அப்பாவிடம் ஒரு கேள்வி

This entry is part 3 of 23 in the series 6 ஜூன் 2021

ஜோதிர்லதா கிரிஜா

 

(தினமணி கதிர் 5.7.1998 இதழில் வந்தது. ‘வாழ்வே தவமாக…’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

 

      இரவெல்லாம் சரியாகத் தூங்காததில் தீபாவின் கண்கள் சிவந்து கிடந்தன. முகம் கன்றி யிருந்தது. தலையைத் தாழ்த்தியவாறே, காலைக்கடன்களை முடீக்கப் பின்கட்டுக்கு மெதுவாக நடந்து சென்ற அவளது முதுகுப்புறம் பார்த்துப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவுமே தன்னால் செய்ய இயலாது என்று எண்ணியவளாய் அவளைத் தன் பார்வையாலேயே பின்பற்றிய காமாட்சி இரண்டாவதாக ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டுக் குழம்புக்குப் புளி கரைக்கும் அலுவலில் ஈடுபட்டாள்.

      இருபது ஆண்டுகளாய்க் கணவனும் மனைவியுமாய் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தம்பதி நாலு பேருக்கு முன்னால் மட்டுமே பேசிக்கொண்டனர் என்றும் தனியாக இருந்த நேரங்களில் எதிரும் புதிருமாய் வளைய வந்தனர் என்றும் எந்தக் கதையிலாவது வந்தால் வாசகர்கள் நம்புவார்களா என்கிற கேள்வி மேசை மீது பக்கங்கள் படபடக்கக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு வார இதழைப் பார்த்ததும் அவளுக்குத் தோன்றியது.

      திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் வரையில் அவர்களது வாழ்க்கை சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மனத்துள் ஆயிரம் வேதனைகள் இருந்த போதிலும் திருமணம் என்கிற ஒன்று ஆகிவிட்ட நிலையில் காமாட்சி தன் பழைய காதல் பற்றிய ஞாபகங்களை அதன் ஒரு மூலையில் ஆழமாய்க் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள் என்பதும், கணவனுக்கு விசுவாசமாகத் தன் எண்ணங்கள் வாயிலாகக் கூட வாழ்ந்தாள் என்பதுமே உண்மைகள்.

      அக்கம் பக்கம் கவனிக்காமல் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் பேசக்கூடாது என்பதைப் பயங்கரமான முறையில் உணர்த்திய அந்த உரையாடலால்தான் சாம்பமூர்த்திக்கு அவளது கடந்த காலத்துக் காதல் விவகாரம் பற்றித் தெரிந்து போய்விட்டது. தீபாவுக்கு ஒரு வயது ஆன பிறகு அவளைக் காண வந்திருந்த அவள் அம்மா, ‘அந்தப் பிள்ளைக்குப் போன மாசம் கல்யாணம் ஆச்சுடி. உன்னோட ஞாபகத்துல வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சின்டிருந்த அவனும் ஒரு வழியாச் சம்மதிச்சு அவனோட கல்யாணமும் நடந்து முடிஞ்சுடுத்து.  ஒரு பெரிய பாரம் இறங்கித்துடியம்மா!  அவனால உன்னோட குடும்ப வாழ்க்கை பாழாயிடுமோன்னு வயித்துல நெருப்பைன்னா கட்டின்டிருந்தோம் உங்கப்பாவும் நானும்!  உங்க வீட்டுக்காரர் கிட்ட வந்து ஒரு கசப்பில என்னத்தையானும் சொல்லி உன்னோட வாழ்க்கையைக் கெடுத்துடப் போரறானேன்னு எங்க ரெண்டு பேருக்கும் எம்புட்டுக் கவலையா யிருந்தது! ஒரு வழியா இப்பதான் நிம்மதியாச்சு…’

      ஆனால், அந்தக் கணத்திலிருந்து காமாட்சியின் நிம்மதி பறிபோய் விட்டது. கடைக்குப் போயிருந்த சாம்பமூர்த்தி பணப்பையை மறந்துவிட்டதால் அதை எடுக்கவந்த நேரத்தில் தாயும் மகளும் பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்துவிட்டது. அன்றிலிருந்து பிடித்தது அவக்கேடு.

      இது போன்ற நேரங்களில் ஓர் ஆண் கேட்கும் வழக்கமான கேள்விகள், விடுக்கும் சொல்லம்புகள், பெண்ணின் விளக்கங்கள், கண்ணீர் ஆகியவை தொடர்ந்தன. திருமணத்துக்கு முன்னால் தான் உடல் ரீதியாக எந்தத் தப்பும் செய்யவில்லை என்பதால் தான் தூய்மையானவளே என்கிற அவளது வாதம் சாம்பமூர்த்தியிடம் எடுபடவில்லை. 

       வாய் கூசாமல், ‘உங்கப்பாவும் அம்மாவும் சேர்ந்துக்கிட்டு என் தலையில ஒரு எச்சில் பண்டத்தைக் கட்டிட்டாங்க’ என்றான். அது மட்டுமா?

       ‘இத பாருடி. இன்னையிலேர்ந்து நீயும் நானும் மனசொப்பின புருசனும் பொஞ்சாதியுமா வாழ முடியாது. உம்மேல நான் எம்புட்டு நம்பிக்கை வெச்சிருந்தேன்! கல்யாணம்னு ஒண்ணு நமக்குள்ள ஆகிறதுக்கு முந்தி, ஒரு கடுதாசி மூலமா, இப்படி இப்படி விஷயம்கிறதை நீ எனக்குத் தெரிவிச்சு, அதனால பரவாயில்லியான்னு கேட்டிருந்தியானா, நான் உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டிருந்திருப்பேன்.  இப்படி உண்மையை மறைச்சு எனக்குத் துரோகம் பண்ணிட்டியேடி? நாலு பேருக்கு முன்னாடி நான் உன்னய அவமானப்படுத்த மாட்டேன். அப்ப எல்லாப் புருஷன்மாரையும் போல உன்னோட பேசுவேன். அவசியத்துக்கும் பேசுவேன். மத்தப்பபடி இனி மனசு ஒட்டாத வாழ்க்கைதான்! நீ இனி எனக்கு ஒரு தாசி மட்டுந்தான்!’

      அந்தக் கடைசி வாக்கியத்தை மட்டும் அவளால் தாங்கவே முடியாது போயிற்று. அவன் மனம் தன்னுடையதுடன் ஒட்டாத நிலையில் தான் அதற்குத் தயாராக இல்லை என்று அவளால் சொல்ல முடியவில்லை. அவன் தன்னைத் துரத்தியடிக்காமல் அந்த மட்டும் உடன் வைத்துக்கொள்ள முன் வந்ததே பெரிய காரியம் என்றுதான் அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றியது.

       தீபாவுக்குப் பிறகு அவளுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை.

      … தன் அம்மாவும் அப்பாவும் எல்லாக் கணவன் – மனைவியரையும் போல் இயல்பாகப் பேசிப் பழகுவதில்லை, புன்னகைப் பரிமாற்றம் கூடச் செய்துகொள்ளாமல் இறுகிய முகங்களுடன் வளைய வருகிறார்கள் என்பதால் விவரம் தெரிகிற வயதில் வியப்புற்ற தீபா ஒரு நாள் காமாட்சியிடம் அது பற்றிக் கேட்டுவிட, அவள் தன் கடந்த காலம் பற்றிச் சொல்ல வேண்டியதாயிற்று. 

       ‘தீபா!  எங்க தெருவில நாலு வீடு தள்ளி கிருஷ்ணன்னு ஒருத்தரு இருந்தாரு. அவருக்கு என்னயக் கல்யாணம் கட்டணும்னு. நானும் சம்மதிச்சிருந்தேன்..  வீட்டில எனக்கு வரன் பார்க்கத் தொடங்கினப்ப, உண்மையைச் சொல்லிட்டேன். எங்கப்பா என்னய ரூம்ல போட்டுப் பூட்டி வெச்சாரு.  ஏன்னா, அந்தாளுக்குப் பெரிய உத்தியோகம் இல்லே. உங்க தாத்தா-பாட்டியோட அந்தஸ்துக்குச் சரியானவங்களா அவரோட பெத்தவங்க இல்லைன்றதும் இன்னொரு காரணம்.  அந்தாளு உங்க தாத்தாவைச் சந்திச்சு, ‘காமாட்சிக்குக் கட்டாயக் கல்யாணம் பண்ணி வெச்சீங்கன்னா நான் சும்மாயிருக்க மாட்டேன்.  அவ புருசனைச் சந்திச்சு எல்லாத்தையும் சொல்லிடுவேன்’னு  மிரட்டினாரு. ஆனா உங்க தாத்தா அதுக்கெல்லாம் மசியல்லே. ‘அப்படி ஏதாச்சும் செஞ்சியானா, உங்க கம்பெனி முதலாளி கிட்ட சொல்லி உன்னய வேலையை விட்டே எடுக்க வைப்பேன்’னு தானும் பதிலுக்கு மிரட்டினாரு. அந்த மிரட்டலுக்குப் பயந்தோ இல்லாட்டி நிஜமாவே நல்ல குணத்துனாலயோ அந்தாளு அதுக்கு அப்பால என்னோட வழிக்கே வரல்லே….’ என்று விவரமாக மகளிடம் கூறிய காமாட்சி சாம்பமூர்த்திக்கு எவ்வாறு அந்த விஷயம் தெரிய நேர்ந்தது என்பதையும் தெரிவித்தாள்.

       கணவனுக்கும் தனக்குமிடையே நடந்த உரையாடலையும் விவரம் தெரிந்த மகளிடம் காமாட்சி அப்படியே சொல்லிவிட்டாள்.

       “அப்படியா சொன்னாரு அப்பா?” என்று தீபா மாய்ந்து போனாள்.

       இப்போது, தாயுடையது போன்றே மகளின் காதல் விவகாரம். … சாம்பமூர்த்திக்குப் பிடிக்காத உறவு.  காமாட்சியின் தந்தையைப் போன்றே இவரும் எழுத்தனாகவும்  நடுத்தரக் குடும்பத்தைச்  சேர்ந்தவனாகவும் தன் மருமகன்  இருப்பதை அங்கீகரிக்கவில்லை. மனிதர்கள் ஏன் தான் இப்படிப் பணம், பதவி, அந்தஸ்து என்று பறக்கிறார்களோ என்று காமாட்சி  நினைத்தாள். ஆனால் தனது நினைப்பைக் கணவனிடம் சொல்ல முடியாமல் தவித்தாள்.

       பல் விளக்கிவிட்டு வந்த தீபாவிடம்  காபிக் கோப்பையைத் தந்துகொண்டே அவள் தன் ஆழ்ந்த பார்வையை அவள் மீது செலுத்தினாள்.

       “தீபா! உங்கப்பாவுடைய பிடிவாதம் தெரியுமில்ல? என்னம்மா பண்றது? நாமெல்லாம் வெறும் அடிமைங்கதான்! பெத்தவங்க குழந்தைகளை நிறைய குடும்பங்கள்லே வெறும் உடைமைகளாத்தான் – ஒரு நாற்காலி, மேஜை, தவலை இது மாதிரி – நினைக்கிறாங்க! அவங்களுக்கும் மனசுங்கிற ஒண்ணு இருக்கும்கிற நெனப்பே அவங்களுக்குக் கிடையாதும்மா. என்ன பண்றது? இப்ப நானில்லையா? எனக்கும் ஆரம்பத்துல வேதனையாத்தான் இருந்திச்சு. அப்பால, நமக்கு விதிச்சது இதுதான்னு சமாதானமாயிட்டேம்மா! நம்மால வேறென்ன பண்ண முடியும்? சொல்லு…”

       தீபா கலங்கிய விழிகளுடன் காபியைப் பருகி முடித்துவிட்டுக் கோப்பையை முற்றத்தில் போட்டாள்…

       …  சாம்பமூர்த்தி தமது அலுவலகத்தில் மிகவும் வேலையாக இருந்தார். மறு நாளுக்குள் தில்லிக்கு அனுப்பவேண்டிய அட்டவணைகள் இன்னும் தயாராகவில்லை. ‘எல்லாரும் சம்பளத்தை எண்ணிப் பாக்கறாங்களே தவிர, நாம ஒழுங்கா வேலை செய்யிறமாங்கிறதை எண்ணிப் பார்க்கிறதே இல்லே’ என்று தமக்குள் முனகியபடி முக்கியமான ஒரு தொலைப்பேசி அழைப்பைச் செய்வதற்காக அதன் இலக்கங்களை இயக்க முற்பட்டார்.

       ‘சார்! உங்களுக்கு ஒரு ரெஜிஸ்டர் வந்திருக்குது,” என்ற தபால்காரரின் குரல் அவரது வேலையிலும் சிந்தனையிலும் குறுக்கிட, அவர் திரும்பிப்பார்த்தார்.

       “பி.ஏ. இல்லியாப்பா? அவர்கிட்ட குடுங்களேன்,”

       “கவருக்கு வெளியே பெர்சனல்னு போட்டிருக்குது, சார். அதனால அவர் உங்களாண்டையே குடுக்கச் சொன்னாரு.”

       அவர் ஒலிவாங்கியைக் கிடத்திவிட்டு, வியப்புடன் அதைப் பெற்றுக்கொண்டார். உறைக்கு வெளியே அனுப்புநரின் பெயரும் முகவரியும் இருந்தன.

       ‘தீபா … சுருக்கெழுத்தாளர்… இந்தியன் வங்கி…’

       அவர் படபடக்கும் இதயத்துடன் உறையைப் பிரிக்கலானார்.

கடிதத்தைத் தாம் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் உள்ளே யாரும் வந்துவிடலாகாது என்பதற்காக அவர் சிவப்பு விளக்குப் பொத்தானை அழுத்திவிட்டுக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானார்.

       ‘அன்புள்ள அப்பா அவர்களுக்கு.

       தீபாவின் வணக்கங்கள். நேரில் உங்களிடம் சொல்ல முடியாத விஷயங்களையும் கேட்க முடியாத கேள்வியையும் இந்தக் கடிதத்தில் எழுதுகிறேன்.

       அப்பா! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பி நேசித்ததில்லை என்று நினைக்கிறேன். நேசித்திருப்பின், என் உணர்ச்சிகள் உங்களுக்குப் புரியும். அல்லது, அந்த வயதைக் கடந்துவிட்டதால், எல்லாம் கல்யாணம் ஆனால் சரியாய்ப் போய்விடும்’ என்கிற ”விவேகம்” உங்களுக்கும் வந்துவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.

        அம்மாவும் நீங்களும் மற்ற கணவன் மனைவியரைப் போல் சகஜமாய்ப் பேசிப் பழகுவதில்லை என்பது எனக்கு விவரம் தெரியவந்த நேரத்தில் நெஞ்சில் நெருட, நான் அம்மாவிடம்  அதுபற்றிக் கேட்டேன். அம்மா தனது பழைய காதல் கதை பற்றிக் கூறினார். பாட்டியும் அம்மாவும் அது பற்றிப் பேசிக்கொண்டிருந்தது உங்கள் காதில் விழுந்ததால் அது பற்றி அறிய நேர்ந்த நீங்கள் அம்மாவிடம் கேட்டது, அம்மா சொன்னது எல்லாவற்றையும் அம்மா தெரிவித்தார்.

       அப்பா!  திருமணத்துக்கு முந்திய விவகாரங்களை – அவை மிக மோசமானவை என்பதாய்த் தெரிய வந்தாலொழிய – ஆணோ பெண்ணோ கிளறக்கூடாது என்பது ஒரு நாகரிகம்.  திருமணத்துக்குப் பிறகு ஒருவர்க்கொருவர் விசுவாசமாக நடக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அதன்படி பார்த்தால் அம்மாவின் மீது உங்களுக்கு வந்த ஆத்திரம் நியாயமற்றது.

       சரி. கேட்டது கேட்டீர்கள்.  அது பற்றிப் பரவாயில்லை. ஆனால், அம்மாவின் ஏலாமையை ஒரு புரிநிதுணர்வோடு அணுகாமல் நீங்கள் நடந்துகொண்ட முறை சரிதானா என்று என்றைக்காவது நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? பெற்றோரால் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட பெண் என்ன செய்திருக்க முடியும்? அன்று அம்மா இருந்த நிலையில்தான் இன்று நான் உள்ளேன் என்பதையாவது நீங்கள் எண்ணிப் பார்த்தீர்களா?

        சரி. என்னை வற்புறுத்திக் கட்டிக்கொடுத்து அனுப்பியும் வைத்து விடுகிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுவோம். எப்படியோ என் கணவருக்கு என் கடந்த காலக் காதல் விவகாரம் தெரிந்து விட்டது என்றும் வைத்துக் கொள்ளுவோம். அந்த ஆள் என் இறந்த காலத்தைப் பொருட்படுத்தாது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுவார் என்பது என்ன நிச்சயம்?                                                                                                

       அப்பா! அன்று நீங்கள் அம்மாவிடம் கூறிய அதே சொற்களை – ‘இனி மனசு ஒட்டாத வாழ்க்கைதான்! இனிமேற்பட்டு நீ எனக்கு ஒரு தாசி மட்டுந்தான்’ என்று அந்த மனிதரும் – என்னிடம் – அதாவது உங்கள் மகளிடம் – கூறினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் இப்படி எனது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்பீர்களா அப்பா?

       அத்தகைய ஆபாசச் சொற்கள் என்னை என்ன பாடு படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் சகித்து வந்துள்ளாரோ!

       நீங்களாவது அம்மாவை நாலு பேருக்கு முன்னால் அவமானப்படுத்தாமல் தனிமையில் அவமானப்படுத்தினீர்கள். நீங்கள் ஏற்பாடு செய்யும் அந்த மனிதன் ஒரேயடியாய் என்னைத் திருப்பி அனுப்பியும் விடக்கூடும் தானே!

       இவற்றையெல்லாம் நன்றாக அலசி, யோசித்துப் பார்த்தீர்களாயின், இப்படி உங்கள் மகளின் வாழ்வு பாழாவதற்கான சாத்தியக்கூற்றுக்கு நீங்களே அடிகோல மாட்டீர்கள்.

அன்புடன்,

தீபா.’

      சாம்பமூர்த்தியின் புருவங்கள் ஏறி இறங்கின.  அவர் தீபாவை அவளது அலுவலகத்தில் கூப்பிட்டுப் பேசத் தொலைப்பேசியின் இலக்கங்களைச் சுழற்றலானார்.

Series Navigationபூடகமாகச் சொல்வதுசெயற்கைச் சிடுக்கு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *