முருகபூபதி

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள்.
அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான் கலாநிதி ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவரான அமீர் அலியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் பிரசித்தம்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிவரும் ஆக்கங்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தொடர்ந்தும் வெளிவந்து, அரசியல் மற்றும் உலகப்பொருளாதாரம் குறித்து பேசிவரும் பலருக்கு உசாத்துணையாகவும் மிளிர்கின்றன.
சிலர் அமீர் அலியை , ஒரு மேற்குலக சிந்தனாவாதி எனவும் வர்ணிப்பவர்.
ஒருகாலத்தில் இலங்கையில் இவரது ஆலோசனைகளைப் பெற்றவர்தான் முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியூதின் முகம்மத்.
அவரது வாக்குமூலம் ஒன்றையும் இங்கே பதிவிடுவது பொருத்தமானது.
“ நான் கல்வி அமைச்சராகக் கடமையாற்றிய காலத்திலே விரிவுரையாளர் அமீர் அலியை எனது அமைச்சுக்கு அழைத்து கல்வி விடயங்களில் பலதரப்பட்ட ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றேன்.
அவருடைய புத்திக்கூர்மையும், தூரதிருஷ்டி நோக்கும் பல விடயங்களில் எனக்கு பேருதவியாக இருந்தன. சில ஆலோசனைகள் அந்தக்காலத்தில் புரட்சிகரமாக இருந்தபடியால் அவற்றை நடைமுறைப்படுத்தத் தயங்கினேன். ஆனால், பிற்காலத்தில் அந்த ஆலோசனைகளை நான் நடைமுறைப்படுத்த தயங்கியதற்காக கவலைப்படுகிறேன். “
இலங்கை முன்னாள் பிரதமர்களின் செயலாளராக பணியாற்றியிருக்கும் எம். டீ. டீ. பீரிஸ் அவர்கள் அமீர் அலி பற்றி இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“கலாநிதி அமீர் அலி, சிறந்த சிந்தனையாளன். கருத்து மிக்க எழுத்தாளன். உள்ளதை உள்ளபடியே உரைக்கும் ஒரு செயல்வீரன். அவருடைய எழுத்துக்கள் பலரை சிந்திக்கத்தூண்டுகின்றன. அவருடைய நட்பில் நான் பெருமைப்படுகின்றேன். “
இக்கருத்துக்கள் இவ்விதமிருக்க, இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஆராய்ச்சியாளரும் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான செல்வி பிரியகலா மனோகரன், அமீர் அலி பற்றி இவ்வாறு தெரிவிக்கின்றார்:
“ அமீர் அலி கிழக்கின் ஒரு விடிவெள்ளி. கிழக்கு மாகாணத்தின் தவப்புதல்வன். இவர் அரசியல்வாதியாக பரிணமித்திருந்தால் தமிழ் – முஸ்லிம் உறவில் ஒருபோதும் விரிசல் ஏற்பட்டிருக்கமாட்டாது. தமிழ் சமுதாயத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் பேரன்பும் பாசமும் மிக்கவர். தமிழ் மக்களின் பிரதேசங்களின் அபிவிருத்தியை பற்றி சிந்திப்பவர். எல்லா மத மக்களையும் தன் உடன்பிறப்புகளாகக் கணிப்பவர். மாபெரும் சிந்தனையாளன். பேரறிஞன். அரசியல் விமர்சகன், எழுத்தாளன், பேச்சாளன், மனித நேயன். “
அமீர் அலி அவர்களின் தந்தையாரும் எழுத்தாளர். கவிஞர். தந்தையாரின் போராட்டச் சிந்தனைகள் என்ற நூலையும் சில வருடங்களுக்கு முன்னர் அமீர் அலி வெளியிட்டுவைத்தார்.
“ இஸ்லாம் என்ற வரம்பிற்குள் நின்றுகொண்டு யதார்த்தமாய்ச் சிந்திப்பது எப்படியென்ற வித்தையை இளமையிலேயே எனக்கு ஊட்டிய என் தந்தை கவிஞர் அப்துல் காதர் லெப்பைக்கு இந்நூல் சமர்ப்பணம் “ என்று பதிவிட்டுள்ளார் அமீர் அலி.
தந்தையாரின் அடிச்சுவட்டில் வந்திருக்கும் கலாநிதி அமீர் அலி, தற்போது சிந்தனைச் சுவடுகள் என்ற தமது அரசியல் விமர்சன ஆய்வு நூலை வரவாக்கியிருக்கிறார்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் ஏற்கனவே ஊடகங்களிலும் அத்துடன் மாநாடுகளிலும் வெளியாகியிருந்தாலும், அவற்றை சேகரித்து தொகுத்து வெளியிட்டமைக்கான காரணத்தையும் முன்னுரையில் அமீர் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“ பொருளியல், அரசறிவியல். சமூகவியல் ஆகிய மூன்று கலைத்துறைகளும் தனித்தனியே வளர்ந்துள்ளனவெனினும் அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையே . வரலாற்றியல் கூட இத்துறைகளோடு உறவாடாமல் தனது உண்மைகளை உறுதிப்படுத்த முடியாது. நான் பொருளியல் துறையிலே பாண்டித்தியமடைந்து அத்துறையிலேயே கடந்த சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேலாக பல பல்கலைக் கழகங்களிலே பல்லாயிரம் பட்டதாரி மாணவர்களுக்கு விரிவுரையாற்றியபோதும் எனது ஆய்வுகள் பெரும்பாலும் தனியே பொருளியலை மட்டும் சார்ந்திராது மற்றைய கலைத்துறைகளையும் ஒட்டியதாகவே வெளிவந்தன. அதிலும் விசேடமாக சிறுபான்மை முஸ்லிம் இனத்தவர்களின் பிரச்சினைகளைப்பற்றிச் சர்வதேச ஆய்வேடுகளிலும் ஆய்வு மன்றங்களிலும் மாநாடுகளிலும் என் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளேன். ஆனால், அவை யாவும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே வெளிவந்துள்ளன. “
- எனக்குறிப்பிடும் அமீர் அலி, தனது ஜனநாயகத்தன்மையையும் பின்வருமாறு தெரிவித்துள்ளார் :-
“ ….. எனது சிந்தனைகள் எல்லோராலும் ஜீரணிக்கத்தக்கனவல்ல என்பதை நான் உணர்வேன். குறிப்பாக, ஆங்கிலத்தில் விரிவான வாசிப்பில்லாத சாதாரண வாசகர்களுக்கும் குறிப்பாக சமூகவியலில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் யதார்த்தத்தை மதக்கோட்பாடுகளுக்கு வெளியே நின்று விளங்க முடியாதவர்களுக்கும் என் கருத்துக்கள் குதர்க்கமானவையாகத் தோன்றலாம். யதார்த்தவாதி வெகுசன விரோதி. ஆதலால் நான் கூறும் கருத்துக்கள் அவ்வாறான வாசகர்களை என் மேல் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசப்படவுஞ் செய்யலாம். இருந்தும் என் சிந்தனைகளைச் சற்று நிதானமாக விளங்க முடியுமானால், அவற்றிலுள்ள சில உண்மைகள் தெளிவாகும். எனது சிந்தனைகள் எல்லாமே சரியென்று நான் கூறவில்லை. அவற்றை வாசித்து ஆராய்ந்த பின் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் காணும் பட்சத்தில் ஒதுக்கிவிடலாம். “
முன்னுரையின் இறுதியில், இறைவா என் அறிவைப் பெருக்குவாயாக ( அல்குர் ஆன்: 20: 114 ) எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்நூலில் பின்வரும் நான்கு பகுதிகளில் தனது கட்டுரைகளை அமீர்அலி வகுத்துள்ளார்.
இஸ்லாமும் முஸ்லிம்களும் – இலங்கை முஸ்லிம்கள் – தமிழர் போராட்டமும் முஸ்லிம்களும் – பொருளியல் சிந்தனைகள்.
பிற மதத்தவர்கள் இனத்தவர்கள் அறியாத பல வரலாற்றுச்செய்திகளையும் அமீர் அலி தமது கட்டுரைகளில் ஆங்காங்கே பதிவுசெய்துள்ளார்.
அதில் ஒன்று: கலீபா மாமுன் என்ற ஆட்சியாளன் பற்றிய தகவல்கள். இம்மன்னன் தனது கருத்துக்களுக்கு எதிரானவர்களின் மாற்றுக்கருத்துக்களுக்கும் மதிப்பளித்து கூர்ந்து கேட்பவர் .
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலைவேளையில் தனது அரசவையில் மதம் சட்டம் சம்பந்தமான விவாதங்களை நடத்துவாராம். அதற்கு முன்னர் வருகை தந்த அனைவருக்கும் விசேட விருந்துபசாரம் நடக்கும்.
ஒருநாள் அவ்வாறு விருந்துபசாரம் நடந்துகொண்டிருக்கையில் வந்து குறுக்கிட்ட வெள்ளை உடை தரித்த ஒரு இறைநேசர் ( சூபி ) மன்னர் கலீபாவை நோக்கி, “ நீர் வீற்றிருக்கும் இந்த அரியாசனம் உண்மையான இறை நம்பிக்கையுள்ள குழுவினரால் ஏகமனதான விருப்புடன் உமக்கு வழங்கப்பட்டதா அல்லது நீராகவே உமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வலுவாகப்பெற்றுக்கொண்டதா..? “ என்று தைரியமாக கேட்கிறார்.
எந்த அரசனும் தனது அதிகார உரிமையை மறுப்போரை மன்னிப்பதில்லை. சாதாரணமான ஒரு கலீபாவாக இருந்திருந்தால், அந்த இறைநேசர் சிறையில் தள்ளப்பட்டிருப்பார். அல்லது தூக்கிலடப்பட்டிருப்பார். ஆனால் இந்த மன்னர் மாமுன் எந்தப்பதட்டமோ கோபமோ இன்றி, “ இதை எனக்கு என் தந்தை ஹாருன் அல் றஷீத் உரிமையுடன் வழங்கினார். அவர் அரசோச்சியதெல்லாம் உண்மையான இறை நம்பிக்கைகளை காப்பாற்றவும் நாட்டில் அமைதி நிலைப்படவுமே. அந்த நம்பிக்கையாளர்கள் என்னைவிடத் தகுதியான ஒருவரைக் கலீபாவாகத் தேர்ந்தெடுத்தால் நான் என் பதவியைத் துறந்து அந்தக்கலீபாவுக்குத் தலை பணிவேன். “ என்று பதில் சொல்கிறார்.
இந்தச் சம்பவத்தை அறியும்போது, எமக்கு மகா பாரதத்தில் வரும் சார்வாகன்தான் நினைவுக்கு வருகிறார்.
குருஷேத்திரப்போரிலே வென்ற தருமரும் அவரது தம்பிமாரும் ஆட்சிக்கு வரும்போது, அந்த அரசவையிலிருந்து எழுந்த சார்வாக முனிவர்,“ தருமா… எத்தனைபேரை கொன்றழித்துவிட்டு நீ பட்டாபிஷேகம் செய்துகொள்கிறாய்..? “ எனக்கேட்டதும் அங்கு திரண்டிருந்த மக்கள் தருமனுக்கு எதிராக பேசினார் என்பதற்காக அந்த முனிவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம்.
ஐதீக மற்றும் வரலாற்று ஏடுகளில் இவ்வாறெல்லாம் சுவாரசியங்கள் நிகழ்ந்துள்ளன.
கலாநிதி அமீர் அலியின் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வாசகர்களுக்கு பல புதிய பாதைகளையும் திறக்கிறது.
அரசறிவியல், பொருளியல், சமூகவியல் படிக்கும் மாணவர்களுக்கும், தொடர்ச்சியாக அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதிவரும் விமர்சகர்களுக்கும் அமீர் அலியின் சிந்தனைச்சுவடுகள் சிறந்த உசாத்துணையாகவும் அமையும்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் அமீர் அலி கலந்துகொண்டு, பழமொழி கூறும் பொருளியல் உண்மைகள் என்ற கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். இக்கட்டுரையும் இந்நூலில் இறுதியாக இடம்பெற்றுள்ளது.
அதில் மக்களின் பாவனையிலிருந்த பொன் – வெள்ளி நாணயங்கள் பற்றியும் பேசுகிறார்.
அத்துடன் தமிழிலும் அதே சமயம் ஆங்கிலத்திலும் புழக்கத்திலிருக்கும் பழமொழிகளின் ஒற்றுமை பற்றியும் சொல்கிறார்.
தமிழிலே பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது ஆங்கிலத்தில் “Familiarity breeds contempt “ எனவும், “ பல மரங்கள் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் “ என்ற பழமொழி ஆங்கிலத்தில், “ Jack of all trades is master of none “ எனவும் இருப்பதை சுட்டிக் காண்பிக்கின்றார்.
“ கலப்பட நாணயம் நல்ல நாணயத்தைத் துரத்திவிடும். “ என்பதும் ஒரு பொருளியல் விதியல்ல, பலரும் பல நாடுகளிலும் அனுபவத்தில் உணர்ந்த ஓருண்மை என்று இடித்துரைக்கிறார்.
இவ்வாறு சாதாரண வாசகர்களையும் கவரும்வண்ணம் மிரட்டாத மொழியில் மிகவும் எளிமையாக எழுதிச்செல்கிறார்.
அந்த எளிமையே இந்நூலின் வலிமையாக துலங்குகிறது.
கலாநிதி அமீர் அலி அவர்கள் அவுஸ்திரேலியா பிரதமர் அலுவலகத்திற்கும் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக பணியாற்றுபவர்.
அவர் மெல்பனில் முன்னர் வெளியான உதயம் இருமொழி மாத இதழின் ஆண்டுவிழா ஒன்று கூடல் கருத்தரங்கிலும், எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் எழுத்தாளர் விழா மற்றும் கருத்தரங்குகளிலும் சிறப்புரைகளை நிகழ்த்தியிருப்பவர்.
அவரது எழுத்திலும் பேச்சிலும் தெளிவிருக்கும்.
இந்நூலுக்கு விரிவான அணிந்துரை எழுதியிருக்கும் இலங்கை வங்கியின் முன்னைநாள் உதவிப் பொது முகாமையாளர் முகிதீன் பிச்சை முகம்மது ஜலீல் அவர்கள், “ அமீர் அலி, பேதங்கள் கடந்த மாற்றுச்சிந்தனையாளர் “ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கலாநிதி அமீர் அலி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
—0—
letchumananm@gmail.com
- மலர் தூவிய பாதையில் …
- 4.ஔவையாரும் முருகக் கடவுளும்
- அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!
- யோகம் தரும் யோகா
- விரக்தியின் விசும்பல்கள்
- நானின்றி வேறில்லை
- சிகப்பு புளியங்கா
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்
- பயணங்கள்….
- படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்