வளவ துரையன்
பேய் முறைப்பாடு
=================================================
இந்தப் பகுதியில் தேவியின் முன் பேய்கள் சென்று தத்தம் குறைகளை முறையிடுகின்றன.
என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்
செய்யக் கேட்டிருந்த பேயில்
ஒன்று இறையும் கூசாதே, உறுபசிநோய்
விண்ணப்பம் செய்ய லுற்றே. 222
[இறையும்=ஒரு சிறிதும்; கூசாதே=வெட்கப்படாமல்; உறுபசி-பெரும்பசி; விண்ணப்பம்=வேண்டுகோள்]
இறைவி நாமகளிடம் சொன்னதைக் கேட்டிருந்த பேய்களில் ஒன்று ஒரு சிறிதும் வெட்கப்படாமல் இறைவி அருகே சென்று பேய்களுக்கு இருக்கின்ற பெரும்பசியாகிய நோய் பற்றி வேண்டுகோள் விடுத்தது.
=====================================================================================
ஒற்றைத் தலைவெட்டு உண்டது கொண்டு
ஓடிச் சென்றான் சென்றால்என்?
மற்றைத் தலையும் தானுமாய்
வணங்கி நின்றான் மலரோனே. 223
[மலரோன்=தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்]
சிவனுக்கும் ஐந்துதலை இருந்தது. பிரமனுக்கும் ஐந்துதலை இருந்தது. அதனால் பிரமனுக்குக் கருவம் உண்டாயிற்று. எனவே சிவபிரான் பிரமனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். ஆயினும் இருக்கும் மற்ற நான்கு தலைகளோடு சிவபெருமானை வணங்கினான்.
உலகில் பெரிய கபாலத்தே
ஒருவர் உதிரம் ஏற்றுஊற்றி
விலகிற் பிழையாச் சூலத்தே
கொண்டார் கணவர் வெற்றுடலே. 224
[கபாலம்=மண்டை ஓடு; உதிரம்=இரத்தம்; பிழையா=கையைவிட்டு விலகாத; சூலம்=சிவனின் ஆயுதமான திரிசூலம்]
உலகின் மிகப்பெரிய பிச்சைப் பாத்திரமான பிரமனின் மண்டை ஓடு நிறையக் குருதி பெற்றதோடு அல்லாமல் சூலத்தால் திருமாலின் வெற்றுடலையும் உம் கணவர் எடுத்துக் கொண்டார்.
கூறாக் குதற்கு வாள்இலரோ
குத்திதூக்க வேல்இலரோ!
நீறாக்குதல் என் முப்புரத்தில்
உள்ளவெள்ள நிருத்தரையே. 225
[கூறு=துண்டு; நுங்க=அழிய; நீறு=சாம்பல்; நிருதர்=பகைவர்]
தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களைக் கொன்று இரண்டு துண்டாக்க அவர் கையில் வாள் இல்லையா? குத்திக் கொல்ல வேல்தான் இல்லையா? ஏன் அவர்களைச் சிரித்தே சாம்பலாக்க வேண்டும்?
குழம்பு அடியேம் புகவிழுந்து
பொருப்பு அடியில் கொள்ளாமே
பழம்படியே தசமுகனை
விட்டார் தம்பாட்டறிவே. 226
[குழம்பு=கூழ்; பொருப்பு=மலை; பழம்படியே=முன்போல; தசமுகன்=இராவணன்]
பத்துத் தலை இராவணனை மலை அடியில் போட்டு அசுக்கிக் கூழாக்கி, நாங்கள் அருந்த விடாமல் அவன் ஏதோ பாடினான் என்பதற்காக முன்போலவே அவனைப் போகவிட்டு விட்டாரே. இவருக்கு ஏன்தான் இசையில் இவ்வளவு ஈடுபாடோ? நாங்கள் அல்லவா இங்கு பட்டினி கிடக்கிறோம்?
வையம் உண்ணோம் கடல் மடோம்
மற்றும் புவனம் முற்றும்போய்
ஐயம் உண்ணோம் கடல்நஞ்சு
குடியோம் உங்கள் அடியோமே. 227
[மடோம்=குடிக்க மாட்டோம்; புவனம்=உலகம்; ஐயம்=பிச்சை]
திருமாலைப் போல நாங்கள் இப்பூமியை விழுங்க மாட்டோம்; அகத்தியரைப் போல கடல்நீரைக் குடிக்க மாட்டோம்; சிவனைப் போல உலகம் முழுவதும் போய்ப் பிச்சை எடுக்க மாட்டோம்; விஷத்தை அருந்த மாட்டோம்; உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் நாங்கள் அடிமைகள்.
கார்மலையைச் சந்தனமும் வடஇமயக் கார்அகிலும்
போர்மலையக் கடவதொரு பிள்ளைக்குப் போக்கினையே. 228
[கார்=மழைமேகம்; போர்மலைய= போரிடும் தன்மை உடைய]
பொதியமலையின் சந்தன மரங்களையும், வடஇமயத்தின் அகில் மரங்களையும் நீ போரிடுவதில் வல்லவனான உன் பிள்ளை முருகனுக்கு அனுப்பி விட்டாய். எங்களுக்குத் தங்க இடமில்லையே.
எப்பயனும் எக்கனியும் எக்கிழங்கும் எத்தேனும்
தொப்பை ஒரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே. 229
எல்லா இடங்களிலும் விளைகின்ற பயறுகள், பழங்கள், கிழங்குகள், தேன் ஆகியவற்றை எல்லாம் தொந்தி கொண்ட பெருத்த வயிறு கொண்ட உன் பிள்ளை விநாயகனுக்கு அனுப்பி விட்டாய். எங்களுக்கு ஒன்றும் இல்லையே.
மிக்குஅள்ளும் கறிஅநந்த மிடாப்பலவும் தடாப்பலவும்
எக்கள்ளும் ஒருபிள்ளை மடுத்தாட எடுக்குதியே. 230
[அள்ளும்=எடுக்கும்; கறி=பசி; அநந்தம்=அநேகம்; மிடா=தாழி; தடா=பானை; மடுத்தல்-குடித்தல்]
பெரிய அளவில் கள்ளைப் பெரிய தாழிகளிலும், பெரிய பானைகளிலும் உன் பிள்ளை ஐயனார் குடித்தாட எங்களிடமே கொடுத்தனுப்புகிறாய். எங்களுக்கு ஒன்றும் இல்லையே.
- இதுவும் ஒரு காரணமோ?
- இங்கு
- (அல்லக்)கைபேசி !
- வெற்றுக் காகிதம் !
- ஒரு கதை ஒரு கருத்து மா. அரங்கநாதனின் பூசலார்
- தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]
- ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு
- திரைகடலோடியும்…
- பாதி உயரத்தில் பறக்குது கொடி !
- வடக்கிருந்த காதல் – முதல் பாகம்
- மாசில்லாத மெய்
- நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது
- கண்ணிய ஏடுகள்