கவிதையும் ரசனையும் – 11

author
0 minutes, 3 seconds Read
This entry is part 13 of 13 in the series 14 பெப்ருவரி 2021

 

அழகியசிங்கர்


          இப்போது நான் எழுதப்போகிற கவிதைத் தொகுதி சற்று வித்தியாசமாக இருக்கிறது.  இந்தக் கவிதைப்புத்தகத்தின் பெயர் ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி.’  இதுவும் மணல்வீடு பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது. கவிதைகளை எழுதியவர் செல்வசங்கரன். 

          இதில் சில கவிதைகளைக் குறித்துதான் பேசப் போகிறேன்.  இக் கவிதைகளை எதுமாதிரி வகைமைப் படுத்துவது என்று தெரியவில்லை.

          பெரும்பாலான கவிதைகள் அதீத மன நிலையில்  எழுதப் பட்டிருக்கின்றனவா என்று நினைக்கிறேன். 

          ஒரு சாதாரண நிகழ்ச்சி அசாதாரணமாகப் பார்க்கப் படுகிறதா என்று தோன்றுகிறது.

          ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி’  என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். 

          சாலை அதன் அமைதியில் வெகு பிரசித்தி பெற்றது என்கிறார்.  ஆனால் சாலையில் நடக்கும் விபத்துகளைப்  பட்டியலிடும்போது, ஒருவருக்குப் படிக்கும்போது திகைப்பு ஏற்படக்கூடும்.. ஏன் படப்படப்பே ஒருவருக்கு ஏற்படக்கூடும்.  

          கீழே ஒட்டிய நிலையில் மூளை சிதறி ஒருவன் பரிதாபமாக கிடந்த அன்றிலிருந்துதான் சாலை அதன் அமைதியில் மிகப் பிரசித்தி பெறத் துவங்கியது என்கிறார்.  என்ன குரூரம்! 

          அதனால்தான் அதீத மன நிலை கவிதைகள் என்ற வகைமையில் கொண்டு வரலாமா?

          இந்தக் கவிதையைப் படிக்கும்போது புதுவிதமான சிந்தனையைத் தூண்டுகிறது. 

          ஆனால் அதன் செய்திகளைப் படிக்கும்போது மனம் பேதலித்துப் போய் விடும். 

          ‘என்னுடைய அப்பாவைக் கொல்ல வேண்டும்’ என்ற புத்தகத்தின் கடைசிக் கவிதையைச் சிறிது பார்க்கவேண்டும். இந்தக் கவிதையில் தலைப்பே வாசிப்பவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

          இதோ அக்கவிதையை இங்குத் தருகிறேன்.

         

          பூனை வளர்க்கக் கூடாதெனக் கண்டித்த எனது அப்பாவை

          கொல்லவேண்டும்

          பூனைகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்

          ஒட்டு மொத்த பூனைகளையும் கூட்டி வாருங்கள்

          இறப்பதற்கு ஒரு நிமிடம் முன்பு அத்தனை பூனைகளையும்

                                                                      கண்டு

          நன்றாக அவர் எரிச்சலுறட்டும்

          அவரது எரிச்சலைக் கண்ணாரக்கண்ட பின்பு நீங்களே

          முடித்து விடுவீர்கள்தானே

          மிச்சம் வைத்தால் என்னால் முடியாது

          அத்தனை பூனைகளை ஒன்றாகப் பார்க்கும்போது                                                                            ஒன்றிரண்டை

          எத்திக் கூடத் தள்ளுவார்

          ஒரு சிலதுக்கு வயிற்றில் வசமாகப் படலாம்

          சகாக்களிடம் சொல்லியே கூட்டிவாருங்கள்

           சுதாரித்து எழுந்து பின் அவர் கதையை முடித்துவிடலாம்

          அவர் சாவதற்காக எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்

          சொன்னால் அவரே கூடச் செத்துவிடுவார்

          என்ன…பூனைகளைத்தான் அவருக்குப் பிடிக்காது

          அந்த ஒன்றிற்காகத்தான் உங்களை அழைத்து

          பேசிக்கொண்டிருக்கிறேன்  

          பூனைகளே உங்கள் கொட்டாவிகளை நீங்கள் வழக்கம்போல

                                                                      விடலாம்.

 

          ஏன் அப்பாவைக் கொல்ல வேண்டும்?  பூனையை வளர்க்கக் கூடாதெனக் கண்டித்த அப்பாவை.  இங்கே கவிகுரலோன் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.  இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா?

          அதாவது எல்லாப் பூனைகளும் ஒன்றாகக் கூட வேண்டுமாம். அத்தனைப் பூனைகளையும் பார்க்கும்போது அவர் எரிச்சலடைவார்.

அவர் எரிச்சலடைய வேண்டுமென்பதற்காக எல்லாப் பூனைகளையும் கூட்ட வேண்டுமென்பதை நினைக்கும்போது பூனையின் மீது கவிகுரலோனுக்கு பாச உணர்வும் அப்பாவைக் கொல்ல வேண்டுமென்று தீவிரமடைகிறது.

          நான் பூனைகள் பற்றிய கவிதைகளை எல்லாம் சேர்த்துப் புத்தகமாகக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறேன்.  ஆனால் செல்வசங்கரன் மாதிரி யாரும் பூனைக் கவிதை எழுதியதில்லை.

          பூனையின் மீது உள்ள வெறுப்பை எல்லாம் வெளிப்படுத்துகிற கவிதைகள்தான் அதிகம்.  நான் பூனையைப் பற்றி எழுதிய கவிதையில் அதன் மீது உள்ள ஆத்திரத்தால் அதைத் துரத்தி அடிப்பதுபோல்தான் எழுதியிருக்கிறேன்.  அப்போதும்  பூனையைக் கொல்ல வேண்டும்போல் எழுதியதில்லை.

          அப்பாவின் மீது உள்ள வெறுப்பை கவிகுரலோன் பூனைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று படுகிறது.  

          ‘பூனைகளே உங்கள் கொட்டாவிகளை நீங்கள் வழக்கம்போல் விடலாம்’ என்கிறார் கவிகுரலோன். இந்தக் கவிதையை இப்படியும் பார்க்கலாம்.  பொதுவாகப் பூனைகள், நாய்கள், யானைகள் போன்ற மிருகங்கள் மனிதர்களால் படும் அவதிகளை இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறதா என்பதையும் ஆராய வேண்டும். எத்தனையோ மிருகங்கள் மனிதர்களால் தினம் தினம் காரணமே இல்லாமல் கொல்லப்படுகின்றன.  இதை எதிர்த்து மிருகங்கள் எல்லாம் மனிதர்களுக்கு எதிராகத் திருப்பி விடப்படுகிறதா?

          என்னதான் அப்படி இருந்தாலும் இந்தக் கவிதையின் தலைப்பு அதிர்ச்சியைத் தரத் தவறவில்லை.

          அடுத்த கவிதை ‘சைடு வாங்குதல்.’  இக் கவிதை சிரிப்பை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. 

          1996ஆம் ஆண்டில் ‘சிரிப்பு’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.  செல்வசங்கரன் கவிதை வித்தியாசமானது. என் கவிதையில் சிரிப்பே வராதவன் ஒரு டாக்டரைப் போய்ப் பார்க்கிறான். அதன் விளைவாகச் சிரித்துக்கொண்டே இருக்கிறான். அவனை டாக்டர் பல கேள்விகள் கேட்கிறார்.  எப்போது நீங்கள் சிரிக்காமலிருப்பீர்கள் என்று கேட்க, தூங்கும்போது என்கிறான்.  அதைக் கேட்டு டாக்டர் சிரித்து விடுகிறார்.

 

          ஆனால் செல்வசங்கரன்.கவிதை வித்தியாசமானது. சிரிக்க முடியாவிட்டாலும் சிரிப்பதுபோல் நடிக்கிறான்.

         

          சைடு வாங்குதல்

 

          சிரிப்பே வரவில்லை

          இப்படித்தான் சிரிக்க வேண்டுமெனச் சிரித்துப் பார்க்க

          இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா

          இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக்கொண்டதால்

          தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்

          சிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாகக் கூறி நகர்ந்தனர்

          சிரிக்கவில்û எனக்குத் தெறியுமாதலால்

          பழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை

          இப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன்

          பெரிய பாவம் செய்யப் பார்த்தேன்

          உதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும்

          ஒதுக்கி வைத்துக்கொண்டேன்

          அக்கோசனாகப் பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்

          பக்கத்திலிருந்தவர்கள்தான் பெரிய ஈனாவானா

          என்று முணுமுணுத்தனர்

          சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து

           முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது

          திரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை

          பாந்தமாகப் பிடித்து அமுக்கிவிட்டுக்கொண்டேன்

          என்ன செய்தும் சிரிப்பு வரவில்லைü

          சிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென

          காதுக்குள் வந்து பட்சி சொல்லப் பெருமூச்சு விட்டேன்

          அவ்வழியில் போனால் போகப் போக

          கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து

          ஒரே சிரிப்பு முழக்கம்

          என்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை

          இப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே

          கனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது

          சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே

          அதுவா இது

          சிரிப்பதையே வைத்து கண் வாங்காமல் பார்த்து

          கொண்டிருப்பார்களே

          உங்களிடம்தான் கேட்கிறேன்

          இல்லையென்றாலும் ச்சும்மாவாவது ஏதாவது சொல்லுங்கள்

          இடதும் வலதும் ரொம்ப நேரமாக

          பாவம் சைடு வாங்கிக் கிடக்கின்றன. 

          இந்தக் கவிதையில் ஒருவன் சிரிப்பதுபோல் நடிக்கிறான். இயல்பாக வரவேண்டிய சிரிப்பை.  செயற்கையாக உருவாக்க விரும்புகிறான்.ஆனால் உண்மையில் அவனால் நடிக்க முடியவில்லை.

          சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்தும் முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்து விட்டது என்கிறார் கவிகுரலோன். திரும்பவும் உதடுகளைச் சிரிப்பதுபோல் வைத்து தோல்வியைத் தழுவுகிறார்.

          நடுவில் கனவில் நடிகை சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே அதுவா இது என்கிறார்.

          சிரிப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்களே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் சிரிக்க என்று கவிதையை முடித்துவிடுகிறார்.

          இயல்பாய் சிரிப்பு வரவேண்டும் என்ற கருத்தைக் கூறுவதுபோல் இந்தக் கவிதை அமைந்திருக்கிறது.

          மொத்தத்தில் செல்வசங்கரன் கவிதை வித்தியாசமானது. அதீத மனநிலையைக்  கவிதைகளில் பிரதிபலித்தாலும் நம்மை யோசிக்க வைக்கிறார்.

          மணல்வீடு பதிப்பகமாக வந்திருக்கும் இத் தொகுப்பை ஒருவர் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  இதன் விலை ரூ.80தான். 

         

 

         

         

         

         

 

 

         

         

 

         

         

         

         

         

         

 

Series Navigationமைதீனின் கனவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *