அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

This entry is part 2 of 11 in the series 20 ஜூன் 2021

ஜோதிர்லதா கிரிஜா

( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. )

      வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள்.  ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன பிறவற்றின் வாசனைகள். … அந்த வீட்டையே நறுமணங்களின் வாசனைகளின் கலவையில் முக்கி எடுத்திருந்தாற்போல், அது மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது.

      கல்யாண வீட்டின் வாசனை அது. சண்முகம் வாய்க்குள் சிரித்துக்கொண்டார். அவருடைய திருமண நாள் பற்றிய நினைவுகள் அவர் மனத்துள் கிளர்ந்தெழுந்தன. ஈராண்டுகளுக்கு முன்னர் இறந்து போன அருமை மனைவியின் ஞாபகம் நெஞ்சில் நெருட, அவரிமிருந்து ஒரு நெடிய மூச்சு சீறிக்கொண்டு புறப்பட்டது.

      ஞானம் இன்று உயிருடன் இருந்தால்…மகனின் திருமணத்தை நடத்த விட்டிருப்பாளா? ‘கீழ்ச்சாதி’ப் பெண்ணை மருமகளாக ஏற்க மனமொப்பி இருப்பாளா? ஒருகாலும் மாட்டாள். பெரிய  குருக்ஷேத்திரப் போரே நிகழ்ந்திருக்கும். ஒன்று – மகன் தாயின் ஒப்புதலுக்காகக் காலமெல்லாம் காத்திருக்க நேர்ந்திருக்கும். அல்லது – தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள அவன் குடும்பத்திலிருந்து வெளியேறிச் செல்ல நேர்ந்திருக்கும். ஞானம் இறந்து போனது ஒரு வகையில் மகனுக்குச் சாதகமாய்ப் போயிற்று. இந்நினைப்புத் தம்மையும் அறியாது அவரை உதட்டைக் கடிக்க வைத்தது.

      சே! என்ன நினைப்பு இது! ஆயினும், அதுதானே உண்மை என்கிற நினைப்பை மனத்தினின்று அவரால் விரட்ட முடியவில்லை. அவருடைய இனத்தில் அவர்தான் மெத்தப்படித்தவர். அந்த நாளில் அவர் குடும்பத்திலும், சுற்றத்தாரிலும் பட்டப்படிப்புப் படித்த ஒரே இளைஞன் அவர்தான். மகனின் கல்வித் தாகத்தைப் புரிந்துணர்வோடு தீர்த்துவைத்த அவர் அப்பாவுக்குத்தான் அவர் நன்றி கூறவேண்டும். அவருடைய அப்பா ஏழெட்டு வகுப்புகள் மட்டுமே படித்திருந்தவர். அவர்களது வழிவழி வந்த குலத்தொழிலான வணிகத்தை அவரும் செய்துவந்தார். நல்ல காசு கிடைத்தது. தம் ஒரே மகனைத் தாம் செய்துவந்த வணிகத்துக்கு வாரிசாக அவர் நம்பி இருந்தார். ஆனால், சண்முகத்துக்கோ படிப்பில் நாட்டம். சண்முகத்தின் வாத்தியார் வேதாந்தம் அய்யங்கார் வீடு தேடி வந்து சண்முகம் மிக நன்றாய்ப் படிப்பதாகவும், அவன் படிப்பை நிறுத்தக் கூடாது என்றும் அவன் அப்பாவிடம் அவனுக்காகப் பரிந்துரை செய்தாரே! வேதாந்தம் என்று அவருக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயருக்கு ஏற்ப அவர் ஒரு பெரிய வேதாந்தியாகத்தான் திகழ்ந்தார். இன்று சண்முகத்திடம் இருக்கிற ஞானமெல்லாம் அவர் விதைத்த வித்துகளினின்று முளைத்த மரம்தான்! அதனால்தான் மகன் ராமகிருஷ்ணன் தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்தப்பட்ட இனப் பெண்ணைக் காதலித்து அவளை மணக்கும் விருப்பத்தைத் தம்மிடம் வெளியிட்ட போது அவர் மறுப்புச் சொல்லவில்லை.

                   ‘சாதியில எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லேடா. பொண்ணு நல்லவதானே?’ என்று அவர் புன்னகை செய்த போது  ராமகிருஷ்ணன்தான் எப்படி ஒரு நம்பாமையுடன் அவரைப் பார்த்து விழித்தான்! அந்த ஞாபகத்தில் அவர் சிரித்துக்கொண்டார்.

      மகனின் விருப்ப வெளியீட்டுக்கு அவரது உடனடியான எதிரொலி சம்மதம் நிறைந்த அந்தப் பதில்தான். அதற்குப் பிறகுதான் மருமகளின் குடும்பம் பற்றிய மற்ற விவரங்கள் அவருக்குத் தெரியவந்தன. அவள் ஒரு பணக்காரப் பெண். படித்தவள். அவள் அப்பா மைய அரசு அலுவலகம் ஒன்றில் தாழ்த்தப்பட்டவர்க்குரிய பதவி உயர்வு ஒதுக்கீட்டால் அலுவலர் ஆனவர் என்பதெல்லாம் தெரிந்த போது அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதென்னவோ உண்மைதான்.

      அறைக்கு வெளியே காலடி ஓசை கேட்க, அவர் தலை உயர்த்திப் பார்த்தார். ராமகிருஷ்ணன்தான் அறைக்குள் நுழைந்துகொண்டிருந்தான். புது மணமகனுக்குரிய கூச்சத்துடன் அரையாக அவரைப் பார்த்தபடி, “அப்பச்சி! நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு மகாபலிபுரத்துக்குப் போய்ட்டு வரலாம்னு இருக்குறோம்,” என்றான்.

       ஒரு புன்னகை காட்டிவிட்டு, “ஜமாய்!” என்றார் சண்முகம். ராமகிருஷ்ணனின் முகம் அதன் கருமைக்கு அப்பால் சிவப்புக் காட்டியது.

      ஒரு கணம் தயங்கிவிட்டு, “ … இன்னிக்கு ஒரு நாள் ஓட்டல்ல சாப்பிட்டுக்குவீங்களா, அப்பச்சி?” என்றான். குரலில் ஒரு தயக்கமும் குற்றமும் ஒலித்தன.

       சண்முகம் பெரிதாய்ச் சிரித்து, “அதுக்கென்ன, ராமு? நீ கவலைப்படாம போய்ட்டு வாப்பா. எனக்கேதான் சமையல் செய்யத் தெரியுமே! நீங்க ரெண்டு பேரும் திரும்புறச்சே சாயந்திரம் ஒரு ஆறு மணியாவது ஆகாது? டிஃபனும் காபியும் செய்து வச்சுடறேன். … இரவுச் சமையலைக்கூட ஆறுக்கெல்லாம் முடிச்சு வச்சுடறேன். ..என் மருமவளும் என் கைச்சமையலை ருசி பார்க்கட்டுமே!” என்றார்.                                                             அவன் குரலில் ஒரு பதற்றம் காட்டி, “அதெல்லாம் வாணாம், அப்பச்சி! நாங்க வெளியில சாப்பிட்டுட்டு வந்துடறோம். நாங்க வர்றப்ப அநேகமா இருட்டிடும்னு நினைக்கிறேன். எங்க சாப்பாட்டுக்கு நீங்க ஒண்ணும் சிரமப்படுத்திக்காதீங்க, அப்பச்சி!” என்றான் அவசரமாக.

       “சரிப்பா, ராமு.”

       மகன் பக்கத்து அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்ட ஓசை கேட்டது. திருமணம் முடிந்து இந்த நான்கு நாள்கள் வரையில் வீட்டில் உறவுக்காரப் பெண்கள் இருந்தார்கள். அவர்களே சமையலை யெல்லாம் கவனித்துக்கொண்டார்கள். மகன் மனைவியோடு வெளியே போகிறான். எனவே மருமகளின் சமையலை வைத்து மதிப்பெண் போடும் வாய்ப்பு இன்று அவருக்கு இல்லை.

அவர் எழுந்து தாம் பாதி படித்திருந்த புத்தகத்துள் அடையாள நறுக்கு ஒன்றைச் செருகி மேசை மீதி கிடத்தி விட்டுச் சோம்பல் முறித்த பிறகு அறையை விட்டு வெளியே வந்தார். வழிநடையைக் கடந்து தோட்டத்துக்குப் போய் நின்றார். கல்யாணச் சந்தடியில் தோட்டத்து மரங்களை மறந்து போனது ஒரு குற்ற உணர்வாய் அவரது நெஞ்சில் குத்தியது. மகனும் மருமகளும் கிளம்பிப் போன பிறகு கொய்யா, வாழை, தென்னை மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். வேப்ப மரக்காற்று முகத்தில் பட்டது. டிசம்பர் மாதச் சிலுசிலுப்புடன் வீசிய காற்று அவருள் ஒரு புத்துணர்ச்சியை விளைவித்தது. அவருக்கு உடனே சொல்லி மாளாத மகிழ்ச்சி ஏற்பட்டது. வாழ்க்கையின் முழுப் பயனையும் அடைந்துவிட்ட நிம்மதி ஒரு பேரனோ பேத்தியோ பிறந்துவிட்டால் கிடைத்துவிடும் என்று நினைத்தார்.

மகனின் அறையினின்று வெளிப்பட்ட சிரிப்புச் சத்தம் அவரது சிந்தனையைக் கலைத்தது. அந்த அறையின் சன்னல்கள் தோட்டத்துப் பக்கம் பார்த்திருந்தன. அவர் சட்டென்று நகர்ந்து நின்றார். சன்னல் கதவுகள் சாத்தப்படாத நிலையில் மகனையும் மருமகளையும் ஏதேனும் அந்தரங்கக் கோலத்தில் நாம் பார்த்து, அவர்களும் அதைக் கவனித்துவிட்டால் இருவருக்கும் கூச்சமாகிப் போகுமே என்கிற கவனத்தால் அவர் அந்தச் சன்னல்கள் தெரியாத இடத்துக்கு நகர்ந்து போனார்.

       “உங்க அப்பச்சி…” என்ற மருமகளின் சொற்கள் அவர் செவிகளை வந்தடைய, ஓர் ஆவலுடன் அப்படியே நின்றார். ஒற்றுக் கேட்கும் வழக்க மற்றவராயினும், தம் மருமகள் தம்மைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளும் இயல்பான ஆசைக்கு ஆட்பட்டு அவர்  செவி மடல்களை விடைத்துக்கொண்டார்.

       “உங்க அப்பச்சி அந்த ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாரா?”        “ஆமா, வேணி! ரொம்பப் படிப்பாளி எங்க அப்பச்சி. படிப்பு, படிப்பு, படிப்பு – எப்ப பாரு, படிக்கிறதுதான் வேலை அவருக்கு. அதுலயும், ரிடைர் ஆகி வீட்டில இருக்கத் தொடங்கிட்டாரில்ல? ரெண்டு-மூணு லைப்ரரீஸ்ல மெம்பராச் சேர்ந்திருக்காரு. பொழுது போகணுமே? ஏன்? எதுக்குக் கேக்கறே?”

       “நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கலைன்னா ஒண்ணு சொல்லணும்.”

       “சொல்லு.”

       “அந்த ரூம்ல உங்க அப்பச்சி தன்னோட புத்தக அலமாரியத்தானே வச்சிருக்காரு? அதை ஹால்ல கொணாந்து வச்சுக்கட்டுமே?”

       “ஏன்?”

 “வச்சுக்கிட்டாருன்னா, அந்த ரூமையும் நாம வச்சுக்கலாம்.”                                           

 “ரொம்ப நாளா அவரு அந்த ரூம்ல இருக்காரு, வேணி. அது அவருடைய உலகம்.”

 “இருக்கட்டுமே! இப்ப மகனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுல்ல? மருமக வந்தாச்சு. வீட்டில இனி ஆள் நடமாட்டம், சாமான், சச்சரவெல்லாம் அதிகமாகும். தனக்குன்னு ஒரு ரூம்ல உங்க அப்பச்சி உக்காந்தாருன்னா, அது பொதுவில ஒரு இடைஞ்சலை உண்டாக்குமில்ல? அதான். நீங்க வேற எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.”

 “எடுத்துக்கல்லே. ஆனா எங்க அப்பச்சி எங்க உக்காருவாரு?”

 “அதான் திண்ணை இருக்குதே! அங்கே ஈஸி சேரைப் போட்டுக்கிட்டு உக்காரலாமே! திண்ணையில வெளிச்சமும் நல்லா வருது. அவருக்கும் அது வசதிதானே?”

 “ஆமா, வேணி. நீ சொல்றாப்ல அப்பச்சிக்கு அந்தத் திண்ணையே போதும்னுதான்  எனக்கும் இப்ப தோணுது…”

மகனின் இந்தச் சொற்கள் சண்முகத்தைப் பளாரென்று அறைந்தன,

“ஆனா இப்பவே வேணாம். இன்னும் ரெண்டொரு வாரம் போகட்டும். அதுக்குப் பெறகு சொல்றேன். அவரு ஒண்ணும் நினைச்சுக்காம இருக்கணும். அதான் கொஞ்சம் தயக்கமா யிருக்குது.”                                                                                                                  

“நினைச்சுக்கிறதுக்கு என்னங்க இருக்குது இதில? நியாயமாப் பார்த்தா அவரே கூட அதைச் செய்யணும். … ஏன்னா நிறைய சாமான்கள்லாம் இன்னும் சேர்ந்துக்கிட்டே போகும், பாருங்க? ஹால்ல எல்லாத்தையும் கொணாந்து வெச்சா அசிங்கமா இருக்குமில்லியா?”

 “ஏன்? ஏதானும் சாமான்கள் வருதா?”

 “நம்ம குடும்பத்துக்குன்னு நாம சேகரிக்க வேண்டிய சாமானுங்க இன்னும் எம்புட்டோ இருக்குதே? பெரிசா இன்னொரு ஃப்ரிட்ஜ் வாங்கணும். கலர் டி.வி. வாங்கணும். இன்னும் ரெண்டு கோத்ரெஜ் அலமாரி வாங்கணும். நம்ம ரூம்ல டேபிள் இல்லே. அதுவும் வாங்கணும். … நல்ல டைனிங் டேபிளா ஒண்ணு வாங்கணும். இப்ப இருக்கிறது ரொம்பச் சின்னது. எல்லாத்தையும் ஹால்லயா வெப்பாங்க? வெச்சா வர்றவங்க போறவங்களை எங்க உக்கார வைக்கிறது? அதான், ஒரு பொதுவான நன்மையை உத்தேசிச்சுத்தாங்க சொல்றேன்…”

 “ஓகே… புரியுது. அப்பச்சிக்குத் திண்ணை போதும்னுதான் எனக்கும் தோணுது. உக்காந்து புஸ்தகம் படிக்கிறதுக்குத் தனி ரூம் என்னத்துக்கு – நீ சொல்றாப்ல?”

 இரண்டாம் தடவையாகச் சண்முகம் நெஞ்சில் அடி வாங்கினார். அவருள் கசப்பும் வியப்பும் ஒருசேரப் பொங்கின.  ஆயிரம்தான் காரணங்கள் இருப்பினும் தம்மைத் தமது நெடு நாளைய இருப்பிடத்திலிருந்து கிளப்ப அவர்கள் எண்ணியதை அவரால் தாங்க முடியவில்லை. அவருடைய அறையே அவருக்குச் சொர்க்கம். அதுவே அவருக்கு எல்லாமும். நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவர் அந்த அறையில் வசிக்கிறார் – தமது மாணவப் பருவத்திலிருந்து.

அவர் கண்கள் கலங்கின. என்ன பெண் இவள்? வந்ததும் வராததுமாய் இப்படி அதிகாரக்கொடி நாட்டப் பார்க்கிறாளே? மனிதர்களுக்கு நியாயம் என்பதே கிடையாதா? உடனேயே அவருக்குள் பெருங்கசப்புத் தோன்றியது. பெற்று வளர்த்த மகனுக்கே இல்லாத கரிசனத்தைப் பிறிதொரு குடும்பத்துப் பெண்ணிடம் எதிர்பார்ப்பதும், அது அவளிடம் இல்லை என்று பழிப்பதும் எத்தகைய மடமை!

அவர் மெல்ல நகர்ந்து தம்மறையை அடைந்தார். அவருள் சினம் கனன்று கொண்டிருந்தது.

‘… அப்பச்சிக்குத் திண்ணை போதுமே! …’

அரை மணி கழித்து அவரிடம் வந்த மகனும் மருமகளும் விடை பெற்றனர். ராமகிருஷ்ணன், “நாளையிலேர்ந்து ஹனிமூனுக்கு நாங்க ஹைதராபாத் போகலாம்னு இருக்கோம். ஒரு பதினஞ்சு நாள் சுற்றுப் பயணம். அதுக்கு அப்புறந்தான் வருவோம்…” என்றான்.

 “செய்… டிக்கட்டுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?” 

 “ரெயில்வேல இருக்கிற ஃப்ரண்ட் ஒருத்தன் ரிசர்வேஷன் பண்ணிக் குடுக்கறேன்னிருக்கான். அநேகமா இன்னிக்கு ஈவ்னிங் தெரிஞ்சுடும். நாங்க வறோம், அப்பச்சி!”  

“ரைட்!”

… ஹைதராபாத், பூனா, எல்லோரா, அஜந்தா என்று இருவரும் தேனிலவைக் கழித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய போது பூட்டிய கதவு அவர்களை வரவேற்றது. ஒருவேளை தங்களுக்குச் சிற்றுண்டி வாங்கிவர அப்பச்சி ஓட்டலுக்குப் போயிருக்கக் கூடும் என்று எண்ணி இருவரும் ஆயாசத்துடன் அமர்ந்தனர். அப்போது எதிர் வீட்டுச் சிறுமி ஓடிவந்து ஓர் உறையையும் சாவியையும் ராமகிருஷ்ணனிடம் கொடுத்துப் போனாள்.

அவன் பதற்றமாய் அதைப் பிரித்துப் படிக்கலானான். அவன் தோளுக்குப் பின்னால் நின்று வேணியும் மாமனாரின் கடிதத்தைப் படித்தாள்:

 ‘அன்புள்ள மகன் ராமகிருஷ்ணனுக்கு.

 இப்படி ஒரு கடிதம் எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். நம் வீட்டை நான் விற்றுவிட்டேன். தாத்தாவின் வீட்டை அப்பச்சி எப்படி விற்கப் போயிற்று என்று உனக்கு ஆத்திரம் வரக்கூடும். இந்த வீடு என் அப்பசியுடையதுதான். ஆனால் மூதாதையர் சொத்தன்று. என் அப்பச்சி தம் சுய வருமானத்தில் கட்டியது. அதனை எனக்கு எழுதிவைத்த  என் அப்பச்சி அதை விற்கும் அதிகாரத்தையும் எனக்கு அளித்து உயில் எழுதி இருக்கிறார். எனவே, நான் அதை மயிலாப்பூர் மாட வீதியில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு விற்றுவிட்டேன். இனி மாதா மாதம் நீ அவருக்கு வாடகை கொடுக்கும்படி இருக்கும். மாதம் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாது என்று சொல்லிவிட்டார். நீ அவரோடு பேசிக்கொள். சென்னை வழக்கப்படி பகடித்தொகையும் கொடுக்கும்படி வற்புறுத்தினார். நான் உனக்காக வாதாடி அதிலிருந்து விலக்குப் பெற்றேன். இல்லாவிடில் ஓர் இரண்டாயிரமாவது நீ அவருக்கு அழ நேர்ந்திருக்கும். அவரது முகவரியைக் கடிதத்தின் பின்புறத்தில் எழுதியிருக்கிறேன். அவரே உன்னைச் சந்திக்க வருவார். எனது இந்த நடவடிக்கை உனக்கு வியப்பையும் குழப்பத்தையும் விளைவித்திருக்கும். என்ன செய்ய? எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. நானே எனது அறையை ஒழித்துக் கொடுக்க எண்ணி இருந்தேன். நீ அவசரப்பட்டு விட்டாய். என்ன படித்து என்ன? மனத்தில் அன்பும் நன்றியும் இல்லாத பிறவி ஓர் அவமானமே.

       அப்பச்சிக்குத் திண்ணையே போதும் என்று நீ வேணியிடம் சொல்லிக் கொண்டிருந்தது தற்செயலாய்த் தோட்டத்துக்கு வந்த என் காதில் விழுந்துவிட்டது. ஆமாம். எனக்குத் திண்ணைகளே போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். நான் ஊர்    ஊராய்ச் சுற்ற முடிவு செய்துவிட்டேன். வீடு விற்ற பணம் செலவாகும் வரை நான் போகிற ஊர்களில் உள்ள வீட்டுத் திண்ணைகளில் படுத்துறங்கிப் பின் ஏதேனும் அநாதை விடுதியில் சேர்ந்து கொள்ளுவேன்.  

திண்ணை போதும் என்று சொன்னதற்கு இத்தனை பெரிய பழி வாங்கலா என்று உனக்குக் கோபம் வரலாம். என்னுடைய இடத்தில் உன்னை வைத்துப் பார்த்தால் என் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுவாய். பிள்ளை என்ன செய்தாலும் பொறுத்து, விட்டுக்கொடுத்து, அவன் கையால் கொள்ளி வாங்காவிட்டால் சொர்க்கம் போய்விடும் என்று பயந்து எல்லா அவமானங்களையும் சகித்துக்கொண்டு போகும் சாதாரணத் தகப்பன்மாரிலிருந்து மாறுபட்டு நடக்க நான் முடிவு செய்து விட்டேன். தாய்-தகப்பன்மார்கள் இப்படி நடக்கத் தொடங்கினால்தான், பிள்ளைகள் – அன்பினால் இல்லாவிட்டாலும்  அச்சத்தினாலாவது – ஒழுங்காக நடப்பார்கள். உனக்கு என் ஆசிகள்.  வேணிக்கும்தான்.

இப்படிக்கு,

உன் அன்புள்ள சண்முகம்.’

வியர்வைத் துளிகள் தோன்றிய முகங்களுடன் அப்பச்சிக்கென்று ஒதுக்கியிருந்த திண்ணையில் இருவரும் பொத்தென்று சரிந்து உட்கார்ந்தார்கள்.

…….

Series Navigation4.ஔவையாரும் முருகக் கடவுளும்யோகம் தரும் யோகா
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

3 Comments

  1. Avatar
    jananesan says:

    ஜோதிர்லதாகிரிஜா எழுதிய “அப்பச்சிக்கு திண்ணையே போதும் ” கதை தலைமுறை மாற்றங்களை பதிவு செய்கிறது. வித்தியாசமான தகப்பன் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *