரம்    வரை  இதோ புறப்படுகிறேன்   இப்போதே  புறப்பட்டுவிட்டேன்  என்று மாயம் காட்டிக்கொண்டிருப்பாள் .    இப்ப எந்தவண்டிய  புடிக்க புறப்பட்டுக்  கிட்டிருக்க  என்று  கேட்டுவிட  நினைத்தவர்  எதற்கு வம்பு என்று அடக்கிக்கொண்டுவிட்டார் . 

நான் பாராயணம் பண்ற திருமுறை எடுத்து வச்சிட்டியா என்று கேட்டார் .

நான்மட்டும்தான்      போறன் சின்னமருமக  ஊருக்கு .பிளசர் கார் போவுதாம் .அதில இடம் இருக்கு .எறக்கிவுட்டுடுவாங்க என்றான் சின்னவன் . என்றாள் .முதல் முதலாக  ஊசி குத்தியது போல வலித்தது  சபேசனுக்கு . என்ன எதற்கு  என்று கேட்டு என்ன ஆகிவிடப்போகிறது ? இவ்வளவு வருஷத்து  வாழ்க்கைக்கான  அர்த்தம்  இதுதானா ?  என்று இருந்தது .

பிரிட்டிஷ்காரர்கள் வழியில் என்ன கற்றுக் கொண்டார்களோ  இல்லையோ ? ஒரே நாட்டை  துண்டு போட்டது போல  கணவன் மனைவியை  ரெண்டாக  பிரித்து  வைக்க  தெரிந்து வைத்திருந்தார்கள் . காரணங்களுக்கா  பஞ்சம் ? செலவைக் கூறு போட்டுக்   கொள்கிறோம் என்பதற்கு மேல்  உகந்த  காரணம்  தேவைப்படுகிறதா  என்ன ? .

ஒருவருக்கொருவர்  பிரியமாய் விட்டுக்கொடுத்து வாழும் தம்பதியர் ,பிள்ளைகள்  என்ன  எப்பேர்பட்ட  ஆள் சொன்னாலும்  தனித்தனியே  போக மாட்டார்கள்  என்பது  அவர் போட்டிருந்த  இன்னொரு  கணக்கு

கஸ்தூரியே .   வேறிடம் போனபின் அவருக்கு  பிள்ளைகளே  இல்லாத பள்ளிக்கூடம் போல   ஆகிவிட்டது . இனி எங்கிருந்தாலென்ன ?  திருப்பழாய்துறை  முதியோர் இல்லம் பார்த்து சேர்ந்தார் .எதுவும் கொண்டு வரவேண்டாம் . சட்டையில் பை மட்டும் இருந்தால் போதும் என்ற உச்சத்துக்கு விளம்பரப்படுத்தியிருந்தார்கள் .  சாப்பாடு ,வழிபாட்டுக் கூடம் ,படிப்பகம் ,எல்லாமே பரிசோதனைக்களம் போலவே இருந்தன .ஒவ்வொன்றின்  நடப்பும் சோதனைக்குழாயில்  என்ன கூட்டுப்பொருள்  புகையப் போகிறதென்று தெரியாத விறுவிறுப்புடன் கிலியூட்டிக்கொண்டிருந்தன . ஒருவாரம்தான்  ஆகியிருக்கும் . விடிந்தால்  செவ்வாய்க் கிழமை . கண்ணைத்திறக்கும்போது இமைகளை யாரோ  அழுத்துவதுபோல   உணர்ந்தார் . அவருக்குக் கொடுத்திருந்த போர்வை ஏதோ உறுத்துவது  அவருக்கு  தோன்றிக்கொண்டேயிருந்தது    . கொப்புளங்களாகவும் தடிமனாகவும் நெஞ்சு, முதுகு , கைகால்  எங்கும் பரவிக்கிடந்தது .  மனிதர்கள் தொடர்புதான் ஒவ்வாமை உண்டாக்கும் .அவர்கள்  பயன் படுத்தும் பொருட்கள் அல்ல . இது அவருடைய இன்னொரு கணக்கு . இதுவும்  தப்பென்பதை அவருடைய  உடலே  எழுதிக்காண்பித்து விட்டது .

பெண்கள் , பிள்ளைகளைப்   படிக்க வைக்க வேண்டும்  என்பதில் நாம் காண்பிக்கும் தீவிரம் . அதை அடையும் வேகத்தில் அவர்கள்  பெற வேண்டிய பாசமும் ,அக்கறையும்   பண்பும் போய்ச்சேர்ந்தனவா   என்று பார்க்கத்  தோன்றாமல்  விட்டு விடுகிறோமோ ? . இந்த ஆணிவேரை  விட்டுவிட்டு சல்லிவேரை சலித்துப் பார்க்கிறோமோ ? .  முதியோர் இல்லங்கள் இதைத் தீர்த்து வைக்கும் என்பது  புட்டிப்பால்   சரியென்பது  போலத்தானே ? இது அவர் போட்டுக்கொண்டிருக்கும்  இன்னொரு  கணக்கு .     

         

   .   

 

 

Series Navigationதடகளம் மைதீனின் கனவு
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    வாழ்க்கை கணக்குத் தப்பிய கணக்கு வாத்தியார் சபேசனின் துயர்மிகு வாழ்வியல் கணக்கு எள்ளலோடு சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப்பாடங்கள் வாழ்க்கையோடு பிணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கல்விச்சூழலில் கணக்குவாத்தியர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?.வாழ்த்துகள் பனியான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *