கண்ணிய ஏடுகள்

This entry is part 13 of 13 in the series 21 பெப்ருவரி 2021

 

                 

ஜோதிர்லதா கிரிஜா

(தீபம் இதழில் 1987 இல் வந்த சிறுகதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் ‘உடன் பிறவாத போதிலும்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)

               எழுத்தாளர் துரையரசன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, சுவரை வெறித்துப் பார்த்தபடி கையுடைந்த தமது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். தமது அறை என்று சொல்லிக்கொள்ள ஒரு மரத் தட்டியால் மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரும் அதைத் தட்டாமல் உள்ளே வரக்கூடாது என்பது அவரது கட்டளை. அதை அடிக்கடி மீறுபவள் அவர் மனைவி மட்டுமே. குழந்தைகள் ஞாபகமாகத் தட்டிவிட்டு, அவர் ‘யெஸ்’ என்று ஓர் அலுவலரின் தோரணையுடன் அனுமதித்த பிறகே உள்ளே வருவார்கள்.

இப்போதும் அவர் மனைவி தட்டியைத் தட்டி அனுமதி கேட்காமலே அங்கு வந்து அவருக்கு முன்னால் கோபத்தாலும் ஆத்திரத்தாலும் கடுகடுவென்றிருந்த முகத்தைக் காட்டியவாறு, இடுப்பின் இரு புறங்களிலும் கை வைத்து நின்று,  “எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை?” என்று கத்தினாள்.

 

      துரையரசன் உறக்கம் கலைந்தவர் போன்ற தலைக்குலுக்கலுடன், கன்னத்திலிருந்து கையகற்றி, மனைவியை ஏறிட்டார்.

 

       “கை நிறையச் சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த வேலையை அறிவுகெட்டதனமா விட்டுட்டு இப்ப கிடந்து அல்லாடுங்க. உங்க அல்லாட்டம் உங்களோடவா போகுது? எங்களையுமில்ல தொத்துது? வீட்டில மணி அரிசி கிடையாது. அக்கம்பக்கத்துல நம்ம கொழந்தைங்க முகத்துக்காக அப்பப்ப கடன் தர்றாங்கன்னாலும், வெக்கங்கெட்டு எத்தினி வாட்டி போய்ப் போய் நின்னு கையேந்துறது? கைவசம் இருக்குற அரிசியோட, பக்கத்து வீட்டில கடன் வாங்கி, இன்னைக்குப் பாட்டை எப்படியாச்சும் பாத்துடறேன். ஆனா, நாளைக்கு? அது உங்க பாடு. இனிமே என்னால ஆகாது கடன் கேட்டுப் பல்லிளிக்கிறதுக்கு,” என்று திட்டவட்டமாக அறிவித்த முத்தம்மா, அடுப்பில் ஏதோ தீய்ந்த வாசனையால், மேற்கொண்டு பேசிக்கொண்டு நில்லாது, உள்ளே அவசரமாக ஓடிப்போனாள். போன சுருக்கில் மறுபடியும் திரும்பி வந்தாள். மறுபடியும் கன்னத்துக்கு ஏறி இருந்த தமது கையை இறக்கி, வெறித்த பார்வையை ஞாபகமாகச் சுவரிலிருந்து நீக்கிக்கொண்ட துரையரசன் குற்ற உணர்வை மறைத்துக்கொள்ள முடியாத பார்வையால் அவளை ஏறிட்டுத் தலைதாழ்ந்தார்.

       “எத்தினி வருசமா கதை, கட்டுரை, கவிதைன்னு எழுதிட்டிருக்கீங்க?”

       துரையரசன் பதில் சொல்லாதிருந்தார்.                                “கேக்கறனில்ல? வாயில என்ன கொழுக்கட்டையா?”                              “உனக்குத் தெரியாட்டி இல்ல நான் பதில் சொல்லணும்?”                             

“சர்க்கார் வேலையில இருக்கீங்கன்னுதான் எங்கப்பா உங்களுக்கு என்னையக் கட்டி வெச்சாரு. கலியாணமாகி ரெண்டொரு வருசத்துல வேலையை விட்டுப்போட்டுக் கதைக்கிறதா இருக்கீங்கன்றது முன்கூட்டித் தெரிஞ்சிருந்தா நான் உங்களைக் கலியாணம் கட்டச் சம்மதிச்சே இருந்திருக்க மாட்டேன். தெரியுமில்ல? இது அயோக்கியத்தனமில்ல? நல்ல வேலையில இருக்கிறதைக் காட்டி ஒரு பொண்னைக் கட்றது; அப்புறம் வேலையை விட்டுர்றது. எந்த தகிரியத்துல செஞ்சீங்க?”

     

 “இத பாரு, முத்தம்மா. பதினஞ்சு வருசத்துக்கு முந்தின கதையை இப்பப் பேசி என்ன லாபம்?”

     

 “வயிறு இருக்குதே! நான் மட்டுமின்னா கெணத்துல கொளத்துல விழுந்து உசிரைப் போக்கிப்பேன். கொழந்தைங்க இருக்குதே மூணு?”

     

       “எந்தக் கெணத்துலயும் இப்ப தண்ணி கிடையாது.”

     

 “இந்த எடக்குப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே. கெணத்துல தண்ணி இல்லாட்டிப் போகுது. ஒரு மொழம் தாம்புக் காயிறு கிடைக்குமில்ல?”

     

 முத்தம்மாவின் கண்கள் கணத்துள் நிறைந்தன. அவளது முன்றானை கண்களை நோக்கிப் பயணம் செய்ததை ஓரத்துப் பார்வையால் கவனித்ததும் அவருள் ஒரு துயரம் பொங்கியது. ‘உண்மைதான். என்னை மணந்து இவள் என்ன சுகத்தைக் கண்டாள்?’ என்கிற கேள்வி அவருள் எழுந்தது.

     

 “காலத்தை உத்தேசிச்சுக் கொஞ்சம் வளைஞ்சாவது குடுக்கத் தெரியுதா? அதுவும் இல்லே. நேத்து எழுத ஆரம்பிச்சவனெல்லாம் இன்னிக்கு சொந்த வீடு, காரு, நட்சத்திர ஓட்டல்ல தங்கிக் கதை எழுதுறதுன்னு ராஜாங்கம் நடத்தறான். ஆனா நீங்க? நான் எழுதுறதுதான் எழுத்து, மத்தவெல்லாம் எழவுன்னு சொல்லிக்கிட்டுத் திரும்பி வர்ற கதைங்களைப் பெட்டியில அடுக்கி வெச்சுக்கிட்டிருக்கீங்க. கதை எழுதப் பேப்பரு வாங்குறதுக்குக் கூடப் பொஞ்சாதி நகையில கை வைக்கிறீங்க. நானென்ன மத்தப் பொம்பளைங்களைப் போல நகையால இழையுங்கன்னா சொல்றேன்? சோறு போடுங்கன்றேன் …” – கடைசி வாக்கியம் உருவிழந்து சிதைந்து அழுகையுடன் வெளிப்பட்டது.

 

       “இத பாரு, முத்தம்மா. மத்தவங்க வீடு கட்றது, காரு வாங்குறது, நட்சத்திர ஓட்டல்ல தங்கி எழுதுறது இதையெல்லாம் பார்த்துப் பொறாமைப் பட்றது பொல்லாத்தனம். அவங்க வழியில அவங்க போய்ச் சம்பாரிக்கிறாங்க. அந்த வழியில என்னால போக முடியாது.”

        “நீங்க ஒண்டியாளா இருந்தா, கொளகை, லட்சியம்னு குதர்க்கம் பண்ணிக்கிட்டுக் கெடக்கலாங்க. பெத்து வெச்சிருக்கீங்களே மூணு! அதுங்க பசிக்குதுன்னு வர்றப்ப, அரை வயித்துக்குப் போட்டுட்டு, இம்புட்டுத்தான்னு சொல்றப்ப பெத்தவ மனசு என்ன பாடு படும்னு உங்களுக்குத் தெரியுதா? ஒரு நாளு வந்து பரிமாறுங்க. அப்ப தெரியும் என்னோட மனக்கஷ்டம் …”

       

 “ …….”

     

 “ஆரம்பத்துல எழுத்துல கொஞ்சம் சம்பாரிச்சீங்கதான். இல்லைங்கலை. சேர்க்க முடியாட்டியும் சோத்துக்குப் பஞ்சமில்லாம இருந்திச்சு. ஆனா மாறிட்ட காலத்துல நீங்களும் மாறினாத்தானே பொழப்பு நடக்கும்? என் வழியிலதான் நான் நடப்பேன்னு சொல்லிக்கிட்டுக் கெடந்தா வயிறு நெறையுமா? சொல்லுங்க. அவங்கவங்க பத்திரிகை ஆபீசுங்களுக்கு நேர்ல போய்க் கதை குடுக்கறாங்க. நீங்க இன்னிக்கும் எந்தப் பத்திரிகை ஆபீசுக்கும் நேர்ல போகமாட்டீங்க. அவங்களா வந்து கேக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா? இப்ப இருக்குற ட்ரெண்ட்ல அது ஒரு நாளும் நடக்காது. நீங்க வழியையாச்சும் மாத்திக்கிட்டீங்கன்னாலும் பரவாயில்லே. அதையும் செய்ய மாட்டேன்றீங்க.”

       

 “இத பாரு, முத்தம்மா. இங்க வா. இந்த வாரத்து முல்லைப்பூ இதழ்ல வந்திருக்குற சிறுகதையில இந்த ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் படி. படிச்சுட்டு நீயே சொல்லு – நான் அப்படியெல்லாம் எழுதணுமாங்குறதை …”

     

 “எல்லாம் எனக்குத் தெரியும்.”

     

 “நீ வா சொல்றேன். இதைப் படி… ஒரு பொண்ணோட நிர்வாணத்தை வர்ணிக்கிறான் – ஒரு பொறுக்கி மாதிரி. காசு வந்தாப் போதும்னா எப்படியும் எழுதலாம். எனக்கும் தெரியும் இவனுகளை விடப் பொறுக்கித்தனமா எழுத. இது ஒண்ணும் பெரிய வித்தை இல்லே. அதைவிடப் பட்டினியால சாகலாம்.”

     

 “நீங்க மட்டும்னா சாகலாங்க. உங்கள மாதிரி ஆளுங்க ஏங்க கல்யாணம்

கட்டணும்? கொழந்தைங்களை வரிசையாப் பெறனும்?”
     

  “அளவோட தாண்டி நாம் பெத்திருக்கோம். ஒரு பொண்ணு, ரெண்டு ஆணு. என்னமோ வரிசையாப் பெத்தோம்குறியே?”

     

 “மூணுக்கே சோறு போட முடியல்லே. இன்னும் அஞ்சும் ஆறும் இருக்கணுமாக்கும்!”

     

 “இத பாரு, முத்தம்மா. நான் எழுதுறது என் கொழந்தைங்க கண்ணுல காட்டாம மறைக்கிற எழுத்தா இருக்கக் கூடாது. அதுதான் என்னோட கொள்கை.”

       “இன்னிக்கு எழுதுறவங்கல்லாம் கூட, அவங்க பசங்க அதை யெல்லாம் படிக்கிறதுல தங்களுக்கு ஆட்சேபணையே இல்லைங்குறாங்களே?”

     

 “அவங்க மனச்சாட்சியே இல்லாதவங்கடி. கிரிசை கெட்டவங்க. பணத்துக்காகப் பெத்த பொண்ணையே சோரத்துக்கு அனுப்புற அப்பன் மாதிரிப்பட்டவங்க அவங்க. அவங்களும் நானும் ஒண்ணாடி? ஏண்டி!”

     

 முத்தம்மா பதில் சொல்லாதிருந்தாள். துரையரசன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்: “அவங்க பொய் கூடச் சொல்லுவாங்கடி. ஆபாச எழுத்தையெல்லாம் அவங்கவங்க பிள்ளைங்க கிட்டேருந்து மறைச்சு வெச்சு, ஆனா ஊர்ப் பிள்ளைங்க எப்படியும் போகட்டும்னு நினைக்கிற சமுதாயத்துரோகிங்க அவங்க. சும்மாவாச்சும் அவங்க பிள்ளைங்களை ஆபாச எழுத்தைப் படிக்க அனுமதிக்கிறதாகவும், அதுல தப்பே இல்லைன்னும் கதை விட்றாங்கன்னு தோணுது.”

 

       “அதெல்லாம் கிடக்கட்டுங்க. நாம பொழைக்கிற வழியைச் சொல்லுங்க இப்ப. எல்லாப் பத்திரிகைகளும் அப்படின்னு சொல்லிட்றதுக்கும் இல்லே. ஆனா கண்ணியமான பத்திரிகைகள்ல கூட  உங்க எழுத்தை இப்பல்லாம் அதிகமாப் போட மாட்டேன்றாங்களே? நீங்களும் பதினஞ்சு-பதினாறு வருசமா எழுதறீங்க. பிரபல பத்த்திரிகை எதுலயாச்சும் உங்க தொடர்கதை வந்திருக்குதா? யோசிச்சுப் பாருங்க. காசு குடுக்காத – ஆயிரம் கூட விற்பனையாகாத – இலக்கியப் பத்திரிகைகள்லே ரெண்டு-மூணு தொடர்கதை எழுதினீங்க. அதனால என்ன லாபம்? ஆத்ம திருப்திம்பீங்க. உங்க ஆத்ம திருப்தி கொழந்தைங்க பசியைப் போக்குமா, சொல்லுங்க.”

 

       “இத பாரு, முத்தம்மா. அது மாதிரியெல்லாம் எழுதிச் சம்பாரிக்க என்னால ஆகாது. ரெண்டாவது – அப்படிச் சம்பாரிக்கிற காசு தங்காது. வந்த வழியில போயிறும். அப்படிச் சம்பாரிக்கிறவங்க குடும்பமும் நல்லா இருக்காது. அதுல சந்தேகமே இல்லே.”

 

       “நிறுத்துங்க உங்க வேதாந்தத்தை. அவங்க சம்பாரிக்கிற காசால அவங்க சந்தோசமா இருக்க மாட்டாங்கன்ற உங்க வேதாந்தம் சரின்னே வச்சுக்குவம். அவங்க எழுத்து ஊரைக் கெடுக்குது, ஊரைக் கெடுக்குதுன்னு வாய்க்கு வாய் சொல்றீங்களே – அப்படி ஊரு கெட்டுப் போனது கெட்டுப் போனதுதானே? அவங்களுக்குச் சொந்த வாழ்க்கையில சந்தோசம் கிடைக்காதுங்குறது ஊருக்கு நேர்ந்த கெடுதலை இல்லைன்னு ஆக்கிப்புடுமா? … என்ன, பேசாம இருக்கீங்க? … அதனால ஊரைப்பத்தியும் இன்னொண்ணைப் பத்தியும் கவலைப்படாம நம்ம வயித்துப்பட்டை நாம பாத்துக்கணும்… போங்க …”

 

       “எங்கடி போகச் சொல்றே?”

 

       “மாத நாவல் போட்றவங்ககிட்டல்லாம் போய், ‘நானும் இனிமே வெவரமா செக்ஸ் எழுதறேன்’னு தணிஞ்சு போங்க. போடுவாங்க.  மாசம் ரெண்டு நாவல் வந்தாக் கூடப் பத்தும் …”

 

       துரையரசன் வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தார்.

 

       “சிரிக்காதீங்க. என்னதான் நீங்க மத்தவங்க மாதிரி நிறைய எழுதலைனாலும் எழுத்துலகத்துல உங்களுக்குன்னு ஒரு பேரு இருக்குது. மதிப்பு இருக்குது. அதனால நீங்க உங்க சிம்மாசனத்துலேருந்து இறங்கி வந்தா, அவங்களும் மனமிரங்கி உங்க மாத நாவல்களைப் போடுவாங்க.”

 

       “அதெல்லாம் செத்தாலும் நடக்காது.”

 

       முத்தம்மாவுக்கு மூக்கு முனையில் செம்மை படர்ந்தது.  “சரி. மாத நாவலை விடுங்க. வாரப் பத்திரிகைங்கள்ல எல்லாமே மோசம்னு சொல்ல முடியாது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாம அப்பப்ப நல்ல கதைகளைப் போட்றாங்க. நேர்ல போய் அந்த செம்பருத்தி ஆசிரியரைப் பிடிங்க. தொடர்கதை எழுத சான்ஸ் கேளுங்க.”

 

       “இப்ப யாரோட தொடர்கதை வந்துக்கிட்டிருக்கு அதுல?”

 

      “தேவதூதன் கதை வந்துக்கிட்டிருக்கு. ஆனா செம்பருத்தி கண்ணியமான பத்திரிகைன்றதால, அதுல வர்ற அவரோட எழுத்தும் – வழக்கமான அவரோட ஆபாசங்கள் இல்லாம – ரொம்ப கண்ணியமாத்தான் இருக்குது… நீங்க உடனே போய் ஆசிரியரைப் பாருங்க. கெளம்புங்க …”                                                  

 போய்ப் பார்ப்பதில் தப்பு இல்லை என்று முதல் முறையாக அவருக்கும் தோன்ற, எழுந்தார். சட்டை யணிந்து, கலைந்திருந்த முடியை வாரி ஒழுங்குபடுத்திக்கொண்டு புறப்பட்டார். தனது சரக்கைப்பற்றி வாங்குபவரிடம் ஒருவன் எடுத்துக் கூறுவது குற்றமாகாது என்று முதன் முறையாகத் தமக்குத் தோன்றியதை எண்ணி வியந்தவாறு அவர் செம்பருத்தி வார இதழின் அலுவலகத்தை யடைந்தார்.

     

 ஆசிரியர் அவரை அன்புடன் வரவேற்றுப் பொதுவாய்ப் பேசலானார். அடிக்கடி சிறுகதைகள் எழுதுமாறு துரையரசனிடம் கேட்டுக்கொண்டார்.

     

 “இப்பல்லாம் எனக்குச் சிறுகதையே எழுத வரமாட்டேங்குது, மிஸ்டர் சிதம்பரம். நாவல்கள்தான் தோணுது. அதனால தொடர்கதை எழுத சான்ஸ் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.”

      ஆசிரியருக்கு முகம் வெளுத்தது. சில நொடிகள் மவுனமாயிருந்து விட்டு, “மன்னிக்கணும், துரையரசன். இன்னும் ரெண்டு-மூணு வருஷத்துக்குத் தொடர்கதைகள் புக் ஆகியிருக்கு. அதனால உங்க தொடர் எதுவும் போட்ற மாதிரி இல்லே. முடிஞ்சா எப்பவாவது சிறுகதைகள் அனுப்புங்க …” என்று சிதம்பரம் பெரிதாய்க் கும்பிடு போட, துரையரசன் எழுந்துகொண்டார். ஆவேசமாய் ஏதேதோ சொல்ல வேண்டும் போல் எழுந்த உந்துதலைச் சிரமத்துடன் சமாளித்து, வலுக்கட்டாயமாய்ப் புன்னகை யொன்றை உதிர்த்த பின் அவர் வெளியே வந்தார். கட்டட வாசலை யடைந்ததும், மூக்குக் கண்ணாடியை ஆசிரியரின் மேசை மீது விட்டுவிட்டது நினைவுக்கு வர, ஆசிரியரின் அறை நோக்கி நடந்தார். ஆசிரியரின் அறைக்கு வெளியே முக்காலியில் உட்கார்ந்திருந்த பையன், “எடிட்டர் அய்யா ஃபோன் பேசிட்டிருக்காங்க. கொஞ்சம் வெளியே இருங்க. அப்பால போங்க. …” என்றான்.

               துரையரசன் அங்கே  பக்கத்தில் கிடந்த பெஞ்சில் சோர்வுடன் உட்கார்ந்துகொண்டார். ஆசிரியர் பேச்சு வெளியே கணீரென்று கேட்டது: “நாந்தான் செம்பருத்தி ஆசிரியர் சிதம்பரம் பேசறேன். வணக்கம்…. மிஸ்டர் கைவல்யன்தானே பேசறது? …உங்ககிட்டேருந்து செம்பருத்திக்கு அர்ஜெண்ட்டா ஒரு தொடர்கதை வேணுமே? … என்ன? இப்ப முடியாதா? கொஞ்சம் உதவி பண்ணுங்க, சார். வாரா வாரம் எழுதித் தந்தீங்கன்னாக் கூடப் போறும். கைவசம் தொடர்கதை ஒண்ணும் இல்லே. தேவதூதனுக்குத் தர்றதை விட ஆயிரம் ரூபா அதிகம் போட்டுக் குடுத்துடறோம். … ஆனா ஒண்ணு, சார். செம்பருத்தி கண்ணியமான பத்திரிகை. எங்க தாத்தா காலத்துலேருந்து பரம்பரையா செக்ஸியான விஷயங்களைப் போட்றதில்லேன்னு கொள்கை வச்சுக்கிட்டிருக்கோம். அதனால உங்க செக்ஸ் சமாசாரங்களைத் தவிர்த்து, கொஞ்சம் நாசூக்கா எழுத வேண்டி இருக்கும். இப்ப பாருங்க. எழுத்தாளர் துரையரசன் முதன் முறையா என்னைத் தொடர்கதை விஷயமாப் பார்க்க வந்தாரு. அவரோடதை யெல்லாம், போட்டா என்ன ஆறது? வாசகர் மத்தியிலே பிரபலமாயிட்டவங்க எழுத்தைத்தானே நாங்க போட முடியும்? … அப்ப, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள முதல் அத்தியாயம் குடுத்துடுவீங்க? … ரொம்ப நன்றிங்க. முன்பணம் மூவாயிரத்துக்கு இன்னிக்கே செக் அனுப்பிடறேன்… பை! …”

      துரையரசன் எழுந்து நடந்தார். “எடிட்டர் பேசி முடிச்சுட்டார், சார். இப்ப நீங்க உள்ளே போகலாம்…” என்று பையன் சொன்னான்.

       துரையரசன் புன்னகை செய்து, “நான் எதுக்கு வந்தேனோ அந்த விஷயம் தெரிஞ்சு போயிடுத்துப்பா,” என்று கூறிவிட்டு, மூக்குக் கண்ணாடியைப் பிறகு  வந்து எடுத்துக்கொள்ளும் எண்ணத்துடன் எழுந்தார். வாசிப்பவர்களின் உடல்,  மன நலன்களைக் கெடுக்கும் வண்ணம் பெண்களின் அங்கங்கள் பற்றிய அருவருப்பான வர்ணனையுடன் பாலுறவு பற்றி எழுதி மட்டமான ரசனையைத் தூண்டிவிட்டுப் பேரும் புகழும் அடைந்தவர்களின் படைப்புகள்தான் கண்ணியமான ஏடுகளாலும் வரவேற்கப்படுகின்றன எனும் கசப்பான உண்மையை மீண்டும் புரிந்துகொண்ட ஆற்றாமையுடனும் மனப்புழுக்கத்துடனும் அவர் தலை குனிந்து நடந்தார். முத்தம்மாவை எதிர்கொள்ளுதல் என்பது பெரிய பிரச்சினையாய்த் தெரிய, மன எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் முயற்சியில் அவர் கடற்கரை நோக்கி நடந்தார்…..

…….

Series Navigationநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *