ச.சிவபிரகாஷ்.
பள்ளி விடுப்பில்,
பாட்டி வீட்டிற்கும்,
சிறு கிராமத்திலிருக்கும்,
சித்தப்பா வீட்டிற்குமாக
“பயணம் “…
நெடுந்தூர பயணமாய்,
நெடுங்கனவுகளோடு,
தொடர் வண்டியில்,
தொய்வதறியா பல மைல்கள்
“பயணம் “…
ஓ…
ரயிலே, ரயிலே,
கொஞ்சம்,
மெதுவாய் போயேன்,
ரசிக்க வேண்டியது நிறைய உள்ளது.
ஆண்டுக்கொருமுறை-மட்டுமே,
எனக்கு காட்சிபடும்,
பசுமை வயல்வெளிகளும்,
பாறை மலைகளும்,
எண்கள் போட்ட பெரும் மரங்களும்,
மீசையோடு அருவாள் வைத்திருக்கும்,
“பெரிய சாமியும்”
எங்குமே நகர்ந்து பார்த்திடாத குதிரைகளும்
வழிதொடர்ந்தே வரும் மின் கம்பிகளும்,
இரயிலும், தண்டவாளமும்
தந்திடும் இசையை ரசிக்கவும்
இந்த
“பயணம் “…
பாட்டி சுட்டு தரும் முறுக்கும், அதிரசமும்,
அவள் சொல்லும் கதைகளுக்கும்,
தாத்தா வாங்கி தரும்,
அவல், பொரிகளுக்கும்,
மாமா அழைத்து செல்லும்,
கொட்டகை சினிமாவுக்குமான,
“பயணம் “…
பேரன் வந்திருக்கானா?
பாட்டியிடம் அறிந்து வந்தவர்,
தரும் காசில் வாங்க,
கைவிரலில் மாட்டிக்கொண்டு,
ருசிக்கும்,
கட்டில் கடையின்…
குடல் அப்பளம்,
இலகுவான,
இலந்தை வடையை புசிக்கவும்,
இந்த,
“பயணம் “…
ஊர் நண்பர்களோடு…
மாற்றார் வீட்டில் கல்லெறிந்து,
விழுந்த மாங்காய் திண்பதும்,
விலை மதிப்பில்லாதது.
கல்லெறிந்த குட்டை,
உவப்பான சைக்கிள் ஓட்டம்,
ஊர் குருவிகளின் இரைச்சல்,
நிசப்த இரவில்,
கேட்டும் புரியாத,
கோடங்கியின் குடுகுடுப்பை வாக்கு.
அடடா…
எத்தனை, எத்தனை
இனிமை,
இந்த பயணத்தில்.
ஆண்டு விடுப்பில்,
அமையும் “பயணம் “,
பள்ளிகள் தொடங்க முற்றுப் பெறுகிறது.
இப்படி தான்…
ஆரவாரமான இளமை பருவம்,
ஆர்பாட்டமின்றி… நினைவுகளோடு,
முதுமையில் முடித்துக்கொள்கிறது.
காலமே…
ஓ…
எந்தன் காலமே,
கொஞ்சம் மெதுவாக நகர்ந்திடு.,
நினைவுகளாய் நில்லாமல்,
நிழற்படமாய் காட்சி படவேண்டும்,
என்
மகனும் கண்டறிய.
சந்தர்ப்ப பயணத்தில்…
ரயிலே…
ஓ… ரயிலே,
கொஞ்சம் வேகமாய் போயேன்.,
வழியில் பார்த்த வயல் வெளிகள்,
பலவும்,
வீட்டு மனைகளானதெப்போ?
பாறை மலைகளும்,
கல்லுடைப்பில் சுருங்கி தான்
போனதே.
ரயில் சேவை விஸ்தரிப்பில்,
வீழ்ந்து போன,
மீசை வைத்த சாமி,
மீண்டு வருவாரோ?.
பாட்டி முதியோர் இல்லத்தில்,
தாத்தன் பரலோகத்தில்,
மாமனோ வெளிநாட்டில்,
சித்தப்பா சின்ன மகனார் வீட்டில்.
இனி…
எங்கே செல்வது?.
என் மகனிடம்,
அறிமுகம் செய்வதெப்படி?.
விடையறியாது…
மகனே !
விடுப்பில்,
எங்கே செல்லலாம் என்றேன்.
நான் எங்கேயும் ‘வரல’-என்றவன்
Google – ல் தேடிக்கொண்டிருந்தான்,
என் கிராமத்தை.
உலகமே சுருங்கி கொள்கிறது.,
பயண பாதைகள் மட்டும் விசாலமாகிறது,
என் ஏக்கத்தை போல்…
- மலர் தூவிய பாதையில் …
- 4.ஔவையாரும் முருகக் கடவுளும்
- அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!
- யோகம் தரும் யோகா
- விரக்தியின் விசும்பல்கள்
- நானின்றி வேறில்லை
- சிகப்பு புளியங்கா
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்
- பயணங்கள்….
- படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்