அடிவாரமும் மலையுச்சியும்

This entry is part 9 of 10 in the series 27 ஜூன் 2021

எஸ்.சங்கரநாராயணன்

முதலில் சிறு வேலை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய பொறுப்புகளை நம்பிக் கொடுக்காத வேலை. ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் திறமை பார்த்து காலப்போக்கில் மேலும் அதிகார அளவுகளை அதிகப்படுத்தித் தருவார்கள். அந்நாட்களில் நிறைய ஓய்வு கிடைத்தது. உண்மையில் ஊரைவிட்டு வெளியூர் என்றாலும் இந்த வேலை அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. கல்லூரிக் காலத்திலேயே வாசிப்பு ருசி கண்டவன். அப்படியே கதை எழுதவும் வருவான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவன் கதை எழுத ஆரம்பித்தது குறித்து அவன் அம்மாவுக்குக் கவலை இருந்தது. படிக்கிற காலகட்டம். கல்லூரி நான்காம் ஆண்டு. இந்நேரம் பாடங்களில் கவனம் செலுத்தாமல், இவன் பாட்டுக்கு… இருக்கறதை விட்டுட்டுப் பறக்கறதைப் பிடிக்க அலைகிறானே, என்று அவளுக்குக் கவலை. ஆனால் அவன் ஒரு பிடிவாதக் கிறுக்கன். எதை நாம செய்ய வேண்டாம்னு சொல்கிறோமோ, அதைத்தான் பச்சக் என்று பற்றிக் கொள்வான். அம்மாவால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்திருக்கிறது.

வேலைநேரம் போக மீதி நேரங்களை வாசிக்க எழுத என்று கழித்தான் அவன். உலக இலக்கியம் படித்தான். நகரம் இது. என்பதால் நிறைய ஆங்கில இலக்கியப் புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. அடிக்கடி தெருவோர பழைய புத்தகக் குவியல்களுக்கு ஊடே அவனைப் பார்க்கலாம். புதையல் ரசிகன்! அவை அவனது வாசிப்பை விகாசப் படுத்தின. அதுவரை சம்பவங்கள் திருப்பங்கள், என்று கதை எழுதிக் கொண்டிருந்தான். வாசிப்பு ஓர் இலக்கிய அனுபவமாக ஆக வேண்டுமானால் சம்பவங்கள் அல்ல, கதாபாத்திரங்களில் நம்பகத் தன்மை இருந்தால் மாத்திரமே கதை மனசில் நிற்கும். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும். அதற்கு நீ திருப்பங்களான சம்பவங்களை அல்ல, மனிதர்களைப் படைத்துக் காட்டவேண்டும். பொழுதுபோக்கு அல்ல அதன் தாத்பரியம்.

வாசிப்பதால், எழுதுவதால் என்ன பயன், என்று பலமுறை அவனது நண்பர்கள் அவனைக் கேட்டிருக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து முடிவுகள் பெற இலக்கியம் பழக்கப் படுத்துகிறது. சிறு புள்ளி வைத்துவிட்டு இலக்கியம் கோலம்போட நம்மை அழைக்கிறது. வாழ்வின் எந்த ஒரு பிரச்னை என்றாலும் நிதானமாய் அதை அணுக நல் வாசிப்பு உதவுகிறது, என்று நம்பினான் அவன். இந்நாட்களில் அவனது சில கதைகள் சிற்றிதழ்களிலும் பிரசுரம் ஆக ஆரம்பித்திருந்தன. அவன் அம்மாவுக்கே அவனது எழுத்தின் வளர்ச்சி ஆச்சர்யமாய் இருந்தது. அவன் எழுதிய கதைகள் வந்த பத்திரிகைகளை ஊருக்குப் போகும்போதெல்லாம் எடுத்துக்கொண்டு போய் அம்மாவிடம் காட்டினான். வண்ணங்கள் இல்லாத கருப்பு வெள்ளை இதழ்கள் அவை. அந்த இதழ்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டதே இல்லை. இந்தப் பத்திரிகைகளை யெல்லாம் அவன் எப்படி அறிந்துகொண்டான்? அந்தப் பத்திரிகைகளில் வந்த வேறு கதைகளை விட இவன் கதைகள் நன்றாகவே இருந்ததாக அம்மாவுக்குத் தெரிந்தது. உள்ளூற அவளுக்கு அது மகிழ்ச்சி அளித்தது. எப்படியும் அவனுக்கு வேலை என்று எதோ அமைந்து தன் போக்கில் அவனது காலம் பெரும் சுற்றுக்கு வந்திருந்தது. இனி அவளது மேற்பார்வை அவனுக்குத் தேவை இராது. எப்போதுமே அவன் அதை அனுமதித்தது இல்லை, என்பது வேறு விஷயம்!

ராமகிருஷ்ணனுக்கு புதிய வேலை கிடைத்தது. நட்சத்திர அந்தஸ்து உள்ள கம்பெனி அது. நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு என சில சம்பிரதாயங்களைத் தாண்டிவர வேண்டி யிருந்தது. நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அவனைப் பேட்டி காண அழைத்து, சந்திக்குமுன் பானம் தந்து உபசரித்தார்கள். அவனது அலுவலகம் பெரிய வணிக வளாகத்தில் ஏழாவது மாடி. லிஃப்ட் ஏறிப் போக வேண்டும். ஒவ்வொரு மாடியில் நின்று கதவு திறக்கும்போதும் லிஃப்ட் எத்தனையாவது மாடி என்று குரல் எழுப்பியது. அதை இயக்க சீருடைப் பணியாள் இருந்தான். முழுக்கவே குளிர்பதனத்தில் இருந்தது அலுவலகம். ஆபிசே ஒரு மகா ஃபிரிஜ்ஜுகுள் இருந்தது போலத் தோன்றியது. ஜன்னலில் இருந்து பார்க்க மேகங்களே கிட்டே தெரிந்தாற் போல பிரமை தந்தது. யாரோ மேகம் வரைந்த ஓவியத் தட்டியை வெளியே வைத்திருக்கிறார்களா என்ன என்று தோன்றியது. கை நிறையச் சம்பளம். அதிகம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வேலை. அவன் படித்த ஆங்கில இலக்கியங்கள் சற்று சரளமாக அவனை ஆங்கிலம் பேச ஒரளவு புழக்கப் படுத்தின. எல்லாருமே நேர்த்தியாக உடையணிந்திருந்தார்கள். அவர்களில் சிலர் கழுத்தில் ‘ட்டை’ அணிந்திருந்தார்கள். எல்லாருமே வேலைநேரத்தில் மகா பரபரப்பாய் இயங்கினார்கள். அலுவலக நேரம் முடிந்த ஜோரில், அவர்களிடையே அதுவரை நிலவிவந்த அந்த செயற்கைத்தன்மை விலகி அவர்கள் முகத்தில் இயல்பும் புன்னகையும் மீண்டாற் போல இருந்தது.

தற்செயலாக அவன் பொழுதுபோக்காக எழுத்தைத் தெரிவு செய்திருந்தான். அந்த இளம் பருவத்தில் அவனது கதைகள் காதல் போன்ற சல்லாப உல்லாசங்களில் இயங்கவில்லை, என அம்மா கவனித்தாள். முதலில் அவன் எழுதிய திடுக்கிடும் அல்லது எதிர்பாராத முடிவு தரும் கதைகளிலேயே கூட இந்த விளையாட்டுத்தனம் இல்லை என்பதில் அம்மாவுக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது. அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளை அவன். அவளுக்கு இரட்டைப் பொறுப்புகள் இருந்ததாக உணர்ந்தே அவனைப் பராமரித்து வளர்த்து ஆளாக்கி யிருந்தாள் அம்மா. குறுந்தாடி வைத்து இலக்கியக் கூட்டம் என்று எங்கே வெளியே கிளம்பினாலும் ஒரு ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டு கிளம்பினான் அவன். அதற்குள் சில புத்தகங்கள் வைத்திருந்தான். சென்னையில் எப்படி இருப்பானோ. பஸ்சிலோ ஓய்வு நேரத்திலோ கிடைத்த நேரம் கிடைத்த இடத்தில் எதாவது வாசிக்க ஆரம்பித்து விடுகிறான். பொதுவாக அதிகம் பேசாமல் புன்னகை மாத்திரம் வெளிக்காட்டுகிற அமைதியான பையன் அவன்.

அலுவலகம் முடிந்த மாலை நேரங்களில் அவன் கடற்கரை என்றும் பெரிய வணிக வளாகங்கள் என்றும் பொழுதைக் கழிக்க அல்லது போக்க விரும்பவில்லை. பெரும்பாலும் வாசிப்பதிலும் எழுதுவதிலுமே அவன் ஈடுபட விருப்பம் காட்டினான். அவன் மடிகணினியில் எதாவது கதை, பாதியில் விட்டிருந்ததைத் தொடர்வான். அல்லது புதிதாக கதையோ. வாக்கியத்தை ஒடித்து ஒடித்து புதுக்கவிதையோ எழுதிக் கொண்டிருப்பான். அவனுடைய புனைப்பெயரைப் பார்த்ததும் அம்மாவுக்கு வேடிக்கையாய் இருந்தது.

புத்தகங்கள் உலகத்தின் கண்ணாடி என நினைத்தான் அவன். வாழ்கிற வாழ்க்கையின் சாறு புத்தகங்களில் அருந்தக் கிடைக்கிறது என நினைத்தான். எதாவது நல்ல வரிகள், தத்துவத் தெறிப்புகள் வாசிக்கும்போது கிடைத்தால் ஒரு திகட்டலில் மனம் அடுத்த வரிக்கு நகராது. அடாடா, என்று புத்தகத்தை மடியில் போட்டுக் கொண்டு அப்படியே கண்ணை மூடிக்கொண்டு சிறிது திளைப்பான் அதில். இப்படி ஒரு வரி நம்மால் எழுத முடியுமா என்று ஆர்வப் படுவான். ஒரு நல்ல படைப்பு அநேக நல்ல படைப்புகளை பிற எழுத்தாளர்களிடம் ஊற்று திறந்து விட்டு விடுகிறது, என்று தோன்றும். நம் வாழ்வின் எதும் சம்பவமோ, நாம் யோசித்து வைத்திருந்த ஒரு கருத்தோ வேறு வகையில் மெருகேறி இன்னொரு எழுத்தாளர் அதைச் சொல்லிச் செல்லும்போது மனம் விம்மும். எழுத்து என்பது உனது இடையறாத உள் வளர்ச்சி, என நினைத்துக் கொண்டான். அவன் அறையெங்கிலும் அவனது கட்டிலிலும் மேசையிலும் புத்தகங்கள் கிடந்தன. சில புத்தகங்களில் அவன்விட்ட இடத்தில் இருந்து மறுபடி வாசிக்க என்று புத்தகத்தின் நூல்சரடு அடையாளம் வைத்திருந்தான். அவனைப்போலொத்த பிற இளைஞர்களோவெனில் பாட்டில்களோடும், புகை வஸ்துக்களோடும் பழக ஆரம்பித்திருந்தனர். அவனிடம் எப்படியோ இப்படி முஸ்திபுகள் ஒட்டவே இல்லை என்பது அம்மாவுக்கு ஆசுவாசம்.

அவனது அலுவலகத்தில் பல்வேறு வயதில் நபர்கள் அவனுடன் வேலை செய்தார்கள். அவர்களில் அவன் ஒருவேளை ஆக இளையவனாக இருக்கலாம். வயதில் பெரியவர்கள் என்றாலும் வயது தெரியாதபடி அவர்கள் தலைச்சாயம் பூசுகிறவர்களாய் இருந்தார்கள். தான் வாழ்ந்த வளர்ந்த சூழலுக்கு அவர்களைப் பார்க்க சற்று அலட்டலான காரியமாய்த் தெரிந்தது. அவனை அங்கே எல்லாருக்கும் பிடித்திருந்தது. வேலையில் அவன் காட்டிய சுறுசுறுப்பு காரணமாய் இருக்கலாம். இருப்பவரில் இளையவன் என்பதே அந்த ‘சாயக்’ கூட்டத்தில் அவனுக்கு மரியாதை தந்திருக்கலாம். அவன் சற்று வேடிக்கையாகப் பேசுவான். அவனது நகைச்சுவையை அங்கே எல்லாரும் விரும்பினார்கள். அவர்கள் எல்லாருமே சற்று நிகழ்காலத்தை மீறிய உற்சாகம் வேண்டியவர்களாய் இருந்தார்கள். அந்த ‘காபின்’ சிறையில் அவர்கள் பணி நேரத்தில் மகா மும்முரம் காட்ட வேண்டி வந்தது. எப்படா இந்த இம்சையில் இருந்து விடுபடுவோம் என்று இருந்தது அவர்களுக்கு. சிலசமயம் தங்கள் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று உடலை நெறித்து சோம்பல் எடுத்தார்கள். அவர்கள் விரல்கள் தட்டச்சு செய்து செய்து மரத்து விட்டிருந்தன. பெரும் அலுப்பு காட்டின. அந்த அலுப்புக்குச் சிறு மாற்றாக ‘பிரஷர் பந்துகள்’ பயன்படுத்தி அவர்கள் விரல்களுக்கு, உள்ளங்கைக்கு ஒத்தடம் தந்தார்கள்.

மிகப் பெரும் சம்பளம். அவர்கள் சம்பளத்தை வருடக் கணக்காக பிறரிடம் சொன்னார்கள். கார்ப்பரேட் அமைப்பே ஒரு சம்பிரதாய அலட்டலோடு தான் இயங்கிக் கொண்டிருந்தது. காலையில் உள்ளே நுழைகையிலேயே சாமியார் ஆசி வழங்குவது போல எல்லாருக்கும் புன்னகையுடன் ‘காலை வணக்கம்’ சொல்லியபடி நுழைதல்… என அங்கே நடைமுறைச் சடங்குகள் நிறைய இருந்தன. மாதம் ஒருமுறை கம்பெனி செலவிலேயே அவர்களை குஷிப்படுத்த உணவு விடுதிகளில் தாக சாந்தி உட்பட கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. வாழ்க்கை என்பதே கொணடாடப்பட வேண்டிய ஒன்று. அங்கே துக்கங்களுக்கு இடம் இல்லை. தனி மனிதனின் துக்கம் அங்கே ஒரு பொருட்டே அல்ல… என்கிற மாதிரி அவர்கள் நடந்து கொண்டார்கள். சமுதாய மதிப்பீடுகளைத் தாண்டி அவர்களின் சிற்றுலகு தனது தனி அடையாளங்களுடன் இயங்குவதாக அவனுக்குப் பட்டது. மொத்த வெளியுலகுக்கும் அங்கே வேலை செய்கிற அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை போல் தோன்றியது. ரேஷன் கார்டு பற்றி அவர்களுக்குத் தெரியாது. உடல்நலக் குறைவு என்றால் அவர்களுக்கு மருத்துவ வசதிகள் கம்பெனி மூலமே செய்துதரப் பட்டன. சம்பளம் தாண்டி தாங்கள் வைத்திருக்கும் கடன் அட்டைகளில் வேண்டிய பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒருவர் பிறந்த நாளுக்கு மற்றவர் வாழ்த்து அட்டைகள் வழங்கி, பூங் கொத்துகள் தந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கும் விடுதிக் களியாட்டங்கள் இருந்தன. வீடு, சமையலறை எல்லாம் அவர்களுக்கு நினைவு இருக்குமா தெரியவில்லை.

தனது பூர்விக அடையாளங்களைக் கழித்துக் கொண்டு இந்தப் புதிய சூழலோடு ஒன்றுபட அவனால் முடியவில்லை. பொதுவாக அவனிடம் ஓர் அமைதி வந்திருந்தது. நமக்கு ஒட்டாத இந்த உலகு. அவர்களுக்கு அது பிடித்ததா தெரியாது. எல்லாருமே அவரவர் வீட்டில் வேறு மாதிரி தான், இன்னும் சற்று இயல்பாக, கழுத்தை இறுக்கும் ‘ட்டை’யை உதறி விட்டு இருப்பார்கள் எனத் தோன்றியது.

ஒருவேளை எழுத்தாளன் என்று நான் எல்லாவற்றையும் ஒரு கண்டிப்பு பார்வையில் பார்க்கிறேனா என நினைத்துக் கொண்டான். எழுத்து அவன் பார்வையை சூட்சும அளவில் இயக்குவது போல இருந்தது. அவனுக்கு அது பிடித்தும் இருந்தது. எது எப்படியாயினும் அந்த கைநிறையச் சம்பளமும், அந்த அலுவலகம் முடிந்த ஜோரின் விடுபட்ட நிலையும் அவனுக்கு வேண்டும். அதற்குப்பின்னான அந்த சுதந்திரக் காற்று எத்தனை இனிமையாய் இருக்கிறது.

அவனுக்கு விநோதினி நினைவு வந்தது. தன் வயதைக் குறைத்துக் காட்ட அவள் பெரும்பாடு படுவதாகப் பட்டது. சில பெண்கள் மகா இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகள் அணிந்துகொண்டு மூச்சுவிடவே சிரமப் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவளது முகப் பூச்சும் கண் மையும் உதட்டுச் சாயமும் திகைப்படையச் செய்தன அவனை. நீ அழகிதான். அதை யாருக்கு நீ நிருபிக்க வேண்டும், என நினைத்துக் கொண்டான். அழகு என்பது உண்மையில் மகா எளிமையானது. பூரண எளிமை, அது அல்லவா அழகு. அத்தோடு அதை எத்தனை சிக்கல் ஆக்கிக் கொள்கிறாயோ அந்த அளவு அந்த அழகு தன் தன்மையில் இருந்து விலகிப் போய் விடவில்லையா?

விநோதினியின் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். இதுகுறித்து அவளுக்குப் பெருமை உண்டு.  அவளது உடைகள் அனைத்துமே ஆடம்பரமானவை. வண்ணத் திகட்டல்கள். விநோதினி அவனைப் பார்த்துப் புன்னகை செய்வாள் தினசரி. அவனது நகைச்சுவைக்கு அவள் சற்று அதிகம் சிரிப்பதாய்த் தோன்றும் அவனுக்கு. அது எனக்கு மகிழ்ச்சி அளித்ததா தெரியாது. ஆனால் அவளைக் கலகலப்பாக்க அவன் ஜோக் அடிப்பது இல்லை. இதுவும் சற்று கடுமையான உள் விசாரணையாய்ப் பட்டது அவனுக்கு. எதையும் விசாரிக்காமல் இயல்புப்படி எடுத்துக்கொள்ள என்னால் ஆகாதா, என்றிருந்தது. அவன் கதைகள் எழுதுவான் என்பதே அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. அதுவும் தமிழில் என்றால் அவர்களில் யாருக்கும் அது சுவாரஸ்யப் படாது. அவர்கள் ஆங்கிலத்தில் பெஸ்ட் செல்லர்கள் ஒருவேளை வாசிக்கலாம். பத்து பதினைந்து பக்கத்துக்கு ஒருதரம் விரசமும் ஆபாசமுமாய் வாசிக்க அவர்களுக்குப் பிரியம் இருக்கும். மொத்தையான 600 700 பக்க பெஸ்ட் செல்லர்கள். அலுவலக மதிய உணவு இடைவேளை ஓய்வுகளில் விநோதினியே இப்படிப் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வாசிக்கிறாள்.

விநோதினியின் பார்வை அவனை தனி கவனத்துடன் வெறிப்பதாக அவன் உணர்ந்தான். அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஏன் அவனுக்கு இப்படித் தோன்ற வேண்டும்? வருடம் ஒருமுறை இவள் வெளிநாடு போவாள், .அல்லது அவர் புறப்பட்டு வருவார். அலங்காரப் பிரியை விநோதினி. அவளைப் பார்க்க அவன் வயதில் மிக இளையவன். அந்தப் பார்வை… சற்று முதுகு வரை உறுத்திய பார்வையாக அது இருந்தது. அதில் அவனுக்கு மாத்திரமே புரியும் படியான ஒரு புன்னகை வீச்சு இருப்பதாக உணர்ந்தான். அதற்கு என்ன பொருள் தெரியவில்லை. அவனுக்கு அம்மாவயது இருக்கலாமா அவளுக்கு? இது என்ன கணக்கு, அதுவும் அலுவலகத்தில். கூட வேலை பார்க்கிற ஒரு பேரிளம் பெண்ணுக்கு… அவள் பெண், அவன் ஆண், அவ்வளவுதான்.

எனினும் தன்னை அவள் பார்த்த பார்வையில் ஓர் அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தது. அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. என்ன அழுத்தம், இவள் என்னிடம் எதுவும் தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறாளா? எனில் பேசலாமே. அதில் என்ன தடை. அவனைப் பற்றி அவளிடம் ஒரு அதித அக்கறை இருந்ததாகச் சொல்லலாமா? அதை அவன் உறுதி செய்துகொள்ள விரும்பினான். ஒரு வேடிக்கை போல அவன் இப்படி நினைத்துக் கொண்டான். அட எழுத்தாளா, உன் அலசலுக்கு உள் சூட்சுமத்துக்கு எதாவது வேலை வந்துகொண்டே யிருக்கிறதே.

ஒரு ஓய்வுகால உணவு விருந்தில்  திடீரென்று விநோதினி “மேனேஜர் சார். உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்கானே… சாரி, ராம்கி, அவன் இவன்னு சொல்லலாமில்லே? இது அலுவலகம் இல்லையே…” ராமகிருஷ்ணன் சற்று சங்கடமாய், “பேசுங்க விநோ,” என்றான் அதே உரிமையுடன். அது அவளுக்குப் பிடித்திருந்தது. கார்ப்பரேட் வழக்கத்தில் அக்கா, சிஸ், அண்ணா, ஐயா சம்பிரதாயங்கள் எடுபடாது. பெயர் சொல்லிவிடலாம். அவனும் அவளை விநோ என விளித்ததை அவள் ரசித்ததாகத் தெரிந்தது. “நம்ம ராம்கி சாதாரண ஆள் இல்ல. தமிழில் அவன் ஓர் எழுத்தாளனாக்கும். நம்ம யார்கிட்டயாவது இதைப் பத்தி அவன் மூச்சு விட்ருப்பானா?” என்றாள் பொய்க் கோபத்துடன்.

அந்த ஜமாவில் எத்தனை பேர் அதை ரசித்தார்கள் என்பது தெரியாது. “அடேடே அப்படியா? கங்கிராட்ஸ்!” என மேனேஜர் கை குலுக்கினார். “என்ன எழுதியிருக்கீங்க…” போன்ற விவரங்கள் அவர் கேட்கவில்லை. கூட இருந்த இன்னொரு அலுவலக நண்பர் “எங்களுக்கெல்லாம் ரொம்பப் பெருமையா இருக்கு… பாலகுமாரன் மாதிரி நீங்க வரணும்” என்று வாழ்த்தினார். “நீங்க பாலகுமாரன் படிப்பீங்களா?” இல்ல, என் ஒய்ஃப், என்றார் அவர் புன்னகையுடன். தமிழில் எழுதுவதையும் வாசிப்பதையும் அவர்கள் ஒரு மாற்று குறைத்தே எடுத்துக் கொள்வார்கள்… என்பது அவனுக்குத் தெரியும். அதனால்தான் தான் எழுதுவது பற்றி அவன் அலுவலகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் விநோதினிக்கு அவனைப் பாராட்ட அது ஒரு சாக்காக இருந்திருக்கலாம். எதோ ஒரு காரணம் அவனை நெருங்கிவர அவளுக்கு வேண்டி யிருந்தது. அவள் தாய்மொழியும் தமிழ் அல்ல. தெலுங்கு, என்று அவன் அறிந்திருந்தான். அவன் கிட்டத்தில் வந்தாள் விநோதினி. “எல்லார்க்கும் இப்பிடியொரு திறமை அமைஞ்சிறாது ராம்கி…” என்று அவன் கண்ணைப் பார்த்துப் புன்னகை செய்தாள். தனியே இருந்தால் கன்னத்தில் தட்டி யிருப்பாள். நான் என்ன எழுதுகிறேன், என்றே தெரியாமல் கிடைத்த பாராட்டு அவனுக்கு ரசிக்கவில்லை. அவனிடம் பேசவும் நெருங்கவும் அவள் வெகு நாட்கள் காத்திருந்து ஒரு சந்தர்ப்பத்தை அவள் ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிந்தது. டென்னிஸ் ஆட்டத்தில் ஃப்ரன்ட் வாலி ஷாட் போல.

அன்றைக்கு அறைக்குத் திரும்பியபோது மிகவும் அலுப்பாக உணர்ந்தான். அத்தனை பேர் மத்தியில் என்றாலும் கூட விநோதினி அவனிடம் காட்டிய கரிசனம் தனியே ரசாபாசமாகத் தான் அவனுக்குப் பட்டது. ஆ அவள் அவன் ரசிகை, என்ற கதை வேண்டாம். அவளுக்கு அவன் எழுத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்குத் தமிழே தெரியாது. அவள் ஆங்கிலத்தில் வாசிப்பதும் செமி போர்னோ ஆங்கில தடித் தலையணைகளே. என்னை ஒரு கணக்கு போட்டு நெருங்குகிறாள் இவள், என நினைத்துக் கொண்டான்.

அவள் அவன்மீது காதல் கொண்டிருக்கிறாளா! அவளது கண்களில் ஒரு தவிப்பு தெரிந்தது. காதல் என்பது தவிப்பா என்று யோசித்துப் பார்த்தான். எழுந்துபோய் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து வந்தான். வேண்டிய அளவு குடித்துவிட்டு மீதியைக் கட்டில் அருகே வைத்துக் கொண்டான். காதல் எப்படி ஆரம்பிக்கிறது, பிறகு எப்படி அது வளர்கிறது என்று மனம் ஓடியது. காதல் போன்ற உணர்வுகளை பெரிதாக தன்னில் அனுமதித்தவன் அல்ல அவன். அவன் படித்த பள்ளி கோ எஜுகேஷன்தான். என்றாலும் எந்தப் பெண்ணைப் பற்றியும் அவன் கனவு கண்டானில்லை. அவனது நண்பன் வெங்கடேசன் அந்தப் பள்ளிவயதிலேயே காதல்வயப் பட்டான் என்று பார்த்திருக்கிறான் அவன். வேடிக்கையாகவே அது பட்டது. இதெல்லாம் காற்றுக்குக் கிளை ஆடுவதைப்போல. தானே அடங்கி விடும் உணர்வுகள், என்றுதான் அப்போது நினைத்தான்.

ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள். கரும்பலகையில் என்னவோ எழுதிப் போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு, மாலதிக்கு, அவள் கரும்பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என்னவோ குறுகுறுப்பு. மாலதி தற்செயலாகத் திரும்பிப் பார்ப்பதை ராமகிருஷ்ணன் பார்த்தான். இந்தப் பக்கம் வெங்கடேசன், பாடத்தை கவனிக்காமல் அவளையே வெறித்தபடி. அவள் பார்க்கவில்லை என்ற தைரியம். அவள் சட்டென அவனைக் கண்டுபிடித்தவுடன் தலையைப் படபடப்புடன் குனிந்து கொள்கிறான். அவளுக்கும் அந்த வௌவால் படபடப்பு வந்திருக்க வேண்டும். உள்ளே ஒரு திடுக். ரயில் கிளம்புகிற அசைவு தட்டியிருக்க வேண்டும். சரிதான், இதுங்க படிச்சி பாஸ் பண்ணினா மாதிரிதான் என நினைத்துக் கொண்டான் ராமகிருஷ்ணன். ஒருசமயம் வெங்கடேசன் வகுப்புக்குள் நுழைகிறான். அவள் எதற்கோ வெளியே போகிறாள். சட்டென எதிர் எதிரே அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். திரும்ப அந்த ரயில் கிளம்புகிற திடுக். முன்னைவிட இந்த திடுக் ரயில் கிளம்புவதை அறிவித்திருக்கலாம். தொடர்ந்த அடுத்தடுத்த திடுக் காதலுக்கு சுவாரஸ்யமானது. ஏற்கனவே இருந்த கனவு அப்போது நனவுலகத்துக்கு வருகிறது போலும். எதிர்பாராததை எதிர்பார்த்து சுவாரஸ்யத்துக்குக் காத்திருக்கிறது வாலிபம்.

அதைத் காதல் என்பர். காதல் என்பது தூக்கம் தொலைத்தல்.  அந்தப் பார்வை அவர்களுக்கு மாத்திரமே ஒருவருக்கு ஒருவர் படபடப்பைத் தருகிற பார்வை. திரும்பவும் பார்க்க வைக்கிற, பார்க்கத் தூண்டுகிற பார்வைப் பரிமாற்றங்கள். அதுவரை அறிந்த உலகைப் பின்தள்ளி சட்டென்று எதோ முந்தி உள்ளே வருகிறது. வெங்கடேசனின் சைக்கிள் மணி அடிக்கடி கிணுகிணுக்கிறது. அவளுக்காக. அந்த மணியின் பிரத்யேக ஓசையை அவள் அறிவாள். இப்படியாக அவனை அவளும் அவளை அவனும் மேலதிகம் அறிந்து கொள்ளவும் ஆர்வப்பட்டு முண்டி யடிகிறார்கள்.

அது காதல். ஒருவேளை எல்லாம் சரியாக அமைந்து அவள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தால் முதலில் அவள் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு விலகிப் போனாள். என்ன தைரியம் இவனுக்கு, என அவளுக்கு, ஆனால் கோபம் வரவில்லை. பெண்கள் ஆண்களின் இந்த முனைப்புகளை வரவேற்கத் தான் செய்கிறார்கள். அடுத்தடுத்த நாள் அவனை நேரில் பார்ப்பதை அவள் தவிர்த்தாலும் ஓரக் கண்ணால் இவன் நம்மை நோட்டம் விடுகிறானா, என்று தேடியாகிறது. அவள் தேடுகிறாள் என்பது இவனுக்கும் தெரிகிறது. இந்தக் காதல் என்ற ஒன்று… அவர்களைத் தவிர, அந்த இருவரைத் தவிர வேறு யாரும் அறியாமல் வளர்வதாக அவர்களே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது சினிமாவில் மாறுவேஷம் போட்டாற் போல படம் பார்க்கிற எல்லாருக்கும் தெரிந்த கதையாகவே இருக்கிறது.

இதற்கு அடுத்த நிலையில் அவனைப்பற்றி அவளும் அவளைப்பற்றி அவனும் தன்னளவில் உரையாடல்கள் நிகழ்த்தி ஒத்திகைகள் பார்த்துக் கொள்வர். எதிர்பாராத அளவில் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் கணங்கள் கடவுளின் ஆசி போலவே தோன்றும். ஒருவரை ஒருவர் தனியே சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தால்… அதை, அந்தக் கணத்தை என்னென்பது  காவியங்களில் தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள், என்று அதை விளக்குகிறார்கள். தேவதைகளுக்கு வேறு வேலை இல்லாமல் இதை ஒரு வேலை என எடுத்துச் செய்கிறார்கள்.

ஒருவரோடு ஒருவர் கலந்து பழக ஆரம்பித்த கணங்கள், ஒருவர் அருகாமையை மற்றவர் பிரியப்படும் தருணங்கள் அற்புதமானவை அல்லவா. இந்த ஒவ்வொரு நிலையிலும் கனவு பூ என விரிகிறது. பிறகு மணம் தட்டுகிறது. பிறகு தேனும் சுரக்கிறது. தனியே சந்தித்துப் பழகிய பின் அந்த முதல் ஸ்பரிசம். அவன் விரலை அவள் விரல் உரசுகிற சிறு ஸ்பரிசத்தின் பரவசம்… அதுதான் எத்தனை கிளர்ச்சிகரமானது… என தெரிந்தவன் போல நினைத்துக் கொண்டான் ராமகிருஷ்ணன்.

இப்படியாக காதல் ஆணையும் பெண்ணையும் மெல்ல மெல்ல அருகே கிட்டே நெருக்கமாய்க் கொண்டு வருகிறது. இயல்பு போல அது நிகழ வேண்டும். இவள்… விநோதினி என்னைக் காதலிக்கிறாளா, என நினைத்துக் கொண்டான். விநோதினி ஏற்கனவே மணமானவள். குழந்தை இல்லை. பெரிதும் தனிமை வாட்டவே அவள் தன்பொழுதுகளைக் கழிக்க நேர்ந்து விடுகிறது. மண வாழ்க்கை பழக்கப் படுத்தப் பட்டுவிட்ட பெண் அவள். அதாவது கட்டில் சுகம், கலவி ருசி அறிந்தவள். ஆங்கில பெஸ்ட்செல்லர் காட்டாத காட்சியா. இனி அவளால் ஒருவனைக் காதலிக்க முடியுமா? இது ஓர் உறவு நிலை. காமத்தின் விகுதி இது. அதாவது கலவி அறிந்தவள். அதன் முழு உத்வேக உல்லாச சல்லாப முயக்கங்கள். அதன் ஆரோகணம் அவரோகணம் எல்லாம் ருசி பார்த்தவள். மீண்டும் அதை ருசிக்க விரும்பினாள் போலும். இளமையான மூங்கில் போல வலிமையும் பளபளப்புமான அவன், ராமகிருஷ்ணன். அவள் மூங்கில் சுவைக்கும் யானை.

ஆகா ஆமாம். காமம் எனவே இதை அறிய வேண்டும்… என்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் அவன். கட்டிலில் குனிந்து திரும்ப கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்தான். காதல்… என்பது, வெங்கடேசன் மாலதி அடைந்த நிலை. அதில் ஓர் ஆரம்பம், எதிர்பார்ப்பு, கனவு… இருவரும் அறியாத புதிய எல்லை அல்லது உயரம் இருந்தது. அந்த உயரத்தை இருவருமாக அடைய விரும்பிய நிலை அது.  இருவருக்குமே அது புதிய கிளர்ச்சியூட்டும் பரவச அனுபவம் அது. இயற்கை இப்படியாக அவர்களை ஆசிர்வதிக்கிறது. காதல் என்பது அடிவாரத்தில் இருந்து கைகோர்த்தபடி மலையுச்சிக்கு ஏறும் பயணம், என நினைத்துக் கொண்டான்.

இது? விநோதினியின் ஏக்கம். ஆதங்கம். கிடைக்காத தவிப்பு. அவளுக்குத் தேவை நானா? அல்ல. என் உடல். கலவி ருசி கண்ட அவளது உடலின் தேடல்களை அவள் அறிவாள். ஏற்கனவே மண வாழ்க்கை துய்த்தவள் அவள். அவளது தேடலுக்கு என்னைத் துணைக்கு என அழைக்கிறாள். அதைக் காமம் என்போம். அதில் அவள் அதிகாரத்துக்குப் பணிந்து போகிற அளவிலேயே, ஓர் அடிமை எனவே என் நிலை இருக்கும்.

காதல் என்பது அடிவாரம் என்றால் காமத்தை மலையுச்சி எனச் சொல்லலாம் போல இருக்கிறதே. அறிந்த ஒன்றுக்கு, அதை, அந்த சுகத்தை மீண்டும் பெற வேண்டி உச்சியில் இருந்து என்னை அழைக்கப் பார்க்கிறாள் அவள். இளைஞன் நான். எனக்கு காதல் வேண்டும். அது நான் பிரியப்பட்டு எதோ பெண்ணிடம் வேண்டிநிற்கிற அளவிலானாலும்… அம்மா பார்த்துக் கட்டி வைத்த பெண்ணானாலும்… அநேகமாக நான் காதல் போன்ற சுய பரிசோதனைக்கு லாயக்கு இல்லாதவன் என அவன் புன்னகையுடன் நினைத்துக் ண்டான்… அதில் ஒரு கனவு இருக்கிறது. எதிர்பார்ப்பு இருக்கிறது. சுயமாக ஆண் பெண் இருவருக்குமான சம பங்களிப்பு இருக்கிறது. அதில் இரகசியங்கள் இருக்கின்றன. அப்படியான சுவாரஸ்யமும் இருக்கிறது.

விநோதினிக்கு அவன் பதில் தரப் போவதில்லை என நினைத்துக் கொண்டான். காலப்போக்கில் அவனிடம் ஆர்வம் குன்றி அவள் வேறு ஆணின் துணைக்கு முனைப்பு காட்டவே செய்வாள் என்று தோன்றியது. மேசையில் கிடந்த அலைபேசியை எடுத்து மணி பார்த்தான். இரவு மணி ஒண்ணு. சரி. தூங்கலாம்… என நினைக்கையிலேயே கொட்டாவி வந்தது.

  • ••

 

 

Series Navigationநடந்தாய் வாழி, காவேரி – 1கிழவி
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    பருவக்காதலையும் பருவம் தவறிய காமவிழைவையும் அருகமைத்து அந்த முரணை முன்னகர்த்தி இயல்பான வேட்கையை வெளிப்படுத்தும் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *