வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்

author
1
0 minutes, 11 seconds Read
This entry is part 7 of 9 in the series 18 ஏப்ரல் 2021

இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை … எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்
பார்த்திருக்கிறார் ஜனநேசன்.

சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை இருட்டில் குப்பை திரட்டிப் போடும் வேலை பார்க்கிறவனுக்கு ஒருநாள் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைத்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மகிழ்ச்சிக்குப் பதில் கவலையையும் கலவரத்தையும் அளித்ததைக் ‘காரணம் அறிகிலார்’ என்ற தலைப்பில் கதையாக்கியுள்ளார் ஜனநேசன்.  பண மதிப்பிழப்பால் பலவற்றை இழந்தவர்களின் சோகத்தையும் கோபத்தையும் போகிற போக்கில் சொல்லிச் சென்றாலும் அதனை வண்ணம் குழைத்துத் தீட்டியிருந்தால், அவர்களில் ஒருவரின் பாட்டைக் கதையாக்கியிருந்தால் ஒரு வாசகக் கிளர்ச்சி கிடைத்திருக்குமே என்று இந்தக் கதை தோற்றுவிப்பதைத்  தவிர்க்க முடியவில்லை.

அப்படியே, காதலர் தினத்தன்று பொங்கி எழும் பண்பாட்டுக் காவலர்களுக்குப் பதில் சொல் லும் விதமாக ‘ஐந்தறிவு’ என்று ஒரு கதை எழுதியுள்ளார் அவர். அக் கதையில், பாம்புகள் எதிரிகளாக இருந்தாலும் அவை புணையலில்- காமக் கூடலில்  இருக்கும்போது மயில்களோ, கினிக் கோழிகளோ, வான்கோழிகளோ பாம்புகளைத் தாக்குவதில்லை என்று ஒரு செய்தியை ஒரு பூங்கா காவலாளி வழி ஜனநேசன் சொல்கிறார். சுற்றி வளைத்து இந்தப் பகுதிக்குக் கதையை வளர்த்து வருவதற்குப் பதிலாக மயில், வான் கோழி, கினிக் கோழிகளின் கதையாகவே படைத்து உணர்த்தியிருக்கலாமே என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆயினும், சாரைப்பாம்பும் நாகப் பாம்பும் கூடுவதைப் பார்த்தவன், “பாம்புக இனம் விட்டு இனம் கூடுமா?” என்று கேட்ட கேள்விக்குக் காவலாளி, “அது என்ன மனுஷனா சாதியைக் கட்டி அழுக!”  என்று பதில் சொல்வது வாசக மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஐந்தறிவு உயிரிகளைப் பற்றிய ஆறறிவுடைய பூங்காக் காவலாளியைப் போன்றவர்தான் விலங்குகள் காப்பகத்தில் சிங்கங்களையும் புலிகளையும் பதினைந்தாண்டுகளாகப் பரமாரித்து வரும் சுப்பையா. சிங்கம், புலிகளைத் தன் அன்பால் கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் கண்ணில் புலி நகம் படக் காரணமாகிறது மாட்டிறைச்சி அரசியல். பிசிறின்றி இந்தக் கதை செதுக்கப்பட்டிருந்தாலும் மாட்டிறைச்சி கிடைக்காததால்தான் சுப்பையாவின் கண்ணில் புலி நகக் கீறலால் காயம் பட்டது என்பதைக் கதை ஆரம்பித்திலேயே சொல்லாமல் சஸ்பென்ஸ்ஸாக வைத்திருக்க வேண்டாமே என்றும் தோன்றியது. அதைத் தொடக்கத்திலேயே அம்பலப் படுத்தியிருந்தாலும்கூட ‘உயிரை வளர்த்தல்’ என்ற கதை நெஞ்சுக்கு நெருக்கமானதாகவே நின்றிருக்கும்.

தகவல் தொடர்புத் துறை ஊழியர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பண்பாட்டுச் சிக்கல்களைக் ‘கரையேறுதல்’ என்ற கதையும் ‘சுட்ட தங்கம்’ என்ற கதையும் பேசுகின்றன. ஜனநேசனின் உலகம் பரந்தது என்பதற்கு இந்தக் கதைகளின் களங்கள் சாட்சியமாகின்றன;  அங்கு உலவிடும் மனிதர்களும் சாட்சியம் பகர்கின்றனர்.

‘கரையேறுதல்’ கதையில் பாத்திரங்களுக்குப் பெயரிடாமல் அவன், இவன், அவன், இவள் என்றே கதையை அவர் நடத்தும் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது.

‘சுட்ட தங்க’த்தின் செய்தியை – அதி நவீனமான விமானத் தளத்தில் சுங்கத்துறை அதிகாரி, துபையில் ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளம் வாங்கும் தம்பதியர் என்ற மாந்தர்களை வைத்துச் சொன்ன செய்தியை –  பழி தீர்த்துக் கொள்ள வாய்ப்பிருந்தும் அந்த எண்ணத்தை உதறிவிட்டு நன்னயம் செய்திடும் அதே செய்தியைப் பிணவறையில் பிணங்களைத் தைத்துக் கொடுக்கும் – முன்னாள் விவசாயியாக இருந்து  – தோட்டித் தொழிலாளியானவரின் கதையான ‘ஒறுத்தலு’ ம் சொல்கிறது.  இந்தக் கதைகளில் மனித மனங்களில் ஏற்படும் இயல்பான பழி வாங்கும் உணர்ச்சியிலிருந்து அவர்கள் அடுத்த உயரிய நிலைக்கு வளர்வதைக் கச்சிதமாக ஜன நேசன் சொல்லியிருக்கிறார்.

இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘தொப்புள் கொடி உறவு’ என்ற கதை மிகச் சிறப்பானது என்று சொல்லலாம்.  காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காகத் தன் அக்காளை – ஆபத்து என்ற போது தஞ்சம் கேட்டு எந்த அக்காளிடம் ஓடினானோ அந்த அக்காளைப் புறக்கணிக்கும் ஒரு தம்பியின் வீட்டிற்கு அம்மா இறந்த போது கணவனோடு சென்று அவமதிக்கப்பட்ட அந்த அக்கா, அப்பா இறந்த செய்தி கேட்டுச் செல்கிறாள்.  அப்போது அந்த அக்காளின் மகள் இந்து, ‘மெல்லப் போய் கல்லாய் நிற்கும் அவனது வலது கையைப் பிடித்து இழுத்து “நீங்கதான் வெங்கடேஷ் மாமாவா..” என்று கேட்கும்போது தம்பி “மூசுமூசு வென்று  விம்மியபடி அவளை அணைத்துக் கொள்வதும், இந்து, ” என்னை மாதிரி அந்தப் போட்டோவில் இருப்பது லட்சுமி பாட்டியா” என்று கேட்டவுடன் உடைந்துபோய் அவளைத் தூக்கிய  மாமன்காரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்ததாக ஜனநேசன் தீட்டுகிற பாசப் பெருக்கே –  சாதி, மதம் என்ற சருகுக் குப்பைகளால் மறைக்கப்பட்டிருந்தாலும் உள்ளுக்குள் களங்கப்படாது இதய ஊற்றிலிருந்து பொங்கிவழியும் பாசப்பெருக்கே அந்தக் கதையை மிகச் சிறந்ததாக்குகிறது.

‘காரணம் அறிகிலார்’, ‘மானுட சமுத்திரம்’, ‘பிறிதின் நோய்’, ‘சுட்ட தங்கம்’, ‘ஒறுத்தல்’ என்ற தலைப்புகள் பாரதி, பாரதிதாசன், வள்ளுவர் போன்ற இலக்கிய ஆளுமைகள் ஜனநேசனிடம் செலுத்தும் செல்வாக்கைக் காட்டுகின்றன என்றால் அவரது கதைகளில் பல இடங்களில் வரும் கவித்துவ மின்னல் தெறிப்புகள் கண்ணைப் பறிக்கின்றன.

“பாலைவன மணல்வெளியில் காற்று வீசி வீசி வரிவரியாய் மணல் படிந்திருப்பது போல் காலம் வரைந்த முதுமைக் கோலத்தின் வரிகள்  உடல்முழுதும்!  காற்றில் ஆடும் தளர்வான சட்டை போல் தளர்ந்தாடும் தோல். சுண்டக் காய்ச்சிய பாலை இழை இழையாய்த் திரித்தது போல் தலை முடி. சுரங்கத்துக்குள் மின்னும் வைங்கள் போல் குழிந்த கண்கள்!” இது ஒரு சோற்றுப் பதம்.
*

* காரணம் அறிகிலார்* *ஜனநேசன்* * பாரதி புத்தகாலயம்* *விலை ₹135/-* 
 
 
 
Series Navigationஉடுமலை நாராயண கவி இலக்கிய விருதுஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    எனது நூலுக்கு திரு.சந்திரகாந்தன் எழுதிய மதிப்புரை வெளியிட்ட திண்ணை இணைய இதழ் ஆசிரியர்குழு நண்பர்களுக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *