வளவ. துரையன்
ஏறு களிறெனஏறி எரிவிழி
ஈசர் பதினோரு தேசரும்
கூருபடுபிறை ஆறு சுழல்சடை
யோடு முடுகினர் கூடவே. 251
{ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு; முடுகுதல்=விரைதல்]
யானைகளில் ஏறி மற்ற தேவர்கள் வந்த்தைப் போலவே உருத்திரர் பதினொருவரும் பிறைச் சந்திரனும், கங்கை ஆறும் கூடிய சுருண்ட சடைமுடியுடன் வந்தனர். பதினொருவர்: மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன்; ஈசானன், விசயன்; வீமதேவன்; பலோற்பவன்; காபாலி; சௌமியன்
விண்மருங்கமரர் தம்மிடன் பழகி
வேள்வி ஆகுதி உண்ணவோ!
புண்மருந்திட எண்ணியோ! கடிது
ஆயுள் வேதியர் போதவே. 252
[அமரர்=தேவர்; ஆகுதி=பலியிடப்ப்டும் உணவு; ஆயுள் வேதியர்=மருத்துவர்; போதல்=வருதல்; அசுவினி தேவர்கள் இருவர் தத்திரன், நாதத்தியன்]
விண்ணில் உள்ள தேவர்களுடன் அவர்களுடன் இருக்கும் அசுவினி தேவர்கள் இருவரும் வேள்வி உணவை உண்ணக் கருதியோ, அல்லது இனி விளையப் போகும் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருந்திட வேண்டும், எனக்கருதியோ முன்கூட்டியே உணர்ந்து விரைந்து வந்தனர்
மருக்கணங்களும் விசுவ தேவரும்
மற்றை அட்ட வசுக்களும்
குருக்களும் பிறரும் கடாவு
விமான கோடிகள் கூடவே. 253
[அட்ட வசுக்கள்=அனலன், அனிலன், ஆபச்சைலன், சோமன், தரன், துருவன், பிரத்தியூசன், பிரபாசன்]
மருக்கணங்கள், தேவர் கூட்டத்தினர், அட்ட வசுக்கள் தேவர்களின் குருவான வியாழன் அசுரர்கள் குருவான சுக்கிரன் என்று விளங்கும் பலரும் கோடி கோடி விமானங்களில் ஏறி வேள்விச் சாலைக்கு வந்தனர்.
சோதி நேமியும் வச்ர மாலையும்
மருளிநின்று துளும்பவே
யாது கற்பகம்யாது மேரு
எனத் தெளிந்திலர் யாதுமே. 254
[சோதி=ஒளி; நேமி=சக்கரம்; மருளி=மயங்கி; துளும்ப=மிக]
ஒளி வீசும் துருவச்சக்கரத்துடன், வைர மணிமாலைகளும் கலந்து போரொளியுடன் திகழ இங்கு கற்பகச் சோலை எது? மேருமலை எது? என எவராலும் இனம் காணமுடியாது போயிற்று
வேய் திரைக்கடல் ஏழும் அம்புதம்
ஏழும் மையல் விளைக்கவே
மாதிரக் களிறு எட்டும் ஆதி
விலங்கல் எட்டும் மயங்கவே. 255
[வேய்திரை=அலைமுழங்கும் கடல்; அம்புதம்=மேகம்; மாதிரம்=திசை; விலங்கல்=மலை]
அலைகள் நிறைந்த ஏழு கடல்களும். ஏழு மேகங்களும், ஒன்றோடு கலந்து மயக்கம் தர, திசை காக்கும் யானைகள் எட்டும் எவை? ஆதியான மலைகள் எவை எவை? என வேற்றுமை கண்டறிய முடியாது போயிற்று.
குரத்து ரங்கமும் வெய்ய காலும்
மனத்தின் மையல் கொளுத்தவே
அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும்
நிகர்க்க யாரும் அயர்ப்பவே. 256
[குரம்=குளம்பு; துரங்கம்=குதிரை; கால்=காற்று; மையல்=மயக்கம்; அயர்ப்பு=மயக்கம்]
குதிரைகளின் கால்கள் எவை? காற்று எது? என அறிந்து கொள்ள இயலாதபடி மனத்துள் மயக்கம் உண்டாகும்படி அனைவரும் நெருங்கி வந்தனர். அரக்கர் யார்? நெருப்பு எது? எனத் தெரியாத மயக்கம் உண்டாகும்படி மனமும் தடுமாறியது.
மீதுபோம் நதியும் பதாகையும்
வேறு பட்டில விண்ணிலே
ஆதபத்ரமும் அண்ட கோளமும்
ஒத்து மம்மர் அளிக்கவே. 257
[பதாகை=கொடி; ஆதபத்ரம்= குடை; மம்மர்=மயக்கம்]
வானின் மீதுள்ள ஆகாய கங்கை நதியும், கொடிகளும், வேறுபாடு காண இயலாமல் எங்கும் நிறைந்திருந்தன. குடைகள் எவை? ஆகாயம் எது? எனவும் அறிய முடியவில்லை. இரண்டும் ஒன்று கலந்து பார்ப்பவரை மயங்க வைத்தன.
விட்ட கார்முகில் யாவை? யாவர்
சுரேசர் என்று வியக்கவே
இட்ட கார்முகம் யாவை? யாவை?
எடுத்த கார்முகம் என்னவே. 258
[கார்முகில்=மேகம்; சுரேசர்=இந்திரர்; கார்முகம்=வானவில்; கார்முகம்=இந்திர தனுசு]
ஏறிவந்த கார்மேகங்கள் யாவை? யார் அவர்களில் இந்திரர் என வியப்பு தோன்றும்படியும், வானவில் எது? அவற்றில் இந்திர தனுசு எது? என இனம் காண இயலாதபடிக்கும் பலர் வந்தனர்.மேகம் என்பது இந்திரனுக்கு வாகனமாகும்.
====================================================================================
அலம் கையிற் படைஉடைய நம்பியொடு
அதிர்பயோதி அனையதோர்
இலங்கு எயிற்று அயிராபதத் தொடு
கடிது வந்தனன் இந்திரன். 259
[அலம்=கலப்பை; நம்பி=இளையவன்; அதிர்=ஒலி; பயோத்தி=பாற்கடல்; அனைய=போன்ற; எயிறு=தந்தம்; கடிது=விரைந்து]
கலப்பையைக் கையில் ஏந்திய பலராமனைப் போலவும், ஒலிக்கும் பாற்கடலைப் போலவும், உள்ள தந்தங்கள் உடைய வெண்ணிறமான ஐராவதம் என்னும் யானை மீதேறி விரைவாக இந்திரன் தன் தம்பி உபேந்திரனுடன் வந்தான்.
மைந்தரான சுரேச ரோடுஅசு
ரேசர் முன்வர மதிமருண்டு
அந்த ணாளனும் மலரில் வந்தனன்
முனிவர் தன்புடை ஆகவே. 260
[சுரேசர்=தேவர்; அசுரேசர்=அரக்க்ர்; மதி=புத்தி; அந்தணாளன்=பிரமன்; புடை=பக்கமாக[
தேவர்களும் அசுரர்களும் முன்னமே வந்திருக்க, புத்தி தடுமாறிய பிரமன் தன் வாகனமாகிய அன்னத்தை விட்டுவிட்டு தாமரை மலர் ஆசனத்துடனேயே முனிவர் பலர் சூழ வந்தான்.
- சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…
- தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்
- பூராம் கவிதைகள்
- முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?
- உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.
- எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்
- கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!
- ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !
- மனிதர்களுக்கு மரணமில்லை