முருகபூபதி
முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி
இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை நகர்ந்துள்ளார்.
உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார்.
கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் இந்த அமைதியும் தன்னடக்கமும் மிக்க சாதனையாளர் என்ற முடிவுக்கு வரமுடியும்.
மூத்த தமிழ் அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அச்சிலே வெளிவந்த இத்தனை நூல்களும் எத்தனை ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்தேவையில்லை.
செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற சிறு நூலை எதிர்வினையாக எழுதினார். 1973 இல் பூரணி காலாண்டிதழ் இதனை மறுபிரசுரம் செய்தது. பேராசிரியர் நுஃமான் இதற்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரைத்தொடரை மல்லிகையில் எழுதினார். அதற்கு மு.பொன்னம்பலம் மல்லிகையிலேயே எதிர்வினை எழுதினார். இவ்வாறு ஆரோக்கியமான விமர்சன கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய மூலவர் செவ்வானம் படைத்த கணேசலிங்கன் என்பது இலக்கிய உலகின் பழையசெய்திதான்.
எனினும் இப்படியும் எமது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலையும் இச்சந்தர்ப்பத்தில், புதிதாக எழுதவந்துள்ள இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.
சர்வதேசப்புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்) இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு தலைமைதாங்கிச்சிறப்பித்த பெருமையும் கணேசலிங்கனுக்குண்டு.
புனா திரைப்படக்கல்லூரியிலும் அவர் சிறிதுகாலம் பயிற்சி பெற்றவர். அங்கு பிரபல இயக்குநர் மிருணாள் சென் போன்றவர்களுடன் நட்புறவுகொண்டவர்.
கமல்ஹாஸன் நடித்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான கோகிலா (கன்னடம்) திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இயங்கியிருக்கும் கணேசலிங்கன் – தமிழக சினிமா உலகின் கோலங்களை தமது கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரித்துள்ளார்.
நான் வதியும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகப்பிரவேசப் பரீட்சைக்கு தமிழும் ஒரு பாடம்.
தமிழ்மொழிப்பாடப் பரீட்சைக்கு தோற்றும் பல மாணவர்களுக்கு பெண்கள் தொடர்பாக வரும் நேர்முக – எழுத்துப்பரீட்சைகளுக்கு கணேசலிங்கனின் பெண்ணடிமை தீர என்ற நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது என்ற புதிய தகவலையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.
இந்த நூலும், குமரனுக்கு கடிதங்கள், குந்தவைக்கு கடிதங்கள் முதலான நூல்களும் பல ஆயிரம்பிரதிகள் வாசகர் மத்தியில் சென்றுள்ளன.
சாரு மஜூம்தார் என்ற இந்திய சுதந்திரபோராட்ட போராளி, பின்னாளில் இடதுசாரி இயக்கங்களில் ஈடுபட்டு, நக்சல்பாரி என்ற ஆயுதப்போரட்ட இயக்கத்தை உருவாக்கியவர்.
அவரது சிந்தனையின் தாக்கத்தினால், கணேசலிங்கன் எழுதிய மண்ணும் மக்களும் என்ற நாவல் இந்திய அரசினால் தடைசெய்யப்பட்டது.
நிலமானிய சமூக ஒடுக்குமுறையைச் சித்தரித்தே மண்ணும் மக்களும் நாவலை எழுதினார். இலங்கையில் – புரட்சி ஏதோ ஒரு வடிவத்தில் தோன்றும் வாய்ப்பு நேரலாம் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நாவலாக எழுதிக் காண்பித்தவர்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் செ.கணேசலிங்கனின் சிறுகதைகள், நாவல்கள் பல முக்கியமானவை. தடம் பதித்தவை. ஆண்மையில்லாதவன் போன்ற இவரது பல சிறுகதைகள் குறிப்பிடப்படவேண்டியவை.
நாவல்களிலும் ‘சடங்கு’, ‘செவ்வானம்’, ‘நீண்ட பயணம்’, ‘மண்ணும் மக்களும்’ போன்றவை முக்கியமானவை. இவரது நாவல்களை வெறும் பிரச்சாரப் படைப்புகளாக ஒதுக்கி விட முடியாது.
ட்ரோல்ஸ்ரோய், தாஸ்த்தாவஸ்கி போன்றவர்கள் தங்களது படைப்புகளில் கையாண்ட மத போதனைகளை வைத்து மட்டும் எவ்விதம் அவர்களது படைப்புகளைக் கணிப்பிட முடியாதோ, அவ்விதமே செ.கணேசலிங்கனின் படைப்புகளில் ஊடுருவியிருக்கும் பொருளின் தீவிரத்தை வைத்து மட்டும் அவரது படைப்புகளை எடை போட முடியாது.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் குமரன் பதிப்பகம் என்ற பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனத்தையும் நடத்திக் கொண்டு Front Line சஞ்சிகை ஆசிரியர் இந்து ராமின் நண்பராகவும் திகழ்ந்த கணேசலிங்கன், இந்து குழுமத்தின் நூலகத்திலும் சிறிது காலம் பணியாற்றினார்.
தமிழில் அரசியல் சார்ந்த நாவல்களை எழுதும் ஆற்றல் மிக்கவராக இனம் காணப்பட்டவர். மாக்ஸீய சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்ட கணேசலிங்கன் சிறந்த மனிதநேயவாதி எனவும் விதந்து பேசப்படுபவர். ஆங்கிலத்திலும் நல்ல புலமைமிக்க கணேசலிங்கன், ஸ்ரிபன் செவாக் (Stefan Zweig) எழுதிய
Letter from an Un-known Woman என்ற குறுநாவலை தமிழில் அபலையின் கடிதம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
StefanZweig ஜெர்மனியில் மூத்த படைப்பாளி. இவர் 1881 இல் வியன்னாவில் பிறந்து 1942 இல் தமது 60 வயதில் பிரேசிலில் மறைந்தார்.
ஆனால் – அது இயற்கை மரணமல்ல. அவரும் அவரது மனைவியும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவே இந்நாவலை தமிழுக்கு வரவாக்கிய கணேசலிங்கன் இந்நூலின் முதல் பதிப்பில் 1965 இல் பதிவு செய்துள்ளார்.
அதன்பிறகும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பில் வெளியாகியிருக்கிறது.
கணேசலிங்கனின் முதலாவது நாவல் நீண்டபயணம் வடமாகாண சாதி ஒடுக்குமுறையை சித்திரித்தது, மற்றுமொரு பிரசித்தி பெற்ற நாவலான சடங்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியின் முன்னுரையுடன் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது.
வெள்ளவத்தையில் இயங்கிய கணேசலிங்கனின் விஐயலஷ்மி புத்தகசாலை 1983 ஆடிக்கலவரத்தில் முற்றாக எரிந்து நாசமாகியது. இலங்கையில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரிதும் உதவிய இந்த புத்தகசாலையை கொடியவர்களிடம் இழந்த போதிலும் – சென்னையில் புகலிடம் பெற்று, ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு அயராமல் உழைத்தார்.
கொழும்பில் நீண்டகாலம் குமரன் மாத இதழை நடத்தினார். அவ்விதழ் – கலை, இலக்கிய, அரசியல், அறிவியல் ஏடாக வெளியானது. இலங்கையில் மிகுந்த கவனத்தைப் பெற்ற கவிஞரான புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தில் வரதபாக்கியான் என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியதும் இந்த குமரன் இதழில்தான்.
ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் – “ தான் குமரன் இதழ்களைத் தொடர்ந்து படித்தே அரசியல் அறிவு பெற்றதாக ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தின் முன்னோடி முற்போக்கு எழுத்தாளர் அ.ந. கந்தசாமி அந்திம காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் அவருக்கு அருகே இருந்து பலவிதத்திலும் பணிவிடை புரிந்த முன்மாதிரியாளர் இந்த கணேசலிங்கன்தான்.
அ.ந.கந்தசாமி எழுதிய வாழ்வுக்கு வழிகாட்டும் உளவியல் நூலான வெற்றியின் இரகசியங்கள் தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளிவரக் காரணமாகவிருந்தார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பக வெளியீடாக வந்த அ.ந.க.வின் மதமாற்றம் நாடகம் நூலாக வெளிவரவும் கணிசமான ஒத்துழைப்பு நல்கியதோடு அந்நூலுக்கு நல்லதொரு முகவுரையினையும் எழுதியவர்.
அ.ந.க.வின் வெளிவராத நாவலான செ.க.வின் வசமிருந்த களனி வெள்ளம் 1983 ஆடிக் கலவரத்தில் செ.க.வின் எரிந்த உடமைகளுடன் எரிந்து போனதாகவும் அறியப்படுகிறது. இலங்கையில் கார்ல்மார்க்ஸ் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட வேளையில் கணேசலிங்கன் வழங்கிய ஆக்கபூர்வமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நேரடியாக கண்ட தோழர் என். சண்முகதாஸன் அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
கணேசலிங்கன், பெண்ணடிமைத்தனத்திற்கு – திருக்குறள் விமோசனம் அளிக்கவில்லை என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்கும் நூல் ஒன்றையும் எழுதி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
பேராசிரியர்கள் க. கைலாசபதி, இந்திரபாலா உட்பட பல முன்னணி விமர்சகர்கள், ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை பதிப்பித்துமுள்ள கணேசலிங்கனின் மிகப் பெரிய பலம் – அவரிடம் இயல்பாகவே குடிகொண்டுள்ள அமைதியும் அடக்கமும்தான்.
ஒருவகையில் அவர் ஒரு நிறைகுடம்.
““கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு, பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு – சிலவேளை ஒரே – ஈழத்து எழுத்தாளர் இவர்“ – என்று இலக்கு இதழ் செ. கணேசலிங்கனைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளது.
இன்று மார்ச் 09 ஆம் திகதி , தனது 93 வயது பிறந்த தினத்தை சென்னையில் தனது அருமை மகள் குந்தவையுடன் அமைதியாக கொண்டாடும் எமது இலக்கிய குடும்பத்தின் மூத்தசகோதரன் கணேசலிங்கனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—0—
letchumananm@gmail.com
- தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய வழிக் கலந்துரையாடல்
- இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது
- மறந்து விடச்சொல்கிறார்கள்
- எனக்கான வெளி – குறுங்கதை
- உப்பு வடை
- ஆசாரப் பூசைப்பெட்டி
- ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன
- கதவு திறந்திருந்தும் …
- ஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்
- அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்
- வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்
- என் அடையாள அட்டைகளைக் காணவில்லை
- கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும்
- ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்
- உறக்கம் துரத்தும் கவிதை