சோம. அழகு
சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் (போதையையும் மகிழ்வையும் கூட!) தருவது எப்பேர்ப்பட்ட விஷயம்? எந்தச் சமூக வலைதளப் பின்னலிலும் சிக்காத, எந்தத் தொழில்நுட்பச் சாதனங்களின் பிடியிலும் இல்லாத, அந்தப் போதையை ரசிக்கவோ அனுபவிக்கவோ தெரியாத வெகு சில ஞான சூன்யங்களில் (இன்னும் இந்த அரிய வகை உயிரினங்கள் இருக்கவே செய்கிறோம்!) ஒருவராகிப் போனாலும் கூட இவர்களது பண்பு நலன்களைப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்கிறேன்.
***************
இராணுவத் தளவாடங்களுக்கு இணையாக அவரவர் வீட்டின் அறையிலிருந்தே தேச பக்தியோடும் உணர்ச்சிப் பெருக்கோடும்(!) பயிற்சி பெறுவது(PUBG); ஊர் ஊராகத் தெரு தெருவாகப் (இதுவும் வீட்டில் இருந்தபடியேதான்!) போகும் மான்களைப் பிடிக்கச் சுற்றுவது(POKEMON); இனிப்புக் கட்டிகளை சுக்கு நூறாக அடித்து நொறுக்குவது(CANDY CRUSH); உலகம் முற்றிலும் அழிந்து போன பின்பு அடுத்து 15 நாட்களில் ஜீவித்திருப்பதற்கான உத்திகளைக் கையாள்வதின் மூலம் பியர் க்ரில்ஸ்க்கே சவால் விடுவது (இந்தக் கண்றாவியின் பெயர் நினைவில் இல்லை!) – இவை போன்ற சாகசங்களின் வழியே நமது தொல்குடியின் மறத்தை மீட்டெடுத்துத் தரும் உன்னத வீர தீர இணைய விளையாட்டுகளில் என்ன குறை கண்டீர்?
******************
சீவகன் காந்தருவதத்தையின் யாழ் மீட்டலை வியந்து வருணித்ததைச் சற்றே நெய்யில் பொரித்துச் சுட்டு, செல்ஃபியாளரின் வியனுலகு வியத்தகு ஆற்றலை இவ்வகையானும் வருணிக்கலாமே!
கருங்கொடிப் புருவ மேறி
கயல்நெடுங் கண்ணு மாடா
கருமணி யிரண்டு மொதுங்கி
கழுத்தொரு புறமாய்ச் சாய்ந்து
அருங்கடி மிடறும் விம்மாது
இருங்கடற் பவளச் செவ்வாய்
வராகனைப் போல் குவிந்தோ
அணிமணி எயிறு தோன்ற
திறந்தோ செல்ஃபி எடுத்தாரோ!
கம்பொடு கரம்நீண்டு பொத்தானை அழுத்தியதோ ! ! !
விளக்கம் : கரிய கொடியினைப் போன்ற (பியூட்டி பார்லரில்) செதுக்கப்பட்ட புருவங்கள் மலையென உயர்ந்து நின்று நிரந்தரமான வியப்பினை அணிந்து கொண்டிருக்க, மீன்களைப் போன்ற கண்கள் ஆடாது அசையாது பிறழாது, இமைகள் மூடாது, கருவிழிகள் ஒரு பக்கமாக ஒதுங்கி, கழுத்து ஒரு புறமாக லேசாய் சாய்ந்திருக்க, மிடறு வீங்காமல், பவளத்தைப் போன்ற சிவந்த (சாயத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட) உதடுகள் வராக பகவானைப் போல குவிந்த வண்ணமோ, ஈறும் பற்களும் தெரிய திறந்த வண்ணமோ நிற்க, அழகிய கைகள் கம்போடு (செல்ஃபி ஸ்டிக்) ஒரு பக்கமாய்த் தாமாகவே நீண்டு கொள்ள அருமையாய் செல்ஃபி எடுத்தனரே!!!
திருத்தக்க தேவர் வகுத்து வைத்த(!) இவ்விலக்கணக்கப்படி நெறி பிறழாது தினுசு தினுசாக சுய நிழற்படம் எடுத்துக் கொள்பவர்கள் அவற்றைப் பல வடிகட்டிகளின் (filter) உதவியோடு மூஞ்சிபொஸ்தகத்திலும் இஞ்சிகிராமத்திலும் அப்லோடுவது, ‘உன் முதுகை நான் சொறிகிறேன்; என் முதுகை நீ சொறி’ என இவ்வரிய புகைப்படங்களை ‘காலத்தினாலும் அழிக்க இயலாத (அலங்)கோலங்களை’(!) மாற்றி மாற்றி லைக்கிக் கொள்வது; தெருமுனை டீக்கடைக்கு சென்றாலும் சரி, கோப்பி ஷோப்பிற்கு சென்றாலும் சரி, ஊர் உலகம் சுற்றினாலும் சரி, முட்டுச்சந்துக்குள் வலம் வந்தாலும் சரி, burgerஓ பழங்கஞ்சியோ…. எல்லா கண்றாவி வரலாற்றையும் ஆவணப்படுத்தி ‘அடேய்களா ! நம்பித் தொலைங்களேண்டா… நான் ரொம்பவே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்’ என்று உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு கூப்பாடு போட்டுக் கெஞ்சி ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்கும் இவர்களைப் பார்த்தால் இரக்கம் சுரக்கவில்லையா? கொஞ்சமும் கருணை இல்லாமல் இவற்றை எல்லாம் NARCISSISM என ஒற்றை வார்த்தையில் சிலர் புறந்தள்ளுவதைக் காண நேர்கையில்…. ச்சைக் ! பிறக்கும் போதே இதயத்திற்குப் பதில் பாறாங்கல்லோடு இப்பூமிக்கு வந்துவிட்டார்கள் போலும்.
***********************
அடிப்படைவாதிகள், பாசிசவாதிகள் போன்ற வாதைகள், சர்வாதிகாரிகள், அவர்களின் அடிவருடிகள் – இவர்களுக்கு…. ச்சைக் ! என்ன மருவாதி வேண்டி கெடக்கு? இவைகளுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் சுழலும் ஒவ்வொரு சாட்டையின் மீதும் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டு எனக்கு. எங்கேனும் ஒரு அடிப்படைவாதி பிதற்றினால் அடிக்க 100 பேராவது வருவது கண்டு மகிழ்ச்சியே ! மக்களோடு மக்களாக நிற்கும் இணையப் போராளிகளைக் கண்டிப்பாக இக்கட்டுரையில் சாடவில்லை.
மாறாக, அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் துணிவான சிந்தனைத் தெளிவு, நியாயத்தைப் பேசும் கருத்தாக்கம், மண் சார்ந்த அடையாளங்களைப் பேணிக் காக்கும் கொள்கைப் பிடிப்பு… இவை எதுவும் இல்லாமல் மக்கள் சார்ந்த, மண் சார்ந்த பிரச்சனைகள் வெடிக்கும் போதெல்லாம் சிறிதும் வெட்கமே இல்லாமல் வலப்பக்கம் நின்று அணுகுவது அல்லது பெரும்பான்மையோர் இடப்பக்கம் நிற்பது கண்டு உணர்வுப்பூர்வமாக அல்லாமல் ஃபேஷனுக்காக அங்கு சென்று ஒட்டிக் கொள்வது என்று தமது சமூகப் பொறுப்பை அறிவிக்கும் புர்ர்ர்ச்ச்ச்சியாளர்களைப் பார்த்துப் புளகாங்கிதம் அடையாமல்…? Dp, நிலையிடுகை (status) போன்ற காத்திரமான(!) செயல்பாடுகளின் மூலம் மட்டுமே மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தே விட்ட இப்புர்ர்ச்சியாளர்களை நன்றிக் கடனோடு நினைத்துப் பார்க்க வேண்டிய வேளை இது! கொஞ்சமும் நன்றி இல்லாமல் பிழைக்க வந்த இடத்தில் உள்ள இனத்திற்கு எதிரான நிலைப்பாடுடன் இருப்பவர்களின் உளறலைக் கூட ‘இது கொலை அல்ல, கலை. அவர் ஒரு மகோன்னதமான கலைஞர்; அவரது கலைக்கும் அவரிடமிருந்து வெளிப்படும் கருத்துக்களுக்கும்(!) சம்பந்தமில்லை; அவர் கருத்துக்களுக்கும் அவருக்குமே கூட சம்பந்தம் இல்லை; அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை…’ என்றெல்லாம் எட்டாம் அறிவு பொங்கி வழிய பகுப்பாய்வு செய்து கலையையும் அந்த அறிவுஜீவியையும் வாழ வைப்பது, வளர்த்தெடுப்பது எனப் பல வகைகளில் இணையத்தில் முட்டு கொடுக்கும் பணியைச் செவ்வனே செய்து வருபவர்களின் மேன்மையை(!) இனியாவது உணர்ந்து முக்தி அடைவோமாக!
************************
இந்த வாட்ஸ் அப் அற்புதங்களை மெச்சிக்கொள்ளாமல் எங்ஙனம் நிறைவாகத் தோன்றும்? படித்ததில் பிடித்தது, பிடித்ததில் ரசித்தது, ரசித்ததில் ருசித்தது, தொண்டையை அடைத்தது, விக்கல் வரச் செய்தது… என வலம் வரும் அரும்பெரும்(!) தத்துவங்கள் அரிஸ்டாட்டில் ப்ளேடோ போன்றோர்களே கேள்விப்படாதது. அதிலும் காலங்காத்தால ‘காலை வணக்கம்’ சொல்வதையே ஒரு கலையாகச் செய்து வரும் அரும்பெரும் படைப்பாளிகளின் மெனக்கெடல் இருக்கிறதே ! தேவையான பொருட்கள் : ஒரு பறவை, சூரியன், தேநீர் கோப்பை, தியான நிலையில் புத்தர், வண்ண வண்ண பூக்கள் (இதற்கு மேல் கணக்கெடுப்பைத் தொடர பொறுமையில்லை!) – இவற்றில் சிலவற்றைப் பிண்ணனியில் போட்டு ஒரு அட்டுத்தனமான வாசகத்தை இணைத்து கீழே ‘Good Morning!’ என்று சேர்த்தால் சோலி செம்மையாக முடிந்தது. ‘இஞ்சியுடன் பச்சை மிளகாயை அரைத்து முகத்தில் பூசி வருவது மேனியைப் பளபளப்பாக்கும்’, ‘கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா ஓடி விடும்’ என சித்த மருத்துவத்திற்கே சவால் விடும் பல அரும்பெரும் தகவல்கள் இச்செயலி இல்லாவிடில் மக்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும். குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குழுமத்தை/ஸ்தாபனத்தை உருவாக்கும் அந்தச் சீரிய பண்பாட்டைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். ஒரு குட்டிக் கிராமமே அதில் குடியிருக்கும் போது இயற்கையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் யாருக்கேனும் பிறந்தநாள் அல்லது திருமண நாள் என்று ஏதாவது வந்துகொண்டேதான் இருக்கும். அதன் பொருட்டு ஸ்தாபனத்தின் பெயரையும் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்தையும் இட்டு அல்லோலகல்லோலப்படும் அச்செயலி. ஒரு தனி மனிதனுக்கு என இருக்கும் அவனுடைய சிறிய கூட்டில் உள்ள மிக முக்கியமானவர்கள் தவிர வேறு யார் உள்ளங்கனிந்தும் உணர்வுப்பூர்வமாகவும் வாழ்த்தப் போகிறார்கள்? எனினும் தம் இருப்பைப் பதிவு செய்யும் விதத்தில் ஒரு வாழ்த்தைத் தட்டி விட்டுத் தம் சனநாயகக் கடமையை கர்ம சிரத்தையோடு செய்து வரும் அந்த பெரிய மனதுக்காரர்களையும் இந்த அருமையான கலாச்சாரத்தையும் நினைத்து உருகாத நாளே இல்லை.
***********************
இரத்தமும் சதையும் துடிக்கும் இதயமுமாக அருகில் அமர்ந்திருக்கும் Homosapien வகையைச் சார்ந்த உயிரினத்தைக் காட்டிலும் தன்னை நாடி தன்னிடம் தஞ்சம்/அடைக்கலம் புகுந்து விட்ட அந்த உயிரற்ற உணர்வற்ற ஒரு தொழில்நுட்பக் கருவி தனிமையை உணர்ந்துவிடக் கூடாது எனப் பார்த்துப் பார்த்து அதன் மீது காட்டப்படும் அக்கறை…உச்சி குளிரச் செய்கிறது. ‘கழுத்தெலும்பு தேய்ந்து ஒடிந்து விழுந்த போதிலும் விடுவதில்லை ! விடுவதில்லை ! Dopamineஐ விடுவதில்லை !’ என அத்திரையினுள் முகம் புதைத்து மிகக் கவனமாக தமது இரு கைகளாலும் அலைபேசி சிசுவிற்குக் கதகதப்பூட்டி இரு விரல்களாலும் அதை வருடிக் கொடுக்கும் அழகு இருக்கிறதே…! ‘இவ்வாறாக முள்ளந்தண்டு வளைந்து இருப்பதுதான் இயற்கை’ என்ற அறிவியல் உண்மையை முக்காலமும் உணர்ந்து மூதாதையரின் உடலமைப்பை மீண்டும் பெறுவதற்கு இவர்கள் மேற்கொள்ளும் முயற்சியும் உத்தியும் புல்லரிக்க வைக்கிறது. பெரும்பாலும் அதிகப் பிரசங்கிகளிடமிருந்தும் ஆர்வக்கோளாறுகளிடம் இருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ள இச்சாதனம் ஒரு நல்ல வரப்பிரசாதம் என்பதை நான் உணராமல் இல்லை! எனினும் ஒரு சிறிய வட்டத்தினுள் இருக்கும் நமக்கே நமக்காகிப் போனவர்களிடம் இருந்தும் நம்மைத் தள்ளி இருக்க வைக்கும் இக்கருவிகளின் எதார்த்தம்தான் நெருடலாக இருக்கிறது.
அம்மா அப்பா ஒருவருக்கொருவர் அக்காலத்தில் எழுதி அனுப்பிய கடிதங்கள் என்னிடமும் தங்கையிடமும் தற்செயலாக வசமாகச் சிக்கிக் கொண்டன. சிறிதும் வெட்கமின்றி அவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம். பெற்றோர் தலையால் அடித்து ‘வைத்துத் தொலையுங்கள். ஆனால் வேறு யாரிடமும் காண்பித்து மானத்தை வாங்காதீர்கள்’ என்று அனுமதி அளித்த பிறகுதான்! அவர்களது கடிதங்களை வாசிப்பதில்தான் எங்களுக்கு நாகரிகம் இல்லையே தவிர, மற்றவர்களிடம் காண்பிக்கிற அளவிற்கு நாகரிகம் நலிந்து போய்விடவில்லை. மேலும் அவர்களுக்கு இருக்கும் கூச்சநாச்சம் கூட எங்களுக்கு இல்லை என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வித செயற்கைத்தனமான வார்த்தை அலங்காரமும் இல்லாமல் இயற்கையான நல்ல தேர்ந்த மொழி நடையில் அமைந்த அக்கடிதங்கள் கவித்துவம் பொங்கும் காதலால் நிறைந்து முடிவில்லா அன்பில் திளைத்து அக்காலத்தின் சுகந்தக் காற்றை இன்னும் தம்முள் நிரப்பிக் கொண்டபடி மிதக்கின்றன. ‘காதல்’ என்ற வார்த்தையை வேறு யார் கண்களுக்கும் தட்டுப்படாதவாறு மிக அழகாக சொற்களினுள் ஒளித்து வைத்து அவர்கள் அன்பை வாரி வழங்கிப் பரிமாறிக் கொண்ட விதம் அவ்வளவு அழகு! அக்கடிதங்களில் இருக்கும் உயிரோட்டத்தை இன்னும் தமது கண்களில் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வுணர்வுகளை இக்காலக் குறுஞ்செய்திகள் ஈடு செய்ய இயலாது திணறுவதாகவே தோன்றுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது கடிதங்கள் உயிர்ப்புடன் இருந்த கடந்த காலத்தில் வாழ்ந்து பார்க்கும் பேராசை எழுகிறது. இந்த அலைபேசி இல்லாத காலம் நன்றாகத் தானே இருந்து தொலைத்திருக்கிறது? என்ன பாவம் செய்தேனோ இந்த யுகத்தில் பிறந்து கொண்டாட!
*********************************
நான் …. நான் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
‘அப்பா… என் கூட விளையாட வாங்களேன்’ என ஆசையாய்க் கேட்டுக் கேட்டு ஒன்றும் நடக்காதது கண்டு அலுத்துப் போன குழந்தையாய் இருக்கலாம்.
‘அம்மா.. இன்னிக்கு வீட்டுக்கு வந்துட்டு இருக்கும் போது…’ எனத் துவங்கும் போதே சுவரிடம் பேசிக் கொண்டிருக்கும் உணர்வைப் பெற்ற ஒரு பதின்வயது சிறுமியாய் இருக்கலாம்.
‘உனது இன்றைய நாள் எவ்வாறு இருந்தது?’ என்னும் கேள்விக்கு ஒருபோதும் பதில் கிடைக்கப் பெறாத பெற்றோராக இருக்கலாம்.
‘ஆச்சி… தாத்தா… எனக்கு ஒங்க பழைய கதையெல்லாம் கொஞ்சம் சொல்றீங்களா?’ என்று கேட்டு விட மாட்டாளா/னா என்று கூடு ஆகிப் போன தமது நெஞ்சுக் குழியில் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் நினைவுகளை மீட்டெடுத்துச் சொல்வதற்கெனக் காத்திருந்து ஏமாந்து போகும் தாத்தா-ஆச்சியாக இருக்கலாம்.
தம் கனவுகள், சாதனைகள், ஆசைகள், இழைக்கப்பட்ட துரோகங்கள், வலிகள்… எல்லாவற்றையும் எவ்வித செயற்கைத்தனமான ‘தைரிய’ ஒப்பனையோ பூச்சோ இன்றி தமது இணையிடம் மனம் விட்டுப் பகிர நினைத்து, ஒவ்வொரு முறையும் அந்நுண்ணுணர்வுகளுக்கும் வாய்க்கும் இறுக பூட்டு இட்டுக் கொள்ளும் உங்களில் ஒருவராகவும் இருக்கலாம்.
இந்த ‘நான்’களின் எதிரில் இருப்பவர்கள் இனி முன்னிலையாகக் கடவது !
உங்களது சிறு சிறு புறக்கணிப்புகளுக்கு ‘பில் கேட்ஸ்’ஐக் காட்டிலும் பரபரப்பாக நீங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்ப விழையும் காரணம் எத்தனை நாள் இவ்வுறவை இழுத்துப் பிடித்து வைத்து அதன் ஆழத்தைப் பேணிக் காக்க இயலும்? உங்களின் மீதான அன்பையும் அக்கறையையும் தூர எறியத் தெரியாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் முயற்சியை நாள்தோறும் மேற்கொள்ளும் மனித மனங்களுக்குத்தான் எவ்வளவு மடத்தனமான வீம்பு? ஒரு சராசரி நாளில் 10 நிமிடம்… வேண்டாம் ! இடையிடையே இரண்டு மூன்று நிமிடங்கள் கூட அழைத்துப் பேசவோ 5 நொடிகள் எடுத்து குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பவோ இயலாத அளவிற்கு உண்மையில் இவ்வுலகில் யாரும் அவ்வளவு ‘பிஸி’ (இவ்வார்த்தையைப் போன்ற அருவருப்பு மிகுந்த சொல் வேறு எதுவும் இருக்க இயலாது) எல்லாம் இல்லை. நேரம் கிடைக்கும்போதுதான் எல்லோரும் பேசுவார்களே? ‘பிஸி’யான(!) அலுவல்களுக்கிடையில் உங்களது சின்னஞ்சிறு உலகில் சஞ்சரிப்போருக்கான நேரத்தை ஒதுக்கித் தருவதல்லாமல் வேறு எவ்வாறு உங்களது அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த உத்தேசம்? உங்களுக்குப் பொழுது போகாத போது அந்த மாயத்திரை சலித்துவிட்ட பின்பு நிரப்பியாக(filler/timepass) என்னைப் பாவிக்கும் பொருட்டு எனக்கு நீங்கள் ஒதுக்கும் நேரத்தை அந்தக் கரிசனத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! அட! அட! அட!
உங்கள் மெய்நிகர் உலகம் (virtual world) தந்த மாயை கலைந்த பின்னர், வாழ்வின் பரபரப்பை கொஞ்சம் நிதர்சனத்தோடும் பக்குவத்தோடும் அணுகத் தெரிந்த பின்னர், என்றோ ஒரு நாள் நிதானமாக அமர்ந்து உங்களுக்கானவர்களின் மதிப்பை உணரத் துவங்கிய அந்நொடியில் ‘என் மீது எவ்வளவு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள்?’ என நீங்கள் உணரும் சமயம் காலம் கடந்திருக்கலாம். நான் முற்றிலும் உங்களது அலட்சியங்களுக்குப் பழகிப் போயிருப்பேன். இல்லை ! உங்களுக்கான எனது அக்கறை உதாசீனப் படுத்தப் படுவதை ஏற்றுக் கொள்ள என்னைப் பழக்கப் படுத்தியிருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தும் நொறுங்கியும் போய்க் கொண்டிருந்ததில் காலப்போக்கில் உங்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு வெறும் கடமையாக மட்டுமே மாறிப் போயிருக்கும். அந்தப் பிணைப்பில் பாசத்திற்கு இடம் இருக்குமா என்று கூற இயலாது. உங்களது குறுஞ்செய்தி/அழைப்பு வந்தவுடன் உங்களைக் காக்க வைக்கக் கூடாது என்றெண்ணி எவ்வித செயற்கைத்தனமோ வெட்டிப் பெருமையோ இல்லாமல் பாய்ந்தோடி வந்து பதிலளித்த எனது மடமையை மிக அழகாக உணர்த்தினீர்கள். நேரில் உடன் இருக்கும் போது சதா சர்வ காலமும் தொ(ல்)லைபேசியுடனேயே பொழுதைக் கழித்தாலும் குறுஞ்செய்திகளுக்கும் அழைப்புகளுக்கும் பல மணி நேரம் கழித்து (அதே ‘நான் இங்க ஒரே பிஸி’ அலப்பறை!) பதிலளிப்பதன் மூலம் என்னை முட்டாளைப் போன்று உணர வைத்த ஒவ்வொரு கணமும் இன்னும் என்னுள் உறைந்தே கிடக்கின்றது. மெல்ல மெல்ல ஒரு கட்டத்திற்குப் பின் உங்கள் பெயர் அலைபேசியின் திரையில் தோன்றும் போது அதுவரை இருந்த எல்லா குதூகலமும் வடிந்து போயிருக்கும். எளிதில் கிட்டும் அன்பின் அருமையையும் அரவணைப்பையும் அதை விட எளிதில் புறந்தள்ளுவதில் தவறில்லை என ஏதேனும் சங்கப்பாடலில் இயற்றி வைத்திருக்கிறார்களா என்ன?
வாழ்க்கை – பல அழகிய உணர்வுப்பூர்வமான தருணங்களின் சேமிப்புக் கிடங்கு. உலகமே உங்கள் கைகளில் (உள்ள திரையில்) சுருங்கி அடங்கி விட்டாலும் கூட உங்களுக்கே உங்களுக்காகிப் போன கையடக்க (நிஜ) உலகில் இருப்பவர்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்து உணர்வுரீதியாக விலக ஆரம்பிக்கும் இத்தருணத்தை உணர்கிறீர்களா?
இப்படிக்கு
‘நான்’கள்
– சோம. அழகு
- இதுவும் ஒரு காரணமோ?
- இங்கு
- (அல்லக்)கைபேசி !
- வெற்றுக் காகிதம் !
- ஒரு கதை ஒரு கருத்து மா. அரங்கநாதனின் பூசலார்
- தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]
- ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு
- திரைகடலோடியும்…
- பாதி உயரத்தில் பறக்குது கொடி !
- வடக்கிருந்த காதல் – முதல் பாகம்
- மாசில்லாத மெய்
- நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது
- கண்ணிய ஏடுகள்