அழகியசிங்கர்
நான்கு விதமாகக் கவிதை வாசிப்பைக் கட்டமைத்து கவிதை நிகழ்ச்சியை வாராவாரம் நடத்திக்கொண்டு வருகிறேன். முதல் வாரம் அவரவர் கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதையின் குறித்து உரையாடல்.
மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கும் நிகழ்ச்சியின் போது ‘ஞானக்கூத்தன் கவிதைகளை’ எல்லோரும் வாசித்தோம். இந்த நிகழ்ச்சிக்கு 20 அல்லது 21 கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். சூம் மூலம் நடக்கும் நிகழ்ச்சியால் இந்த எண்ணிக்கை. நேரிடையாக இந்த நிகழ்ச்சியை நடத்தினால் 10 பேர்கள் கூட கலந்து கொள்ள மாட்டார்கள்.
அவருடைய புகழ்பெற்ற கவிதைகளைச் சிலர் வாசிக்க, கேள்விப்படாத கவிதைகளும் பலர் வாசித்தோம்.
மாஜிக்கல் ரியலிஸ கவிதைகள் எதாவது தட்டுப்படுகிறதா என்று ஆராய்ந்தேன். தமிழில் மாஜிக்கல் கூறுகள் நாவல்களில், சிறுகதைகளில் காணப்பட்டதுபோல் மாஜிக்கல் ரியலிஸம் கவிதைகளிலும் தட்டுப்படுகிறதா?
ஆமாம். தட்டுப்படுகிறது. ஞானக்கூத்தன் கவிதையில்தான் அதைக் கண்டு பிடித்தேன்.
அந்தக் கவிதையை இங்குப் பதிவிட விரும்புகிறேன்.
இன்னுமொரு புத்தகம்
எனக்குத் தெரியாதா என்ன
“ என் புத்தகத்தை உனக்குப்
பிடிக்காதென்று?
புத்தகத்தின் அட்டைப் படத்தில்”
இருக்கும் வேழத்தைத்
துரத்திவிட ஆட்களை அனுப்பினாய்.
அவர்கள் வேழத்தின் தந்தங்களைப்
பறித்துக்கொண்டு வேழத்தை உயிருடன்
விட்டுவிட்டார்கள். நிருபர்கள்
ரத்தம் சோரும் வேழத்தின் வாயைப்
படம்பிடித்துக் கொண்டு போனார்கள்
அட்டைப் படத்தில் ஓங்கி வளர்ந்த
மரத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த
பறவைகளைச் சுட்டுவிடும்படி நீதான்
வேடர்களை அனுப்பினாய்..
அவர்கள் குறிதவறிச் சுட்டார்கள். அவர்கள்
இறகுகளை உன்னிடம் காட்டிக்
கூலி பெற்றுக்கொண்டார்கள்.
புத்தகத்தின் அட்சரங்களை ஓடும்படி செய்ய
அவற்றின்மேல் நீதான் டீசல் ஊற்றினாய்
எனது காயங்கள் ஆறிவருகின்றன
எனது புத்தகத்தின் அட்டையில் இப்போது
கிம்புருஷன் ஒருவன் காட்சி அளிக்கிறான்.
‘இன்னுமொரு புத்தகம்’ என்ற ஞானக்கூத்தன் இந்தக் கவிதை மேஜிக்கல் வகையைச் சேர்ந்தது.
கவிகுரலோனின் புத்தகத்தை ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. அட்டைப் படத்தில் வேழம் இருக்கிறது. அதைப் பார்த்தவன் வேழத்தைத் துரத்த ஆட்களை அனுப்புகிறான். அவர்கள் வேழத்தின் தந்தங்களைப் பறித்துக் கொண்டு உயிரோடு விட்டு விடுகிறார்கள்.நிருபர்கள் ரத்தம் சோரும் வேழத்தின் வாயைப் படம்பிடித்துக் கொண்டு போனார்கள்.
இப்படியெல்லாம் கற்பனையே பண்ண முடியாத வகையில் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இதைத்தான் மேஜிக்கல் ரியலிஸ கவிதை என்று சொல்கிறேன்.
மேலும் கவிகுரலோன் கூறுகிறான். இந்தப் புத்தகத்தைப் பார்த்தவன் சும்மா இல்லை. அட்டைப் படத்தில் ஓங்கி வளர்ந்த மரத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த பறவைகளைச் சுட்டுவிட வேடர்களை அனுப்புகிறான்.. அவர்கள் குறி தவறிச் சுட இறகுகளைக் காட்டி கூலி பெற்றுக்கொண்டு போகிறார்கள். புத்தகத்தின் அட்சரங்களை ஓடும்படி செய்ய அவற்றின்மீது டீசல் ஊற்றுகிறான். கவிகுரலோன் புத்தகத்தைக் காட்க இப்போது கிம்புருஷன் காட்சி அளிக்கிறான்.
இந்தக் கவிதை வேடிக்கையாக அமைக்கப் பட்டிருக்கிறது.
கவிகுரலோனுக்கு எதிராக இருப்பவன் யார் என்பதை விளக்கப்படவில்லை.
அட்டையில் உள்ள வேழத்தோடு எப்படி சண்டை போட முடியும் என்றெல்லாம் கேட்க முடியாது. அதில் உள்ள நையாண்டித் தனத்தைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய அஸ்வத்தாமா என்ற கதையைப் படித்தேன். அதுவும் மேஜிக்கல் ரியலிஸ கதை. அதைப் பின்னால் விவரிக்கிறேன்.
ஞானக்கூத்தனின் இன்னொரு கவிதையைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இதுவும் மேஜிக்கல் ரியலிஸ கவிதைதான்.கவிதையின் பெயர்
‘குட்பை சொன்ன கிளி.’
வெகு எளிதாகப் புரியக் கூடிய கவிதை. இந்த அற்புதமான கவிதையை இங்குப் பார்க்கலாம்.
பேசுங் கிளிமேல் எனக்கு ஆசை பிறந்தது
நானொரு பேசுங்கிளியை வாங்கி வந்தேன்
பேசுங்கிளியை என்னிடம் விற்றவன்
கிளியை எப்படி வளர்க்கணும் என்பதை
என்னிடம் விரிவாகச் சொன்னான்.
கூண்டில் கிளியை வளர்ப்பது
பாவமென்று கூறினார்கள்
பக்கத்துப் போர்ஷன் பெரியவர்கள்
நானதைப் பொருட்படுத்தாமல்
நல்ல இடமாகப் பார்த்து
பேசுங்கிளியின் கூண்டை அமர்த்தினேன்
கூண்டில் இருந்த கிளி
பழங்களை விதைகளை நன்றாகத் தின்றது
ஆனால் ஒருநாள் கூடப் பேசவே இல்லை
என்ன குறையோ என்ன கோபமோ
பேசப் பிடிக்காமல் போயிற்றென்று
சும்மா இருந்தேன் சிலநாட்கள்
என்னிடம் இல்லை என்றாலும்
வேறு யாரிடமாவது
பேச வேண்டும் அல்லவா அந்தக் கிளி
குட்மார்னிங் சொன்னேன்
சுவையாய் இருந்தனவா பழங்கள் என்றேன்
எதற்கும் பேசவில்லை அந்தக் கிளி
வீட்டுக்கு வந்தவர்கள் கிளியிடம்
பேச்சுக் கொடுத்தார்கள். பதிலுக்குப்
பேசவே இல்லை அந்தக் கிளி
பேசாத கிளியை வளர்ப்பானேன்
என்றார்கள் வீட்டில். நானும்
கிளியை விற்கலாம் என்று தீர்மானித்தேன்
விலைக்கு வாங்க வந்தவர் கேட்டார்
‘பேசுமா?’ என்று. ‘பேசுமே’ என்றேன்
வீட்டுக்குக் கொண்டுபோய்
பழங்கள் தந்து பழகுங்கள். இரண்டே நாளில்
நன்றாய்ப் பேசும் என்றேன்
பொய் சொன்ன நெஞ்சில்
பூதங்கள் ஐந்தும் புன்னகை செய்தன
விலைக்குப் பெற்றவர் கிளியுடன்
கூண்டைப் பெற்றுக்கொண்டு
புறப்படும் போது திடுக்கிட்டுப் போனேன்
‘குட்பை’ என்றது அந்தக் கிளி
இந்தக் கவிதையைப் படிக்கும்போதே கவிதை எளிதாக விளங்கி விடுகிறது.
.
ஒரு இடத்தில், ‘பொய் சொன்ன நெஞ்சில் பூதங்கள் ஐந்தும் புன்னகை செய்தன’ என்கிறார். இந்த வரியைப் படிக்கும்போது நம்மை அறியாமலேயே நகைக்கத் தோன்றுகிறது.
ஒரு கிளியை மையமாக வைத்துக்கொண்டு இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. கிளி பேசவில்லை. ஆனால் கவிகுரலோன் பேசிக்கொண்டிருக்கிறான்.
பேசும் கிளி வேண்டுமென்று வாங்கிக்கொண்டு வந்த நாளிலிருந்து கவிகுரலோனுக்கு நிம்மதி இல்லை. கிளியை எப்படியாவது பேச வைக்கவேண்டுமென்ற பகீரத முயற்சி செய்கிறான்.
இதில் பக்கத்துப் போர்ஷன் பெரியவர்கள், கூண்டில் கிளியை வளர்ப்பது பாவமென்று கூறுகிறார்கள். இப்படி எல்லா நிகழ்ச்சிகளும் இக்கவிதையில் நடைபெறுகிறது. கடைசியில் பேசும் கிளி பேசுகிறது. இதுதான் உச்சக்கட்டம்.
முதலில் குறிப்பிட்ட ‘இன்னொரு புத்தகம்’ வேறு விதமான கவிதை. ‘குட்பை சொன்ன கிளி’ வேறு விதமான கதை. ஆனால் இரண்டுமே மேஜிக்கல் ரியலிஸ கவிதைகள்.
நாம் இன்னும் இது குறித்து ஆராய வேண்டுமென்று தோன்றுகிறது.
- சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?
- சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.
- இறுதிப் படியிலிருந்து- அர்ச்சுனன்
- இறுதிப் படியிலிருந்து – கிருஷ்ணன்
- நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை
- பிச்ச
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 1 (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)
- அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி
- நனவிடை தோய்தல்: 1983 கறுப்பு ஜூலையும் ஊடக வாழ்வு அனுபவமும்
- கவிதையும் ரசனையும் – 19