கே.எஸ்.சுதாகர்
ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
”நண்பா… நான் கனவிலும் நினைக்கேல்லையடா! இவள் இப்படிச் செய்வாள் எண்டு. மூக்கைப் பொத்தினா வாயைத் திறக்கத் தெரியாத சீவன். இப்ப? இறக்கை முளைச்சிட்டுது. பெடிச்சிக்கு வேலை செய்யுறன் எண்ட திமிர். ஒருக்கா எனக்காக அவளோடை கதைச்சுப் பாரன்டா” ஆனந்தன் தன் நண்பன் ராஜலிங்கத்திடம் கெஞ்சினான்.
“கதைக்கலாம் தான். ஆனா…”
”என்ன ஆனாவும் ஆவன்னாவும். கதைக்கிறாய். எனக்காகக் கதைக்கிறாய். உவளுக்கு மூன்று பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போக எப்பிடித் துணிவு வந்ததோ? பெடிச்சி வடிவும் தானே! அதுதான் ஆரையேன் கட்டுவோம் எண்டு கிழம்பியிருப்பாள்!”
ஆனந்தன் – அனுஜாவைத் தன்னுடன் சேர்த்துவைக்குப்படி, நண்பன் ராஜலிங்கத்திடம் கெஞ்சினான், மன்றாடினான், தூது விட்டான்.
°
”தயவு செய்து வேலை செய்யிற இடத்துக்கு போன் பண்ணாதீங்க. மனசுக்கு கஸ்டமாக இருக்கு” என்றாள் அனுஜா.
“அப்ப நான் உங்களை எப்படித் தொடர்பு கொள்ளுறது?” என்று கேட்டான் ராஜலிங்கம்.
“பின்நேரம் அம்மன் கோவிலுக்கு வருவன். பூசை முடிஞ்சாப்போல சந்திச்சுக் கதைக்கலாம்.”
“நன்றி.”
°
பூசை முடிந்து, மாலைக் கருக்கலாகிவிட்டது. கோவில் வளவில் நின்ற சடைத்த பூக்கன்றின் பின்னால், அனுஜா யாரோ ஒருவருடன் கதைத்துக் கொண்டு நின்றாள். ராஜலிங்கம் வருவதைக் கண்டதும் அவன் அவ்விடத்தைவிட்டு விலகி இருளோடு கலந்தான்.
”அவரோடை வாழ முடியாது. அந்தாள் ஒரு மனோவியாதிக்காரன். தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதீங்க!” என்று அழாக்குறையாகச் சொன்னாள் அனுஜா.
“அப்ப கொஞ்சம் முன்னுக்கு ஒரு கறுவலோடை நிண்டு கதைச்சுக் கொண்டிருந்தீங்க. அவரை உங்களுக்குப் பிடிச்சிருக்கோ?” கொஞ்சம் சூடாகவே கேட்டான் ராஜலிங்கம்.
“தயவுசெய்து என்னுடைய சொந்த விஷயங்களிலை நீங்கள் தலையிடாதீங்க!”
ராஜலிங்கத்திற்குக் கோபம் தலைக்கேறியது. அவன் ஒரு ஸ்திரி லோலன். அவனுக்குள் இருந்த மிருகம் வெளியே பாயத் துடித்தது.
“அப்ப என்னைப் பிடிச்சிருக்கா? இதிலை ஒண்டு குடுங்க பார்ப்பம்” அனுஜாவைக் கட்டிப்பிடித்து, அவளின் முகத்துக்கு நேரே தன் கன்னத்தைத் திடீரென்று நீட்டினான் ராஜலிங்கம்.
அனுஜா இதை எதிர்பார்க்கவில்லை. அவனிடமிருந்து தன்னை விடுவித்தவாறே, கோவில் என்றும் பாராமல், ஒல்லியாக நெடுத்திருந்த அவன் கன்னத்தில் ஓங்கிப் பளாரென்று அறைந்தாள்.
ஒரு அடிதான். ராஜலிங்கம் விழுந்துவிட்டான். இவர்கள் இருவரும் கதைக்கத் தொடங்கிய நேரம் முதல், இவர்களையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கோவில் அடியார்கள் பதறிப்போனார்கள்.
“சுரண்டிப் பார்த்து லக் அடிச்சா வைச்சிருக்கவும், ஒண்டும் விழாட்டி தூக்கிக் கடாசி எறியவும் நான் என்ன சுவீப் ரிக்கற்றா?”
சத்தம் கேட்டு எல்லோரும் கோவிலுக்குள் ஓடி மறைந்தார்கள். உள்ளே அவர்களுக்கு அம்மன் உக்கிரம் கொண்டு காட்சியளித்தார்.
ராஜலிங்கம் இன்னமும் நிலத்தில் இருந்து எழவில்லை.
°
- சில்லறை விஷயங்கள்
- பூடகமாகச் சொல்வது
- அப்பாவிடம் ஒரு கேள்வி
- செயற்கைச் சிடுக்கு
- மேசையாகிய நான்
- புதராகிய பதர்
- சூடேறும் பூகோளம்
- தனிமை
- அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !
- பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
- நரதிரவங்கள்
- விலங்கு மனம்
- ‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)
- எத்தகைய முதிர்ந்த ஞானம்!
- ஒரு கதை ஒரு கருத்து
- சொல்லேர் உழவின் அறுவடை
- வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நரகமேடு!
- புகை
- விதியே விதியே
- ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை
- வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்