மைதீனின் கனவு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 12 of 13 in the series 14 பெப்ருவரி 2021

 

 

மஹ்மூது நெய்னா . எஸ் –   கீழக்கரை



உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின்  மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக்  கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி….

 

ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, சேக் மைதீன் இருக்கிறான்…  என்று கூறி அவரே என்னை மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டுவந்தார்…

 

வளைகுடாவில், அமீரகத்தில் புகழுச்சியில் இருந்த மிகப் பெரும் வணிக நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும்   முக்கிய மேலதிகாரியான அசன்  தம்பிக்கு அடுப்புக் கரி முதல் அக்ரிக்கேட் வரை அத்தனை வியாபாரமும் அத்துப்படி.  அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி மற்றும் கப்பல் வர்த்தகங்களை நிர்வகித்து வந்த அசன்  தம்பியை “தம்பி காக்கா” என்றும்   சில பணியாளர்கள் அழைப்பது வழக்கம். உடன் பிறந்த  மூத்த சகோதரர்களைத்தான் எங்களது ஊரில் காக்கா என்று அழைப்பார்கள். அசன் தம்பியை இவ்வாறு “தம்பி காக்கா” என்று அழைப்பது சற்று  விநோதமாகத்தான் தோன்றுகிறது. தம்பியாகிப்போன காக்காவா அல்லது  காக்காவின் பெயரே தம்பியா… ஆய்வு செய்தால்  நமக்கு குழப்பமே மிஞ்சும். ஆனால் குழப்பமே இல்லாமல் சர்வதேச கம்மாடிட்டி  வர்த்தக சந்தையின் உச்சந்தலையில் ஏறி “நங்” என சுத்தியலால் அடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் அசன் தம்பி.

 

 

தமிழகத்தில் ஒரு கடலோர கிராமத்தை சேர்ந்த  ஆளுமை மிக்க ஒரு வர்த்தக  குடும்பமும்,  அமீரகத்தை சேர்ந்த அல் நபூதா சகோதரர்களும் இனைந்து சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமீரகத்தின் வணிகக் கேந்திரமாக விளங்கும் பளிங்கு நகர் துபாயில்  தொடங்கப்பட்ட நிறுவனம்தான்  “கம்பெனி”.

 

1980களின் துவக்கத்தில் முளைவிட்ட கம்பெனி நாளடைவில், மெல்ல விரிந்து, அசுர வளர்ச்சி அடைந்து குறுகிய காலத்திலேயே  அரபுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய  பெரும் நிறுவனங்களில் ஒன்றாகியது. அரபு வணிக உலகின் உச்சிக்கு சென்ற கம்பெனி , உலகமெங்கும் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது ஆக்டோபஸ் கைகளை கிளைகளாக விரித்து பரப்பி எல்லையில்லாத ஆகாய வீதியில் சூரியனை தொட்டுவிட பறந்து கொண்டிருந்த செழிப்புமிகு காலம் அது.

நம்ம கம்பெனி ஒரு கடலு .. எவ்வளவு குடிச்சாலும்  .. வத்தாதுப்பா.. என்று  கம்பெனியில்  பணிபுரியும் சிலர் வறட்டுப் பெருமை பேசுவதும்  உண்டு. 

 

ஈரான் இரும்பு வியாபரத்தில் பிரச்சனையா அல்லது  ஈக்குவாடரிலிருந்து வாழைப்பழம் ஏற்றி வந்த கப்பல்  நேரத்தில் ஜபல் அலி போர்ட்டுக்கு வந்து சேரவில்லையா,  கூப்பிடு… அசன் தம்பியை என்பாராம் கம்பெனியின் எம்.டி.

 

தான் சந்திப்பவர்  அரேபியரோ, ஐரோப்பியரோ அவர் எந்த தேசத்தை சேர்ந்த  வணிகராக  இருந்தாலும் அவர்களின் காதைத் திருகி பேரம் பேசி கம்பெனிக்கு சாதகமாக  இலகுவாக அக்ரீமெண்ட் போட வல்ல கெட்டிக்காரர்  எனப் பெயர் பெற்றவர் அசன்  தம்பி.

தோற்றத்தில் அச்சு அசலாக மறைந்த இந்தி நடிகர் ராஜ்கபூரின் சாயலை கொண்டவர்.  எவரையும் சடுதியில் கவரும் வகையிலான இவரது பேச்சும், புன் சிரிப்பும் இயல்பான அணுகுமுறையுமே அசன் தம்பியின்  வெற்றிப்பாதைக்கு வழி வகுத்து அவரின் வணிகத்தில் பெரும் வளர்ச்சி  தந்திருக்க வேண்டும்.

 

அசன் தம்பியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைக்கிறதே கடினம், ஆனால் அவரே என்னை  அழைத்து ” பாக்குவுக்கு நீ போறியா  ?  என கேட்டு வாய்ப்பு தருகிறார்.

 

அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாக்கு என்ற  நகரைப்பற்றி எந்தப் புரிதலும் இல்லாத நானும்  மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் ” அசன் தம்பி காக்கா நமக்கு உதவி செய்வதே பெரும் பேறல்லவா என நினைத்து,  அவரது உறுதியான கேள்விக்கு   ” சரி காக்கா.. போறேன்” என மெல்ல தலையாட்டி வைத்தேன்.  உடனே தனது அந்தரங்க செயலாளர்  கோட்டயம் தாமஸை இண்டர்கம்மில் அழைத்து எனது பாக்கு பயனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தர உத்தரவிட்டார். அடுத்த நாள் மாலையிலேயே சார்ஜா விமான நிலையத்தில் இருந்து  பாக்கு நகருக்கு செல்லும் துருக்கியின் தேசிய  ஏர்லைன்ஸான  “துருக்கியா ஹவா எல்லாரா”  விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதும்  எனக்கு லேசாக பதட்டம் பற்றிக் கொண்டது…

 

சென்னை நந்தனம், டவுன் புல்ஸ் சாலை  பகுதியில் வெட்டியாக அலைந்து , இந்த பெருநகரின் சாலைகளை ஒரு வித வெறுப்புடன் அளந்து கொண்டிருந்த நான்,  சுட்டெரிக்கும் ஒரு கோடை காலத்தில் வேலை தேடி விசிட் விசா எடுத்துக் கொண்டு கனவு நகரான  துபாய்க்கு வந்திறங்கினேன்.

 

மூன்று மாதங்களாக இந்த பாலை நிலத்தில் நிலவும் உக்கிர வெயிலின் கோரப்ப்பிடியில் சிக்கி , வேலைதேடி  ஆப்ராவுக்கும் முத்தீனாவுக்கும் இடையெ அங்குலம் அங்குலமாக  அலைந்ததும்,  பெருகி ஓடும் வியர்வை கடலில் பல முறை குளித்து பர் துபாயில் இருந்து  தேராவுக்கு வந்து சேர்ந்த குளியல் அனுபவமும்  அந்த நொடியில் ” ஜின்” போல விஸ்வரூபம் எடுத்து  வின்னைத் தொட்டு எழுந்து எனது முன்னே வந்து  என் கண்ணைக் கட்டியது. 

 

அசன் தம்பி அச்சமயம் பாக்குவுக்கு அல்ல  மைனஸ் 50 டிகிரியில் இரத்தம் உறையவைக்கும் கிழக்கு ரஷ்ய துருவத்தில் இருக்கும் பனிப் பிரதேசமான சைபீரியாவுக்கு போ.. என்று சொல்லி இருந்தாலும் ” அப்படியே ஆகட்டும்” என்றுதான் நான் சொல்லி இருக்கக் கூடும்…..  

 

பாக்கு… அஜர்பைஜான் நாட்டின் தலை நகரம்.. கிளி மூக்கினைப் போல கடலைத் தொட்டு வளைந்த ஒரு தீபகற்பம். அப்சரான் பெனிசூலா என்ற மற்றொரு பெயரும் இந்த பாக்கு நகருக்கு உண்டு. வடக்கே ககாகஸ் மலை தொடரும்,  கிழக்கே கேஸ்பியன் கடலும் சூழ,  அண்டை தேசங்களாக ஜார்ஜியா, ஆர்மேனியா, துருக்கி, ஈரான் நாடுகளை  எல்லைகளாக கொண்ட  மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று. .

 

கடந்த நூற்றாண்டின் துவக்க காலத்தில்  சோவியத் ரஷ்யாவின் ஒரு அங்கமாக  இருந்த அஜர்பைஜான்,  1991 ஆம் ஆண்டு  சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த  மிக்கேல் கோர்பச்சேவ் ஆட்சியின் போது பிள்ளையார் கோவில் முன்பு ஓங்கி அடித்த தேங்காய் போல கம்னியூசம் சிதறியது. 

 

அச்சமயம் உடைந்து, தெறித்து சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த பதினான்கு நாடுகளில் அஜர்பைஜானும் ஒன்று.   1917 ஆம் ஆண்டு ருஷ்ய ஏகாதிபத்தியத்தை ஆட்சிபுரிந்து வந்த   ஜார் மன்னருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த புரட்சியாளர் விலாதிமிர் லெனின் கொழுத்திவிட்ட ருஷ்ய புரட்சிக்கு முன்பு வரை இந்த அஜர்பைஜான்  பாரசீக சிர்வான் மன்னர்களால் ஆளப்பட்டு வந்த ஒரு அழகிய தேசமாகவே இருந்தது.  நெருப்பை வணங்கிய ஜோராஷ்ட்ரியர்களின் பூர்வீக பூமி,  அரேபிய அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ்  இந்த தேசம் வந்த பின்பு  இஸ்லாமிய மார்க்கத்தில்  இணைந்து கொண்டது. பாரசீகர்களும், துருக்கியர்களும், மங்கோலியர்களும் தொடர்ந்து கைப்பற்றி  ஆட்சி செய்து  வந்த நெடும் வரலாறு கொண்ட தேசம் இது

 

பின்பு 1921 ஆம் ஆண்டு கம்னியூச சோவியத் ரஷ்யாவுக்குள் பலவந்தமாக அடக்கப்பட்டு சோஷியலிச சோவியத் யூனியன் அரசின் அதிகாரப்பூர்வ மாகாணமாக உருமாறி தனது நிறம் இழந்தது.

 

இந்த நிகழ்வுகள் நடத்து 70 ஆண்டுகளுக்கு பிறகு,  கடந்த 1991 ஆம் ஆண்டு அஜர்பைஜான் நிலப்பகுதி முழுவதும் சோவியத் அரசிடமிருந்து பூரண விடுதலை பெற்று  மீண்டும் தனது இழந்த சுயத்தை மீட்டெடுக்க துவங்கிய காலகட்டம் அது.

 

சோவியத் ரஷ்யாவின் அதிபர் மிக்கேல் கோர்பச்சேவின் அரசாங்கத்தில், மாஸ்கோ தலைமையகத்தில்  பல சமயங்களில் முக்கிய அரசாங்க , அமைச்சுப் பதவிகள் வகித்து வந்த பலம் பொருந்திய பிரதேச தலைவர்களே , தத்தமது இனக்குழுக்களிடம் பெற்றிருந்த அதீத செல்வாக்கின் காரனமாக சோவியத் யூனியனிலிருந்து  சிதறிய  இதர புதிய  14  குடியரசு  நாடுகளின் அதிபர்களாக முறையே பதவியேற்றுக் கொன்டனர். 

 

பிரிந்து சென்ற துர்க்மனிஸ்தான் என்ற குடியரசின் அதிபர் பதவியை  சஃபர்முராத் நியாசவோ என்பவர் கைப்பற்றிக் கொண்டார்.  இவர் 1990 களில் சுப்ரீம் சோவியத்தின் சேர்மனாக இருந்தவர்.  ஜார்ஜியாவின் அதிபர் பதவி மிக்கேல் கோர்பச்சேவின் அமைச்சகத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த எட்வர்ட் செவனாஸ்தேவுக்கு வந்து சேர்ந்தது. அதே போல் அஜர்பைஜான் நாட்டின் தற்போதைய அதிபர் இல்ஹாம்  அலியோவாவின் தந்தையான ஹைதர் பாபா என மக்களால் அழைக்கப்பட்ட ஹைதர் அலியேவோவை அதிபராக்கி அழகு பார்த்தது. ஹைதர் பாபா  ஒருங்கிணைந்த சோவியத்தில்  ரஷ்ய இனத்தை சாராத பலம் பொருந்திய தேசியத் தலைவராக விளங்கியவர். சோவியத்தின் உளவுத் துறையான  கே.ஜி.பியின் தலைவர், அதிகார பீடமான கம்னியூஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர், சோவியத் யூனியனின் துனைப் பிரதமர் என பல உயர் மட்ட அமைச்சுப் பதவிகளை வகித்தவர். 

 

அச்சமயம், விடுதலை அடைந்த  புதிய அஜர்பைஜான் குடியரசின் பதவியை ஏற்ற தீவிர பொதுவுடமைவாதியான அதிபர் ஹைதர் அலியோவா, கம்னியூச சிந்தாந்தத்திலிருந்த தனது நாட்டை முதலாளித்துவ சித்தாந்தத்தை நோக்கி எதிர் திசையில் குதிரை வேகத்தில்  விரட்டிக் கொண்டிருந்தார் . 10 அடிக்கு எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணை பீறிடும் அற்புத பூமி அஜர்பைஜான். அதிக ஆரவாரமற்ற கேஸ்பியன் கடலோரத்திலும், பாக்கு நகரை ஒட்டிய சுங்காயத் மற்றும் சங்கச்சால்  வயல் வெளிகளிலும் நிலத்தடி நீரை இறைப்பது போல கச்சா எண்னையை கி்னறு வெட்டி இரும்பு வாளியில் கயிறுகட்டி மேலும் கீழும் அசைத்து இறைத்துக் கொண்டிருந்தனர்.

 

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் வளைத்து பிடிக்க  நினைத்த வளைகுடாவில் செல்வம் கொழிக்கும் குட்டி நாடான குவைத்தின் ஆயில் வளத்தை அடுத்து அஜர்பைஜான் குடியரசில்தான் “ப்ளாக் கோல்ட்” என ஐரோப்பியர்களால் சிலாகித்து சொல்லப்படும் கச்சா எண்ணை  வளத்தின் இருப்பு விண்ணை முட்டுவதாக சர்வதேச ஆயில்  லாபிகள் உணரத் தொடங்கியதை, உலக வர்த்தக சந்தையின் அசைவுகளை தனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு  சொடுக்கு போடும்  அசன்  தம்பி மோப்பம் பிடித்தார்.

 

அதன் தொடர்ச்சியாக சிதறிய  சோவியத் நாடுகளுக்கு கடும் குளிரிலும் சூறாவளி சுற்றுப்பயனம் மேற்கொண்டார்.  கிர்கிஸ்தான், தஜ்கிஸ்தான்,  உஸ்பெக்கிஸ்தான், கஜகஸ்தான்,  அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் தனது மார்க்கெட்டிங் மேலாளர் அக்ரமுடன்  வர்த்தக வலம் வந்த பின்பு அஜர்பைஜான் தலை நகர் பாக்குவில்தான் தனது கம்பெனியின் கிளையை தொடங்க வேண்டுமென  முடிவு செய்தார்.  சி.ஐ.எஸ் நாடுகள் என்று அழைக்கப்படும் மத்திய ஆசிய பிராந்தியம் முழுவதும் சுற்றி வந்த  அசன் தம்பி  பாக்கு நகரை தேர்ந்தெடுத்து தொழில் துவங்க  அப்போது சொல்லப்பட்ட காரணம் வெகு சுவராஸ்யமானது ” காசு இருந்தும் உணவுக்கு  பிரட் செய்து சாப்பிட கோதுமை கிடைக்காமல் அந்த நாட்டு  மக்கள் ரெம்ப கஷ்டப்படுறாங்க.. சோ.. நாம  சலாலாவில்  இருந்து வீட் ஃப்ளோரும்,  அஜ்மானில் இருந்து சுகரும்  அனுப்பி வியாபாரம் செய்து அவர்களுக்கு உதவி செய்யலாம் என்பதுதான்.

 

உண்மை காரணம்  இதுவாகத்தான் இருக்க முடியுமா? வெகுகாலத்துக்கு பின்பு இது குறித்து உண்மையை உடைத்தார் அவருடன் பயனம் செய்த  மார்க்கெட்டிங் மேனேஜர்  அக்ரம்  ” அதெல்லாம் இல்லைங்க.. தம்பி சார் தோற்றத்தில்  அச்சு அசலாக இந்தி ஆக்ட்டர் ராஜ்கபூர் மாதிரியே இருப்பார்ல.. அதுதான் பாக்கு நகரில் கம்பெனி துவங்க காரணம் என அடித்துச் சொன்னார்.  அதுவும் உண்மையாக இருக்குமோ?  எப்படி ?   

 

அஜர்பைஜான் மட்டுமல்ல மொத்த சோவியத் ரஷ்யாவிலும் தாதாசாகேப் பால்கே விருதுபெற்ற  ராஜ்கபூர் சாபுக்கும், நர்கீஸ் அம்மையாருக்கும்,  டிஸ்கோ டான்ஸர் இந்தி சினிமாவின்  ஹீரோ மிதுன் சக்ரவர்த்திக்கும் (அஜர்பைஜானில் இவர் பெயர் ” ஜிம்மி”தான்)  அவ்வளவு கிரேஸ்..

 

அஜர்பைஜானிகளின்  படோபகரமான திருமண விருந்தில் கலந்து கொள்பவர்கள் தாமிஸ் வோட்கா    என்ற தூய்மையான வோட்கா மற்றும் சம்பான்  பாட்டில்களின்  தடித்த தக்கையை கிளப்பி எடுத்த பின்பு ராஜ்கபூர் நடித்த ஆவாரா திரைப்படத்தில்  இடம் பெறும் ” ஆவாரா ஹீன்ங்” பாடலை அஜரிப் பாடகர்  ஒருவரின்  காந்தக் குரலில் கேட்டுத்தான் ஆக வேண்டும்.  ராஜ்கபூர் மீது அவ்வளவு பித்துக் கொண்ட  அஜர்பைஜானிகள் அசன் தம்பி பாக்கு நகருக்கு வந்திறங்கியவுடன் பரவசமடைந்தனர்.  ஆம்..  1956 இல் நர்கீஸ், சுரையா , தேவ் ஆனந்த் உள்ளிட்ட இந்தி திரைப்பட குழுவுனருடன் பாக்கு நகருக்கு  விஜயம் தந்து இருமி சக்கி மாயி ( 28 மே) வீதியின் முனையில் இருந்த நிஜாமி கினோ தியேட்டரில் நடந்த இந்திய – ரஷ்யா கலாச்சார விழாவில் கலந்து கொண்டுவிட்டு  ஜார்ஜியா தலை நகர் திபிலிசிக்கு சென்ற நடிகர் ராஜ்கபூர் மீண்டும் மறுபிறவி எடுத்து இங்கு வந்துவிட்டாரோ என்று ஆச்சரியம் மேலிட்ட அஜரிகள் ஆளாளுக்கு அசன் தம்பியை ஆரத்தழுவி நேசம் ஒழுகி, நெஞ்சம் உருகிய  அந்த  தருனத்தில்தான்.. பாக்குவில் கம்பெனியின் கிளை துளிர்க்க தொடங்கியது.

 

அஜரி மக்களின் அன்பு மழையில் நனைந்த அசன் தம்பி  கம்பெனியின் லோக்கல் ஸ்பான்ஸர் மாஹிர் மாலிமின் செகரட்டரி குல்நாராவிடம் ” வி நீட் டு ஸ்டார்ட் அவர் கம்பெனி இன் பாக்கு ” எனக் கூறி , தனது விருப்பத்தை அப்படியே அஜரியில் மொழிபெயர்த்து மாஹிர் மாலிமிடம்  தெரிவிக்க சொன்னார்.  குல்நாராவும் ” உன்லார் அஜர்பைஜான்ந்தா பீர் தன ஃபிர்மா கெத்மாக் இஸ்த்தில்லார்” என செவ்வனே அஜரியில் மொழி பெயர்த்தாள் ” ஓல்து.. யக்ஸி .. ” என புன்னகையுடன் ஓகே சொன்ன  மாஹிர் மாலிமுக்கு அளவிடமுடியாத  உற்சாகம் தொற்றிக் கொண்டது. அன்றிரவே சீமான்களும், சீமாட்டிகளும் மட்டுமே வருகை தரும் பாக்கு நகரின்  புகழ்பெற்ற சிதிர் ரெஸ்டாரன்ட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். 

 

சிதிர் ரெஸ்டாரன்ட்டில் வட்ட வட்ட  மேஜைகள்  பரவிக்கிடந்த பரந்து கிடந்த  உள்ளரங்கில் கசியும் வெளிர் சிகப்பு ஒளியின் மங்கிய வெளிச்சத்தில் உணவுகளை ஆர்டர் செய்து கொண்டே தனக்கு கிடைத்த கம்பெனி என்ற இந்த  தங்க முட்டையிடும்  வாத்தின் வயிற்றை கிழிக்காமல் எப்படி முட்டைகளை தொடர்ந்து எடுக்கலாம்  என்பது பற்றி சிந்திக்கத் தொடங்கினார். தீயில் வாட்டிய வான்கோழி இறைச்சியும், சுட்ட  கேவியர் மீனும், காய்ந்த ரொட்டித் துண்டுகளும்,   கபாப் ஐட்டங்களும் மேஜைக்கு வந்து சேர… அஜர்பைஜானின் பாரம்பரிய நாட்டுப்புற முகாம் இசை பாடகர் ஆலிம் காஜிமாவோ தனது மயக்கும் குரலில்  “கஜலர் பகர்லார்” பாடலை உச்சஸ்ததியில் எட்டுக்கட்டைக்கு ஏற்றி பாடி, அங்கு வந்திருந்த விருந்தினர்களை ஒரு மாதிரியான கிரக்க நிலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தார்.. சிகப்பு ஒளிக்கீற்றுகளுக்கு இடையே  வெள்ளை மால்பரோ லைட்ஸ் சிகரெட் ஒன்றை தனது உதட்டின்  இடுக்கில்  பற்ற வைத்துக் கொண்டு  மெலிதாக நாக்கினால் புகை விட்டுக் கொண்டிருந்தார் மாஹிர் மாலிம்..வளைந்து, நெளிந்து , சுருள் சுருளாக  உயர்ந்த  சிகரெட் புகை வளையங்களுக்கு மத்தியில்  புன்முறுவல் செய்த மாஹிர் மாலிமின் சிவந்த முகத்தை உற்று நோக்கியபோது, அதில் ஜிவ்வென ஏறி இருந்த சூது தெரிந்தது. 

 

 

தமிழகத்தின் தென் கிழக்கு கடலோர கரையிலிருந்து ஊரில் எழுதப்படாத விதியாக இருந்த சென்னை – பழைய கல்லூரியில் மேற்படிப்பை முடித்துவிட்டு வளைகுடாப்  பயனம் என்ற வாழ்க்கையில் மிக முக்கியமான அடுத்தக் கட்டத்தில் காலெடுத்து வைத்த நான், எனது எதிர்கால வளர்ச்சிக்கான அதிஷ்டப் பாதையை சோதனை செய்ய ஏர் இந்தியா விமானத்தில் நடுக்கத்துடன் துபாய்க்கு பயனித்தேன். 1997 ஆம் வருடம் மே மாதம் ஒரு வெள்ளி அன்று  இருளும் ஒளியும் மெலிதாக பிரியத் தொடங்கிய வேளையில் கதிரவனை  அடைத்து நிற்கும் பாலை புழுதியையும் மீறி ஒளி கீற்றுகள்  மேலெழும்பிய  அதிகாலை நேரத்தில்  கனவுகளையும், உடைகளையும் பெட்டியில் சுமந்து கொண்டு  துபாய் ஏர்போர்ட்டுக்குள் வந்து இறங்கிய போது இந்த அரபு நாடு நமக்கு கைகூடுமா…. என்ற அச்சம் மெல்ல மேலெழுந்தது.

 

துபாய் பெருநகரில் நான் வசித்த மூன்று மாதங்களில் கொழுந்துவிட்டு எரியும் வெயில்தான் எனக்கு குடை பிடித்தது. சொக்கத் தங்க துகள்களாய்  ஜொலிக்கும் சூரிய மண்டலமான துபாயின் பாலை நிலபரப்பில் தலைமுடியை படிய சீவி வகிடு எடுப்பது போல பிளந்து உருவாக்கப்பட்ட  உயர்தர அஸ்பால்ட் சாலைகளையும், பக்கவாட்டில் படு டாம்பீகத்துடன் சீராக வார்க்கப்பட்டிருந்த வின்னை உரசத் துடிக்கும் உயர்ந்த கட்டிடங்களையும் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டே நடந்து செல்வது பழக்கமாகிவிட்டிருந்தது.

 

 

பல சமயம்  பாக்கிஸ்தான் பத்தான்  டிரைவர்கள் ஓட்டி வரும்  டாக்ஸிகளின் அதிவேக பாய்ச்சலுக்கு அஞ்சி உயிரை கையில் பிடித்துக் கொண்டு துபாயின் அகன்ற  பளீர் சாலைகளை கடக்க வேண்டிய நிர்பந்தம் வேறு…

கருப்பு நிற அபாயா (மேலங்கி)  அணிந்து பென்ங்குவின்கள் போல சாலையில்  மிதந்து வரும் பிரின்ஸஸ் நூராக்களை ஒரு 10  அடி தூரத்தில் பார்த்த மாத்திரத்தில்  பூச்சைக் குட்டி போல பம்மி பதுங்கும் பத்தான்களின் டொயட்டோ கரோலா டாக்ஸிகள், என்னைப் போன்ற இந்தியா ஆட்கள் சாலையை கடப்பதை  600 அடி தூரத்துக்கு முன்பே  கவனித்தாலும் , பிரேஸில் நாட்டு  கால்பந்து வீரன் அனாசயகமாக கோலை நோக்கி பந்தை விரட்டும் போது  வேகமெடுக்கும் அவனது கால்களை போலவே   இந்த பத்தான் டாக்ஸி டிரைவர்களின் கால்களுக்கும் சுதி கூடிக் கொள்ளும்.

 

காரின் ஆக்ஸிலேட்டரை ஏகத்துக்கு அழுத்தி,  விரைந்து நெருங்கி  சாலையை கடப்பவருக்கும், காருக்கும் அரை அடி இடைவெளியில் பிரேக்கை திடீரென அழுத்தி  பாதசாரிகளுக்கு பீதியை கிளப்பும் மரணக் கினறு சாகசம் நிகழ்த்துவது  இந்த  பட்டான்களின் வழக்கம்…

 

இந்த மூடப் பச்சை டிரைவர்களின்  தற்குறித்தனம் குறித்து துபாயில் பல காலங்கள் வசித்த  நன்பன் அப்துல் ஹக்கின் மூலம் ஏற்கனவே அறிந்த நான் சற்று உஷாராகவே  துபாயின் பளிங்கு வீதிகளில் நடையாக நடந்து எனது வேலை தேடும் படலத்தை அயராமல் தொடர்ந்தேன்.  

 

பர் துபாயில் இருக்கும் பேங்க் வீதியில் உள்ள சர்வதேச வங்கிகள் அனைத்திலும் முட்டி மோதியாகிவிட்டது. வேலை கிடைத்தபாடில்லை. ஒரு சீக்ரட் சர்வீஸ் ஏஜன்ஸியை போல கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தோற்றமளித்த பேங்க் மில்லி ஈரான் என்ற ஈரான் தேசிய வங்கியின் துபாய் கிளையை கூட விட்டு வைக்கவில்லை.

 

அவ்வப்போது ஆசுவாசப்படுத்திக் கொள்ள பேங்க் வீதிக்கு அருகாமையில் இருந்த பர்ஜுமன் வணிக வளாகத்துக்குள் பரவி நிற்கும்  ஏசி குளிர் காற்றின் நிழலில் ஒதுங்குவது வழக்கம். தினத்தந்தி நாளிதழிலில் சிந்துபாத் படக் கதை நெடுந்தொடரில் வரும் ஹீரோவான சிந்துபாத்தின் கடற்பயனம் 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருவதை அறிந்திருப்போம், அவனுக்கு இளைப்பாற வழியில் ஏதும் ஐலேண்ட் கிடைக்கிறதோ இல்லையோ! ஆனால் துபாய் பர்ஜுமன் வளாகத்தில் இருந்த சிந்துபாத் வொண்டர் லேன்டுதான் எனது கடும் வேலைதேடும் படலத்தின் போது  இளைப்பாற இடம் தந்தது. சிந்துபாத்தில் வேலை செய்த நாகூர் நானா ஒருவர் அவ்வபோது போட்டுத் தரும் கூலான லெமன் ஜூஸால் கிரக்கம் தீர்ந்ததும் உண்டு

 

காலையில் வேலை தேடுவது, மாலையில் அல் கலீஜ் ரோட்டில் கோழிக்கோட்டை சேர்ந்த  மலையாளியான  ஜார்ஜ் நடத்திவந்த கோல்டன் குளோப் கம்ப்யூட்டர் அகாடமியில்  வோர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் , எம்.எஸ். அப்ளிகேஷன்  பயிற்சிகள்…  என காலம் காட்டிய திசையில் எல்லாம் ஓடி அலைந்த  பின்பும் வேலைமட்டும் கிடைத்தபாடில்லை.

 

கவலை ரேகைகள் முகத்தில் படர, வேலைக்காக  சந்தித்த அதி புத்திசாலிகளின் ஆழ்ந்த அறிவுரைகளை மனதில் அவ்வப்போது அசைபோட்டுக் கொண்டேன்.. ஓமானில் இருந்த உறவுக்காரரான மாலிமாரின்  நன்பர் மூலம் அப்பொழுதுதான் கம்பெனியின் எனர்ஜி டிவிசனுக்கு புதிய சேல்ஸ் மேலாளராக பொறுப்பேற்றிருந்த  ஒருவரை சந்தித்தேன், என்னை அன்புடன் வரவேற்றவர் பேசிய மொழியில் சவுதி அரேபிய அஜ்வா பேரிச்சம் பழத்தின் தித்திப்பை உணர முடிந்தது. தனது நேர்கானலை தொடர்ந்தார் ஆங்கிலத்தில் நடத்திய அரை மனி நேர உரையாடலுக்கு பிறகு, நேர் கானலில்  தனது செகரட்டரி அம்பியையும் சேர்த்துக் கொண்டார், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்த எனது  எண்ணம் பொய்த்துப் போனாது  “ரிசால்வ்” என்ற ஆங்கில வாக்கியத்தை  இடம் மாற்றி நான் பயன்படுத்தியதாக செகரட்டரி அம்பி  மிகச்சரியாக கண்டுபிடித்து எனர்ஜி மேனேஜருக்கு சொன்னதன் விளைவு ’மூனு மாசம் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிச்சிட்டு வந்து வேலை தேடுங்க ” என அவசரமாக சொல்லித் துரத்தப்பட்டேன். இந்த சம்பவத்துக்கு பின் குறுகிய காலத்தில் பாக்கு நகரில் தொடங்கப்பட்ட கம்பெனியின் எனர்ஜி டிவிசனின் அஜர்பைஜான் கிளைக்கு எனது  பங்கும் கணிசமாக இருக்கும் என அவரும், அம்பியும்  அன்று நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. 

 

அப்படித்தான் கம்பெனியின் “பைப் லைன்” டிவிசனுக்கு பொறுப்பேற்றிருந்த, அப்பொழுதுதான் லண்டனில் இருந்து திரும்பிய கம்பெனி டைரக்டர் ஒருவரை சந்திக்க கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்த அயூப்கான்  ” எல்லாம் சொல்லி இருக்கிறேன்,  நீங்க போய் அவரை சந்தியுங்கள் என பரிந்துரை அளித்திருந்தார்.

 

படிய வாரிய, நீண்டிருந்த கேசத்தின் பின்பக்கத்தை லேசாக கோதிவிட்டுக் கொண்டே ” என்ன விஷயம்? என்றார். அயூப்கான் சார்  உங்களை பார்க்க சொன்னாரு” என்ற என்னிடம் அதான்..  பாத்தாச்சுல்ல வேற என்ன , கிளம்புங்க… எனக்கு நிறைய வேலை இருக்கு எனக் கூறி  விரட்டப்பட்ட நான் பதில் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றேன். நடுப் பகலில் துபாயிலிருந்து  சென்னைக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானாம் மெதுவாக வானில் ஏறத் துவங்க, அது எழுப்பிய  சத்தம் காதை  அடைத்தது.

 

 

சோகமும், வேகமுமாக நாசர் ஸ்கொயர் வந்து  இருப்பிடம் அடைந்த எனக்கு  துக்கம் தொண்டையை அடைத்தது. அசதியும், துயரமும் மேலிட அப்படியே உறங்கிப்போனேன்… என்ன ஆச்சரியம்  ? ஆபத்பாந்தவனாக வந்தார் அசன்  தம்பி, வெஸ்கான் பள்ளியில் அன்றைய இஷா (இரவு தொழுகை) தொழுகையின் போது வல்ல இறைவனை தொழுது, புலம்பி, துஆ வை நீட்டி கேட்ட விநாடியில் இறைவனின் அருள் மழை பொழிந்தது.. இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.. நாகூர் ஈ.எம். ஹனீபாவின் பாடல் அசரீரியாக எனது காதுக்குள் வந்து  ஒலிக்க.. யாரு தம்பி நீ  … என்ற அசன் தம்பி தொடுத்த கேள்வியினூடே எனது வேலைக்கான அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் அந்தக்கனம் பிரிண்ட் ஆக துவங்கியது… வேலை தேடி அலைக்கழிந்த விவரம் கேட்ட அசன் தம்பி கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்தில் வந்து தனது செயலாளர் கோட்டயம் தாமஸை சந்திக்க  சொன்னபோது அவர் ஒரு தேவதையாகவே எனக்கு தோன்றினார்.

 

ஒரு இலையுதிர் காலத்தில், பாக்கு நகரின் மையப்பகுதியிலிருந்த சோவியத் கால  இருமிசக்கி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து புறநகரான அஹமதலிக்கு ரயிலில் பயணித்துக்கொன்டிருக்கும் பொழுது துருக்கி பாடகர் இப்ராஹீம் தாத்லிசியின் “ஹைதி ஜாயிலா” பாடலை இயர் போனை காதில் மாட்டி வாக்மெனில் ஒரு இலயிப்புடன் கேட்டுக்கொன்டிருக்குந்தேன், திடீரென  தொடையில் தட்டிய சேக் மைதீன், ‘ ரஹ்மானியா நகர்ல ஒரு  பத்து கோலுக்கு இடம் வாங்கி சொந்தமா ஊடு கட்டனும்’ என்றான். அவன் கண்ட கனவு அவனது கரு விழிகளில்  நிறைந்து கிடந்தது…  அதுக்குதாங்க  இந்த குளிருல கிடந்து இவ்வளவு கஷ்டப்படுறேன், என்ற சேக் மைதீனின் உளத் துயரத்தை  அவனது விழிகளை  ஊடுறுவியபோது உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

 நிலம் விக்கிற விலையிலே.. இதெல்லாம் உடனே முடியுற காரியமா மைதீன் ? என்றேன். ‘அடப்போங்கங்க… இன்னும் ஒரு இரண்டே வருஷம்தான். ஊட்டை கட்டி முடிச்சுட்டு அசன் தம்பி காக்காவ கூப்ட்டு ஊடு குடியேறனா இல்லையான்னு பாருங்க… என்று சவால் விட்ட மைதீனின் நம்பிக்கையில் உறுதி தெரிந்தது.

 

சேக் மைதீனும் கடற்கரை நகரைச் பூர்வீகமாக கொண்டவன்தான்,     நான் அஜர்பைஜான்  செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.  பள்ளிப்படிப்பை தொடர முடியாமல்..  சென்னை சூளை மேடு பகுதிகளில் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவனை துபாய் கூலித் தொழிலாளியாக  அங்கீகரித்துக் கொண்டது. 

 

அசன் தம்பி நிர்வகித்து வந்த துபாயின் ரஷீதியா தொழிற்பேட்டையில் இருந்த  கம்பெனியின் இறைச்சி பதப்படுத்தும் கோல்ட்  ஸ்டோரில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையில் ஐந்து வருடங்கள் வேலை செய்தவன். சூப்பர்வைசர்  மீரான் பாயால் அஜர்பைஜானில் பணிபுரியும்  அதிஷ்டம் மைதீனுக்கு தானாகவே வந்து சேர்ந்தது. இளம் வயதிலியே  திருமனமாகி ஒரு  பென் குழந்தைக்கு தந்தையான சேக் மைதீனின் இலட்சியக் கணவாகிய 10 கோல் நிலமும்,  வீடும் அவனை  ஜீரோ டிகிரி குளிருக்கு இட்டுச்  செல்லும் அஜர்பைஜானுக்கு  விரட்டி அடித்தது. ஓவர்சீஸ் அலவன்ஸாக கம்பெனி வழங்கும்  மேலதிக 100 அமெரிக்க டாலர்கள் மைதீனின் ரஹ்மானியா நகர் வீட்டை கட்ட பேருதவி செய்யும் என நினைத்தான். 

 

சேக் மைதீன் சமையல் செய்வதிலும் படு கில்லாடி.  ஒரு வெள்ளிக் கிழமை விடுமுறை அன்று  சேக் மைதீன் ஆக்கிக் கொடுத்த நெய் சோறுக்கும், மிளகு மற்றும் முந்திரி அரைத்து கார சாரமில்லாமல் உப்பு சேர்த்து  தேங்காய்பால் ஊற்றி செய்த  கோழி பாங்கானுக்கும், நல்லி எலும்பு, மாங்காய் சேர்த்து வைத்த தாளிச்சாவுக்கும்  மயங்கிய சூப்பர்வைசர் மீரான்   தனது இட மாற்றலின் போது சேக் மைதீனை ” அசன் தம்பியின் அனுமதியுடன்’குக்” என்ற புரமோஷனுடன் பாக்குவுக்கு அழைந்து வந்திருக்கிறார். 

 

அந்தி மயங்கிய ஒரு வசந்த காலத்தில் வாங்க …புல்வாராவுக்கு போகலாம்.. என்றான் சேக் மைதீன். ஒடிசலான தேகத்துடன் மாநிறம் கொண்ட அவனை  “காரா ஒஹ்லான்” (கருத்த நிறமுடைய இளைஞன்) என்றே அஜர்பைஜானிகள் அழைப்பது வழக்கம். நான் பாக்கு நகருக்கு வந்து சேர்ந்து ஒரு வார காலத்துக்குள் என்னுடன் மிகவும்  நெருங்க தொடங்கினான் சேக் மைதீன். அது என்ன புல்வாரா?  பீச் தான்  புல்வாரா  என்றான்..  இருமி சக்கி மாய் (28 மே)  வீதியில் முதல் மாடியிலிருந்த கம்பெனியின் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழிறங்கி வலது பக்கம் திரும்பி    “நிஜாமி சினிமா” வரை நடந்தால்  இரு புறமும் அடர்ந்து நிற்கும் ஆலிவ் மரங்களுக்கு இடையே அமைந்திருந்த புல் புல் அவென்யூ குச்சஸி (சாலை)யை அணுகலாம். அங்கிருந்து  இடது பக்கம் திரும்பி  நேராக  நடந்தால் புல்வாராவை வந்தடைய முடியும்.

 

கேஸ்பியன் கடலின் அழகை புல்வாராவிலிருந்து அள்ளிப்பருகலாம்.  நீண்ட பீச்சின் ஒரு முனை சிறு குன்றுக்கு அடியிலும்   மறு முனை கடல் மட்டத்திலுமாக ஒரு அற்புதமான லேண்ட் ஸ்கேப்பில அந்த பீச் பகுதி அமைந்திருந்தது. கீழிருந்து மேல் நோக்கும் போது குன்றின் முகட்டில் நினைவுத் தூண் ஒன்று இருப்பது தெளிவாக தெரியும்.  அதுதான் கோபர்ஸ்தான் என்றான் சேக் மைதீன்.

 

1990 ஆம் ஆண்டு அஜர்பைஜான் –  ஆர்மேனியா எல்லைப்பகுதியில் அதிபர் ஹைதர்பாபா பிறந்த நக்ச்சவானை ஒட்டி இருந்த  செழுமையான குன்றுப் பிரதேசமான நாகர்னோ – காராபாவை கைப்பற்றிய  ஆர்மேனியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளர்ச்சியில் ஈடுபட்ட அஜரிகள்  பாக்கு நகரில் இருமி யான்வர் ( 20 ஜனவரி) ராஸ்தா அருகே  நடத்திய எழுச்சி ஆர்பாட்டத்தை நசுக்க சோவியத்தின் செம்படை  பாக்கு நகருக்கு நாசகார ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தது. ஜனவரி 20 1990 இல் சோவியத் படையின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இறந்த எண்ணற்ற அஜரி போராளிகள் கோபர்ஸ்தானில் இருக்கும் கல்லறையில் ஓய்வுறக்கம் பெறுவதாக  பின்னொரு நாள் நான் அறிந்து கொண்டேன்.

 

களிப்பும், கொண்டாட்டமே பாக்கு நகர மக்களின் வாழ்வியல் தத்துவமாக இருந்திருக்க வேண்டும் என்பதை என்னால் குறுகிய காலத்திலேயே உணர முடிந்தது. அதற்கான சூழலை கடந்த காலங்களில்  ஜோசப் ஸ்டாலின்  சோவியத் அரசாங்கத்தின் அதிபராக இருந்த காலத்தில் ஏகத்துக்கு ஏற்படுத்தியிருந்தார், அதன் தாக்கம் இன்றும்  இருந்துவருவதை காண முடிந்தது.

 

சோவியத் ரஷ்யாவின் இரும்பு மனிதன் ஸ்டாலின் ஒரு ரஷ்ய இனத்தவர்  அல்ல, அவர் ஒரு ஜார்ஜியன் என பாக்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த  நன்பர்  அருப்புக்கோட்டை பிரபு சொன்னபொழுது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

 

1999 ஆம்  வருடம்.. ஒரு குளிர்கால நள்ளிரவில் அஜர்பைஜான் தலை நகரம் பாக்குவின் ஃப்வுண்ட்டைன் சதுக்கம் பகுதியில் இருந்த  ஒரு விடுதியில் வைத்து ஜார்ஜியா தலைநகர் திபிலிசியில் இருந்து 60 மைல் தொலைவில் இருந்த ஜோஸப் ஸ்டாலின் பிறந்த கோரி என்ற  நகரை நேரில் கண்டுவர என் மனம் ஆவல் கொன்டது.  ஜெர்மானிய கலாச்சரமும், பொதுவுடமை சித்தாந்தமும் மிகுந்தவர்கள் ஜார்ஜியர்கள் என்று மட்டும் அறிந்திருந்த எனக்கு புது விளக்கம் கொடுத்தார்  கேப்டன் அபூ ” பாக்கு நகர் நம் மெட்ராஸ் மாதிரி என்றால்  திபிலிஸி (ஜார்ஜியாவின் தலைநகர்) ரெம்ப மார்டன்..  பம்பாய் மாதிரி” என கூறி எங்களது பயனத்திட்டத்துக்கு ஒரு  கவர்ச்சியை  ஊட்டினார்.

 

இந்த ஜார்ஜியர்கள் ககாஸஸ் மலை பிரதேசத்தில் வாழ்ந்துவரும் பழங்குடி இனத்தவர்கள், யூதர்களை போன்றே நெடிய வரலாற்று பின்னணி கொண்டவர்கள் மட்டுமின்றி தலை நகர் மாஸ்கோவில் இயங்கும் ஒவ்வொரு மாபியா குழுக்களுக்குள்ளும் ஒரு ஜார்ஜியர் கண்டிப்பாக இருப்பார், ஜார்ஜியர்கள் இல்லாத நிழலுலக குழுக்களே  மாஸ்கோ பெரு நகரில் இருக்க வாய்பில்லை, குபின்கா என்றழைக்கப்படும் சேரிப்பகுதி முதல் பெரும் டாலர்கள் புரளும் கேசினோ சூதாட்ட க்ளப்கள்  வரை எங்கும் நீக்கமற ஜார்ஜியர்களே நிறைந்திருப்பர்.

 

தனது இரும்புத்திரை அரசியலை தக்கவைத்துக் கொள்ள, கடும் பணிச் சுமையையும் , பொழுது போக்கையும் தவிர  வேறு எதை பற்றியும் மக்கள் சிந்தனை செய்ய  அவகாசம் தராதவாறு சோவியத்  அரசாங்கமே நாட்டின் அனைத்து நகர்களிலும் கேஸினோ, கினோ தியேட்டர், ஒபேரா நடன அரங்கங்கள்,  போதை வஸ்துகள் புழங்கும் குபின்கா என்ற நிழலுலக பகுதிகள், அண்டர் க்ரவுண்ட் சாவ்னா, மதுபான விடுதிகள், திறந்த வெளி குளியல்  என கேளிக்கை உலகத்தின்  வாசல்களை அகலத் திறந்து வைத்திருந்தது.  தூசு தட்டாத பாரிஸ் நகரம் போலவே பாக்கு நகர் இருந்தது. மக்கள் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர். நெடிய வரலாற்று  கலாச்சார பின்னனி கொன்ட பாக்கு நகரம் ரஷ்யர்களால் கேளிக்கை களமாக மாற்றப்பட்டிருந்ததை என்னால் அச்சமயம் கண் கூடாகவே காண முடிந்தது.

 

1990 களின் இறுதியில் அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் பாக்கு கவர்ந்திழுத்தது.  நகரத்தில் விரவிக்கிடந்த கேளிக்கை வசதிகளும், மாசாக்கம் இல்லாத நகரச் சூழலும்,  மாதச் சம்பளமாக வெகு சொற்பத் தொகையான ஒரு லட்சம் மனாட்டுகளுக்கு (அஜர்பைஜான் கரன்ஸி) மாடாக உழைக்கும் மனிதர்களின்  வறுமை சூழலும் அவர்களுக்கு பிடித்திருக்கலாம்.

 

இந்தியர்கள் சிலரும் அங்கு இருந்தனர், இந்தியர்களுக்கும் அஜர்பைஜானுக்குமான தொடர்பு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என அறிந்து வியப்படைந்தேன், இந்தியர்களுடனான அஜர்பைஜான் தொடர்பினை  சுர்ஹானா ரயோனாவில் இருக்கும் அதெஸ்கா தீ கோயில் இன்றும் சான்று பகர்கிறது.

 

சில்க் சாலை என்ற ஆசியாவை ஐரோப்பாவுடன் இனைக்கும் பிராந்தியங்கள் கடந்த  நெடிய  சாலையில் இந்திய வர்த்தகர்களின் நீண்ட வர்த்தகப்  பயனத்தின் போது வழியில் இருக்கும் அதெஸ்கோ தீ கோயிலே இளைப்பாறும் சத்திரமாக இருந்திருக்கிறது.  இந்திய இளைஞர்கள் சிலர் மருத்துவ பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டு ரெஸ்டாரெண்ட்டுகளில் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தனர். சில முன்னாள் இந்திய மானவர்களும், வளைகுடாவிலிருந்து இடமாற்றலில் வேலைக்கு போன சிலரும் அங்கேயே அந்த நாட்டுப் பென்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தும் வந்தனர். 

 

வீட்டிலிருந்து இருந்து கிளம்பி புல் புல் அவென்யு பூங்காவை கடக்கும் போது, சாலையோர செர்ரி மரங்களில் இருந்து வீதியில் விழுந்து காய்ந்த செர்ரிப்பழங்கள் ஏராளமாக  இறைந்து கிடந்தது. இரத்த சிவப்பு நிறம் கொண்ட அஜர்பைஜானில் கிடைக்கும் செர்ரிப் பழங்களும், மாதுளம் பழங்களும் தான் உலகிலேயே மிகுந்த சுவைமிக்கது என்பதை சேக் மைதீனுடன் ஒரு குளிர்கால இரவில் கணிதப்பேராசிரியர் சுலைமான் மாலிமின் மர்தக்கான் கடலோர திராட்சை தோட்டம் செல்லும் போது அவரின் நன்பரான தாவரவியல் பேராசிரியர் யூச்ஃப் சாஃபரோ கூறியது நினைவுக்கு வந்தது.

 

புல்வாரா வந்தடைந்ததும்.   “புல்வாரா” எப்படி களை கட்டுது பாருங்க என்றான் சேக் மைதீன்  ஒவ்வொரு நாள் மாலையிலும் புல்வாரா திருவிழா கோலம் காணும். அஜரி மக்களை கொண்டாட்ட போதைக்கு அடிமைபடுத்தி வைக்க  அரசாங்கம் நன்கு பழக்கப்படுத்தி வைத்திருந்தது. புல்வாராவில் ஒரு பக்கம் சுற்றிக் கொண்டிருந்த இராட்சத ஊஞ்சலை  நான் நோக்கிக் கொண்டிருக்கும் போதே நீங்க எப்படி  இந்த ஊருக்கு வந்தீய.. என எனது வாழ்க்கை பாதையில் பாக்கு இடம்பெற்ற கதையை குறித்து சேக் மைதீன் ஆர்வத்துடன் விசாரித்தான். 

 

ஆகஸ்ட்  மாதம் குளிருக்கு முந்தைய இலையுதிர் காலத்தில் ஒரு நாளின் நள்ளிரவில்  பாக்கு புறநகரான பினாவில் இருக்கும் ஹைதர் அலியேவா சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கிய எனக்கு  அது ஒரு ஏர்போர்ட்தானா என்ற சந்தேகம் தொற்றிக்கொண்டது. விமானத்தை விட்டு இறங்கியதும்  எங்கும் பனிப்புகையும் இருளும் படர்ந்து கிடந்ததால் விமானம் ஓடும் ரன்வேயில்  பதிக்கப்பட்டிருந்த  அடையாள மின்மினி கலர் விளக்குகளும் கூட எனது கண்ணுக்கு புலப்படவில்லை. தொலைவில் எங்கேயோ ஒரு ஒரத்தில்   மஞ்சள் விளக்கு பிசிறலாக கசிந்த இடம்தான் பயனிகள் வருகைக்கான  டெர்மினல் கட்டடமாக இருக்கும் எனத் தோன்றியது. விட்டில் பூச்சிகள் போல அந்த விளக்கை நோக்கித்தான் விமானத்திலிருந்து இறங்கிய பயனிகளும் விரைவாக நடந்து கொண்டிருந்தனர் , சர்வதேச ஏர்போர்ட்டுக்கான எந்த அறிகுறியும்  இல்லாத  பாக்கு நகர ஏர்போர்ட்டுக்கு  என்னை சார்ஜாவிலிருந்து சுமந்து கொண்டு வந்து சேர்த்த துருக்கி ஹவா எல்லோரா விமானத்தை தவிர வேறு எந்த விமானமும் அச்சமயம் அங்கு இருப்பதாக தெரியவில்லை.

 

சோவியத் ரஷ்யாவில் பேருந்து நிலையமோ, விமான நிலையமோ அவர்களை பொறுத்தவரை வேறுபாடே இல்லை போலும், வாகன நிலையங்களில்  கூட வேற்றுமை பாராத சமத்துவத்தில் விஞ்சித்து நின்ற ரஷ்யர்களின் பாகுபாடுகளற்ற கம்யூனிச கோட்பாடு எனக்கு பெரும் வியப்பை அளித்தது. இரும்புத் திரை தகர்ந்து தனி நாடாக பிரிந்த பின்பும் அஜர்பைஜான் மக்களுக்கு 70 ஆண்டு கால கம்னியூச சித்தாந்தம் ஏற்படுத்திய தாக்கம் குறைய இன்னும் பல காலம் பிடிக்கலாம். அமீரகத்தில் வீசும் கொடும் அனலில் கருகி பாக்கு நகருக்கு  வந்து சேர்ந்த   எனது முகத்தில் மிதமாக மோதிய குளிர்காற்றில் என்னால் வெனிலாவின் வாசத்தையும்,  காட்டு காளான்களின் மணத்தையும் நுகர முடிந்தது. பாக்கு நகர் முழுதும் அடர்ந்து பரவி நின்ற வில்லோ மரத்திலிருந்தும், அதன் இளமஞ்சள் மலர்களிலிருந்து  வரும் மயக்கும் வாசமாக கூட  அது இருக்கலாம்.

 

விமான நிலைய டெர்மினல் பகுதியில் கையில் நீண்ட துப்பாக்கியும், கரும் பச்சை சீருடையுமாக வரிசைகட்டி நின்றிருந்த  ஓங்கி சிவந்த அஜரி இராணுவத்தினரை பார்த்து  லேசான நடுக்கம் கொண்டேன். பரபரப்பு நிறைந்த இமிக்கிரேஷன் கவுண்ட்டரில் அமர்ந்திருந்த அதிகாரி உருண்டு திரண்ட பெரிய சைஸ் சிகார் ஒன்றை புகைத்துக்கொண்டிருந்தார். நரைத்த தலைமுடியுடன்,  தங்கப் பல்லும் கட்டிக் கொண்டிருந்த  அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரராக  இருந்திருக்க வேண்டும்… கிழட்டு நரி போல கூர்மையாக என்னைநோக்கிய அந்த அதிகாரி  சேன் ஹர்தா சேன்? என எனது நேஷனாலிட்டியை குறித்து வினவினார். பின்பு பாஸ்போர்ட்டில் முன் அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த  மூன்று தலை சிங்கத்தை பார்த்ததும்  ” ஹிந்துஸ்தான்தா கேலீர் சேன்.. யக்ஸீ” ( இந்தியாவிலிருந்து வருகிறாயோ… நல்லது) எனக் கூறிக் கொண்டே “நச்” என என்ட்ரி ஸ்டாம்பை பாஸ்போர்ட்டின் ஒரு பக்கத்தில் குத்தி வெளியேற்றினர்.

 

விமான நிலையத்திலிருந்து எடைகூடிய விநோதமான ரஷ்ய இரும்பு ட்ராலி ஒன்றை உருட்டித் தள்ளிக் கொண்டு வந்த எனது  இந்திய அடையாளத்தை வைத்து சரியாக  அனுகினான் கம்பெனி டிரைவர் ரோமா… கொஞ்சம் ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தான்.     என்னுடன் கைகுலுக்கிக் கொண்டவன் சிறிது நேரத்தில் பழைய பிரீமியர் பத்மினி சாயல் கொண்ட ரஷ்ய தயாரிப்பான மஞ்சள் நிற “லாடா” கார்  ஒன்றில் என்னை அமர்த்திக் கொண்டு அந்த நள்ளிரவில் பாக்கு நகரை நோக்கி சீறிப்பாய்ந்தான்.. சாஜன் என்ற  இந்தி திரைப்படத்தின் ஆடியோ கேஸ்ட்டை யாரிடமோ ரோமா  இரவல் பெற்றிருக்க வேண்டும் ” எஸ்.பி.பி” யின் மயக்கும் குரலில் ” பஹுத் பியாரு கர்த்தேஹே தும்கோ சனம்” பாடல் பின்னனியில் ஒலிக்க..  நள்ளிரவிலும் சூழல் ரம்மியமாகியது….

 

இருமி சக்கி மாய் வீதியில் இருந்த கம்பெனியின் குடியிருப்பு சோவியத் கலோனியல் காலத்தைய ஒரு வீடாகத்தான் இருந்தது. ரோமாவின் காரில் அதிவேகமாக  பயனித்து கம்பெனியின் இல்லம் வந்து சேர்ந்ததும் அன்புடன் வரவேற்றான் சேக் மைதீன்  அந்த இரவிலும் சிரமம் பாராமல்  சுடு சோறு பொங்கி, சாசேஜை ( ஹாட் டாக்)   இந்திய மசாலாவுடன் சேர்த்து வசக்கி, மிளகு ரசம் வைத்து பரிமாறினான்.

 

அஜர்பைஜான் நகர்புற வாழ்வு என்பது கொண்டாட்டம் நிறைந்தது,

95 வீதம் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் இருக்கும் இந்த நாட்டின் புற நகர் பகுதிகளில் ஒரே சைஸ் சோப்பு டப்பாக்களை அடுக்கி வைத்தது போன்ற அடுக்கு மாடி குடியிருப்புக்களை ஏராளமாக காணலாம். 

புற நகரான அஹ்மதலியில் இருக்கும்  சோவியத் காலத்து குடியிருப்பு வளாகம் ஒன்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒன்று போல  அடுக்கப்பட்டிருந்ததை பார்த்து  நான் பலமுறை வியந்தது உண்டு. நகரின் பிரதான டௌன் டவுன் பகுதியில் மேல்தட்டு மத்திய தர மக்கள் வாழும்  குடியிருப்புகளில் ஒரு கட்டிடத்தில்  6 முதல் 12 வீடுளுக்கு குறையாமல் இருக்கும். பிரமாண்ட இரும்பு கதவுகளுடன் வாசலில் வளைந்த முகப்புகளை அமைத்திருபார்கள்,  வீடுகளின் உள்ளே  சிர்வான் அல்லது துருக்கி உதுமானிய பேரரசு காலத்தைய கலாச்சாரம் பிரதிபலிக்கும். மூன்றுக்கும் குறையாத  அறைகளுடன் அகண்டு தொங்கும் பூச்செடிகள் தூக்கி வைத்த  பால்கனியும், பிரமாண்ட  வரவேற்பு அறையும், அறையின் நடுவே தொங்கும் அழகிய பளிங்கு அலங்கார விளக்குகளும்  அரச தர்பார் மண்டப சூழலுக்கு அழைத்துச் செல்லும்.

 

எங்கும் மரத்தால் அழுத்திய தரைத்தளமும், தரையில் விரிக்கப்பட்ட அகண்ட பூ வேலைப்பாடுடன் கூடிய பாரசீக கம்பளமும்,   விலை உயர்ந்த மரப் பெட்டகத்தில் இருக்கும் இராட்சத பியானாவும்,  அழகிய மர வேலைப்பாடுகளுடன் கூடிய சட்டம் வைத்து நடப்பட்ட ஆளுயர முகம்பார்க்கும்  கண்னாடியும் அஜரி வீடுகளில்  இடம் பெற தவறுவதில்லை. பாக்கு நகர வீடுகளில் பெரும்பாலும் பெரிய கண்னாடி சாளரங்களை மறைக்க இரட்டை திரைச்சீலையை பயனடுத்துகின்றனர். 

 

வீடுகளின் முன் கதவை திறந்தவுடன்  காலணிகளை வைக்க பிரத்யோக மரத்தினாலான பெட்டியும், குளிர் கோட்டுகளை தொங்கவிட வழு வழுப்பான மர ஸ்டாண்டும் இருக்க காணலாம். வீடு முழுவதும் கேஸ் குழாய்கள்  சுவர்களுக்கு உள்ளே மறைவாக பதிக்கப்பட்டு அச்சம் தரும்.. கடும் குளிரில் வீட்டை கதகதப்புடன் வைத்திருக்கும் ஹீட்டருக்காகவும்,  அடுப்பெரிக்கவும், குளியலறை  சுடுநீர் கொதிகலனுக்காகவும் கேஸை அரசாங்கம் குறைந்த விலையிலேயே வழங்கி வருகிறது. வீட்டு உபகரணங்களுக்கான பொருட்கள் ரஷ்ய தொழில்நுட்பத்தில் இயக்கபடுகிறது, இவை அனைத்தும் மேற்கத்திய தொழில்நுட்பத்துக்கு எதிராக  தலை கீழாகத்தான் இருக்கிறது. விளக்கை போட சுவிட்சை கீழ் நோக்கி அழுத்துவதற்கு பதிலாக  மேல் நோக்கித்தான் அழுத்த வேண்டும்.. இந்த சிஸ்டத்தை முறையாக அறியாமல் கைவைத்தால் அதே கதி தான்.

இப்படித்தான் புல்புல் அவென்யூவில் தற்காலிகமாக துபாயில் இருந்து வந்து தங்கி இருந்த சபீர் காக்கா குளியறை ஹீட்டரில் கேஸை முதலில் மூடுவதற்கு பதில் தன்னீர் குழாயை மூடியதால் ஹீட்டர் வெடித்து நெருப்பு பற்றிக் கொண்டது…கரணம் தப்பினால்.. மரனம் என்பது போல மயிரிழையில் உயிர் தப்பி அன்றிரவே லூஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்தை பிடித்து மாஸ்கோ வழியாக துபாய் போய் சேர்ந்தார்.

 

கம்பெனியின் குக் ஆக வேலைக்கு வந்த  சேக்மைதீனுக்கு அவனது 10 கோல் வீட்டுக் கனவு தொடர்ந்து  உந்தித் தள்ளி வந்தது. 6 மாதங்களில் அஜரி மொழியை பேசக்  கற்றுத் தேர்ந்தான். நாளடைவில் அஜர்பைஜானின் விளிம்பு நிலை மக்கள் வாழும் குபின்கா பகுதியில் பேசும் பேச்சு வழக்கிலேயே அவன் சரளமாக பேசுவதை கண்டு பூர்வீக அஜரிகளே சற்று மிரண்டுதான் போயினர். சேக் மைதீனின்  அஜரி மொழி புலமையை கண்டு கம்பெனி அவனை ஸ்டோர் கீப்பராக பதவி உயர்த்தியது. பாக்குவின் புற நகரான தர்னாகுல் வேர் ஹவுஸில் பணியில் அமர்த்தப்பட்டான்.  

 

இவ்வளவு சீக்கிரம் அஜரி மொழியை கற்றுக் கொண்டது குறித்த காரணத்தை வினவியபோது அவனது அஜரி தோழி இன்னாராவை வெகுவாக மெச்சினான். ஒரு விரைவு இரயில் இஞ்சின் ஓட்டுனரான இல்ஹார் மாலிமின் மகளான இன்னாராவை ” நரிமன் நரிமனோ”  மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தித்திருக்கிறான். வேலை தேடிய அவளுக்கு தர்னாகுல் வேர் ஹவுஸில் ” கோதுமை மாவு வாங்கிச் செல்லும் பேக்கரி உரிமையாளரான பக்தியாரிடம்  பேசி ஒரு நல்ல வேலை வாங்கி கொடுத்திருக்கிறான். இன்னாராவுடன் நட்பில் தொடர்ந்த பழக்கத்தில் அஜர்பைஜானிய மொழி சேக் மைதீனின் வாயில்  நின்று விளையாடியது.

 

பதவி உயர்வு பெற்ற சேக் மைதீன் வேர் ஹவுஸில் வேலையில்லாத நாட்களில்  கம்பெனியின் காரை எடுத்து ஓட்டிப் பழகி வெகு விரைவில் நன்றாக கார் ஓட்டவும் கற்றுக் கொண்டான் . 

 

அது ஒரு இளவேனில்காலம், நவ்ரூஸ் பைராமுக்கு (வசந்த திருவிழா)  முந்தைய இரவு, வீசும் வெண்ணிலவின் பளீர் ஒளிவெள்ளத்தில் மினுங்கிக் கொண்டிருந்த பாக்கூவின் பிரதான ஜாபர் ஜாபர் அலி சாலையில்  பேஸ் மர்த்தபாவில் இருந்து கிளம்பி  நிஜாமி மெட்ரோ நிலையத்துக்கு  குறுக்கே ஓடும் ட்ராம் வண்டிகளை கடந்து ஒரு விமானத்தைப் போல மிட்ஸுபிஸி பஜீரோ காரை விரைந்து செலுத்திக் கொண்டிருந்தான் மைதீன். அன்றுதான் தென் அஜர்பைஜானில் இருந்த கடலோர  நகரான , லங்கரானில் இருந்து வந்து நிஜாமி புகைவண்டி நிலையத்தில் இரயிலில் வந்திறங்கி காத்துக் கொண்டிருந்த தனது தோழி இன்னாராவை விரைவில் சந்திக்கவேண்டும் என்ற பரபரப்பு மைதீனின் கால்களில் தொற்றிக் கொண்டிருந்த்ததை அவன் ஏடாகூடமாக ஆக்ஸிலேட்டரை  அழுத்தும் வேகத்தில் கண்டுகொண்டேன். என்ன சோதனை? நிஜாமி ரவுண்டானா அருகே  நடனமாடிய மைதீனின் கால்களுக்கு சலங்கை கட்டியது நகரில் பாதுகாப்பு ரோந்து சுற்றிக்கொண்டிருந்த  அஜர்பைஜான் மெட்ரோ போலிஸ் பட்ரோல் வாகனம் ஒன்று..

 

பஜீரோ ஜீப்பை மறித்து  நிறுத்திய போலீஸ் இளைஞன் ஒருவன், எங்களை ஊடுறுவி உற்று நோக்கியபடியே  “ஹாரா கெத்திர் சிஸ்? ( எங்கே போறீங்க?)  என வினா தொடுத்தன்,  அவனது மொழியிலேயே பதிலளித்த மைதின் “பிஸ்லாரின் பீர் தன தோஸ்த்  லங்காராந்த  பாக்கியா கேல்மிஸ்த்து , இந்தி நிஜாமி மெத்ரோயானந்தாது,  ஒன்மாய  ஜோர்மாயா கொய்ரா பிஸ் கெத்திர்” என நிஜாமி மெட்ரோ நிலையத்தில் காத்திருக்கும் தோழி இன்னாராவை தான் சந்திக்க செல்வதாக பதிலளித்தான், யக்ஸி.. ( நல்லது) என்று கூறிய  போலீஸ் ” சேனின்  டாக்குமெந்த்லார வேர்” என   மைதீனின் டிரைவிங் லைசன்ஸை கேக்க அதுவரை கார் லைசன்ஸ் எடுக்காத மைதீனின் டான்ஸ் ஆடிய கால்களில் லேசான நடுக்கத்தை காணமுடிந்தது.  லைசன்ஸை மறந்து சமது உருகன் சாலையில் இருந்த  ஆபீஸ் பீரோவில் வைத்து பூட்டிவிட்டு  வந்து விட்டதாக மைதீன் கூறிய  கதையை அந்த அஜரி போலிஸ்கார ஒஹ்லான் ( இளைஞன்) நம்பத் தயாராக இல்லை, 

 ” “சிஸ்லார் கெத் கமாந்த்தர் ஓபீசியா ”  என் அருகில் இருந்த வாகணப் போக்குவரத்து  ஆணையாளரின் அலுவலகத்துக்கு எங்களை வர கட்டளையிட்டான் , சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுவோமோ  என சுதாரித்துக் கொண்ட ” மைதீன்”  தனது இந்திய அடையாளத்தை உதவிக்கு அழைக்கத் துவங்கினார்

“சிஸூம் பிஸூம்லாரின் தோஸ்த்..  ஹிந்துஸ்தான் ஆதாம்லார் சிஸ்லார சோக் சேவிர் ”    எனக் கூறி இந்தியர்கள் அஜரிகளின் பாரிய உறவு என்ற  பாசவலை தொடர்பை  பரப்பிக்காட்டி  அந்த  போலீஸ்காரரிடம் எங்களை விட்டுவிடும்படி தாஜா செய்யத் துவங்க.. இந்தியர்களிடம் பொதுவாகவே நேசம் பாராட்டும்  அஜரிகளின் மனோபாவம் காரணமாக அந்த போலீஸ் இளைஞனின் மனம் சடுதியில் இளகியது   ஓல்து… சிஸ் கெத் .. அம்மா.. (நீங்க போகலாம் ஆனால்… ) ஜிம்மி ஜிம்மி ஆஜா ஆஜா பாடலை ஒருமுறை  பாடிவிட்டுப் போங்க..  என வேண்டி விரும்பி கேட்டதும், ஜிம்மி என்று சோவியத் யூனியன் முழுவதும் பரவலாக அறியப்பட்ட இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடித்து 1980 களில் ரஷ்ய நகரங்களில் சக்கை போடுபோட்ட ” டிஸ்கோ டான்ஸர்” திரைப்படத்தில் இடம்பெறும் அந்த “ஜிம்மி ஜிம்மி” பாடலை தெரியாத மைதீன் ஒருவாரு சமாளித்து  ஜிம்மிக்கு பகரமாக  ” சல் சல்  மேரா சாத்தி” பாடலை பாடி  , அந்த பாடல் இடம்பெற்ற சாண்டோ சின்னப்பா தேவரின் “ஹாத்தி மேரா சாத்தி” இந்தி திரைப்படத்தில் யானைக்கு ராஜேஸ் கன்னா பிப்பீ ஊதுவது போல நடித்து, அந்த பரபரப்பான சாலையில் இறங்கி ஒரு தெரு டான்ஸர் போல வளைந்து  நெளிந்து ஆடிக்காட்டிவிட்டு .. அந்த போலீஸ்காரருக்கு சாவோல் ( நன்றி) சொல்லிவிட்டு காரில் உட்கார்ந்து நிஜாமி மெட்ரோவை நோக்கி மீண்டும் காரை விரட்டத் தொடங்கினான்.

 

நாங்கள் நிஜாமி மெட்ரோ நிலையத்தை அடைந்த போது இரயில் நிலையத்தின் வாசலில் காத்திருந்த இன்னாரா மைதீனை கண்டவுடன் ”  ஜிம்மி சேன் நிஜசே..யக்ஸசேன்? ( எப்படி இருக்கிறாய் ஜிம்மி நலமா ?) என் வினவியது கேட்டு எனக்கு ஆச்சரியம் மேலிட்டது.  என்னை ’  மேனின் தோஸ்தும்து ‘  என இன்னாராவிடம் அறிமுகம் செய்து வைத்த மைதீனை ” டிஸ்கொ டான்ஸர் திரைப்பட ஹீரோ ஜிம்மி ( மிதுன் சக்கரவர்த்தி) போலவே ஒடிசலாக, மாநிறத்துடன் இருப்பதாலேயே மைதீனை ரெம்ப விரும்புவதாக கூறினாள்.

 

டிஸ்கோ டான்சர் படத்தில் வரும் ஜிம்மி பாடலுக்கும், மிதுன் சக்கரவர்த்தி மீதும் ரஷ்யர்கள்  போதை கொண்டு அலைய என்ன காரணம் இருக்க முடியும்.? மனம் யோசனையில் ஆழ்ந்தது. அடுத்த நாள் காலை அதற்கு விடை தந்தாள் கம்பெனியின் அக்கவுண்ட்டண்டான   மூதாட்டி  ஓல்கா கானம்…

 

1980 களின் பிற்பகுதியில் உலகில் ” டிஸ்கோ” மிகவும் பிரபலமான இசை வகையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, சோவியத் யூனியன் மக்களுக்கு இந்த டிஸ்கோ இசையைக் கேட்க அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.., ஏனெனில்  இந்த மேற்கத்திய வகை பாடல்கள் அனைத்தும் “அமெரிக்கயா” மற்றும் “முதலாளித்துவம்”  என்ற சோவியத் மக்கள்  வெறுத்து வந்த வார்த்தைகளுடன் தொடர்பு கொண்ட இசை என்பதால் அவ்வளவாக விரும்பாத நிலையே சோவியத் யூனியன் எங்கும் இருந்து வந்தது.

 

ஆனால் மறுபக்கம், அதே காலக்கட்டத்தில்..  சோவியத் ரஷ்யாவின்  உன்னத நட்பு நாடாக திகழ்ந்த இந்தியா மற்றும் இந்தியத் திரைப்படமான ” டிஸ்கோ டான்சர் ” வெற்றி குறித்த செய்திகள் ரஷ்ய பத்திரிக்கைகளில் அட்டைப்படம் போட்டு வெளியிட்டு பிரபலமடைந்து  வந்ததால், டிஸ்கோ டான்சரும் அதன் கதாநாயகன் ஜிம்மியும் ( மிதுன் சக்ரவர்த்தி) இந்திரா காந்தியும், “ஆவாரா” சினிமாவும் ராஜ்கபூரும் , போல ரஷ்ய மக்கள் இதயத்தில் ஆழக் குடி புகுந்தனர். 1980 இல் பாரிஸ் பாப் பாடகர் ஒட்டவான்  வெளியிட்டு உலகப்புகழ் பெற்ற அசல் “டிஸ்கோ” ஆல்பம் பாடல்களை 

கேட்பதற்கு பதிலாக, சோவியத் மக்கள் இந்திப் பாடலான ஜிம்மி ஜிம்மி ஆஜா ஆஜாவைக் கொண்டாடினார்கள் , அந்த திரைப்பாடலின் ஹீரோவான மிதுன் சக்ரவர்த்தியை ஜிம்மி என்று அழைத்து வெகுவாக நேசித்தார்கள். 20 வருடங்கள் கடந்து இன்னும் இந்த பாடல் இப்போது வரை மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய மக்களால் அறியப்படுகிறது. என்று நீண்ட ஒரு விளக்கம் அளித்த ஒல்கா கானத்தை வியப்புடன் நோக்கினேன்.

 

 

தற்போது  இந்திய சினிமா ரஷ்யாவில் முன்பு இருந்ததை விட மிகவும் குறைவாகவே வெளியிடப்படுகிறது, தற்போதைய சினிமாக்களும், அதன் கதாநாயகர்களும் அவ்வளாவாக பிரபலம் ஆகவில்லை என்றாலும் ஆவாரா, சீதா அவுர் கீதா மற்றும் டிஸ்கோ டான்சர் போன்ற சில மறக்க முடியாத கிளாசிக் திரைப்படங்கள் இன்னும் சில நேரங்களில் பாக்கு உள்பட மத்திய ஆசியாவிலும், ரஷ்யாவிலும் டிவியில் காட்டப்படுகின்றன. நீங்கள் இந்தியன் என்று எந்த ரஷ்யரிடம் சொன்னாலும் அவர்கள் உங்களிடம் ஜிம்மி ஜிம்மி பாடலை பாடச் சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

 

 இன்னாராவுக்கு ஜிம்மியாக தெரிந்த மைதீனின் அந்த தொடர்பே 

அவனது வாழ்க்கையிலும் விளையாடும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. காலம் என்னை  மூன்று வருடங்களில் ஓமானின் தலைநகர் மஸ்கட்டுக்கு விசிறி அடித்தது. லட்சியக் கனவுடன் இருந்த சேக் மைதீன் அவளது அஜரி தோழியான இன்னாராவை திருமனம் செய்து கொண்டான். ஊரில் வீடு கட்ட சேர்த்த தொகையில் படாபகரமாக பெரிய தோய் (திருமன) பார்ட்டி வைத்ததாக என்னிடம் தொலைபேசியில் அழைத்து பெருமிதம் கொண்டான். பின்னாளில் அவனுக்கு அச்சு அசலாக அவனைப்போலவே ஆன் குழந்தை ஒன்று பிறந்திருப்பதாகவும் இப்ராஹீம்  ரஹிமவோ என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் தந்தான். தனது இந்த நடவடிக்கைகளால் அசன் தம்பியின் கோபத்துக்கு ஆளான மைதீனை கம்பெனி சீட்டை கிழித்து வெளியே அனுப்பியது.

 

காலம் சக்கரமாக சுழன்று கொண்டிருந்தது. அஜரிகளுடன் அஜரியாக பின்னிப்பினைந்த சேக் மைதீனுடனான தொடர்புகள் அற்றுப் போயிருந்த சமயம், ஓமான் வாழ்க்கையில் பரபரப்பாக இருந்த எனக்கு, ஒரு நள்ளிரவில் நன்பன் அனாரிடம் இருந்து வந்த  குறுஞ் செய்தி தூக்கத்தை தொலைத்து, துக்கத்தை விதைத்தது.

உண்மைதான் ஒரு பின்னிரவில் காரா காரபோவ் பகுதியில் இருந்த இன்னாராவின் வீட்டின் பின்புறம் , ஆட்டுத் தொழுவத்தில் சேக் மைதீன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்… அன்று வசந்த காலம் துவங்கும் நவ்ரோஸ் திருவிழா… பாக்கு நகரமே விழாக் கோலம் பூண்டிருக்க…பாக்கு த கெலசியா …பாக்கு தா கெலசியா பாக்குதா… ஒல்முஸம் பாக்குதா கெலசியா.. (பாக்குவில் வாழ்கிறோம்.. பாக்குவில் வாழ்கிறோம்.. பாக்குவிலேயே பிறந்தோம் அங்கேயே மடிவோம் ) என்ற அஜரி பாடலை சில இளைஞர்கள் சத்தமாக பாடிக் கொண்டிருந்தனர் இச்சாரி சகரில் (பழைய பாக்கு நகர்) இருந்த மெய்டன் டவருக்கு ( கிஸ் கலஸ்)  அப்பால்  எரி நட்சத்திரம் ஒன்று கேஸ்பியனில் கடலில் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து விழுந்து மறைந்தது… கூடவே சேக் மைதீனின் பத்து கோல் ரஹ்மானியா நகர் வீடு என்ற இலட்சிய கனவும்தான்… முன்னெப்பெழுதும் போலவே  கேஸ்பியன் கடல் மட்டும் காரிருளில்  ஆரவாரமற்று அமைதியாகவே இருக்கிறது.

மஹ்மூது நெய்னா . எஸ் –கீழக்கரை

மின்னஞ்சல் : naina1973@gmail.com

 

Series Navigationகணக்கு வாத்தியார்கவிதையும் ரசனையும் – 11
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *