அழகர்சாமி சக்திவேல்
ஆயர் டேனியல் – திண்டுக்கல்
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்
பாடித் துதி மனமே; பரனைக் கொண்
டாடித் துதி தினமே
காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு இருந்த அந்தத் திருச்சபைப் பாடலை, தேவாலயத்துக்குள், ஓரத்தில் இருந்த இசைக்குழு, மனமுருகிப் பாடியது. திருச்சபையை வழிநடத்தும் தலைமை ஆயராகிய நானும் மனமுருகிப் பாடிக்கொண்டே, வந்திருந்த கூட்டத்தைக் கவனித்தேன். கூட்டத்தில் இருந்த எல்லோரும், இசைக்குழு பாடியதற்கு ஏற்ப, உரத்த குரலில் பாடிக்கொண்டு இருந்தார்கள்.
இப்போது நான், இடப்பக்கம் இருந்த ஆண்கள் கூட்டத்தை கவனித்தேன். இன்று அதிக ஆண்கள், தேவாலயத்துக்கு வந்து இருப்பதை என்னால் உணர முடிந்தது. அப்படியே, மெதுவாக, என் பார்வையை, வலப்பக்கம் இருந்த பெண்கள் கூட்டம் பக்கம் திருப்பினேன். பெண்கள் பக்கமும், எல்லா மேசை வரிசைகளும் நிறைந்து இருந்தன. ஆனால் அந்த ஒரே ஒரு வரிசையில் மட்டும், மூன்றே மூன்று பெண்கள் மட்டுமே இருப்பதை நான் ஆச்சரியமாக கவனித்தேன். காரணம் எனக்குப் புரிந்து போனது.
அந்தக் குறிப்பிட்ட மேசை வரிசையின் நடுவில், திருநங்கை ரோஸி சந்திரன் பாடிக்கொண்டு இருந்தாள். இருபுறமும், ஓரத்தில், அவளை விட்டு ரொம்பத்தூரம் தள்ளி, இரண்டு பெண்கள் நின்றுகொண்டு இருந்தார்கள்.
ரோஸி, எதையும் சட்டை செய்யாமல், நெஞ்சுருகப் பாடி, கர்த்தரை மகிமைப் படுத்திக் கொண்டு இருந்தாள். ஆனால், அந்த இரண்டு பெண்களுமோ, பாடுவதில் கவனம் செலுத்தாமல், ரோஸி சந்திரனையே, ஏதோ ஒரு ஆச்சரியப் பொருள் போலக் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள். “கர்த்தரே.. அந்த இரண்டு பெண்களை மன்னியும்” நான், மனதுக்குள் எண்ணியவாறே.. பாடலைத் தொடர்ந்தேன்..
இசைக்குழு பாடிக்கொண்டு இருந்த, கீர்த்தனைப் பாடல் முடிந்தது. நான், திருச்சபையைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன். நின்றுகொண்டு இருந்த கூட்டம், இப்போது உட்கார்ந்தது. இன்றைய திருச்சபை பிரசங்கத்தை மக்கள் முன்னாள் பேச, என்னோடு இருந்த ஆயர், ஜேம்ஸ் பொன்னுச்சாமியை நான் வேண்டி இருந்தேன். ஜேம்ஸ் பிரசங்கத்தைத் தொடங்கினார்.
“எல்லாம் வல்ல கர்த்தரே… நீர் எம்மோடு இரும். இந்தப் பிரசங்கத்தை, என் மூலம் நீர் வழிநடத்தும்.. தோத்திரம் ஆண்டவரே.. தோத்திரம். ஆமென்” ஜேம்ஸ், ஆண்டவரைப் பிரார்த்தித்துக்கொண்டு, பிரசங்க உரையைத் தொடங்கினார்.
“எல்லோரும், கலாத்தியர் மூன்றாம் அதிகாரம், வசனம் இருபத்தி எட்டுக்குப் போவீராக”. ஆயர் ஜேம்ஸின், கணீரென்ற குரலுக்குப் பணிந்த கூட்டம், தத்தம் பைபிள் புத்தகத்தைத் திறந்து, கலாத்தியரைத் தேடியது.
“சர் சர்” என்ற புத்ததத் தாள்களைப் புரட்டும் ஓசைக்கு நடுவில், மூன்றாம் அதிகாரத்தின், வசனம் இருபத்தி எட்டை, ஆயர் ஜேம்ஸ், சத்தமாகப் படித்தார்.
“யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்” .
“இந்த வசனத்தின் அர்த்தம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆண்டவர் முன்னால், எல்லா இனங்களும் சமம்தான். எல்லோரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றுதான். கிறிஸ்துவின் முன்னால், ஆண், பெண், திருநங்கை என்ற பேதம் இல்லை. எனவே, எல்லோரையும், சக மனிதராக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” .
ஆயர் ஜேம்ஸ், பல வாழ்க்கை உதாரணங்களுடன், தனது பேச்சைத் தொடந்தார். நான் புன்னகைத்தேன்.
“என்ன இன்னைக்கு சாமியார், திருநங்கை குறித்து எல்லாம் பேசுறார். ஓ விஷயம் அப்படிப் போகுதா”.. கூட்டத்தில் சிலர், இப்போது என்னையும், ரோஸி சந்திரனையும், மாறி மாறிப் பார்ப்பதையும், ஏதோ, குசுகுசுத்துப் பேசுவதையும், என்னால் காண முடிந்தது. அவர்கள் சந்தேகப் பார்வைகளை, நான் அலட்சியம் செய்து, எனது திருச்சபை வழி நடத்துதலில், நான் கவனம் செலுத்தினேன்.
இதோ, திருச்சபை முடிந்துவிட்டது. கூட்டம் வெளியேறும் வாசலில், நான் முன்னே நின்றேன். வெளியே வந்த கூட்டத்தில், பலர், வணக்கம் சொன்னார்கள். ஒரு சிலர் மட்டும், நக்கலாக, என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். நான், அவர்கள் நக்கல்ச் சிரிப்பை உதாசீனம் செய்தேன்.
என்னைத் தவிர, எல்லோரும் தேவாலயத்தை விட்டு வெளியே போனார்கள். ஆயர் ஜேம்ஸிம் அவரது துணைவியாரும், மகளும், அருகில் இருந்த அவரது இல்லத்துக்குப் போய் விட்டார்கள்.
நானும், மெதுவாக நடந்து, எனது வீட்டுக்குள் போனேன். அங்கே ரோஸி சந்திரன், எனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். “இன்னைக்கு என்ன குழம்பு வைக்கட்டும் பாதர்? சிக்கனா அல்லது மட்டனா?”. கள்ளம் கபடம் இல்லாத ரோஸியின் குரலில், நான் தலை நிமிர்ந்தேன். ரோஸி சந்திரனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
“ரோஸி. உன் கைப் பக்குவத்தில், நீ எந்தக் குழம்பு வைத்தாலும், சுவை அருமையாக இருக்கும். உன் இஷ்டம்”. என் பதிலைக் கேட்ட ரோஸி சந்திரன் சிரித்தாள்.
எனக்கு சிரிப்பு வரவில்லை. அவள் குறித்த இந்த சமூகத்தின் பார்வை குறித்து, எனக்கு வேதனைதான் வந்தது. நான், உள்ளறைக்குள் போய், நாற்காலியில் அயர்ந்து சாய்ந்தேன்.
இப்போது, என் சிந்தனை முழுவதும், ரோஸி சந்திரன் இருந்தாள். “ரோஸி மிகவும் அழகானவள்.. நன்கு சங்கீதம் பாடக் கூடியவள். நல்ல மனதுடையவள். எல்லாம் கர்த்தரின் மகிமை என்றால், ரோஸியின் திருநங்கைப் பிறப்பும் கர்த்தர் அருளிய ஒன்றுதானே? அதை ஏன் இந்த சமூகம் புரிந்துகொள்ள மறுக்கிறது.?”
எனக்குத் தலை வலிப்பது போல இருந்தது.
பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.
“பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.” (புறம் 215).
ஈசநத்தம்-பள்ளப்பட்டி ரோட்டை ஒட்டி இருந்த, எனது ஒட்டு வீட்டில், நான் புறநானூறு படித்துக்கொண்டு இருந்தேன். வெளியில், மழை, ‘சோ’ வெனப் பெய்து கொண்டிருந்தது. ஒட்டு வீடு என்பதால், அதன் மேல், விடாது கொட்டிய மழையின், ‘மட மட’ என்ற சத்தத்தை ரசித்துக் கொண்டே, நான் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தேன். திடீர் மழை கொடுத்த, குளிரை எதிர்த்து, சட்டை போடாத என் மார்பு, சற்றே சூடானது. நான் புத்தகத்தை மூடினேன். இப்போது, என் சிந்தனை முழுவதும், பிசிராந்தையும், கோப்பெருஞ்சோழனும்.
இந்தப் பிசிராந்தையும், கோப்பெருஞ்சோழனும் எனக்குப் புதிதானவர்கள் அல்லர். ஆயினும், அவர்களுக்கிடையே இருந்த அந்த நட்பு குறித்த சந்தேகம், எனக்கு எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நான் தமிழ் இளங்கலை படித்த கல்லூரிக் காலத்தில் இருந்தே, இன்னும் என் நண்பர்களோடு, இதுகுறித்து நான், தர்க்கம் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.
முன்பின் பார்த்திராத இருவர், உயிர் துறப்பது என்பது, இந்தக் காலத்தில், அரசியலிலும், திரைப்பட உலகிலும் நடக்கலாம். எவனோ ஒரு அரசியல் தலைவனுக்காக, எவனோ ஒரு முட்டாள் தீக்குளிக்கலாம். எவனோ ஒரு நடிகனின் இறப்புக்காக, எவனோ ஒரு அடிமுட்டாள், தற்கொலை செய்து கொள்ளலாம்.
ஆனால், பிசிராந்தை முட்டாள் இல்லையே. அவன், ஒரு அறிவார்ந்த புலவன். கோப்பெருஞ்சோழனும் அறிவிலி இல்லை. ஒரு நாட்டின் மன்னன். அப்படி என்றால், ஒருவரை ஒருவர் பார்த்திராத அவர்தம் இருவரின், உயிர் விட்ட நட்புக்கிடையில், ஏதோ ஒரு வெளியில் சொல்லமுடியாத, ரகசியம் இருந்து இருக்கலாம். “யார் கண்டது?” நான், மனதுக்குள், முணுமுணுத்துக் கொண்டு இருந்தபோதே, என் வீட்டு வாசலில், அரண்மனையாரின் வேலைக்காரன் வந்து நின்றான்.
“அய்யா.. அரமனையாருக்கு, இழுத்துக்கிட்டு இருக்கிதுங்க.. உங்களை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாருங்க”. நான் வேகமாகச் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.
மாட்டுவண்டி, வழக்கமாகப் போகும், வண்டிப்பாதையில் போனால், சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்பதால், வண்டிக்காரன், குறுக்குவழியில் வேகமாக ஓட்டினான். எங்கள் எட்டுப்பட்டியும் , வானம் பார்த்த பூமி என்பதால், எப்போதாவதுதான் மழையே பெய்யும். அதுவும், இது முதல் மழை என்பதால், எப்போதும் தகித்துக் கொண்டிருக்கும், செம்மண் நிலத்தின், சூட்டில் இருந்து கிளம்பிய மண்ணின் மனம், வண்டிக்குள் இருந்த என் மூக்கைத் துளைத்தது.
அந்தக் காட்டுப் பாதையின் வழியெங்கும், சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து.வளர்ந்து இருந்தன. கூரை இல்லாத அந்த மாட்டு வண்டி, மேட்டிலும், பள்ளத்திலும், வேகமாகச் சென்றதால், உள்ளே உட்கார்ந்து இருந்த என் முகத்தை, கருவேல முட்கிளைகள், அவ்வப்போது பதம் பார்த்தன. இத்தனை வேதனைக்கிடையிலும், என் நினைவில், அரண்மனையார் வந்து போனார்.
ஒரு காலத்தில் எங்கள் எட்டுப் பட்டிகளும், அவ்வளவு செழிப்பாக இருந்ததாம். இன்றோ, அந்த எட்டுப்பட்டிகளும். மழைநீர் பொய்த்துப் போய், வறண்டுபோன தரிசு பூமி.
இன்றளவும், இந்த வறண்ட எட்டுப்பட்டிகளும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரே ஒரு மனிதர், நம்ம அரண்மனையார்தான். பஞ்சாயத்து, கோயில் திருவிழா, சேவல்கட்டு, அம்மைத்தடுப்பு முகாம், மாடுபிடித் திருவிழா, ஊர் எழவு இப்படி எல்லாவற்றிலும், அரண்மனையார் இருப்பார்.
எனது சொந்த ஊர் ராசக்காபட்டி இல்லை. எட்டுப்பட்டிகளில், ஒரு பட்டியான, குரும்பபட்டிதான் நான் பிறந்த இடம். சேரியில் பிறந்த என்னை, படிக்க வைத்ததே, இப்போதைய அரண்மனையாரின் அப்பா மருதப்ப நாயக்கர்தான். மருதப்ப நாயக்கரின் மகன்தான், இப்போதைய அரண்மனையார் வீரப்ப நாயக்கர்.
என்னதான் அரண்மனையார் பிள்ளை என்றாலும், வீரப்ப நாயக்கரும், சேரியில் பிறந்த நானும், ஒன்றாகவே பள்ளியில் படித்தோம். ஊர் எவ்வளவு பேசினாலும், வீரப்ப நாயக்கருக்கும், எனக்கும் இருந்த நட்பு, சாதியைக் கடந்தது. ரொம்பவும் இறுக்கமானது.
ராசக்காபட்டியில் இருக்கும் அரண்மனையார் பள்ளியில்தான், இப்போது, நான் தமிழ் ஆசிரியர் ஆக இருக்கிறேன். இன்றளவும், அரண்மையாரின் எல்லாத் தனிப்பட்ட விசயங்களும், எனக்கு மட்டுமே தெரியும்.
வீரப்ப நாயகக அரண்மனையாருக்கும் ஒரே ஒரு ஆண் வாரிசுதான். வளர்ந்து கல்யாணம் ஆன, தனது பிள்ளையிடம், பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அரண்மனை இப்போது தனியாகத்தான் வாழ்கிறார். அரண்மைனயின் பண்ணையை விட்டு, தூரத்தில் இருந்த அந்த வீட்டில், அரண்மனையார், ரெண்டு வேலைக்காரர்கள், ஒரு சமையல்காரன் அவ்வளவுதான். “ஏன் இப்படி அரண்மனை தனியாக வாழவேண்டும்? எனக்குப் புரியவில்லை.
இதோ, வீடு வந்து விட்டது. நான், வேகமாக அரண்மனை படுத்து இருந்த அறைக்குப் போனேன்.
நான் வரும் சத்தம் கேட்டும், சன்னல் பக்கம் தலையைத் திருப்பிப் படுத்து இருந்த அரண்மனையார், எனது பக்கம் திரும்பாமல், ஏதோ, அவர் பாட்டுக்கு, புலம்பிக்கொண்டே இருந்தார். நான், அரண்மனையாரின் கட்டிலுக்கு அருகில் போனேன். அவர், இப்போதும் என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
“சந்திரன். என் சந்திரன்.. சந்திரன்..” அரண்மனையார், விடாது சந்திரன் என்ற அந்தப் பெயரை, அரற்றிக் கொண்டேஇருந்தார். வாயின் ஓரத்தில், எச்சில் வடிவது கூடத் தெரியாமல், யாரோ ஒரு சந்திரனின் பெயரை உளறிக் கொண்டே இருந்தார்.
நான், “அரண்மனை.. அரண்மனை..நான் பாரதி வந்து இருக்கேன்” என்று அவர் தோளைப் பதட்டத்துடன் உலுக்கினேன்.
இப்போதுதான், அரண்மனைக்கு, நான் வந்து இருப்பதே தெரிந்தது.
“பாரதி. பாரதி..” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான், கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அரண்மனையை ஆசுவாசப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தினேன்.
“ஏன் அரண்மனை, யார் அந்த சந்திரன்?” நான் அமைதியாகக் கேட்டேன்.
அரண்மனை உதடு துடிக்க அழுதார். “சந்திரன் என் மாமன் மகன். சந்திரன் என் உயிர்.. என் கண்ணே சந்திரன்… இப்ப அவன் எங்க இருக்கானோ? நான் என் சந்திரனைப் பார்த்த பிறகுதான் உயிர்விடுவேன்… “ அரண்மனையின் புலம்பலும் கதறலும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதுநாள் வரைக்கும், அரண்மனையாரின், தனிப்பட்ட, எத்தனை எத்தனை ரகசியங்களை, நானும் அரண்மனையாரும், பேசி இருப்போம். ஆனால், அப்போதெல்லாம், அரண்மனையார், ஒரு போதும், இந்த சந்திரன் குறித்துப் பேசியது இல்லை.
“யார் இந்த சந்திரன்?” நான் குழம்பினேன்.
ஆயர் டேனியல் – திண்டுக்கல்.
திருநங்கை ரோஸி சந்திரனை, நான் ஆறு மாதங்களுக்கு முன்தான் பார்த்தேன். நான் ஆயராக இருக்கும் இந்த தேவாலயம், திண்டுக்கல் நகரின், மையப்பகுதியில் இருந்தது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டை ஒட்டி இருந்த பிரமாண்டமான பள்ளி, அந்தப் பள்ளிக்குள்ளேயே இருந்த எங்கள் தேவாலயம், தேவாலயத்துக்கு அருகிலேயே, திருச்சபை பாதிரிமார்களுக்கான குடியிருப்பு வீடுகள் என நிறைய வசதிகள் கொண்ட அந்த கிருத்துவ மடத்தின் எல்லாவற்றிற்கும், பொறுப்பு நான்தான்.
ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்கள் போன்று, எங்கள் கிறித்துவத் திருச்சபையில், பாதிரிமார்கள், திருமணம் செய்துகொள்ளாமல், வாழவேண்டிய அவசியம் இல்லை. பாதிரிமார்கள் விரும்பினால், திருமணம் செய்துகொள்ளலாம். பிள்ளைகளும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால், நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. வீட்டில் எப்போதும் நான் தனியாள்தான். இப்போதுதான், ரோஸி என் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். அவள் துணையில், என்னால், சுவையான சாப்பாடு சாப்பிட முடிகிறது. என் தனிப்பட்ட வேலைகள் பலவற்றை, ரோஸிதான் கவனித்துக் கொள்கிறாள்.
ஆறு மாதத்திற்கு முன் நள்ளிரவில், என் வீட்டை ஒட்டி இருந்த சாலையில், யாரோ ஒருவர் அலறும் சத்தம் கேட்டு, நான் விழித்துக் கொண்டேன்.
“என்னை விட்டுடுங்க. என்னை விட்டுடுங்க..” யாரோ ஒருவர், அலறிக்கொண்டும், கெஞ்சிக்கொண்டும் இருப்பது, எனக்கு நன்றாகக் கேட்டது. எவனோ ஒருவன்.. “அடியே ஒழுங்கா வந்துரிடி.. பத்தினி மாதிரி நடிக்காதேடி” என்று மிரட்டும் குரலும், எனக்குக் கேட்டபோது, நான் சுதாரித்துக் கொண்டேன்.
தேவாலயத்தின் பெரிய வாசலுக்கு விரைந்தேன். அந்தப் பெரிய வாசல் கதவின் ஓரம், காவலாளி தூங்கி வழிந்த நிலையில், உட்கார்ந்து கொண்டு இருந்தான். “சேவியர்… யாரோ ஒருவர் தன உயிருக்குப் போராடி அலறும் சத்தம், உனக்குக் கேட்கவில்லையா? அவ்வளவு தூக்கமா?”. நான், காவலாளி சேவியரைக் கடிந்து கொண்டேன்.
“இல்லை பாதர்..” அவன் ஏதேதோ உளறினான். நான் சம்பவம் நடக்கும் இடத்துக்கு அவனை அனுப்பினேன். சேவியர் விரைந்து போனவன், ரோஸி சந்திரனுடன் வந்து நின்றான்.
ரோஸி சந்திரனைப் பார்த்தவுடன், என்னால், அவள் ஒரு திருநங்கை என்று உணர்ந்துகொள்ள முடியவில்லை. “யாரம்மா நீங்கள்” என நான் வினவியவுடன், “என் பெயர் ரோஸி சந்திரன் பாதர்” என்று அவள், வாயைத் திறந்து சொன்னபோதுதான், என்னால், அவள் ஒரு திருநங்கை என்பதை உணர முடிந்தது.
“எந்த ஊரம்மா நீங்கள்? இந்த நள்ளிரவில், ஏன் நீங்கள் தனியாகப் பயணப்பட வேண்டும்?” நான், இப்படிக் கேட்டதுதான் தாமதம், ரோஸி சந்திரன் கதறிக் கதறி அழுதாள். நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.
அவள் உண்மைப் பெயர் சந்திரனாம். திருநங்கை ஆனபிறகு, ரோஸி சந்திரன் என்று பெயரை மாற்றிக்கொண்டாளாம். அனாதையான அவள், திண்டுக்கல்லுக்குப் பிழைப்புத் தேடி வந்து இருக்கிறாள். வந்த இடத்தில், அவள் மீது ஆசைப்பட்ட ஒருவன், அவளை வன்புணர்வு கொள்ள, வற்புறுத்தியிருக்கிறான். பயந்து போன ரோஸி, அலறியிருக்கிறாள்.
ரோஸி சந்திரன் மீது எனக்கு இப்போது இரக்கம் வந்தது. “சரியம்மா.. இந்த இரவில் படுக்க இடம் கொடுக்கிறேன். காலையில் எழுந்து கிளம்பிவிடு”
நான், தேவாலயத்தின் இன்னொரு புறத்தில் இருந்த, ஒரு வீட்டைக் காவலாளியை விட்டு, சுத்தம் செய்து, ரோஸியைத் தங்கவைத்தேன்.
காலையில் நான், எனது திருச்சபைப் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ரோஸி சந்திரன் என்னைத் தேடி வந்தாள். என்னிடம் விடை பெற்றுப் போகத்தான் வந்து இருக்கிறாள் என்று நினைத்தேன். அப்படி எல்லாம் இல்லை.
“பாதர். நான் யாரும் இல்லாத அனாதை பாதர். இங்கேயே எனக்கு ஏதாவது வேலை போட்டுக்கொடுங்கள் பாதர். நான் நன்கு சமைப்பேன் பாதர். எனக்கு ஏதாவது ஒரு வேலையும், தங்க இடமும் தாருங்கள் பாதர்” ரோஸி கதறிய கதறல், எனது மனதைக் கரைத்தது.
“கர்த்தரின் படைப்புத்தான் அவளும். இறைவனுக்குத் தொண்டு செய்யும் நானே, இவளை வெறுத்தால், பின் யார்தான் இவளை ஆதரிப்பார்?”
இளமை குன்றாமல் இருக்கும் அவளுக்கு, வயது முப்பதை ஒட்டியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், தனது வயது, நாற்பத்தி ஐந்து தாண்டிவிட்டது, என்று அவள் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“சமையல் தவிர வேறு என்ன தெரியும்” நான் கேட்டபோது, ரோஸி தயங்காமல் பதில் சொன்னாள். “இதற்கு முன்னர் ஒரு ஐயர் வீட்டில் வேலை பார்த்து இருக்கிறேன் பாதர். அங்கேயே, நான் சங்கீதமும் கற்றுக்கொண்டேன். என்னால், நாலு பேருக்கு சங்கீதம் சொல்லித்தர முடியும் பாதர்”. நான் சிரித்து விட்டேன்.
“எங்கள் திருச்சபையிலும் கர்நாடக சங்கீதம் உண்டு. ஆனால், அந்தப் பாடல்களைக் கற்றுக்கொள்ள, உனக்குக் கொஞ்சம் நாட்கள் பிடிக்கும். நீ எனக்கு முதலில், நன்கு சமைத்துப் போடு.. சரியா?”. ரோஸி, பலமாகத் தலை ஆட்டினாள். இருந்தாலும், எனக்கு அவள் சங்கீத அறிவு குறித்துத் தெரிந்துகொள்ள, ஆசையாய் இருந்தது.
எல்லோரும், இந்து கோவில்களில் மட்டுமே, கர்நாடக சங்கீதம் வாழ்கிறது என்று நினைக்கிறார்கள். அது தவறு. எங்கள் திருச்சபையில், அன்றாடம் பாடப்படும் கீர்த்தனைகளில், பல கீர்த்தனைகள், கர்நாடக ராகம் சார்ந்தவை. தாளம் கொண்டவை. நானும் கூட, திருச்சபை வேதாகமக் கல்லூரியில் படிக்கையில், சங்கீதம் கற்றுக் கொண்டவன்தான். அதனால்தானோ என்னவோ, ரோஸியை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான், ரோஸியைப் பார்த்தேன்.
ரோஸியை, நேற்று இரவு அவள் தங்கியதுபோல், தனி வீட்டில் தங்க வைப்பது ஆபத்தானது. ஏதாவது ஏடாகூடமாக நடந்துபோனால், அதற்கு நானே பொறுப்பாகவேண்டும். எனவே, ரோஸியை, எனது வீட்டுக்குள்ளேயே, தங்கவைக்க முடிவு செய்து, அவளை, வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன்.
சீக்கிரமே, ரோஸி, வீட்டை நன்கு நிர்வகிக்கக் கற்றுக்கொண்டாள். அவள் சாமர்த்தியமும், புத்தி சாதுரியமும், எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஒரு நாள், “எங்கே ஒரு பாட்டுப் பாடம்மா..” என்று நான் கேட்டவுடன், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ரசித்துப் பாடினாள் ரோஸி சந்திரன். அவள் குரலில். மென்மை குறைவுதான். ஆனால், பெண்மை நிறைய நிறைய இருந்தது. சுருதி குறையாமல் பாடிய, அவளது இனிமையான சங்கீதம், எனது மனதை இளகுவாக்கியது. அவளோடு சேர்ந்து நானும், சில கர்நாடகக் கிறித்துவக் கீர்த்தனைகளைப் பாடினேன்.
கொஞ்சநாட்களில், ரோஸி சந்திரன், சர்ச்சில் பாடும் கீர்த்தனைகள் அத்தனையும், கற்றுத் தேர்ந்துவிட்டாள். கூடவே, மேற்கத்திய சங்கீதத்திலும், அவள் தனது திறமையைக் காட்டியபோது, நான் ரோஸியை, மற்றவர்கள் முன்னே, மனதாரப் பாராட்டினேன். ஆனால், அந்த மற்றவர்கள், என்னை சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள்.
ரோஸி சந்திரனின் சுவையான சமையலை, நான் தினமும் மென்றேன் என்றால், திருச்சபைக்கு வந்த மக்களோ, என்னையும், ரோஸி சந்திரனையும் இணைத்துப் பேசி, தினமும் வாய் மென்றார்கள்.
ஆனால், “இதுவும் கர்த்தரின் மகிமைதான்” என்று நினைத்த நான், ஊர் வாயைக் கண்டுகொள்ளாமல், எனது திருப்பணியை, எப்போதும் போல் தொடரலானேன்.
பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.
அரண்மனையாருக்கு, மூக்கு ஒழுகுவதும் தெரியவில்லை. வாயில், வழிந்தோடும் எச்சில் நீரைத் துடைக்கவும் விரும்பவில்லை. விசும்பி விசும்பி அழும் அரண்மனையைப் பார்த்து, எனக்கு இரக்கம் வந்தது.
“எப்படி வாழ்ந்த மனிதன். எவ்வளவோ சொத்துக்கு அதிபதி. ஆனால், இப்போது தனியே அனாதை போல வாழ்கிறார் இந்த அரண்மனையார். மகனோடு சேர்ந்து வாழ, ஏன் இவருக்கு விருப்பம் இல்லாது போனது?. யார் இந்த சந்திரன்?” நான் அரண்மனையிடம் கேட்டே விட்டேன்.
என் கேள்விக்கு, அரண்மனை அழுதுகொண்டே சொன்ன பதில், என்னைத் தூக்கிவாரிப் போடச்செய்தது.
சந்திரன் என்ற அந்த நபர், அரண்மனையாரின் ஆண் காதலியாம். ஒரு ஆணுக்கு, இன்னொரு ஆண் காதலியா? என்ன அசிங்கம் இது? எனக்கு, இப்போது, காறித் துப்பத் தோன்றியது. ஆனால், அரண்மனையாரோ எனது பால்ய உயிர் நண்பன். அப்படி இருக்க, நான் அவரை அவமானப்படுத்துவது போல, நடந்து கொள்வதில் நியாயம் இல்லை. எனவே, நான், கஷ்டப்பட்டு எனது எச்சிலை அடக்கினேன்.
ஆனால் அரண்மனையோ, எனது ஆத்திரத்தை உணரும் நிலையிலேயே இல்லை. யாருக்கும் தெரியாத, அவரது உள்ளக்கிடக்கைகளை, என்னிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்பதிலேயே, அவர் குறியாக இருந்தார். அளவுகடந்த மூச்சுத் திணறலுடன், அரண்மனையார், இப்போது திக்கித் திக்கிப் பேச ஆரம்பித்தார்.
“பாரதி… ஒரு ஆண், இன்னொரு ஆணைக் காதலிப்பதை, இந்த சமூகம் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி, அப்படிக் காதலித்து வாழ்ந்தவர்களில் நானும் ஒருவன்”
“சந்திரன் எனது மாமன் மகன்தான். என்னை விட நான்கு வயது சிறியவன். பள்ளிக்கூடத்தில் மட்டுமே, நீ எனக்கு நண்பன். பள்ளிக்கூடத்தைவிட்டு, வெளியே வந்தாலோ, சந்திரன்தான் எனதுயிர்த் தோழன்.”
“பதின்மவயது ஆசை, எங்கள் இருவரையும், உடலுறவில் சேர்த்து வைத்தது. அரண்மனையில், எனக்குக் கொடுக்கப்பட்ட தனியறையில், நானும், சந்திரனும், கட்டிப்பிடித்து உறங்காத நாட்களே இல்லை.” அரண்மனையார், இப்போது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அரண்மனையார் மீது எனக்கு இருந்த அருவெறுப்பு, இன்னும் என்னை விட்டு அகலவில்லை. அரண்மனையே தொடர்ந்தார்
“பாரதி. வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன். நானும் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிகொள்வேன் என்றோ, பிள்ளை பெற்றுக்கொள்வேன் என்றோ, அந்தப் பதின்மவயதில், நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால், கல்யாணம் ஆகாத அந்த நாட்களில், சந்திரன்தான் எனக்குக் காதலி. சந்திரன்தான் எனக்கு மனைவி.. சந்திரன்தான் எனக்கு எல்லாமே”
“நன்றாகப் போய்க்கொண்டு இருந்த எங்கள் வாழ்க்கையில், திடீரென்று பூகம்பம் வந்தது. ஒருமுறை, என்னையும், சந்திரனையும், நாங்கள் முத்தமிட்ட நிலையில், அப்பா பார்த்துவிட்டார்.
அடியான அடி. எனக்கு இல்லை. எல்லா அடிகளும், சந்திரனுக்குத்தான். அப்போது ஓடியவன்தான் சந்திரன். அதன்பிறகு, சந்திரன் திரும்பி வரவே இல்லை”
ஒரு அசிங்கமான கதையைக் கேட்டுக்கொண்டு இருப்பது போலத் தோன்றிய எனக்கு, இப்போது சிரிப்பு வந்தது.
“ஆனால், அரண்மனை. உங்களைப் பார்த்தால், ஒரு பெண் போலவே தோன்றவில்லையே. நம்ம எட்டுப்பட்டி கம்பு சுழற்றும் போட்டியில் இருந்து, மாட்டுவண்டி ரேக்ளாஸ் முதற்கொண்டு, அத்தனையிலும், உங்கள் ஆண் வீரத்தை, நாங்கள் பார்த்து இருக்கிறோமே.. அப்படி இருக்க, இதில் மட்டும், ஆசை எப்படித் தடம் புரண்டு போனது?”
இப்போது அரண்மனையார் என்னை அப்பாவி முகத்துடன் பார்த்தார். “கேலி பேசாமல், என் மீதும், எனது உணர்வுகள் மீதும் கருணை காட்டு நண்பா… கருணை காட்டு” என்று கெஞ்சுவது போல, அவர் முகம் எனக்குத் தெரிந்தது.
“பாரதி. நான் உண்மையில் வீரன்தான். ஆனால், வீரத்துக்கும், காம ஆசைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சந்திரன், என்னைப் போல இல்லை. பெண் தன்மை நிறைந்தவன். ஆனால், அதனால்தான் எனக்கு சந்திரன் மீது காதல் வந்தது என்று நான் காரணம் கூறவும் விரும்பவில்லை. ஆண்-ஆண் இனக்கவர்ச்சி, எனக்குப் பிடித்து இருந்தது என்பதுதான் உண்மை”
“நான் ஒரு கிராமத்தான். ஆணும் ஆணும் கொள்ளும் காதலுக்கு, அறிவுசார்ந்த விளக்கம் சொல்லும் அளவுக்கு, எனக்குப் படிப்பறிவும் இல்லை. எனக்கு சந்திரன் இப்போது வேணும். அவ்வளவுதான். உன்னால்தான், அவனைத் தேடிக்கொண்டு வர முடியும் பாரதி.” உணர்ச்சியின் உச்சத்துக்குப் போன அரண்மனையார், என் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
.
“பாரதி.. உன் கைகளையே.. உன் காலாக..” இதற்கு மேல், என்னால் பொறுக்கமுடியவில்லை. “போதும் அரண்மனை போதும்” நான், என் நண்பனிடம் கதறினேன். என் நண்பன் அரண்மனையின் சோகம் முழுதும், இப்போது என் கண்களில், கண்ணீராக வழிந்து ஓடியது.
“நண்பா அரண்மனை… கவலை வேண்டாம். சந்திரனை எப்படியாவது, தேடிக்கண்டுபிடித்து, உன் முன்னே நிறுத்துவது, எனது பொறுப்பு”.
நான் இப்போது, அரண்மனையின் மூக்கைத் துணிகொண்டு துடைத்து விட்டேன். அவர் வாயில் வடிந்த எச்சிலையும் துடைத்தேன். அரண்மனையின் தலையை ரொம்ப நேரம் வருடிக்கொண்டு இருந்தேன். அரண்மனை தூங்கிப் போனார்.
நான், மறுபடியும் வீடு வந்து சேர்ந்தேன். கை கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே வந்த போது, அந்தப் புறநானூறு புத்தகம், எனது கண்ணில் பட்டது.
“சந்திரனைப் போன்றுதான் பிசிராந்தை இருந்து இருப்பாரா? அதனால்தான் கோப்பெருஞ்சோழனுடன் அவருக்கு இருந்த அந்த நட்பு, வெளியில் தெரியாமல் போனதா?” எனது மனதில் நிறையக் குழப்பங்கள்.
ஆனால், ஒரு விஷயத்தில், நான் உறுதியாக இருந்தேன். “சந்திரனை எப்படியும் தேடிப் பிடிக்க வேண்டும். அரண்மனையார் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்”.
நான் இப்போது தூங்கப்போனேன்.
தொடரும்
- இதுவும் ஒரு காரணமோ?
- இங்கு
- (அல்லக்)கைபேசி !
- வெற்றுக் காகிதம் !
- ஒரு கதை ஒரு கருத்து மா. அரங்கநாதனின் பூசலார்
- தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]
- ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு
- திரைகடலோடியும்…
- பாதி உயரத்தில் பறக்குது கொடி !
- வடக்கிருந்த காதல் – முதல் பாகம்
- மாசில்லாத மெய்
- நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது
- கண்ணிய ஏடுகள்