வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 17 of 23 in the series 6 ஜூன் 2021

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி மூன்றாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)

                   
 
 வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்  
மு. முருகேஷ், வந்தவாசி, தமிழ்நாடு.
 
‘வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்து, பரந்து விரிந்த உலகினைப் பார்த்து எழுதுவது புதினம். வீட்டின் சாளரத்தின் வழியாக வெளியே நடப்பதைப் பார்த்து எழுதுவது சிறுகதை’ என்பார் கவிஞரும் திறனாய்வாளருமான பேராசிரியர் பாலா.
 
    எவ்வளவு சத்தியமான உண்மையிது; விரிந்த தளத்தில் வாழ்வின் பல்வேறு சிக்கல்களைப் பற்றி விஸ்தாரமாக விவாதத்தைத் தூண்டுவதுபோல் எழுதுவதற்கு புதினம் கைகொடுக்கும். ஆனால், பத்துப் பனிரெண்டு பக்கங்களுக்குள் எழுதப்படும் சிறுகதையானது வாழ்வின் ஏதாவதொரு நிகழ்வைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்து, அதன் வழியே நம் சிந்தனைக்குள் சில கேள்விகளை எழுப்பிட முடியும். அப்படியான கேள்விகளை எழுப்பும் கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன்.
    கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். ‘தமிழ்ச் சிறுகதையின் கம்பீர முகம்’ என்றறியப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொடங்கி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட தமிழ்ச் சிறுகதை ஆளுமைகளின் ஏராளமான கதைகளை வாசித்திருக்கின்றேன். இன்றைக்கு எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து வருகின்றேன். பெரும்பாலும் வார, மாத இதழ்களில் வெளியாகும் கதைகளை விடவும், ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு நூலாகப் படிப்பதில் பெருவிருப்பம் கொண்டவன் நான். காரணம், அப்போதுதான் ஒரு எழுத்தாளரின் சிறுகதை நடையையும், அந்த எழுத்தாளனது உள்ளக்கிடக்கினையும் ஒருசேர அறிந்துகொள்ள முடியும். மேலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என புலம்பெயர் தமிழர்களின் சிறுகதைகளும் என் வாசிப்புக்கு நெருக்கமானவை. என் நூலகத்தில் நான் சேர்த்து வைத்திருக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களில் கவிதை நூல்களுக்கு அடுத்தப்படியாகச் சிறுகதை நூல்களே அதிகம் இடம் பிடித்திருக்கின்றன.
   ‘இனிய நந்தவனம்’ இதழின் வழியேதான், குரு அரவிந்தன் எனும் பெயர் எனக்கு முதல் அறிமுகம். கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ‘தங்கையின் அழகிய சினேகிதி’ (இனிய நந்தவனம் வெளியீடு – ஜூலை -2020) எனும் அவரது சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கடந்த வாரத்தின் ஓர் இரவில் 2 மணி நேரத்திலும், மறுநாள் காலையில் 2 மணி நேரத்திலும் இந்தச் சிறுகதை நூலை வாசித்து முடித்தேன்.
     மொத்தமுள்ள 16 கதைகளையும் 4 மணி நேரத்தில் படித்து முடித்திருந்தாலும்கூட, கதைகளை வாசித்து நான்கு நாள்களைக் கடந்த பின்னும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளில் பேசப்பட்ட சமூக அக்கறையுடன் கூடிய கேள்விகள் எனக்குள் தொக்கி நிற்கின்றன. என் அன்றாட செயல்களின் ஒவ்வொரு நொடியிலும் குரு அரவிந்தனின் கதைகளின் பேசுபொருளும் கதாமாந்தர்களின் அறிவார்ந்த உரையாடலும்,  அதைவிட்டு விலகமுடியாமல் மீண்டும் மீண்டும் உள்ளெழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்; இந்நூலைப் படித்ததும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் முன்னிருக்கை வாசகனாகிப் போனேன் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
 
   இந்தத் தொகுப்பிலுள்ள 16 சிறுகதைகளுமே எனக்குப் பிடித்தமான கதைகளாக இருந்த போதிலும், பக்க அளவு கருதி, விதிமுறைப்படி இந்தத் தொகுப்பிலுள்ள 4 சிறுகதைகளைப் பற்றி மட்டுமே எனது திறனாய்வுக்காக எடுத்துக்கொண்டுள்ளேன்.
   நூலின் முதல் கதையே எனது திறானாய்விற்குமான முதல் கதையாகவும் அமைகிறது. சிறுகதை நூலின் தலைப்புக் கதையை நூலின் முதல் கதையாக அல்லது நூலின் கடைசிக் கதையாக வைப்பதே சிறப்பான தொகுப்புக்கான அடையாளம் என்பேன். அப்போதுதான் வாசக மனதில் அந்தக் கதையின் தலைப்போடு சேர்ந்து, நூலின் தலைப்பும் அழுத்தமாக மனதில் பதியும். ‘சிறுகதையின் ஆன்மாவை வழித்து, நெற்றியில் இடப்படும் திலகம்தான் கதைக்கான தலைப்பு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது, எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைத் தலைப்புகளுக்கு வெகு பொருத்தமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ நூலின் முதல் கதையெ, நூலின் தலைப்புக்கான கதையுமாகி, கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
    தன் தங்கையைப் பார்க்க வீட்டிற்கு வரும் சினேகிதியின் அழகில் மயங்கும் ஒரு சராசரி இளைஞனின் காதல் கதை இது என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாத வகையில், இந்தக் கதையின் போக்கும், கதையின் முடிப்பும் வாசகனை வெகுவாக யோசிக்க வைத்துவிடுகிறது.
   கதையோட்டம் அபாரம். ஒவ்வொரு கதையும் தொடங்குவது மட்டுமே தெரிகிறது. முடிந்த பிறகுதான் நம்மால் சுயநினைவுக்கு வருவதுபோல் கதையோடு ஒன்றிப்போய் விட வைக்கிறார் எழுத்தாளர் குரு அரவிந்தன். சரசரவென வேகமாகக் கதை நம்மை இழுத்துக்க்கொண்டு போகிறது. அடுத்து என்ன நடக்குமோ… என்கிற எதிர்பார்ப்போடு கூடவே சேர்ந்து போகிறோம். இல்லையில்லை… தொடர்ந்து படிக்கிறோம். கதையை வாசித்து முடிக்கையில், நம் மனதில் ஆழமான வருத்தமொன்று கவிழ்ந்துகொள்கிறது. அதென்ன முடிவு..? நீங்களும் அந்தக் கதையைப் படியுங்கள். (முடிவை இப்போதே நான் சொல்லிவிட்டால், உங்களின் வாசிப்பு சுவாரசியம் தடைபடுமன்றோ..!).
   ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தாலும், ‘எலியும் பூனையுமாக’ இருந்தால், ஒவ்வொருவரின் மனதிலும் வேறு வேறு மாதிரியான எண்ணங்களும் செயல்பாடுகளும் அமையுமென்பதை மிக நுட்பமான பார்வையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தச் சிறுகதையில் வரும் எந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் (அம்மாஇ அண்ணன், தங்கை, சினேகிதி) கதாசிரியர் பெயர் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்ததா, இல்லை கதாசிரியர் திட்டமிட்டுச் செய்தாரா என்பதை நாம் அறியோம். ஆனால், பெயரில்லாத இடங்களில் இந்தக் கதையைப் படிக்கும் வாசகன் தன் பெயரினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் செய்கை நிகழ்வதற்கான வாய்ப்பினை இதன் வழியே வழங்குகிற அந்த உத்தியை வெகுவாகப் பாராட்டுகின்றேன்.
    தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையை உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும், வாசிப்பவர் மனதில் பெரிய அளவிலான தாக்கத்தினை இந்தக் கதை நிச்சயம் ஏற்படுத்தும். அத்தகைய வல்லமைமிக்க கதைக்கரு கொண்ட மிகநுட்பமான பார்வையில் எழுதப்பட்ட கதையாக இந்தக் கதையைப் பார்க்கின்றேன்.
    ஒவ்வொரு இன மக்களின் மனதிலும் அவரவர் பண்பாடு குறித்த உயரிய எண்ணங்களும், அவை தலைமுறைகள் கடந்தும் தொடர வேண்டுமென்கிற விருப்பமும் இருப்பது இயல்பே. ஆனால், ‘வலித்தாலும் காதலே..!’ கதையின் நாயகி, காதலனின் அழைப்பையேற்று கனடாவிற்கு வந்து படிக்கிறாள். அங்குள்ள கலாச்சார முறைகளைப் பார்க்கிறாள். மன மாற்றம் உண்டாகிறது.
     அவளது காதலன் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறபோது, “தாலி கட்டப் போறீங்களா, என்ன நாய்க்குக் கழுத்திலே பட்டிகட்டுற மாதிரியோ?’ என்று கேட்கிறாள். ‘என்னாயிற்று… இவளுக்கு?’ என்று திகைத்துப் போகிறான் காதலன்.
    தாலி கட்ட வேண்டாமென்று மறுத்த காதலியிடம், ‘உன்னுடைய இந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. உன்னோட ஒரு ரூம்மேட் போல வாழ்வதிலும் எனக்கு இஷ்டமில்லை’ என்று மறுதலிக்கின்றான்.
    ‘அப்போ தாலி கட்டிக்கொண்டு ஒரு அடிமை போல உங்கட தயவில நான் இங்கே வாழவேணும் என்று எதிர்பார்க்கிறீங்களோ?’ என்று அவள் கேட்கிற கேள்வி, இன்றைக்கு பெண்ணியத்தைக் கையிலெடுத்திருக்கும் இளைய தலைமுறை பெண்களின் கேள்வியாக எழுகிறது.
     பிறகு, இருவருமே மனமொத்து, தாலி கட்டிக்கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள். காதலனின் இனத்தவரின் திருமண வீட்டிற்குச் சென்று திரும்பியதும், அவளது மனதிலொரு மாற்றம் நிகழ்கிறது.
    ‘காலம் போனாலும் பரவாயில்லை. ஏதாவது கோயில்லை என்றாலும் எனக்குத் தாலி கட்டிவிடுங்கோ’ என்கிறாள்.
   அவளது இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்தில் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு என்ன மாதிரியான சமூக மரியாதை கிடைக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. பெண் உளவியல் சார்ந்த இந்தக் கதை, ஒரு ஆண் எழுத்தாளரால், பெண்ணின் மன உலகிற்குள் சென்றும் எழுத முடியுமென்பதை மிகக் காத்திரமாக மெய்ப்பித்துள்ளது.
    மூன்றாவது கதை ‘காதல் போயின் சாய்தல்..!’
    தமிழ்க் கலாச்சாரத்தில் பிறந்த அவள், கனடிய கலாச்சாரத்தில் பிறந்தவனைக் காதலித்து, கணவனாகக் கரம் பிடிக்கிறாள். தேன் நிலவு, விடுமுறை என நாள்கள் கடக்க, மணமான ஆறாவது மாதத்தில் கணவனான அன்றூவின் பிறந்த நாள் வருகிறது. அன்றூ இருப்பது ரொறன்ரோவில்.
     அடிக்கடி வெளியிடங்களுக்குப் பயணம்போகும் அவள், அப்போதும் வெளியிலிருக்கிறாள். பொஸ்டனிலிருந்து அதிரடியாக விமானம் பிடித்து, ரொறன்ரோ வருகிறாள்.
    பியர்சன் விமான நிலையத்தில் அவள் வந்திறங்கியபோது நள்ளிரவு 12 மணி. வாடகை வண்டி ஒன்றினைப் பிடித்துஇ வீட்டிற்கு வருகிறாள். தன்னிடமிருக்கும் சாவியைக்கொண்டு, வீட்டின் கதவை மெதுவாகத் திறந்து, விளக்கைப் போடாமலேயே படுக்கை அறைக்குள் நுழைகிறாள்.  கதையைப் படிக்கிற நமக்கோ ‘திக்… திக்’ என்று மனம் அடித்துக்கொள்கிறது.
   தனது காதல் கணவனுக்குத் திருமணமான பிறகு வருகிற முதல் பிறந்த  நாளில், இன்ப அதிர்ச்சியைத் தர திட்டமிட்டு, ஆவலோடு வந்தவளுக்கு காத்திருந்தது இன்னொரு பெரிய அதிர்ச்சி.
   குறட்டை விட்டு உறங்கும் கணவனின் போர்வைக்குள்  அவனை அணைத்தபடி இன்னொரு உருவம். எதிர்பாராத பேரதிர்ச்சி அடைகிறாள்.
‘அன்றூ ஓரினச் சேர்க்கையாளனா..?’ அவளால் நம்ப முடியவில்லை. உடம்பெல்லாம் வியர்க்க, வந்த சுவடு தெரியாமல் பிறந்த வீட்டிற்குப் பெட்டியோடு வருகிறாள்.
    மகளின் வருகை கண்டு பெற்றோர் அதிர்ந்தாலும், அவளை வரவேற்கின்றனர். அம்மாவிடம் நடந்தவற்றைப் பகிர்கிறாள். ‘உனக்கான முடிவை நீயே தேடிக்கொள்’ என்கிறாள் அம்மா.
    மனம் பதறாமல் நிதானமாக யோசிக்கிறாள். ‘ஆத்திரத்தில் கையை விட்டால், அண்டாவிற்குள்ளும் கை நுழையாது’ என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றெண்ணி, மன அமைதியடைகிறாள்.
    ஒருபாற் சேர்க்கை என்பது கனடிய மண்ணில் ஒன்றும் தவறானதில்லை. சிகரெட் பிடிப்பதுபோல, மது அருந்துவதுபோல இதுவும் இளமையில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம் என்கிற புரிதலுக்கு வருகிறாள். ஆனாலும், அவன் ஒன்றும் ஆண்மை குறைந்தவனல்ல என்பதையும் அவனது மனைவியாக அவளறிவாள். இப்போது என்ன செய்யலாம்? ‘அன்றூவோட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை இத்தோடு போதுமென விவாகரத்து கோரலாமா?’ வேண்டாமென்கிற முடிவுக்கு வருகிறாள்.
   ‘காதல் போயிற் சாதல் அல்ல சாய்தல்’ என மகாகவி பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் புது முடிவு ஒன்றினை எடுக்கிறாள். ‘இனிமேல் அன்றூவை தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். முதலில் அவனிடம் அப்படியான தொடர்புகளை வைத்திருக்கும் கூட்டாளிகளை வெட்டிவிட வேண்டும். பிறகுஇ கவனமாகச் செயல்பட்டால் அதைச் சரிசெய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையோடு, மீண்டும் பியர்சன் விமான நிலையத்திற்குச் செல்கிறாள்.
    இன்றைய இளைய தலைமுறை பெண்கள் முடிவெடுப்பதில் எப்படி உறுதியாகவும் திடமாகவும் இருக்கிறார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், எதிர்கால வாழ்க்கையைக் கவனத்தில் கொண்டு, மிகச் சரியான முடிவை எடுப்பதில் தெளிவானவர்கள் என்பதை மிக நேர்த்தியாக இந்தக் கதையில் பகிர்ந்துள்ளார் குரு அரவிந்தன்.
   மனக் குழப்பத்திலிருக்கும் எவரும் இந்தக் கதையைப் படித்தால், குழப்பத்திலிருந்து தெளிவைப் பெறலாம். எதிர்காலத்தைச் சிதைக்கா வண்ணம் சரியான முடிவெடுக்க வேண்டுமென்பதற்கான வழியினை காட்டும் சுடரொளியென இந்தக் கதை நம்மை வழி நடத்திப் போகிறது. இந்தக் கதையைப் படிப்பவர் வேறொரு எழுத்தாளனின் வாசகனாக இருந்தாலும், இந்தக் கதையினூடாகத் தனக்கான வாசகனாக அவரைத் தன்பக்கம் சாய்த்து, சாதித்து விடுகிறார் குரு அரவிந்தன்.  
   நான்காவதான கதை ‘அவள் வருவாளா?’ இந்த நூலின் நிறைவுக் கதை. ஒரு நூலின் முதல் கதையும் நிறைவுக் கதையும் சிறந்த கதையாக அமையுமானால், அந்த நூல் வாசக மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்வது நிச்சயம் என்பார்கள். அப்படியான தேர்ந்த கதையாக இந்நூலின் நிறைவுக் கதையும் இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
   ‘குடும்பச் சண்டைகள் நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டியவை’ என்பது தமிழ் மக்களின் வாழ்வியலில் சொல்லப்படாத நீதி. ‘எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். குறுக்கால நீ ஏன் மூக்கை நீட்டுறே?’ என்று கணவன் – மனைவி சண்டைக்குள் நுழைபவரைப் பார்த்துக் கேட்பதை இன்றும் தமிழ்க் குடும்பங்களில் காண முடிகிறது. அப்படியான ஒரு வாழ்முறையைக் கொண்ட தமிழ்க் குடும்பமொன்று கனடிய நாட்டில் வாழ்கிறது.
    கணவன் – மனைவிக்கான காரசாரமான உரையாடல் வலுக்கவே, ஒரு கட்டத்தில் மனைவியை அடிக்க கையோங்கி விடுகின்றான் கணவன். மனைவி படித்தவளாயிற்றே… சும்மா விடுவாளா?
செல்பேசி வழி சினேகிதிக்கு உடனே இதனைப் பகிர்கிறாள்.
   ‘அடிக்கிற கணவனிடத்தில் வாழாதே. ம்… கிளம்பு’ என்கிறாள் தோழி. தன் குழந்தையோடு தனியாக வாழச் செல்கிறாள். மனைவியோடு சேர்ந்துவாழ ஆசைப்படுகிறான் கணவன். ஆனாலும், சுற்றிருப்பவர்கள் இவர்களைச் சேர்ந்துவாழ விடுவதாகயில்லை.
    ‘ஒரு பொம்பிளைக்கு இவ்வளவு திமிர் எண்டால் நீ ஏன் அடங்கிப் போக வேணும்? நீ பேசாமல்  இரு. இவையெல்லாம் பட்டுத்தெளிய வேணும்’ என்கிறார்கள்.
    இருவர் பேசித் தீர்த்துக்கொள்ளும் சிறுசிறு சண்டைகளுக்குள்ளும் மூன்றாம் நபர் நுழைந்தால், நூலிழைச் சிக்கல் கூட நூலாம்படைச் சிக்கலைப்போல பெரிதாகிவிடுமென்பது இவர்களது வாழ்க்கையிலும் உண்மையாகிறது.
    ஒரு நாள், எதிரே தன் மனைவியைச் சந்திக்கும் கணவன், ‘ஐயாம் சாரி’ என்கிறான்.
    ‘ஏன் மன்னிச்சுடு என்று சொல்ல மாட்டீங்களோ, பெரிய மானஸ்தன்’ என்கிறாள் மனைவி.
    இந்த உரையாடலில் தமிழர்களின் மனச் சிக்கலையும், காலங்காலமாகத் தமிழர்கள் மொழி குறித்து கொண்டுள்ள எண்ணத்தையும் நம்முன்னே விவாதமாக்கியுள்ளார் எழுத்தாளர் குரு அரவிந்தன். அதையும் கதைக்குள் துறுத்திக்கொண்டிருக்காமல், கதையின் இயல்பான போக்கிலேயே பேச வைத்து, நம்மையும் ‘ஆமாம்’ என ஏற்க வைத்துள்ளதும் கதாசிரியனுக்கு மட்டுமே வாய்த்த சவாலான பணி. அதை மிகத் திறம்பட இந்தக் கதையில் கையாண்டுள்ளார் கதாசிரியர் குரு அரவிந்தன்.
     வாய்க்கூசாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘சாரி’ கேட்கும் தமிழர்களான நாம், ஏனோ ‘மன்னிப்பு’ என்று நம் தாய்மொழியில் கேட்கத் தயங்கவே செய்கிறோம். இதுதான் ஒருவனது தாய்மொழி, அவனது மனதோடு எவ்விதம் இணக்கமான உறவைக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்வதாகும். அந்நிய மொழியில் கேட்கும் ‘சாரி’ என்பதை வெறும் வார்த்தையாக மட்டும் கருதும் ஒருவன், அவனது தாய்மொழியில், அதனையே ‘மன்னிப்பு’ என்று கேட்கையில் தனக்கான தன்மானக் குறைவாகக் கருதுகின்றான். இந்த உளவியல்ரீதியான சிக்கலை ஒரு சிறிய உரையாடலின் வழி விவாதமாக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன்இ தமிழ்ச் சிறுகதையாளர்களில் போற்றுதலுக்குரிய உயர்ந்த இடத்தைப் பிடிப்பது இந்த இடத்தில்தான்.
    கணவன் – மனைவி சண்டை என்பதாக மட்டுமே இந்தக் கதை சுருங்கிவிடாமல், நவீன காலப் பெண்வாதப் போக்கையும் இந்தக் கதை மெல்லக் குட்டுகிறது. கதையின் முடிப்பு படிக்கும் எவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
   கணவன் – மனைவிக்குள் விழுந்த சிறுகீறலைப் பெரிய இடைவெளியாக்கி, இருவரையும் பிரித்த சினேகிதி கேட்கிறாள். ‘இவனெல்லாம் ஒரு ஆம்பிளையா, உன்னைக் கைநீட்டி அடிச்சவன்ரி.’
இதற்கு அவள் சொன்ன பதில்தான் இந்தக் கதையின் உச்சம்.
  ‘இல்லை. ஆத்திரத்தில் நான்தான் முதல்ல அவரை அடிச்சனான். அதுக்குத்தான் அவர் கையோங்கினவர்.’
   அப்படியானால், கணவன் அடிக்கத்தான் கையோங்கினான். அடிக்கவில்லை; உண்மையில் அடித்தவள் மனைவிதான்!
    ‘மாறும் என்ற விதியைத் தவிர மற்றதெல்லாம் மாறும்’ எனும் சமூக நியதியின்படி, இப்படியான மாற்றங்களும் இன்றைய சமூகத்தில், முக்கியமாக புலம்பெயர்ந்த சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்த ஒரு கதையின் வழியே பட்டவர்த்தமாகப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் குரு அரவிந்தன்.
     ‘சிறுகதை உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் ரஷ்ய எழுத்தாளர் ஆண்டென் செகாவ், ‘கதைகளில் மனித மனங்களிலுள்ள உண்மைகள் பேசப்பட வேண்டும். அந்த உண்மையின் பேரொளியே வாசக மனதிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்’ என்றார். அப்படியான ஒரு சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள் இருக்கின்றன.    
    எழுத்தாளர் குரு அரவிந்தனின் இதில் உள்ள கதைகள் அனைத்துமே காதல் கதைகளாக என்றாலும், காதல் எனும் மையப்புள்ளியில் நின்றுகொண்டு, முதல் பார்வையிலேயே தூண்டப்படும் ஆண்-பெண் எதிர்பாலின கவர்ச்சியை, மனித உடலின்பத்தை, ஓரினச் சேர்க்கையை, பெண் சமத்துவத்தை, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் சமூகத் தேவையை என அனைத்தையும் பேசுகின்றன என்பதே எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள், இளையோர்களுக்கு மட்டுமின்றி, மூத்தோர்களும் விரும்பிப் படிக்க காரணமாகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சின்னச் சின்னப் பத்திகளில் ஓடும் நதியின் வேகத்தோடு நம்மை அழைத்துச்செல்லும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் விறுவிறுப்பான மொழிநடை. ஆகா… அற்புதம். உங்களின் வாசகன் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமையடைகின்றேன். வாழ்த்துகள்… எழுத்தாளரே.
                                                                     
 உசாத்துணை:
தங்கையின் அழகிய சினேகிதி – இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி
                                                                      0 0 0
 
………………………………………………………………………………..
 
     (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி நான்காவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)
                   
குரு அரவிந்தனின் சிறுகதைகளில் நவீன பெண் பாத்திரங்களின் வகிபாகம்
பெ. ஸ்ரீகந்தநேசன், யாழ்ப்பாணம், இலங்கை.
 
முகவுரை:-
 
தமிழ்ப் புனைகதை இலக்கிய உலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பதித்து வருபவர் குரு அரவிந்தன், ஆவார். இவரது சிறுகதைகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. சிறுகதைகளில் வலம் வரும் பாத்திரங்களில் பெண் பாத்திரங்கள் தனி இடம் பெறுகின்றன. இலக்கிய வடிவங்களில் இன்று வரை மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டு – நேசிக்கப்பட்டு – வருவது சிறுகதை இலக்கியம் ஆகும்.
பல்துறை ஆளுமையை உடைய குரு அரவிந்தன் அவர்களின் ஆனந்தவிகடனில் வெளிவந்த, ‘இதுதான் பாசம் என்பதா?’, ‘ரோசக்காரி’, ‘தொடாதே…’, ‘சார்…ஐலவ்யூ’, ஆகிய சிறுகதைகளில் பெண் பாத்திரங்கள் முறையே, திருமணத்தின் போது பெண்ணின் மனநிலை, நவீன யுகத்தில் பெண்ணுரிமை, வாழ்வியலில் ஏமாற்றம் அடையும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள், இளம் தாயின் மன அழுத்தத்தை புரிந்து நடந்து கொள்ளும் மகள் முதலிய கருப்பொருள்களைப் பெண் விடுதலை – சுதந்திரம் – உரிமை – நோக்கில் சமூக யதார்த்தமாக பெண் பாத்திரங்களின் வகிபாகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவ் வகிபாகங்களை உள்ளடக்க ரீதியாக சமூகவியல் அடிப்படையில் இவ் ஆய்வுக் கட்டுரையானது நோக்கும்.
 
தொடருரை:-
 
ஆசிரியர் தொழில் செய்யும் சீதாவிற்கு, கல்லூhயில் படிக்கும் அவளின் தம்பி, வயதுக்கு வந்த தங்கை, அந்திம காலத்தை அண்மித்த தந்தை ஆகியோரைக் கொண்ட குடும்பத்தின், பொருளாதாரம் அவளின் ஆசிரிய தொழில் வருமானத்திலையே ஓடியது. பக்கத்தூரில் வாழும் ஆசிரியன் ஒருவர், சீதாவை தமது உறவினர்களுடன், பெண்பார்க்க வந்து, எந்த விதமான காரணத்தையும் குறிப்பிடாமல் அவளைத் தனக்குத் திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பம் இல்லை எனக் கூறி, அவளது மனத்தைப் புண்படுத்துவதாக இச் சிறுகதை நவோடை உத்தியில் நகர்கின்றது. எதிர்பாராத விதமாக புகையிரத வண்டியில் ஆசிரியையும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் பரஸ்பரம் மனம் திறந்து உரையாடும் போது, ஆசிரியன், அவள் மீதுள்ள விருப்பத்தைக் கூறி, நீங்கள் முறைப்பையனை விரும்புவதாகவும் என்னை நிராகரிக்கும் படி கடிதத்தில் எழுதியிருந்தீர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, கடிதத்தைக் காட்டினார். அதைப் பார்த்து திகைத்துப் போனாள். இது என்னுடைய கையொப்பம் அல்ல என்று மறுத்தாள். மீண்டும் அந்த ஆசிரியர் சீதாவின் வீட்டுக்குக் முகூர்த்தம் குறிக்க வந்தார். பெரிதாக அவர் சீர்களை எதிர்பார்க்காமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக ஆசிரியனின் உறவினர்கள் கூறினார்கள். சீதாவின் தந்தை சம்மதம் சொல்ல முற்ட்ட போது, சீதா இந்த கலியாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை; தனக்கு தற்போது கலியாணத்திற்கு அவசியமில்லை என உறுதியாகச் சொல்லி, தந்தை, தாய் இல்லாத குறையே தெரியாமல் எங்களை அவர் வளர்த்திருப்பதாகக் கூறி, இவ்வளவு காலமும்  தனியாக  குடும்ப சுமையைத் சுமந்ததாகவும் தானும் கொஞ்ச காலம் சுமையைச் சுமந்து அந்த குடும்ப பொறுப்பையெல்லாம் முடிச்சிட்டு, திருமணத்தைப் பற்றி யோசிப்போம். அப்பா அந்த குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுட்டுப் போக மாட்டன். தான் போய்விடுவேன் என்று எண்ணியே தந்தை கடிதம் எழுதி, தனது கையொப்பத்தைப் போட்டு அனுப்பியுள்ளதாகவும் தன்னுடைய உணர்ச்சிகளை எப்படியாவது அடக்கிக்கொள்ள முடியும். தான் திருமணமாகிப் போனால், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் வயிற்றுப் பசியைப் பொறுக்க முடியுமா? என்றவாறு அந்தக் கடிதத்தைக் கிழித்தெறிந்தாள். ‘மனத்தில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது’ என ஆசிரியர் இச் சிறுகதையை நிறைவு செய்துள்ளார்.
  இச் சிறுகதை ஓட்டத்தில் பெண்ணின் மனநிலை திடீர் முடிவெடுத்து விட்டு பின்னர் நிதானித்து முடிவெடுப்தை ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், சீதாவின் “பெரிய சுமை குறைந்தது போல இருந்தது”, “மனத்தில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது” என இரண்டு இடங்களில் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டியுள்ளார். பெரிய சுமை என்பது ஆடவர்கள்  தன்னை வெறுக்கவில்லை. அது வரை தன்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் ஏதாவது காரணத்தைக் கூறி மறுப்பதையும் சமூகம் அதுவரை தன்னுடைய பெண்மையைக் கிண்டல் செய்தமையையும் தவிடுபொடியாக்கியமையும் காட்டுகின்றது. மனத்தில் இருந்த சுமை குறைந்தது என்பது தன்னுடைய பாலியல் உணர்வுகளை தன்னால், கட்டுப்படுத்த முடியும் எனவும் குடும்பச் சுமையைக் கொஞ்சக் காலம் அவள் சுமப்பதாகவும் பின்னர் திருமணம் புரிவதாகவும் கூறிய மனத்தைரியத்தைக் காட்டுகின்றது.
சிறுகதையில் வரும் சீதா நவீன பெண்ணினத்தின் பண்பாடு, கலாசாரம் நிறைந்த பாத்திரமாக சிறுகதை ஆசிரியர் காட்டியிருப்பது, அவரது சமூகத்தின் உண்மையான – நேர்மையான – நேர்த்தியான –  துல்லியமான – பார்வையைக் காட்டுகின்றது. தமது உடன் பிறப்புக்களுக்கு வாழ்க்கை என்னும் பாதையில் ஒளியைக் காட்டிவிட்டு தன்னுடைய வாழ்வில் திருமண வாழ்வைத் தொடரவுள்ளதாக ஆசிரியர் காட்டுவது, பெண்களின் உழைப்பால் பொருளாதாரம் நிறைவடைவதைக் காட்டுகின்றது. தன்னுடைய உடலியல் தேவைக்காக, சிறுவர்கள், முதியோர் ஆகியோரைப் பரிதவிக் விடாத பெண்ணாக சீதா வலம் வருகின்றாள். பெண்ணின் திருமணத்தைப் பழைய காலத்தில்  அவளின் அழகும் பருவமுமே தீர்மானித்தன. ஆனால்,  இன்றைய தொழிநுட்ப உலகில் பொருளாதாரம், கல்வி, தொழில், சூழல், தங்கி வாழ்வோர் எனப் பல காரணங்கள் தீர்மானிப்பதாக இச் சிறுகதையில் காட்டியுளளார்.
‘ரோசக்காரி’ – சிறுகதையில் வலம் வரும் சுபத்திரா என்னும் பாத்திரம் ‘எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங்’ சிறப்புப் பாடமாகக் கல்விக் கற்றவள். சுரேஷ் என்பவனைத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் சென்று, அவள், கணவனுக்கு உணவு சமைப்பதையே தனது பிரதான தொழிலாகக் கொண்டு அடுக்களையில் முடங்கி கிடந்தாள். பொருளாதரத்தில் எந்த சிக்கலும் இல்லாத அந்த குடும்பத்தில் சுபத்தரா வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு படித்த பெண்ணின் அறிவு, ஆற்றல், திறமை எல்லாம் வீணாகப் போவதை எண்ணி சுரேஷ் எத்தனையோ தடைவ வேலைக்குப் போகச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. இறுதியாக சுபத்தராவின் மாமாவின் திட்டத்தின் படி, அவளுக்கு ரோசம் வரும் அளவுக்கு சுரேஷ் நடந்து, அவளைத் திட்டித்தீர்த்தான். அதனால், ரோசக்காரியான சுபத்திரா இறுதியாக படித்த படிப்பிற்கேற்ற வேலையில் இணைகின்றாள். தன்னுடைய தந்தையின் மூலம், கணவன் சுரேஷ் நல்வர் என்பதையும் தனது திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்காகவும் நாட்டினுடைய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான், நாடு பொருளாதாரத்தில்  வளர்ச்சியடையும் முதலிய நோக்கங்களுக்காகவே என்னை வேலைக்குப் போக சொல்லியிக்கிறார். என்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக இந்த சிறுகதை  நிறைவு பெறுகின்றது.
‘ரோசக்காரி’ இல் வரும் பிரதான பெண் பாத்திரம் சுபத்தரா துணைப் பாத்திரம் அவளின் தாய் ஆகிய இருவரும் அங்கம் வகித்த போதும் சுபத்தரா என்ற பாத்திரமே சிறுகதை முழுவதும் இழையோடியுள்ளது. எல்லாப் பெண்களையும் போல ஆரம்பத்தில் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும்’ புருஷன் என்று வாழ்ந்த சுபத்திரா, கணவன் வேண்டுமென்றே செய்த வெறுப்பான செயல்களினால், அவள் நல்ல வேலைக்குச் சென்றதும், அவ்வளவு காலம் வீட்டுக்குள் அடைப்பட்டுக் கிடந்து காலத்ததை வீணடித்து விட்டதையும் தன்னுடைய செயற்பாடுகளையும் எண்ணி வெட்கம் அடைகின்றாள் என ஆசிரியர் காட்டியுள்ளார். இதன் மூலம் சுபத்தரா நவீன யுகத்தில பெண்கள் உணவு சமைத்துப் போடுவதற்கு மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல ஏதாவது துறையில் சாதனையாளராக வர வேண்டும் என்பதைக் காட்டியுள்ளார். இச் சிறுகதையில் வரும் துணைப்பாத்திரமான சுபத்திராவின் தாய் மரபு ரீதியான பெண் அடக்கு முறையை பெண்களே பெண்கள் மீது திணிப்பதைக் கணலாம். இதனுடாக பெண்களின் மனநிலை மாற வேண்டும் என்னதை ஆசிரியர் காட்டியுள்ளார்.
குரு அரவிந்தனின், ‘தொடாதே…’ என்னும் சிறுகதையில் கிராமத்து இளைஞன் அறியாப் பருவத்தில் இருந்த மல்லிகாவை ஆசைக்காட்டி அவளுடைய கற்புடன் விளையாடி விட்டு ஊரை விட்டு ஓடி அமெரிக்காவில் குடியேறி சிறந்த ‘டெனிஷ்’ வீரனாகப் புகழ் பெற்று விளங்கினான். இருந்தும் அவனது திறமையின் வலைக்குள் பெண்கள் பலரைச் சிக்க வைத்து, அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் படலம் தொடர்ந்த வண்ணமே இருந்தது என இக் கதையில் காட்டியுள்ளார்.
பன்னிரண்டு வருடங்கள் அவனது நினைவாகவே வாழ்ந்த மல்லிகா, ஜாஸ்மீன் என்ற பெயரில் விளையர்ட்டு வீரனைச் சந்திக்கின்றாள். இவனது பார்வையில் மீண்டும் விழுந்த மல்லிகா தன்னை யாரெனக் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவோ தடுத்த போதும் அவளுடைய உடலைச் சுவைக்கின்றான். பின்னர் விளையாட்டு வீரனுக்கு அவள் யார்? என்ற விடயம் தெரியவருகின்றது. அவனுக்கு பெண்கள் மீது கொண்ட மோகமும் பெயர், புகழ், பணம் மீது கொண்ட ஆசையும் அவளை உதாசீனப்படுத்தின.
அவளின் உண்மையான காதலைக்கொச்சப்படுத்தினான். மல்லிகா விபத்தொன்றில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தவறுதலாக எயிட்ஸ் நோயாளியின் குருதி ஏற்றப்பட்ட விடயத்தையும் அந்த தவறுக்காக வைத்தியசாலை நிறுவாகம் தனக்கு ஒரு தொகை பணம் கொடுத்ததையும் கூறி, பணத்தினால், எல்லாவற்றையும் வாங்க முடியாது என்ற உண்மையையும் அவனுக்கு உணர்த்துவதாக கதை நகர்ந்து, அவன் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக நிறைவடைகின்றது.
இச் சிறுகதையின் மூலம் மல்லிகா என்ற பெண் பாத்திரத்தின் வாயிலாக அவர்களின் உண்iமையான காதலை வெளிப்படத்துவதுடன், அந்த இளைஞனால், சீரழிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவதையும் காட்டியுள்ளார். இரண்டாவது தடவையாக அவளுடைய கற்பைச் சூறையாடும் போது, அவள் தன்னை “தொடாதே…” என கூறுவதன் மூலம் தனக்கு ஏற்பட்ட கொடிய வியாதி அவனுக்கும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயற்பட்ட போதும். அவன், அவளைக் கதைக்க விடாமல், “ஜாஸ்மின் இந்த உதடுகள் பேசுவதற்கல்ல சுவைப்பதற்கோ” என்று ஆசை வார்த்தைகள் பேசி பெண்மையைத் தனது கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதாக ஆசிரியர் காட்டியுள்ளார். இவற்றின் மூலம் அவளின் உண்மைக் காதலையும் நல்லெண்ணத்தையும் காட்டியுள்ளார். அவன் எவற்றையும் பொருட்படுத்தாமல், கட்டாயத்துக்கு உட்படுத்தி புதிய சிக்கில்களை எதிர் கொள்கின்றான். இச் சிறுகதை ஆசிரியர், கணவன் அல்லது மனைவி, காதலன் அல்லது காதலி உயிரோடு இருக்கும் தறுவாயில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாம்பத்திய கலாசாரத்தைச் சுட்டிக்காட்டி, இதை மீறியதினாலையே இன்று மனித இனத்தை எயிட்ஸ் நோய் ஆட்கொண்டுள்ளதைக் காட்டியுள்ளார்.
‘சார்…ஐலவ்யூ’ என்ற சிறுகதையில் சுசீலா, சுசீலாவின் மகள் நிலா ஆகிய பெண் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, கதையை நகர்த்தியுள்ள போதிலும் இடையே ‘புரொபஸர்’ ராமநாதனின் மனைவியையும் அவரின் மகளையும் குறிப்பிட்டு பெண்களின் மனநிலையை ஒப்பீட்டு அடிப்படையில் காட்டியுள்ளார்.
முப்பத்தெட்டு வயதில் கணவனை இழந்த சுசீலா ஆசைகள், உணர்ச்சிகள், எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது மகள் நிலாவிற்காக வாழ்கின்றாள். அதனை உணர்ந்த மகள் நிலா, தனக்குப் பிரத்தியேகமாக கல்வி கற்பித்த ஓய்வு பெற்ற ‘புரொபஸர்’ ராமநாதன் அவர்களும்; தன்னுடைய தாயும் நெருங்கி பழகியதைச் சாதகமாக வைத்துக்கொண்டு, தான் ‘புரொப்பஸ’ரைக் காதலிப்பதாககக் கூறி, நாடகம் ஆடினாள். தாய், மகள் அப்பா இல்லால் வாழ்கின்றமையால்தான் தவறுதலாகச் சிந்திப்பதாக, எண்ணி ‘புரொபஸ’ரை மறுமணம் புரிகின்றாள். பின்னர் மகள் மகிழ்வடைகின்றாள். மூவரும் ஒன்றிணைந்து வாழ்வதாக இக் கதை நிறைவுபெறுகின்றது.
இச் சிறுகதை தபுதாரனும் விதவையும் மறுமணம் செய்வதை வலியுறுத்துகின்றது. ‘புரொபஸர்’, நிலாவிற்கு அந்த வயதில் காதல் ஏற்படுவது இயற்கையான இயல்பு அது போகப்போக சரியாகிவிடும் என்றும் சுசிலா, நிலாவிற்கு அப்பா இன்மையால்தான் பாசத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்து கொண்டாள் எனவும் இருவரும் தவறுதலாக நிலாவின் மீது கணிப்பீடு செய்வதைக் காணலாம்.
பெண் பிள்ளைகளின் ஆரோக்கியமான உளவியல் வளர்ச்சிக்கு பெற்றோரின் ஒற்றுமை தேவை என்பதை இக் கதையின் மூலம் வலியுறுத்தியுள்ளார். ‘புரொபஸ’ரின் மனைவி இறந்ததும் அவரின் மகள் தந்தையின் கண்டிப்பில் வாழ முடியாமல் தனக்குப் பிடித்தவனோடு,  வீட்டை விட்டு வெளியேறுவதையும் சுசீலாவின் மகள் தந்தை இல்லாமல் வளர்வதால், அவளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மன அழுத்தங்களையும் இதற்குச் சான்றுகளாகக் குறிப்பிடலாம். நிலா, தன்னுடைய தாய்க்குச் சிறந்த வரன் தேடி வைத்து மகிழ்ச்சி அடைவதும் ‘புரொபஸ’ரின் மகள் தன்னுடைய தந்தையைப் பரிதவிக்கவிட்டுச் செல்வதாகவும் காட்டப்பட்டிருப்பதன் ஊடாக, நிலாவின் வகிபாகம் தாயின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் ‘புரொபஸ’ரின் மகளின் வகிபாகம் தந்தையின் உணர்வை ஊதாசீனம் செய்யும் தன்மையும் வெளிப்படுத்தப்பதுகின்றன.
மிகவும் எளிமையான உரைநடையை உடைய இந்த சிறுகதைகளில் வரும் ஒவ்வொரு பெண் பாத்திரமும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் புதிய கோணத்தில் அணுகுவதைக் காணலாம். ‘இதுதான் பாசம் என்பதா..’ என்ற சிறுகதையில் வரும் சீதாவின் தந்தையால் தன்னுடைய திருமணம் தடைப்பட்ட போதும், கோபப்படாமல் சிந்தித்து முடிவெடுக்கின்றாள். ‘ரோசக்காரி’ என்ற சிறுகதையில் வரும் சுபத்திரா எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவளின் ஆற்றல், அறிவு, திறமைக்கு ஏற்ற தொழில் தீர்வாகக் காட்டப்பட்டுள்ளது. ‘தொடாதே…’ என்ற சிறுகதையில் வரும் மல்லிகா காதலனால் ஏமாற்றப்படுவதால், அவள் அவனைத் திருத்த முற்படுவதையும் அவன் திருந்தாத பட்சத்தில் அந்த ஏமாற்றம் தன்னுடன் முடியட்டும் என புரட்சிகரமாக சிந்திக்கும் பாத்திரமாக வலம் வருகின்றாள். ‘சார்…ஐலவ்யூ’ என்ற சிறுகதையில் வரும் நிலா தாய்க்குத் திருமணம் செய்து வைக்கும் புரட்சிகரமான பெண்ணாகக் காட்டப்பட்டுள்ளாள். இவ்வாறு இவரது சிறுகதைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளையும் முற்போக்கு அடிப்படையில் முன் வைத்திருப்பது, கதா ஆசிரியரின் தனியான ஆளுமைiயும் சமூக ஜதார்த்த பார்வையையும் காட்டுகின்றன.
பெண் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் ‘சமுதாய மதிப்புக்கள்’ என்ற வகையில் சிறுகதைகளில் வரும் பெண்பாத்திரங்கள் சமூக விழுமியம் அல்லது மதிப்பை வெளிக்காட்டுவனவாக திகழ்கின்றன. சமூக முழுமைக்கோ அதன் குறிப்பிட்ட ஒரு பிரிவு அல்லது வர்க்கத்திற்கோ உள்ள பொதுவான மனித நடத்தைகளின் நியதிகள் மற்றும் தரவுகளின் (சரடநள யனெ ளவயனெயசனள) தொகுதியே சமுதாய மதிப்புக்கள் ஆகும். இவ்வாறான மரபு ரீதியான சமூக மதிப்புக்களைக் காரண காரிய அடிப்படையில் மெதுவாக தகர்த்தெறிவதைக் காணலாம். குரு அரவிந்தன் உடன் பாடான சமூக மதிப்புக்களான:- ஆசை, உணர்ச்சி, காதல், பாசம், கௌரவம், திறமை, கற்பு, புகழ், பக்தி, தாய்மை, பெண்மை, தன்னம்பிக்கை ஆகியவற்றைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். எதிர் மறையான சமூக மதிப்புக்களான:- ஏமாற்றம், மோகம், கோபம், பொய்மை, தீமை, பாவசெயல், பித்தலாட்டம், மதிக்காமை, சீரழிவு, மதுவுக்கு அடிமை, ஆகியவற்றில் பெண் பாத்திரங்களை ஏற்றி அவர்களுக்குச் சார்பாக நீதியை நிலை நிறுத்துவதைக் காணலாம்.
குரு அரவிந்தன் தன்னுடைய சிறுகதைகளில் பெண்களின் ‘கற்பு நிலை’யை ஒவ்வொரு சிறுகதையிலும் ஒவ்வொரு கோணத்தில் கையாளுகின்றார். கற்பு என்னும் மதிப்பு காலந்தோறும் பல நிலைகளில் வழக்காறு பெற்று வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் பொதுவாக – வெளிப்படையாக – நடக்கும் திருமணத்தைக் குறித்தது. அதாவது, ஒத்திக்கு ஒருவனைக் குறிக்கும். பின்னர் சொத்துடைமையும் ஆணாதிக்கமும் கற்பு நிலைமையைத் தீர்மானித்தன. புதமைப்பித்தன் ‘பொன்னகரம்’ – சிறுகதையில் குறிப்பிடும் கற்பும் ஜெயகாந்தன் ‘அக்கினிப்பிரவேசம்’ ‘கற்பு நிலை’ – சிறுகதைகளில் குறிப்பிடும் கற்பும் குரு அரவிந்தன் ‘இதுதான் பாசம் என்பதா…’, ‘தொடாதே…’  முதலிய சிறுகதைகளில் குறிப்பிடும் ‘கற்பு’ பற்றிய நிலை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டது. அங்கு ஆடவருடன், பெண்கள் நேரடியாக உரையாடி தங்களுடைய வாழ்க்கையும் கற்பையும் தீர்மானிப்பதைக் காணலாம்.
 
முடிவுரை:-
இச் சிறுகதைகளின் மொழியமைப்பிலும் மற்றும் நிகழ்வுகளிலும் செய்திகளிலும் பிற கூறுகளிலும் பெண்களின் உளவியல் பிரதிப்பலிப்புக்களையே தேடுகின்றன. அது குரு அரவிந்தனின் தனித்துவமான இலக்கிய முதிர்ச்சியாகும். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட சிறுகதைகளில் குரு அரவிந்தன், நவீன பெண் பாத்திரங்களின் வகிபாகங்களை நேர்த்தியாகக் கையாண்டு, இன்றைய உலகில் தமிழப் பெண்கள் சர்வதேச அளவில் பல நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாண்டுள்ளார். நவீன பெண்கள் மன அழுத்தங்களை எவ்வாறு வெற்றிகரமாக கையாள்வதையும் அவற்றுக்கு கணவர், பெற்றோர், உறவினர் முதலியோர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் செயற்படுவதையும் காட்டியுள்ளார். சமுதாய மதிப்புக்களில் (ளழஉயைட எயடரநள) எதிர் மறையான மதிப்புக்களை நல்ல விடயங்கள் நடை பெற, இச் சிறுகதை ஆசிரியர் கையாண்டுள்ளார்;. அதன் மூலம் உலகத்தில் தீமையான விடயம் பெயரளவிலையே இருக்க வேண்டும் என்ற உன்னத நிலையைக் காட்டியுள்ளார். சான்றுகளாக, ‘சார்…ஐலவ்யூ’ – சிறுகதையில் வரும் மாணவி நிலா என்னும் பாத்திரம் தாயின் மன அழுத்தத்தைப் புரிந்து கொண்டு, தனக்குக் கல்வி கற்பிக்கும் ‘புரொபஸ’ரைக் காதலிப்பதாக நடிக்கவைத்துள்ளமையும் ‘ரோசக்காரி’ – சிறுகதையில் கணவன், மனைவியுடன் திட்டமிட்டு சண்டைப் பிடிப்பதையும் குறிப்பிடலாம்.
மொத்தத்தில் மிகவும் எளிமையான உரைநடை மூலம் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைப் புதிய கோணத்தில் அணுகித் தமிழ்ப் புனைகதை இலக்கிய உலகில் தனக்கென்று தனித்துவமான ஒரு இடத்தைக் குரு அரவிந்தன் பதித்து வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்திற்கே இடமில்லை.
முற்றும்.
மூல நூல்கள்
01) குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘இதுதான் பாசம் என்பதா?’
02) குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘ரோசக்காரி’
03)  குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘தொடாதே…’
04) குரு அரவிந்தன், ஆனந்தவிகடன், ‘சார்…ஐலவ்யூ’
அடிக்குறிப்புக்கள்
01) பெரியண்ணா, கோ. (2002), இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள், ஜோதி புக் செண்டர், சென்னை, இந்தியா. பக் – 102, 103.
02) ஸ்ரீகந்தநேசன்,பெ., (புயல்), (2018), போர்க்காலச் சிறுகதைகள், தாய்மொழிக் கலை மன்றம், வடக்கு மாகாணம், இலங்கை. பக் – 40, 41.
03) நடராசன்,தி.சு., (2006), திறனாய்வுக்கலை, சொந்தம் பிரிண்டர்ஸ், சென்னை, இந்தியா. பக் – 55,62,63
04) புதுமைப்பத்தன், புதுமைப்பித்தன் கதைகள், பொன்னகரம். (முழுத் தொகுப்பு)
05) ஜெயகாந்தன், சிறுகதைகள் – அக்கினிப் பிரவேசம், கற்பு நிலை.
………………………………………………………………….
 
 
     (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி ஐந்தாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)
 
குரு அரவிந்தனின்   நான்கு கதைகள்  …
ப. சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தமிழ்நாடு.
 
 குரு அரவிந்தனின்   நான்கு கதைகளை  தேர்வு செய்ய இணைய தளத்தைத் தேடியபோது எதேச்சையாகப் பட்ட நான்கு கதைகளை எடுத்துக்கொண்டேன் .அவை நான்கும் வெகுஜன இதழ்களில் வெளியானவை என்பதால் அதன் பக்க அளவு பலவீனங்களும்  எடுத்துக்கொண்ட கதைகளின் களமும் முக்கியமாகப்படுகின்றன.
 
1. ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிததம்,
2. புல்லுக்கு இறைத்த நீர்,
3. சுமை,
4. ரோசக்காரி ஆகிய நான்கு கதைகளே எனது தெரிவாகும்.
 
இவற்றையெல்லாம் பல லட்சம் பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது பலம் கூட. நம் கூட்டுக்குடும்பங்கள் அவற்றின் சிறப்புகள் அதிலிருந்து எழும் பிரச்சினைகளோ  அல்லது சலசலப்புகளோ கதைகளின் மையங்களாகி உள்ளன. ஒவ்வொரு கதைகளிலும் வரும் கதை மாந்தர் மிக அற்புதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
 
 குடும்ப அமைப்பில் அம்மாவும் அப்பாவும் முக்யமானவர்கள் அவர்களைத் தவிர்த்து  கதைகள் எழுதி விட முடியுமா ..
 
சிங்கங்கள் உறுமும். வேட்டைக்காக அவை ஒரு உயிரினை மட்டும் எடுத்துக்கொள்ளும், ஆனால் புலிகள் பிய்த்துக் குதறும். வாழ்க்கை இப்படித்தான் சிங்கமாய் நின்று சில சமயம் கர்ஜிக்கும். புலியாய் குதறும். அப்படி குடும்ப வாழ்க்கையில் சிங்கமாயும் புலியாயும் நின்று கர்ஜித்தும் வேடிக்கை காட்டியும் நடக்கும் பல யதார்த்த சம்பங்களை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் குரு அரவிந்தன் .
 
அப்பாவையோ அம்மாவையோ நிராகரிக்கும் பிள்ளைகள் இருக்கத்தான் மாட்டார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி பிள்ளைகளைக் கொண்டு போய் நிறுத்துகிறது. அவர்கள் அதற்காய் எவ்வளவு வலியை உணர்ந்திருப்பார்கள்
 
‘இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல” என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் ‘நீ என் பெண்தானா?’ என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.’’ வாசகரின் கண்கலங்க வைக்கும் வரிகள். யதார்த்தத்தை அப்படியே கண்முன்னால் காட்சி ஆக்கியிருக்கிறார் ஆசிரியர்.
 
‘ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க…”
 
இந்த நிலைமையில் ஒரு பெண் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுவதோ  பொருத்திக்கொள்வதோ இம்சைதான். அதை எழுத்தாளர் குரு அரவிந்தன் ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதத்தில் சரியாகவேச் சொல்லியிருக்கிறார்.
 
இனி புல்லுக்கு இறைத்த நீர் என்ற அடுத்த கதையைப் பார்ப்போம்..
‘வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான்’ என்று வருகிற சூழல்களை வாசிக்கிற எந்த வாசகர்களும் உணர்வார்கள்.
 
வாழ்க்கை பலரை காலடியில் நசுக்கி வீசப்பட்ட சிகரெட் துண்டுகளைப் போலத்தான் ஆக்கி வைத்திருக்கிறது அரவிந்தன் பார்வையில் இப்படி..
 
 “அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது”
 
மாணவர்களின் உலகத்தில் இருக்கும் பிரச்சினைகள் என்று காதல், கேளிக்கை சார்ந்த பொறாமை என்று பல எழுத்தாளர்கள் கண்களில் பல விசயங்கள் தட்டுப்படும்போது குரு அரவிந்தனின் பார்வையில் படும் விசயங்கள் இப்படித்தான் அபூர்வமாக இருப்பதை புல்லுக்கு இறைத்த நீர் கதையில் கண்டு கொண்டேன் .
 
சுமை என்ற கதையில் சிறையில் இருந்து வெளிவரும் அப்பாவி இளைஞன் தான் காணும் உலகம் அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கிறது. இந்தக்கதை உலகம் முழுவதும் இன்றைக்கு இருக்கும் இனவாத பிரச்சினையின் அடிநாதமாக விளங்கி பொதுமையான உலக மையமாக  விளங்குவதால் இது ஒரு முக்கிய கதையாக்குகிறது. தன் பிரியமானவர்கள் எப்படியெல்லாம் சிதைந்து போய் காணப்படுகிறார்கள் என்பது முக்கியமாகும். சூழ்நிலை, பெற்ற தகப்பனையே மகளுக்குப் பாரமாகத் தெரிய வைக்கிறது. உலகெங்கும் இருக்கும்  இனவாதம்  மனிதர்களைப் பியத்துப் போட்டு வேடிக்கை காட்டும் அவலத்தை ஒரு கதையில் இலகுவாகச் சொல்லிவிடுகிறார் குரு அரவிந்தன். சிறிது நேரம் என்னை உறைய வைத்த கதையிது.
 
ரோசக்காரி கதையில் பெண்ணை வீட்டில் முடமாக்கி வைத்திருக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் அவளை வெளியே பிரகாசிக்க வைக்க அவள் கணவன் செய்யும் ஒரு சிறு நாடகம் வெளிப்படுகிறது. அந்த வகையில் அவன் உயர்ந்தவனாகிறான். நேர் மறை எண்ணங்கள் அவனை கபட நாடகம் ஆடச் செய்கிறது. அது வெற்றிகரமான பின்விளைவுகளைக் கொண்டிருப்பதும் நல்ல விசயம்தானே.
 
பல எழுத்தாளர்களின் கதைகளில் நிகழ்கால, யதார்த்த வாதப் போக்குகள் ஒரே மாதிரியானக் கதைகளை உதிர்க்கும் போது நேர் மறை எண்ணங்கள்  கொண்ட கதைகள் தென்படுவது அபூர்வம்தான். ஆனால் இந்த ஆசிரியர் குரு அரவிந்தன் அந்த வகையிலும் எழுத்துலகச் சிந்தனைகளை விதைத்திருக்கிறார் என்பது ஆரோக்யமானதாக உள்ளது
 
எழுத்தாளன் மனம் நல்ல சிந்தனைகளுக்கும் ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் செல்வது வாசிப்போர் மத்தியிலுண்டாக்கும் இலக்கிய அனுபவம் தவிர்த்த மனநிலைகள் இன்னும் தொடர்ந்து நடக்கச் செய்யும். அந்த வகையில் குரு அரவிந்தன் வாசகர்களை தன்னோடு அழைத்துச் சென்று நேர் மறை எண்ணங்களை உருவாக்குவதும் கூட பல சமயங்களில் படைப்பாளியின் பொறுப்பாக அமைவதை  இது போன்ற அவரின் கதைகள் தெரிவிக்கின்றன.
 
எல்லா மனிதர்களுக்குள்ளும் கசடுகள் இருக்கின்றன. அந்தக்கசடுகளைப் பலர்  கொட்டித் தீர்த்துகொள்கிறார்கள். எல்லா மனிதர்களும் அப்படிக் கொட்டித்தீர்ப்பதில்லை. சிலர் கொட்டித்தீர்ப்பதால் மனபாரம் குறையும் என்று எண்ணுகிறார்கள்.  நேர்மறை எண்ணங்கள் தரும் சிந்தனைகளும் அவற்றின் அடிநாதங்களும் மனதிற்கு ஆறுதல் தருபவை. அந்த வகை ஆறுதல் எண்ணங்களை குரு அரவிந்தன் விதைத்துக் கொண்டே இருக்கிறார். இது போன்ற மிகச் சிறந்த கதைகளைத் தமிழ் இலக்கியத்திற்குத் தந்த எழுத்தாளர் குரு அரவிந்தனைப் பாராட்டுகின்றேன்.
உசாத்துணை:
  kurunovelstory.blogspot.com
 கல்கி இதழ், சென்னை
 ஆனந்தவிகடன், சென்னை.
 சிறுகதைகள். கொம்
Series Navigationசொல்லேர் உழவின் அறுவடைதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *