அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 15 in the series 7 மார்ச் 2021

 
டி வி ராதாகிருஷ்ணன்

பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின்
இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர்
ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம்
படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில்
சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப்
பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின்
வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும்
புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் சுவைக்க நாடகமாக்கினார்
கவிராயர்.

ராமனின் அழகில் மயங்கி..பேரழகான வடிவொடு ராமர் முன் வருகிறாள்
சூர்ப்பணகை.ராமர் மசியவில்லை.சரி..இளையோனையாவது மயக்கலாம் என
லட்சுமணனிடம் வருகிறாள்.அவளை அறநெறியில் அகற்ற முடியா லட்சுமணன்
மறநெறியைக் கையாண்டு அவளது மூக்கை அறுத்து
துரத்துகின்றான். மூக்கறுப்பட்டும்..காமம் அழியாமல் மீண்டும் ராமனிடம்
வருகிறாள் சூர்ப்பணகை.அவனிடம் சொல்கிறாள்…

‘உங்கள் தந்திரத்தை நான் தெரிந்துக் கொண்டேன்..கட்டழகுக் கன்னியான
என்னை..வேறு எவரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவும்..மற்றவர்
கண்ணேறு என் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்..என் பேரழகை சற்றுக் குறைக்க தம்பியிடம் சொல்லி என் மூக்கை அரியச் செய்தீர்கள்.நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரிகிறது.உங்கள் இளையக் காதலியான நான் மூத்தவளைவிட அழகானவள்.அதனால் சீதைக்குக் கோபம் வரும் என்பதால்..அவளது வாயை அடக்க நீர் செய்த தந்திரம் என் மூக்கை அறுத்தது..மேலும் சீதைக்கு இடை மிகவும் சிறியது.அந்த குறை என்னிடம் இல்லை.அதனால் எனக்கும் ஒரு சிறு குறையை உண்டாக்கி..இருவரையும் சரிநிகர் சமானம் ஆக்கிவிட்டீர்கள்.சீதையைப்போல் இடைக் குறையை எனக்கு உண்டாக்க முடியாது.இடையைக் குறைப்பதை விட மூக்கைக்
குறைப்பது எளிது என இக்காரியம் செய்து விட்டீர். இதன் மூலம் நீங்கள் என் மீது கொண்டுள்ள காதல் புரிகிறது.’ என காதற்சுவை சொட்டச் சொட்டக் காமவெறியுடன் சொல்கிறாள் சூர்ப்பணகை.

என் உருவினில் கொஞ்கம் கொய்தீர்
எனக்கென்ன தாழ்ச்சி நீர் செய்தீர்?

அன்னியளாக என்னைப் பிரிய விடாமல்- என்
அழகு கண்டொருவர் கண்ணேறு படாமல்
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்

இடுப்பு சீதைக்குக் கொஞ்சம்
மூக்கிவ ளுக்குக் கொஞ்சம்
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ – எண்ணி
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்..

– கவிராயரின் ராம நாடகம்

என்கிறாள் இன்மொழியுடன் சூர்ப்பணகை.சூர்ப்பணகையின் காமவெறியாகிய
காதற்போலியை நகைச்சுவைக் கலந்து நாடகமாக்கினார் கவிராயர்.

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் ‘மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே’ என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப்படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை…

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்


பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்…என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை
புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும். அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் – அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

இறக்கும்போது நினைப்பது அடுத்த பிறவியில் கைகூடும் என்பது தத்துவ நூலார் கூறும் கருத்து. அக்கருத்தை இங்கு புகுத்தி சீதையின் காதல் மிகுதியை சுவைபடக் கூறுகிறார் கவிராயர்.

 

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    meenakshi balganesh says:

    This is an excellent analysis. An article that has researched and analysed similar contexts.
    Kudos!

    Unfortunately I do not know how to use tamil here in comments. Apologies for usage of English.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *