துவாரகை

author
0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 13 in the series 13 ஜூன் 2021

நடேசன்

என் மனைவி சியாமளா கோமதி (Gomti river, Dwarka)  ஆற்றின் தண்ணீர் வற்றிய நதிப்படுக்கையில்,  ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு,  வெறும் கால்களால் நடப்பது தனது கால்களுக்கு இதமாக இருக்கிறது  என நடந்தபோது,  எதிரே வந்த  ஒட்டகசாரதி தனது ஒட்டகத்தில் ஏறும்படி வற்புறுத்தினான்.  அவர்களிடமிருந்து விலகி,    நான் எனது  கமராவுடன் துவாரகேஸ்வரர்  கோவிலின் வெளிப்பகுதியில்,  கோமதி நதிக் கரையில் உள்ள   படிக்கட்டில்,  அமர்ந்தேன்.

எனக்கு முன்பாக ஒரு உயிரோவியமாக  அங்கு  ஒரு காட்சி திரை விலகித் தெரிந்தது. இரண்டு சிறுமிகள் எனக்குக் கீழே உள்ள படிக்கட்டில்,  நேர் எதிரே சில அடி தூரத்தில் அமர்ந்திருந்தார்கள். அதில் பெரியவள் மென் ரோஜா நிற உடையில்,  ஒரு சிவப்பு ரோஜா பூ மூன்று பச்சை இலைகள்  கொண்ட கிளைகளைக் கொண்ட அலங்காரமான  சல்வார் கவுன்  போன்ற உடை அணிந்திருந்தாள்.

 அவள் அணிந்திருந்த  உடை பழையதாகத் தோன்றியதுடன்,  இடது தோளில் உடை கிழிந்திருந்தது.

 படிக்கட்டுகளின் பக்கத்தில் செல்லும் இரும்பு கம்பியில் சாய்ந்தபடி,  தனது இரு   கால்களை ஒன்றுக்கு மேல் போட்டு அமர்ந்திருந்தாள்.  அவளுக்கு முன்பாக இருந்த   கூடையில் சாமந்தி (Marigold)  பூக்களை விற்பதற்காக வைத்திருந்தாள். அவளுக்கு அருகில் இன்னுமொரு சிறுமி,   பார்ப்பதற்கு அவளது தங்கைபோன்ற முகச்சாயலுடன் கீழ் படியில் ,   அமர்ந்திருந்தாள். இருவரும் எதுவும் பேசவில்லை. இரு இளம் சிறுமிகள் சந்திக்கும்போது நாம் பார்க்கும் சிரிப்பு கலகலப்பு எதுவும் இல்லை . எதிர்மாறாக  ஆனால் இருவர் முகங்களிலும் எதையோ பறிகொடுத்த சிந்தனையின் ரேகைகள் ஓடியது.

 

பல நிமிடங்களாக அவர்களை அவதானித்தபடியிருந்தேன்.

 

அவர்கள் மனதில் என்னவாக இருக்கும்?

 

வீட்டில் என்ன பிரச்சினையோ?

 

அடுத்த வேளை உணவுக்குத் தேவையான பணம், இந்த சம்பங்கி பூக்களை விற்றால்தான் கிடைக்குமோ?

 

விற்காமல் தேங்கிவிட்ட பூக்களை நினைத்துக்கொண்டிருந்தாளோ ?

 

ஆனால் அதற்காக அவள் விற்க முயற்சி செய்யவில்லையே!

 

விற்க முனைந்தால் நான் வாங்கத் தயாராக இருந்தேன்.  அவர்களுக்காக,

 

அப்பொழுது ஒரு சிறிய வெள்ளை நெற்றிச் சுட்டியுள்ள சிவப்பு நிற  காளை மாடு,  அந்தப் பெண்களை நோக்கி வந்தது.  அவர்களிடம் எதையோ யாசிப்பது போல் முகத்தை அருகாமையில் வைத்தபடி நின்றது.

 

உணவைத்தவிர காளை  மாடு என்ன கேட்கும்?

 

அந்தச்  சிறுமி தன் பாதங்களால் அந்த காளையின் முகத்தைத் தடவினாள். அவளது உரசலை  அனுபவித்தபடி,  அந்தக் காளை நின்றது.  ஆனால் அவள்  முகத்தில் மாற்றமில்லை.

 

அந்தப் பெண்களும் காளையும் கோமதி நதியின் பின்புலத்தில்,  அவர்கள் அறியாமல் படமெடுக்கவேண்டுமென நினைத்து எடுத்ததேன்.

 

 இந்தச்  சிறுமிகள்  யாதவச் சிறுமிகளாக இருக்கலாமா என என்னையறியாது மனதில் வந்து சென்றதும்,   இதிகாச காலத்திற்கு பிரயாணம் செய்தேன்.

 

மகதமன்னன் ஜராசந்தன்,  கம்சனின் மாமா- அதாவது பெண் கொடுத்தவர்.  கம்சனை,  கிருஷ்ணர் கொன்றதால் தீராத கோபத்தால்,  மதுரா நகர்மீது தொடர்ச்சியாகப் போர் தொடுத்தார் – இதுவே யாதவர்கள் துவாரகைக்கு இடம்பெயர்ந்து போகக் காரணம். 17 தடவைகள் மகத மன்னன் ஜராசந்தனுடன் போர் புரிந்து வென்றபோதிலும் தொடர்ந்து போர் புரிந்து,  தேவையற்ற  உயிர்ச்சேதம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாது ,  பாதுகாப்பான கடலை அண்டிய தீவுபோன்ற இடம் தேவை எனக் கிருஷ்ணனும் பலராமனும் துவாரகை வந்ததாக இதிகாசம்  சொல்லப்படுகிறது.

 

இதிகாசம் மட்டும் மனதில் நிழலாடவில்லை. கிருஸ்ணலீலா திரைப்படத்தில் குசேலராக நாகேஷ்,   கிருஷ்ணரின் மாளிகைக்கு உதவி பெற வந்து,  வாசலில் காவலர்கள் தடுத்தபோது தடுமாறியது  நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தில்  சிம்ரான் போலிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் என் மனதில்  தோன்றி மறைந்தார்.

 

சன் மகாபாரதம் தொடரில்  குருஷேத்திரப் போருக்கு உதவி கேட்டு வந்தவர்களில்,   தூங்கும் கிருஷ்ணரின் கால் மாட்டில் அருச்சுனனும்,  தலையருகே  துரியோதனனும் இருந்த காட்சிகள் நினைவுக்கு வந்தது.

 

ஜேர்மன் நாடு உருவாகுவதற்கு ஐம்பது வருடங்கள் முன்பாகவே நாட்டுப்புற சிறுவர்  கதைகளைத் தேடிச் சேகரித்து  ஒன்றாக்கிய  கிரிம் சகோதரர்கள்(Grimm Brothers) ,  யூதர்களை (The Jew Among the Thistles) மிகவும் தாழ்ந்தவர்களாகவும்  பொய் சொல்பவர்களாகக் கட்டமைக்கிறார்கள்.

 

நமது அகத்தில் எழும் எண்ணங்கள்,  சிந்தனைகள், அறங்கள் என நாம் நினைப்பது எல்லாமே,    நாம் சிறு வயதில் கேட்டவை,   படிக்கும் கதைகள் ,  பார்க்கும் படங்கள் மூலமாக உருவாக்கப்படுகிறது. ஒரு நாட்டையோ, மதத்தையோ  அல்லது ஒரு நெருக்கமான மக்கள் கூட்டத்தை  உருவாக்க  இப்படியான கதைகள் (உண்மையோ பொய்யோ) தேவைப்படுகிறது. மதவாதிகள்,  அரசியல்வாதிகள்,  கவிஞர்கள்,  கதைசொல்லிகள் என்போர்  இதில் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு வேலை செய்கிறார்கள்.

 

கிருஷ்ண தரிசனம் பார்க்கப் பக்தியோடு சென்ற  யாத்திரிகர்களை  இடித்தபடி,  நாங்களும் வள்ளத்தில் ஏறித் துவாரகேஸ்வர்  கோவில் சென்றோம். எந்த கட்டுப்பாடும் அற்று கூட்டமாக பக்தர்கள் ஏறியதால் வள்ளத்தில் நிற்பதற்கு  இரண்டு பாத அடி இடமே எமக்குக் கிடைத்தது. கிருஷ்ண பூமி பார்க்கச் செல்லும்போது ஈரடிகள் பெரிதானவையல்லவா?

 

 அந்த வள்ளத்தைச் சுற்றி கடற்காகங்கள் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. நான் பார்த்தபோது ஒரு பெண் குழந்தை,  அம்மா கொடுத்த  டோக்கிளாவையும்( Dhokla) பறவைகளுக்காகக் கடலுக்குள் எறிந்தது. மற்றவர்கள் கையிலிருந்த தங்களது உணவுகளை வீசினார்கள்  கடற்காகங்கள் துவாரகையில்  இப்பொழுது  மரக்கறி உணவுக்குப் பழகி விட்டன.  நான் நினைத்தேன். மீனை அவை  மறந்து பல காலமாகிவிட்டது.

 

கோவிலுக்கு போகும் வழியில் ஆரம்பத்தில் பக்தரகள் மத்தியில்   எமது வழிகாட்டியைத் தொலைத்துவிட்டோம்.  அவரைத் தேடியபடி நின்றபோது ஏற்கனவே கோவிலுள்  போய் வணங்கி விட்டுத் திரும்பி வந்திருந்தார். அவருடன் நாங்கள் மீண்டும் சென்றபோது கோவிலுக்கு உட்செல்வது இலகுவாக இருக்கவில்லை.  மனித உடல்கள் கோட்டைபோல் கோவிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியாது தடுத்தன. என்னைப் பொறுத்தவரை வெளிக்காட்சிகளே முக்கியம் என்பதால் வழிகாட்டியோடு சியாமளாவை உள்ளே அனுப்பி விட்டு வெளியே நின்றேன்.

 

 அரபிக்கடலின் கோமதி என்ற சிறிய ஆறு சங்கமமாகிறது. ஆறு என்றாலும் அங்கு கடல் பெருகினால் உப்புத்தண்ணியும் ஓடும். கடல் வற்றும்போது நிலம் தெரியும். அதில் ஒட்டகங்களுடன் பலர் சவாரிக்காகக் காத்து நின்றார்கள். நாங்கள் ஏறாத போதிலும் பணத்தைக் கொடுத்துப் படத்தை எடுத்துக்கொண்டோம். இங்கிருந்து பார்க்கும் போது ஒரு கலங்கரை விளகம் உள்ளது மாலை நேரத்தில் அரபிக்கடலில் ஆதவன் மறைவதை அங்கு  நின்று பார்ப்பது  மனதுக்கு  இதமாக இருந்தது

 

துவாரகாவில்,  விஸ்வகர்மாவால்   கிருஷ்ணருக்காகக் கட்டப்பட்ட பகுதி கடலுக்குள் இருப்பதாக கூறுகிறார்கள் . இந்தியாவில் ஒவ்வொரு இடத்திற்கும் வரலாறு உண்டு அவைகள் பல வகையாக இருக்கும். இந்த துவாரகா மத்திய காலத்தில் முஸ்லீம் அரசர்களால் உடைக்கப்பட்டது. பிற்காலத்திலும் பிரித்தானியர்கள் நடத்திய போரில் சேதமடைந்தது.

 

அரபிக்கடலின் கழிமுகத்தில் இருப்பதால் பல காலமாகக் கடல் வணிகம்  மற்றும் கேந்திர முக்கியத்துவமான இடமெனக் கருதப்படுகிறது.  தற்போதைய துவாரகேஸ்வரர் கோவில்,  ஆதி சங்கரரது மடம் இருந்த இடமென்கிறார்கள்.

 

இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள ( Dwaraka,  Rameswaram, Badrinath and Puri) முக்கியத்துவமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால் தற்பொழுது துவாரகை மற்றும் அண்டிய பிரதேசங்கள்  புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.   நமக்கு வைகுண்டம்  கிடைக்கிறதோ இல்லையே  1984 இல்  ராமேஸ்வரம் 2020  இல் துவாரகேஸ்வரம் பார்த்துவிட்டதால் அரைக் கிணறு தாண்டிவிட்டேன் என்ற நிம்மதியுடன் வெளியேவந்தேன்.

—0—

Series Navigationசொல்வனம் 248 ஆம் இதழ் வெளியீடு அறிக்கைவடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *