கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி

This entry is part 2 of 20 in the series 23 மே 2021

 

 

சுப்ரபாரதி மணியன்

கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என் கவனத்தில் வந்தன .எதார்த்தமான அனுபவங்கள், வட்டார மொழியில் சொல்வது, பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றிய வித்தை இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, அந்த காலகட்டத்தில் ஜெயந்தன், கி ராஜநாராயணன் இருவரும் என் உரைநடையின் முன்னோடிகளாக அமைந்தார்கள் ,.தொடர்ந்து அவரின் படைப்புகளை வாசித்து வந்தேன்

என் முதல் சிறுகதை தொகுப்பை அவருக்கு அனுப்பி வைத்தேன். “அப்பா “ என்ற சிறுகதை தொகுப்பு பற்றி அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ” உங்கள் சிறுகதைகள் பெரும்பாலும் குடும்பத்தில் உங்களின் அனுபவங்களாய் அமைந்திருக்கின்றன. சுய அனுபவங்களை கதைகளாக எழுதுவது சிறந்த வித்தை. சிறந்த படைப்பு .ஆனால் அதை மீறி மற்றவர்களின் அனுபவங்களை வசீகரித்துக் கொண்டு எழுதுவது உங்களின் படைப்பு எல்லையை விரிவாக்கும் .

இந்த தொகுப்பில் சுஜாதா முன்னுரை சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் அவர் இந்த தொகுப்பில் இருக்கும் ” ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் ”என்ற சிறுகதை, சிறுகதை வடிவத்தில் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். வழக்கமான  வடிவத்தை மீறி செயல்படுவதால் எழுத்து புதுப் படைப்பாகும் .கலை என்பதே வடிவத்தை மீறுவதாகும். அந்த மீறல் அந்த சிறுகதைகள் இருக்கிறது. சுஜாதா அந்தக்கதையை ஏதோ அசைவம் சாப்பிடுவது, கோழிக்கறி சாப்பிடுவது போன்ற விஷயங்களின் தொகுப்பாக தான் பார்த்திருக்கிறார் .ஆனால் அதை மீறி அந்த இனக்குழு சார்ந்த உணவு பழக்கவழக்கங்கள்,  கலாச்சாரம் இவையெல்லாம் அதில் இருப்பதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். கலை என்பதும் இலக்கிய படைப்பு என்பதும் வடிவத்தையும் மரபையும் மீறுதலே ”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 2002 இல் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”ஆண்டுதோறும் என் பிறந்தநாள் அன்று ஒரு சிற்றிதழுக்கு பரிசு தொகை வழங்கி  கௌரவிப்பது வழக்கம் இந்தாண்டு தாங்கள் நடத்திவரும் கனவு இதழுக்கு  கரிசல்  கட்டளை விருது அளிக்கிறோம் ”  என்ற தகவலை தெரிவித்து இருந்தார்.  நான் அந்த விழாவின் பொருட்டு  பாண்டிச்சேரி சென்ற  போது அவரை முதன் முறையாக சந்தித்தேன் .

” கரிசல் கட்டளை விருது ”  விழாவிற்கு முதல் நாள் இரவு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  பல்வேறு விசாரிப்புகள் என் படைப்புகளைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள். கனவு இதழ் தொடக்கம் பற்றி பேசுங்கள் என்று சொன்னார். கேட்டுக்கொண்டார்

  உங்கள் வீட்டு மொழி  என்ன 

 கன்னடம் 

அப்படி என்றால் அது தானே தாய் மொழி

இல்லை நான் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில் தான். தமிழ் தான் படித்தேன்

வீட்டில் பேசுவது தானே தாய் மொழி

இல்லை . அது வீட்டு மொழி .தாய் மொழி தமிழ் என்றேன்

அது பற்றி சிறு சிறு சர்ச்சைகள்.உரையாடல்கள்

சரி.. தமிழ்தான்  தாய் மொழி என்பது பற்றிய உங்கள் தீர்மானம் நல்லதே என்றார்.

அவர் அறிந்த கன்னட நண்பர்கள், அவர்களின் வீட்டுச்சூழல் மற்றும் கன்னட  மொழி சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரின் தாய்மொழியான தெலுங்கு பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றியும் அவருடைய படைப்புகளில் தெலுங்கு மக்களுடைய நிலையைப் பற்றி சொல்லி இருப்பதை நினைவுபடுத்தினார் .தொடர்ந்த அவரின் பேச்சில் தெலுங்கு மொழி சார்ந்த ஈடுபாடும் அந்த சாதி சார்ந்த அபிமானமும் தென்பட்டது .

அடுத்த நாள் அவர்கள் வீட்டு மாடியில் ”கரிசல் கட்டளை விருது ”கனவு இதழுக்கு  வழங்கப்பட்டது. பாண்டிச்சேரியின் முக்கிய எழுத்தாளர்கள்  கலந்து கொண்டார்கள் .அப்போது அவர் சிறுபத்திரிக்கை என்பது அவரின் படைப்புகளின் பெரிய கலங்கரை விளக்கம் ஆகும் . ஏணியாகவும் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். அவரின் படைப்புகள் சிற்றிதழ்களில் வந்தே கவனம் பெற்றதைச் சொன்னார்.கனவு இதழின் செயல்பாடுகள் பற்றியும்  பாராட்டினார்

 அதன் பின்னால் பாண்டிச்சேரிக்கு செல்கிறபோது அவ்வப்போது அவரை சென்று சந்தித்தேன். அவருக்கு எழுத்தாளர்களுடன் உரையாடலும் அதற்கான சூழலும் அக்கறையும் மகிழ்ச்சி தந்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.

 மூன்று மாதங்களுக்கு முன்னாள் நண்பர் யுகபாரதியின் வீட்டு திருமணத்திற்கு பாண்டிச்சேரி சென்று நண்பர் பாரதி வசந்தன் அவர்களுடன்  அவர் வீட்டை தேடி புறப்பட்டோம். அவர் மருத்துவமனையில் 15 நாட்களுக்கு மேலாக இருக்கிறார் ஆனால் இப்போது வீடு திரும்பி இருப்பார் என்ற நண்பர் ஒருவரின் தகவலோடு லாஸ்பேட் சென்றோம். பாரதி வசந்தன் அந்த பகுதிக்கு சமீபமாய் செல்லாததால் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அதே பகுதியைச் சார்ந்த இரண்டு இளம்பெண்களிடம் எழுத்தாளர் பற்றி சொன்னோம் ,அவர்களுக்கு தெரியவில்லை என்றார்கள்.பிறகு நாங்களே வீட்டை கண்டுபிடித்து அவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்டோம். நான் கொண்டு சென்ற புத்தகங்களை அவர் வீட்டுக்குள் போட்டுவிட்டு ஒரு கடித குறிப்பையும் இணைத்து விட்டு திரும்பினோம் .அப்போது நாங்கள் ராஜநாராயணன் என்ற எழுத்தாளர் வீடு என்று கேட்டு விசாரித்து அந்த இரு இளம்பெண்கள் தென்பட்டார்கள்.

தாத்தான்னு சொல்லிருந்தா எல்லாருக்குமே தெரியுமே .எங்களுக்கு எல்லாம் அவர்  தாத்தாதான் என்று அந்த பெண்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

 எழுத்தாளர்களுக்கு அவர்  நைனா, அண்ணாச்சி,  அப்பா.. இந்த இளம் பெண்களுக்கு அவர் தாத்தாவாக இருந்திருக்கிறார் .இதுபோன்ற  நேசம் , அன்புப்பிணைப்பு சார்ந்த உறவுகளை அவர் எல்லோரிடமும் வைத்திருந்தார் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன்

 இந்த நேசத்தை அவரை சந்திக்கும் போதெல்லாம் நானும் உணர்ந்திருக்கிறேன் அந்த உணர்வை மறுபடியும் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நூறு ஆண்டுகள் இருந்து ஞானபீடம், நோபல் பரிசு போன்ற விருதுகளுடன் அவர் வாழ்க்கை நிறைவு பெற்றிருக்க  வேண்டும் என்று திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொள்கிறதுAR T

( AGS ( கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் ஐயா கி. ராஜநாராயணன் அவர்களுக்காக BSNL தமிழருவி குழு நண்பர்கள் இணையவழி புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசியது )

 

 

 

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *